தொடர் – 02
தொழில் தேடிச் சென்ற இறைஞானி!
ஓர் இறைஞானி தனக்கு அன்றாடம் தேவையான அத்தியவசிய செலவினங்களுக்காக மட்டும் ஒரு தொழில் தேடி வெளியானார்.
இறைஞானிக்கு தொழில் எதற்கென்று எவரும் சிந்திக்க வேண்டாம். ஓர் இறைஞானி யாசகம் செய்வதை விடவும், பிறர் உதவியை எதிர்பார்ப்பதை விடவும் தன்னாலான ஒரு தொழில் செய்து தனது அன்றாடத் தேவைகளை மட்டும் நிறைவேற்றுமளவு சிறிய வருமானம் தேடிக் கொள்வது சிறந்ததேயாகும்.
இவ் அடிப்படையில் அந்த ஞானி தொழில் தேடி தனது ஊரிலுள்ள கடைத் தெரு சென்று ஒவ்வொரு கடையாக அலைந்தார்.
முதலில் ஒரு கடைக்குச் சென்றார். கடைக்கார முதலாளியிடம் உங்கள் கடையில் எனக்கு ஒரு தொழில் தரலாமா? என்று கேட்டார். கடைக்காரன் என்னிடம் வேலை வாய்ப்பு மிகக் குறைவு. எனினும் கணக்கு எழுதுவதற்கு மட்டும் ஒரு வேலைவாய்ப்பு உண்டு. உங்களுக்கு கணக்கு எழுதத் தெரியுமா? என்று கேட்டார். ஆம், என்றார் ஞானி.
முதலாளி அவரிடம் சில எண்களைக் கூறி இதைக் கூட்டிச் சொல்லுங்கள் என்றார். ஒரு பேனாவும், தாளும் தாருங்கள் என்றார் ஞானி. முதலாளி கொடுத்தார்.
பேனாவையும், தாளையும் கையில் எடுத்த ஞானி பேனாவை வாயில் வைப்பதும், தாளில் வைப்பதுமாக 30 நிமிடங்கள் இருந்தார். எழுதிக் கொடுக்கவில்லை.
முதலாளி நான் தந்தது சிறிய கணக்குத்தானே! ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டார். கூட்டல் சரியாக வரவில்லை. இன்னும் 30 நிமிடங்கள் தாருங்கள் என்று ஞானி கேட்டார். நேரம் கொடுத்தார் முதலாளி. கொடுத்த முப்பது நிமிடங்களும் முடிந்துவிட்டன. முதலாளி ஞானியிடம் முடிந்துவிட்டதா? என்று கேட்டான். இல்லை கூட்டல் சரியாக வரவில்லை என்றார். போதும். 60 நிமிடங்களாகிவிட்டன என்றார் முதலாளி. தயவு செய்து இன்னும் ஒரு 10 நிமிடங்கள் தாருங்கள் முடித்து தருகிறேன் என்றார் ஞானி. இரக்க மனமும், ஞானிகள் மீது நல்லெண்ணமும் கொண்ட முதலாளி 10 நிமிடங்களல்ல 15 நிமிடங்கள் தருகிறேன் என்றார். அல்லாஹ்வின் உதவியால் 15 நிமிடங்களில் கணக்கை முடித்த ஞானி பேப்பரையும், பேனாவையும் முதலாளியின் கையில் கொடுத்தார்.
முதலாளி பார்த்தவுடன் கோபப்பட்டவராக உங்களுக்கு என்னிடம் தொழில் இல்லை நீங்கள் போகலாம் என்றார். ஏனெனில் ஞானி எண்கள் அனைத்தையும் கூட்டி 1 என்று இலக்கத்தில் எழுதியிருந்தார். முதலாளி கொடுத்த எண்களின் கூட்டல் தொகை 300 வர வேண்டும்.
ஏற்கனவே கோபப்பட்ட முதலாளி இப்போது கோபப்படாமல் அல்லாஹ்வின் அருளால் நீங்கள் போகலாம் என்றார்.
