“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 9

கடந்த பிந்திய மூன்று தொடர்களிலும் திரு மக்கா நகரில் வாழ்ந்த மக்களின் இறை நம்பிக்கை எவ்வாறிருந்தது என்பது பற்றி திருக்குர்ஆன் வசனங்களின் ஆதாரங்களோடு எழுதியிருந்தேன்.

அவர்கள் பற்றி சுருக்கமாகச் சொல்வதாயின் அவர்கள் ஆத்திகர்களேயன்றி நாத்திகர்களல்ல என்றே சொல்ல வேண்டும். கடவுள் – இறைவன் இல்லையென்று அவர்கள் சொல்லவுமில்லை, அவ்வாறு நம்பியிருக்கவுமில்லை என்பது தெளிவாக விளங்குகின்றது.

அவர்கள் விக்கிரகங்களையும், சிலைகளையும் தமக்கு முன்னால் வைத்து அல்லாஹ்வை வணங்கினாலும் கூட அவர்களின் அந்த நடைமுறை இஸ்லாமின் பார்வையில் பிழையானதேயாகும். அது மட்டுமல்ல. அது எதார்த்தத்திற்கு முரணானதுமாகும்.

ஆகையால் விக்கிரக வணக்கம், சிலை வணக்கம், சிருட்டி வணக்கம் என்பன பிழையென்று நிறுவுவது ஒரு விடயம். இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்தவரை அது பிழையானதென்று எதிர்வரும் தொடர்களில் நான் எழுதுவேன்.

விக்கிரக வணக்கம் செய்பவனும், படைப்புக்களில் ஏதாவதொன்றை முன்வைத்து வணங்குபவனும் சத்தியத்தையும், தத்துவத்தையும் விளங்கி அவற்றை முற்றாக நிறுத்தினாலும் கூட இறை நம்பிக்கையில் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை கூறும் விளக்கத்தின்படி இறைவனை நம்பவில்லையானால் அவன் சமுகத்தின் கணிப்பிலும், பார்வையிலும் முஸ்லிமாக இருந்தாலும் கூட, அதேபோல் “ஷரீஆ”வின் வெளிப்பார்வையிலும் அவ்வாறிருந்தாலும் கூட ஸூபீகளின் “வஹ்ததுல் வுஜூத்” கண்ணோட்டத்தில் அவன் முஸ்லிமில்லை, “முஃமின்” விசுவாசியுமில்லை. அவன் பெயரிலும், சமுகத்தின் பார்வையிலும் மட்டுமே முஸ்லிமாக இருப்பான்.

அவனின் பெயர் அப்துல்லாஹ் என்றிருக்கும். ஐங்காலத் தொழுகையில் “அவ்வல் ஜமாஅத்” ஆரம்ப நேரத்தில் முதலாம் வரிசையில், “இமாம்” தொழுகை நடத்துகின்றவருக்கு நேராக நிற்பான். “ஹஜ்” வணக்கம் செய்வான். நோன்பு நோற்பான். ஒரே வசனத்தில் சொல்வதாயின் ஷரீஆவுக்கு நூறு வீதம் கட்டுப்பட்டு நடப்பான். அவர் சமுகத்தின் பார்வையிலும், உலக நடைமுறையிலும் “முஸ்லிம்” என்றே கணிக்கப்படுவான். “ஷரீஆ” என்பது “கல்ப்” எனும் உள்ளத்தோடு தொடர்புபட்டதல்ல. இத்தகைய ஒரு நல்ல மனிதன் “வஹ்ததுல் வுஜூத்” கூறும் தத்துவப்படி இறைவனை அறிந்து நம்பவில்லையாயின் அவன் உயிரில்லாத வெறும் பொம்மை போன்றவரேயாவான்.

எனவே, ஒருவன் “ஷரீஆ”வின் பார்வையிலும், “தரீகா”வின் பார்வையிலும் “முஃமின்” விசுவாசியென்று நிறுவுவதற்கு அவர் “ஷரீஆ” என்ற “ளாஹிர்” வெளிப் பார்வையிலும், “தரீகா” என்ற “பாதின்” உட் பார்வையிலும் விசுவாசியாக இருத்தல் அவசியமாகும்.

