தொடர் 01
கடந்த முதலாம் தொடரில் “தஃஸியத்” தொடர்பான அவசியம் அறிய வேண்டிய விடயங்களைப் பதிவு செய்திருந்தேன். வாசிக்கத் தவறியவர்கள் அதை தேடி வாசிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
ويُستحبُّ أن يَعُمَّ بالتَّعزية جميعَ أهل الميت وأقارِبِه الكبار والصغار والرجال والنساء، إلا أن تكون امرأةً شابّةً، فلا يعزّيها إلا محارمُها،
“தஃஸியத்” செய்யும் போது மரணித்தவனின் குடும்பத்தவர்கள், உறவினர்கள், அவர்களில் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவரையும் சலிப்பாற்ற வேண்டும். இது “ஸுன்னத்” ஆகும். “மஹ்றம்” அல்லாதவர்களை ஆண்கள் நேரில் பார்த்து சலிப்பாற்றுதல் கூடாது. ஆயினும் எவருடனாயினும் “போன்” மூலம் “தஃஸியத்” செய்வது ஆகும்.
குடும்பத்தவர்களிற் சிலர் “மஹ்றம்” அல்லாதவர்களும் இருப்பார்கள். அவர்களை நேரில் பார்த்து சலிப்பாற்றுதல் கூடாது. இவ்விடயத்தில் அதிகமானோர் தவறு செய்கிறார்கள். பேணுதல் அவசியம்.
وقال أصحابنا: وتعزيةُ الصلحاء والضعفاء على احتمال المصيبة والصبيان آكدُ،
சலிப்பாற்றப்பட வேண்டியவர்களில் நல்லவர்கள் – மார்க்கப்பற்றுள்ளவர்கள், துன்பத்தை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், சிறுவர்கள் ஆகியோரை சலிப்பாற்றுதல் மிக விஷேடமானதாகும். இதனால் மற்றவர்களை சலிப்பாற்றுதல் கூடாதென்பது கருத்தல்ல.
قال الشافعي وأصحابنا رحمهم الله: يُكره الجلوس للتعزية ،قالوا: يعني بالجلوس أن يجتمعَ أهلُ الميت في بيت ليقصدَهم مَن أراد التعزية،
“தஃஸியத்” செய்யும் போது நின்ற நிலையிலும் செய்யலாம். அமர்ந்த நிலையிலும் செய்யலாம். இரண்டும் ஆகும். பல ஊர்களில் நின்ற நிலையிலேயே “தஃஸியத்” செய்கிறார்கள். எனதூரான காத்தான்குடியிலும் தொன்று தொட்டு நின்ற நிலையிலேயே சலிப்பாற்றி வருகின்றார்கள். இவ்வழக்கம் சன நெரிசலையும், இட வசதியையும் கருத்திற் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கலாமே தவிர அமர்ந்த நிலையில் சலிப்பாற்றுதல் கூடாதென்பதற்காகவோ, “மக்றூஹ்” வெறுக்கப்பட்டதென்பதற்காகவோ அல்ல.
இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களும், ஷாபிஈ மத்ஹப் வழியைப் பின்பற்றிய பலரும் يُكْرَهُ الْجُلُوْسُ لِلتَّعْزِيَةِ “தஃஸியத்”திற்காக அமர்ந்திருப்பது “மக்றூஹ்” வெறுக்கப்பட்டதென்று சொன்னது ஏதோ ஓர் இடத்தில் அமர்ந்திருந்து சலிப்பாற்றுவதை குறிக்காது. (“தஃஸியத்”திற்காக அமர்ந்திருப்பது வெறுக்கப்பட்டதாகும் என்பது தரையில் இருந்த நிலையில் “தஃஸியத்” செய்வதைக் குறிக்காது) சிலர் குறித்த சட்ட மேதைகளின் வசனத்தை தவறாகப் புரிந்து கொண்டு நின்ற நிலையில் “தஃஸியத்” செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்கள் போலும்.
சட்ட மேதைகள் குறித்த வசனத்தை என்ன பொருளில் பாவித்துள்ளார்களென்றால் ஒருவர் மரணித்தால் மரணித்தவரின் உறவினர்கள் “தஃஸியத்”திற்காக பிறர் வருகையை எதிர்பார்த்து தமது வேலைகளை விடடு ஓர் இடத்தில் ஒன்று கூடி அவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருப்பதையே குறிக்கும்.
இச்சட்டத்தின்படி ஒருவர் மரணித்தால் அவரின் உறவினர்கள் ஒரு நாளோ, பல நாட்களோ தொழில் செய்யாமல், தமது கடமைகளைச் செய்யாமல் கூட்டமாகக் கூடிக் கொண்டு காலத்தை வீணாக்காமல் தமது கடமைகளையும், தொழில்களையும் செய்ய வேண்டும். உறவினர்கள் தமது வீடுகளில் இருக்கலாம். சலிப்பாற்ற யாராவது வந்தால் அவரை ஆதரிக்கலாம். “முஸாபஹா” செய்ய வந்தவர் விரும்பினால் செய்யலாம். இச்சட்டம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றுதான்.