ஞானி சிறிது நேரம் குனிந்தவராய் இருந்துவிட்டு, எனது கணக்கில் என்ன பிழை உள்ளது? என்று முதலாளியிடம் கேட்டார்.
உங்களை என் கடையில் அமர்த்தினால் 300 ரூபாய்க்கு சாமான் கொடுத்துவிட்டு ஒரு ரூபாய்க்கு பில் கொடுப்பீர்கள். நான் இன்னும் சில மாதங்களில் பிச்சைதான் எடுக்கவரும் என்றார் முதலாளி.
நான் கூட்டித் தந்த கணக்கில் என்ன பிழை உண்டு என்று சொல்லுங்கள் முதலாளி என்றார் ஞானி.
கணக்கே பச்சப் பிழையாக இருக்கும் போது என்ன பிழையென்று எப்படிச் சொல்வது? என்று கேட்டார் முதலாளி. நீங்கள் எண்ணியது – கணக்கெடுத்தது பிழை என்றார் ஞானி. நான் கணக்கெடுத்ததா பிழை என்கிறீர்கள்? அது எவ்வாறு என்று கேட்டார் முதலாளி.
சரி, இப்போது எண்ணுங்கள் பார்க்கலாம் என்று சொன்ன ஞானி முதலாளியின் மேசையிலிருந்த ஐந்து பேனாக்களை எடுத்து ஒரு பக்கம் வைத்து விட்டு இந்தப் பக்கம் இருக்கும் பேனாக்களில் ஒவ்வொன்றாக நான் எடுத்து மறு பக்கம் வைப்பேன். அவ்வேளை நீங்கள் எண்ண வேண்டும் என்று ஞானி சொன்னார். சரி என்றார் முதலாளி.
ஞானி ஒரு பேனாவை இரண்டு விரலால் எடுத்து மறு பக்கம் வைக்கும் போது ஒன்று என்றார் முதலாளி. இரண்டாம் பேனாவை அவ்வாறே எடுத்தார் ஞானி. அதை வைப்பதற்கு முன் இரண்டு என்றார் முதலாளி. ஞானி பேனாவை கையில் வைத்திருந்தவாறே இது ஒன்றா? இரண்டா? என்று கேட்டார். ஒன்று என்றார் முதலாளி. ஏன் இரண்டு என்று ஏற்கனவே சொன்னீர்கள்? என்று கேட்டார் ஞானி. முதலாவது வைத்ததையும் சேர்த்து இரண்டு என்றேன் என்றார் முதலாளி. அடுத்த பேனாவை – மூன்றாவது பேனாவை எடுத்தார் ஞானி. மூன்று என்றார் முதலாளி. அப்போதும் முதலில் சொன்னது போலவே விளக்கம் சொன்னார் ஞானி. இறுதியில் ஞானி முதலாளியிடம் உள்ளது ஒன்றுதான். ஒன்றை இன்னொன்றுடன் இணைக்கும் போதுதான் இரண்டு, மூன்று என்று எண்கள் சொல்ல வேண்டியேற்படும்.
அல்லாஹ் ஒருவன்தான். அவனுடன் இன்னொன்றை இணைக்கும் போதுதான் – சேர்க்கும் போதுதான் இரண்டாகவும், மூன்றாகவும் ஆகிறது. அல்லாஹ்வுடன் இன்னொரு வஸ்த்தை சேர்க்கும் போதுதான் “ஷிர்க்” என்ற இணை வைத்தல் ஏற்படுகிறது.
“ஷிர்க்” இணை வைத்தல் என்ற சொல்லும், “ஷரீக்” பங்காளர் என்ற சொல்லும், அல்லது கூட்டாளி என்ற சொல்லும் “ஷரிகத்” கொம்பனி என்ற சொல்லும் ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிக்கும் சொல்லாகும்.
அல்லாஹ் ஒருவன்தான். இதில் சந்தேகமேயில்லை. அவன் மொத்தத்தில் ஒருவனேயன்றி எண்ணிக்கையில் ஒருவனல்ல.