சிலர் பின்வருமாறு எண்ணுவதற்கு சாத்தியமுண்டு. அதாவது “ஷரீஆ”வை மட்டும் பேணி நடப்பது பேதாதா? “தரீகா” வழியை முழுமையாக விட்டு நடப்பது குற்றமாகுமா? இவ்வாறு சிலர் நினைக்கலாம்.

ஒரு சமயம் நமதூரைச் சேர்ந்த BA பட்டதாரி ஒருவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் மேற்கண்டவாறு என்னிடம் கேட்டார். அவருக்கு இரண்டும் அவசியமே என்று ஆதாரங்களோடு நிறுவி விளக்கம் கொடுத்தேன். எனது காலம் வீணாய்ப் போயிற்று என்று தன் தலையில் இரு கரங்களையும் வைத்து கண்ணீர் விட்டுக் கூறினார். அவர் தற்போது தனது மனைவிக்குக் கூடத் தெரியாமல் இரு வழிகளையும் பின்பற்றியே வாழ்ந்து வருகிறார். எனினும் அவரின் ஜனாஸா நல்லடக்கம் ஒரு வழியை மட்டும் பின்பற்றியவர்களுக்கு நடப்பது போன்றே நடக்கும். அந்த வகையில் அவர் கவலையுள்ளவராகவே இன்றும் உள்ளார்.

“ஷரீஆ”, “தரீகா” இரண்டும் ஒரு முஸ்லிமுக்கு அவசியம்தான் என்பதற்கு நான் அவருக்கு கூறிய அறிவுரையிற் சிலதை அவர் போன்றவர்களின் நன்மை கருதி தொட்டுக் காட்டுகிறேன்.

لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا

உங்களில் ஒவ்வொருவருக்கும் “ஷரீஆ”வையும், “மின்ஹாஜ்” தரீகாவையும் நாம் தந்துள்ளோம். (திருக்குர்ஆன் 05-48)

“ஷிர்அதன்” என்ற சொல் “ஷரீஆ”வையும், “மின்ஹாஜன்” என்ற சொல் “தரீகா”வையும் குறிக்கும்.

“ஷரீஆ” என்ற அறபுச் சொல்லுக்கு இச் சொல்லுடன் தொடர்புடைய “ஷரியை” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். “தரீகா” என்ற அறபுச் சொல்லுக்கு “கிரியை” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

இவ்விரு வழிகளிற் செல்வதும் மனிதனின் கடமையேயன்றி “ஷரீஆ” வழி நடப்பது மட்டும் தான் கடமை என்றும், “தரீகா” என்பது “ஷரீஆ”வுக்கு அப்பாற்பட்ட “ஸுன்னத்”தான வழியாதலால் ஒருவர் விரும்பினால் அவ்வழி செல்லலாம் என்றும் சிலர் நினைக்கிறார்கள். இது அவர்களின் அறியாமையாக இருக்கலாம். இன்னும் சிலரின் மனமுரண்டாகவும் இருக்கலாம்.

வஹ்ஹாபிகள் “ஷரீஆ”வை மட்டும் ஏற்றுக் கொள்வார்களேயன்றி “தரீகா”வையோ, அதற்கு அடுத்தபடியான “ஹகீகா”வையோ, அதற்கு அடுத்தபடியான “மஃரிபா”வையோ ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏற்றுக் கொள்ளாதது மட்டுமன்றி குறித்த அந்த மூன்று வழிகளும் வழிகேடானவை என்றுமே கூறுவார்கள்.

நான் அறிந்ததை எழுதுகிறேன். “தரீகா” என்பது “தஸவ்வுப்” எனும் ஸூபிஸமேயாகும். இரண்டும் பெயர்களில் வேறுபட்டாலும் அவ்விரண்டும் கூறும் விடயமும் ஒன்றேதான்.