إنّ التعزية هي التصبير، وذِكْرُ مَا يُسَلِّي صاحبَ الميت، ويخفّف حزنه، ويهوّن مصيبته،
“தஃஸியத்” என்றால் பொறுமையாக்கி வைத்தல், சலிப்பாற்றுதல் சலிப்பு – ஆற்றுதல், சலிப்பை ஆற வைத்தல் என்று பொருள் வரும். இதன்படி மரணித்தவனின் உறவினர் சலிப்போடும், கவலையோடும் இருப்பார்களாதலால் அவர்களிடம் அவர்களின் கவலையை நீக்கி வைக்கும்படியான நல்லுபதேசங்கள் கூறி அவர்களின் மனங்களில் நிம்மதியை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கு மாறாக சலிப்பாற்றப் பேகின்றவர்களே உறவினர்களைக் கட்டியணைத்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்தவுடன் மீண்டும் அவ்வீடு மையித் வீடாகி குடும்ப சகிதம் அழத் தொடங்கிவிடுகின்றனர். சலிப்பாற்றச் செல்பவர்கள் சலிப்பை ஆற வைத்து விட்டு வரவேண்டுமேயன்றி மீண்டும் அவர்களுக்கு கவலையையும், சலிப்பையும் அதிகப்படுத்திவிட்டு வருவது பிழையாகும். சலிப்பாற்றச் செல்லும் அனைவரும், குறிப்பாக பெண்கள் இவ்விடயத்தில் எச்சரிக்கையாக இருப்பதவசியம்.
“தஃஸியத்” செய்வதற்கான நேரம்.
إنّ التعزية مستحبّة قبل الدفن وبعده، قال أصحابنا: يدخل وقت التعزية من حين يموت، ويبقى إلى ثلاثة أيام بعد الدفن، والثلاثة على التقريب لا على التحديد، كذا قاله الشيخ أبو محمد الجُوَيني
“தஃஸியத்” சலிப்பாற்றுவதற்கான நேரம் மரணம் நிகழ்ந்த நேரத்திலிருந்து அடக்க வேலை முடிவு பெற்று மூன்றாம் நாள் உள்ளிட்ட நாட்களாகும். அதாவது அடக்கிய நேரத்திலிருந்து மூன்றாம் நாள் முடியும் வரையான நாட்களாகும். ஆயினும் அடக்கு முன்னும் “தஃஸியத்” செய்ய முடியும்.
وتُكره التعزية بعد ثلاثة أيام، لأن التعزية لتسكينِ قلبِ المُصاب، والغالب سكونُ قلبه بعد الثلاثة، فلا يُجَدَّدُ لَهُ الحُزْنُ،
மூன்று நாள் முடிந்த பின் சலிப்பாற்றுதல் “மக்றூஹ்” ஆகும். ஏனெனில் ஒருவனுக்கு மரணத்தால் அல்லது ஒரு துன்பத்தால் ஏற்பட்ட கவலை அதிகமாக மூன்று நாட்களே இருக்கும். அதன் பின் குறைந்து விடும். அதன் பிறகு சலிப்பாற்றுதல் மீண்டும் சலிப்பை புதுப்பிப்பதாகிவிடும்.
எனினும் மரணித்த ஒருவனின் உறவினனுக்கு அல்லது வெளியூர்வாசி ஒருவனுக்கு சலிப்பாற்றும் நாள் முடிவதற்குள் சலிப்பாற்ற வாய்ப்புக் கிடைக்கவில்லையானால் அவன் தனக்கு வாய்ப்புள்ள நேரம் “தஃஸியத்” செய்ய அனுமதியுண்டு.
قال أصحابنا: التعزية بعد الدفن أفضل منها قبله، لأن أهل الميت مشغولون بتجهيزه، ولأن وحشتهم بعد دفنه لِفِراقِه أكثرُ، هذا إذا لم يرَ منهم جزعاً شديداً، فإن رآه قدّم التعزية ليسكِّنهم،
மையித்தை அடக்குமுன் “தஃஸியத்” செய்வதை விட அடக்கிய பின் செய்வதே சிறந்ததாகும். ஏனெனில் அடக்குமுன் அதன் உறவினர்கள் அடக்கப் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பார்கள். அதோடு அவர்களு;ககு அடக்கிய பிறகுதான் கவலையும் அதிகமாகும். ஆகையால் கவலை அதிகமான நேரம் ஆறதல் கூறுதல் பொருத்தமானதாகும்.