اَللهُ أَحَدٌ فِى الْجُمْلَةِ لَا فِى الْعَدَدِ، فَإِنْ كَانَ مِنَ الْعَدَدِ يَكُوْنُ اللهُ مَعْدُوْدًا،
அவன் மொத்தத்தில் ஒருவனேயன்றி எண்ணிக்கையில் ஒருவன் அல்ல. எண்ணிக்கையில் ஒருவன் என்று யாராவது சொன்னால் அல்லாஹ் எண்ணப்பட்டவனாக ஆகிவிடுவான். ஒன்றுக்கு மேற்பட்டவற்றைத்தான் எண்ணலாமேயன்றி ஒன்றை எண்ண முடியாது. ஒன்றை ஒன்றென்று சொல்லத்தான் முடியும். அவவ்ளவுதான். எண்ண முடியாது.
சுமார் 100 அல்லது 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த முதியவர்கள் தேங்காய் எண்ணும் போதும், பெருந் தொகையான பொருட்களை எண்ணும் போதும் லாபம், இரண்டு, மூன்று என்றுதான் எண்ணுவார்களே தவிர ஒன்று என்று சொல்லித் தொடங்கமாட்டார்கள். இவ்வாறு அவர்கள் செய்ததற்கு காரணமில்லாமற் போகாது. காரணமின்றிக் காரியமில்லை. முன்னோர் மேற்கண்டவாறு எண்ணியதற்கு நான் சொன்னதுதான் காரணம் என்பதல்ல. வேறு காரணங்களும் இருக்கலாம்.
முன்னோர்கள் சில விடயங்களை இறைஞானத்தைக் காரணமாக அல்லது அடிப்படையாகக் கொண்டு செய்துள்ளார்கள். அவை கால நாகரிக மாற்றத்தாலும், வஹ்ஹாபிகளின் வருகையாலும் இல்லாமற் போய்விட்டன.
உதாரணமாக பாலருந்தும் பச்சிளங்குழவிகளை ஊஞ்சலில் தாலாட்டி உறங்க வைக்கும் போது தாய்மார் பின்வருமாறு பாடிய காலம் இருந்தது எவராலும் மறுக்க முடியாத ஒன்றாகும்.
ஆராரோ ஆரிவரோ
ஆறுமஞ்சிக்கப்பாலே
ஆராய்ந்ததன் பொருளை
அறிந்துணர்ந்து நித்திரை செய்!
தாலாட்டும் தாய் சொல்கிறாள். என் மடியிலே இருப்பவன் யார்? அவனின் அகமியத்தை அறிவதாயின் ஆறையும், ஐந்தையும் கடக்க வேண்டும். ஈமானின் அம்சங்கள் ஆறு. இஸ்லாமின் அம்சங்கள் ஐந்து. பதினொன்றையும் கடந்து சென்றால் மடியிலுள்ள குழந்தை யாரென்பது புரியும். இந்த உணர்வோடு நித்திரை செய் என்று தாய் மகனை அல்லது மகளைத் தாலாட்டி உறங்க வைத்த காலம் உறங்கிவிட்டது அல்லது செத்துவிட்டது.
ஒரு மனிதன் அமரும் போதும், எழும்பும் போதும் “அல்லாஹ்” என்று சொல்லி வந்த வழக்கம் இன்று எங்கே? இப்படியொரு வழக்கம் அக்காலத்தில் சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் முதியவர்களிடம் இருந்து வந்ததை நாம் அறிவோம். இன்று இவ்வழக்கமும் செத்துப் போய்விட்டது. இதற்கும் காரணம் வஹ்ஹாபிகளும், வரலாறு தெரியாத முல்லாக்களுமேயாவர்.
ஒன்றுடன் இன்னொன்றை இணைக்கும் போதுதான் இரண்டு என்றும், இரண்டுடன் இன்னொன்றை இணைக்கும் போதுதான் மூன்று என்று வரும். ஆயினும் ஒவ்வொன்றையும் தனித்தனியே நோக்கினால் ஒன்றுதான் வரும். இரண்டுக்கும் இடமில்லை. மூன்றுக்கும் இடமில்லை.
தொடரும்..