இவ்வுலகிலுள்ள இஸ்லாமிய நாடுகளில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தரமான மார்க்க அறிஞர்களில் மூன்று பேர் வீதம் அனைத்து நாடுகளிலிருந்தும் ஒன்று கூட்டி இலங்கையில் பண்டாரநாயக சர்வதேச மா நாட்டு மண்டபத்தில் தொடராக மூன்று நாட்கள் ஸூபிஸம், “வஹ்ததுல் வுஜூத்” இரண்டும் இஸ்லாம் ஏற்றுக் கொண்டவையா? இல்லையா? என்ற தலைப்பில் பேசுவதற்கு கலந்து கொள்கின்ற ஒவ்வொருவரும் தனது கருத்தைக் கூற வாய்ப்பளிக்க வேண்டும். எனக்கும் மூன்று மணி நேரம் தொடராகப் பேசுவதற்கு சந்தர்ப்பம் தர வேண்டும்.

இறுதியில் நடுவர்களின் தீர்ப்பின் படி செயலாற்ற வேண்டும்.

இதற்கு பெருந்தொகைப் பணம் தேவைப்படுமாதலால் இதற்கான முழுச் செலவினங்களையும் முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களம் பொறுப்பேற்க வேண்டும். அல்லது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொறுப்பேற்க வேண்டும். அல்லது கோடீஸ்வரர்களிற் பலர் பொறுப்பேற்க வேண்டும்.

எனினும் இந்த மாநாடு விவாத மாநாடாக அமையாமல் அறிஞர்கள் தமது கருத்தை கூறும் மாநாடாக அமைய வேண்டும். இவ்வாறான ஒரு நிகழ்வு நடக்குமாயின் அதில் நான் பங்கு பற்றி உரையாற்ற எப்போதும் தயாராக உள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்!

மேலே நான் எழுதிக் காட்டிய “ஷரீஆ”வும், “தரீகா”வும் மனிதனுக்கு அவசியம் என்ற கருத்தை தருகின்ற திருவசனத்தை திறமையுள்ளவர்கள் ஆய்வு செய்தார்களாயின் இரண்டும் மனிதனுக்கு அவசியம் என்று முடிவு செய்வது தவிர வேறு வழியே இல்லை.

ஏனெனில் இத்திரு வசனத்திலுள்ள “ஷிர்அதன்” என்ற சொல்லையும், “மின்ஹாஜன்” என்ற சொல்லையும் இணைப்பதற்கு “வாவு” என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. “வாவு” என்பதே இணைக்கும் கருவியாக உள்ளது. இந்த “வாவு” கொண்டு இரண்டு விடயங்கள் இணைக்கப்பட்டால் அவ்விரண்டும் அவசியம் என்ற கருத்து வரும். உதாரணமாக,

خُذِ الْقَلَمَ والْكِتَابَ

எழுது கோலையும், புத்தகத்தையும் எடு என்று சொன்னால் இரண்டையுமே எடுக்க வேண்டுமேயன்றி அவ்விரண்டில் ஒன்றை மட்டும் எடுக்க முடியாது. இவ்வுதாரணத்தில் எழுது கோலும், புத்தகமும் “வாவு” என்ற இணைக்கும் கருவி கொண்டு இணைக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணமாகும்.

இவ்வுதாரணம் போன்றதே மேலே எழுதிய

لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا

என்ற திரு வசனமுமாகும். இவ்வசனத்தில் ஷரீஆ என்பதும், தரீகா என்பதும் “வாவு” என்ற கருவி கொண்டு இணைக்கபட்டுள்ளதால் இரண்டையும் எடுக்க வேண்டுமென்ற கருத்து வருமேயன்றி இரண்டில் ஒன்றை மட்டும் எடுத்தால் போதும் என்ற கருத்துக்கு இடமே இல்லை.

இதன் மூலம் ஒரு முஸ்லிம் ஷரீஆ, தரீகா இரண்டையும் எடுத்து நடக்க வேண்டுமென்ற அவசியம் விளங்கப்படுகின்றது.

தொடரும்….