“தஃஸியத்” சலிப்பாற்றுவதில் الأمر بالمعروف والنهي عن المنكر நன்மை கொண்டு ஏவுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் உண்டு என்ற திருமறை தத்துவம் உள்ளது. அது மட்டுமல்ல.
واللهُ فِى عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِى عَوْنِ أَخِيْهِ،
அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்து கொண்டே இருக்கிறான் என்ற நபீ பெருமானின் தத்துவமும் உள்ளது.
துன்பத்தால் துவண்டு போன ஒருவனுக்கு ஆறுதல் சொல்லுதல், அவனுக்கு நபீமாரின் வரலாறுகளையும், அவ்லியாஉகளின் வரலாறுகளையும் கூறி மனச் சாந்தியை ஏற்படுத்துதல், அவனுக்கு பண உதவியோ, பொருளதவியோ செய்தல் போன்றவை நன்மை கொண்டு ஏவுவதிலும், தீமையை விட்டும் தடுப்பதிலும் சேர்ந்துவிடும்.
“தஃஸியத்” சலிப்பாற்றச் செல்பவன் பணச் செல்வமுள்ளவனாயும், மரணித்தவனின் உறவினர்கள் அல்லது துன்பத்தால் பாதிக்கப்பட்டவன் அல்லது அவனின் உறவினர்கள் வறுமையானவர்களாயுமிருந்தால் பணக்காரன் அவர்களுக்கு பண உதவியோ, உணவு உதவியோ செய்வது மிகச் சிறந்ததாகும்.
ஓர் ஏழை மரணித்து அவனின் உறவினரும், குடும்பத்தினரும் ஏழைகளாகவுமிருந்து மரணித்தவனுக்கு வயது வந்த பெண் குழந்தைகளும் இருந்தால் “தஃஸியத்”திற்காகச் செல்வோர் தம்மாலான உதவிகள் செய்வது இறைவனச் சந்தோஷப்படுத்தும் நல்லமாலாகும்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உயிரோடிருந்த காலத்திலும், அவர்களின் “வபாத்” மறைவுக்குப் பின்னும் நபீ தோழர்களில் வறுமைக் கோட்டில் வாழ்ந்த ஒரு தோழர் மரணித்தால் பள்ளிவாயலில் ஒரு வெள்ளைத்துணியை விரித்து அறிவித்தல் செய்வார்கள். உதவி செய்யுங்கள் என்று சொல்வார்கள். உதவி கேட்பார்கள். கிடைப்பதை அவர்களின் குடும்பத்திற்கு பங்கு வைத்துக் கொடுப்பார்கள்.
இது நபீ தோர்களின் வழக்கத்தில் இருந்து வந்த ஒன்றாகும். இந்த வழியைப் பின்பற்றியாவது ஏழைகளுக்கும், துன்பத்தில் வாழ்பவர்களுக்கும், சோதனைக்குட்பட்டவர்களுக்கும் உதவிக் கரம் நீட்டுவோம்.
இன்று நம்மில் பலர் பெரும் செல்வந்தர்களாக உள்ளனர். பல தோட்டங்களுக்கும், காணிகளுக்கும், கார்களுக்கும், லாறிகளுக்கும், கடைகளுக்கும், கட்டிடங்களுக்கும் சொந்தக் காரர்களாக உள்ளார்கள். பல கோடி ரூபாய்கள் வங்கியிலும் உள்ளன.
ஆயினும் அவர்கள் பிறருக்கு – ஏழைகளுக்கு தொட்டுத் தெறிக்கமாட்டார்கள். அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளிக் கொடுக்கவுமாட்டார்கள்.
அந்தச் செல்வந்தர்களின் உறவினர் உறங்குவதற்கு உறைவிடமின்றியும், உடுக்க உடையின்றியும், உண்ண உணவின்றியும் வாடி வதங்குகின்றார்கள். வயது வந்த குமர்களை வீட்டில் வைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஆனால் அவர்களின் உறவினர்களான பண முதலைகள் கண்டும் காணதவர்கள் போல் அறிந்தும் அறியாதவர்கள் போல் உள்ளனர்.
என்றாவதொரு நாள் அல்லாஹ் தனது “ஜலாலிய்யத்” எனும் திரு நாமம் கொண்டு அவர்களில் வெளியானால் சாம்பல் கூட எடுக்க முடியாமல் அத்தகைய உலோபிகளின் உடைமைகள் எல்லாம் அழிந்து விடும்.
اللهم أَعْطِ مُنْفِقًا خَلَفًا وَمُمْسِكًا تَلَفًا
இறைவா! செலவிடும் செல்வந்தனுக்கு மேலும் அள்ளி வழங்குவாயாக! உன்னடியார்களைக் கவனியாமலிருப்போரின் உடைமைகளை அழித்து விடுவாயாக! (நபீ மொழி)
தொடரும்…