தொடர் 03
عن أُسامة بن زيد رضي الله عنهما قال: ‘ أرسلتْ إحدى بنات النبيِّ صلى الله عليه وسلم إليه تدعوه وتخبره أنّ صبياً لها أو ابناً في الموت، فقال للرسول: ارْجعْ إلَيْها فأخْبرْها أنَّ لِلَّهِ تَعالى ما أخَذَ، وَلَهُ ما أعْطَى، وكل شئ عِنْدَهُ بأجَلٍ مُسَمَّى، فمُرْها فَلْتَصْبرْ وَلْتَحْتَسبْ،
(رواه البخاري – 1284 ، مسلم 923)
ومعنى: ‘ إنَّ لِلَّهِ تَعالى مَا أَخَذَ ‘، أَنَّ الْعَالَمَ كُلَّهُ مُلْكٌ للهِ تعالى، فَلَمْ يَأْخُذْ مَا هُوَ لَكُمْ، بَلْ أَخَذَ مَا هُوَ لَهُ عِنْدَكُمْ فِي مَعْنَى الْعَارِيَةِ، وَمَعْنَى: ‘ وَلَهُ مَا أَعْطَى ‘ أَنَّ مَا وَهَبَهُ لَكُمْ لَيْسَ خَارٍجًا عَنْ مُلْكِهِ، بَلْ هُوَ لَهُ سُبْحَانَهُ يَفْعَلُ فِيْهِ مَا يَشَاءُ، ‘ وَكُلُّ شَيْئٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى ‘ فَلَا تَجْزَعُوْا، فَإِنَّ مَنْ قَبَضَهُ قَدْ اِنْقَضَى أَجَلُهُ الْمُسَمَّى فَمُحَالٌ تَأَخُّرُهُ أَوْ تَقَدُّمُهُ عَنْهُ، فَإِذَا عَلِمْتُمْ هَذَا كُلَّهُ، فَاصْبِرُوْا وَاحْتَسِبُوْا مَا نَزَلَ بِكُمْ،
(الأذكار للنّووي، ص 261)
நபீ தோழர் உஸாமா இப்னு ஸைத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பெண் மக்களில் ஒருவர் தனது சிறிய மகன் மரண வருத்தத்தில் இருப்பதாக அவர்களுக்கு அறிவிக்குமாறும், அவர்களை அழைத்து வருமாறும் கூறி ஒரு தூது அனுப்பி வைத்தார்கள். அந்த தூது பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் வந்து செய்தியைச் சொன்னார்கள். அதற்குப் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நீங்கள் அந்தப் பெண்ணிடம் சென்று, “அவன் எடுத்தது அவனுக்குச் சொந்தமானது என்றும், அவன் கொடுத்ததும் அவனுக்குச் சொந்தமானதென்றும், ஒவ்வொன்றும் குறித்த தவணையை கொண்டதாகும் என்றும் கூறி பொறுமை செய்யுமாறும் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (புகாரீ 1284, முஸ்லிம் 923, அத்கார் பக்கம் 261)
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பேரன் – சிறு பிள்ளை மரணித்த செய்தி கேட்டு எவ்வாறு சொன்னார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும். நமது பெண் மக்களில் ஒருவர் அப்படியொரு தகவல் எமக்கு அறிவித்தால் நாம் எவ்வாறு நடந்து கொள்வோம் என்றும் சிந்திக்க வேண்டும். என்ன வேலை இருந்தாலும் அதை தூக்கியெறிந்துவிட்டு மரணித்த சிறுவன் இருக்கும் இடத்திற்கு விரைவோம். இவ்வாறுதான் நாம் செய்வோம்.
ஆனால் பெருமகனார் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அதைக் கவனத்திற் கொள்ளவுமில்லை, கணக்கெடுக்கவுமில்லை, அவசரப்பட்டு அங்கு செல்லவுமில்லை. மாறாக தத்துவம் பேசினார்கள். அதை மகளிடம் சொல்லுமாறு கூறினார்கள்.
அத் தத்துவத்தை சற்று ஆய்வு செய்து பார்ப்போம். தத்துவம் ஒன்று إِنَّ للهِ مَا أَخَذَ – அல்லாஹ் எடுத்தது அவனுக்குச் சொந்தமானது, அவனுக்குரியதாகும். அதாவது தனது மகளின் மகன் – எனது பேரன் எனக்கோ, எனது மகளுக்கோ சொந்தமானதல்ல. அது அவனுக்குச் சொந்தமானதும், அவனுக்குரியதுமாகும். அதற்குச் சொந்தக் காரன் – அதற்குரியவன் அதை எடுத்துக் கொண்டான்.
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ
வானங்களில் உள்ளவையும், பூமிலுள்ளவையும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாகும். ஒரு பொருளின் சொந்தக்காரன் அந்தப் பொருளை எங்கு கண்டாலும் எடுக்கலாம். எப்போதும் எடுக்கலாம். எப்படியும் எடுக்கலாம். அதை யாரும் ஆட்சேபிக்க முடியாது.
அரசுக்கு சொந்தமான காணிக்கு யாராவது கள்ள உறுதி தயாரித்து அது தனக்குச் சொந்தமானதென்று வாதிட முடியாது. அவ்வாறு அவர் வாதிட்டால் நீதிமன்று அரசுக்குச் சொந்தமானதென்றுதான் தீர்ப்புக் கூறும்.
இந்தப் பூமியைப் படைத்தவன் அல்லாஹ்தான். அவன் பூமியைப் படைத்த நேரம் அதில் ஒன்றுமே இருக்கவில்லை. உயிருள்ளவையும் இருக்கவில்லை, உயிர் இல்லாதவையும் இருக்கவில்லை. வேறெந்த மரம், செடி, கொடி, மலை, கடல், ஆறு, குளம் போன்றவையும் இருக்கவில்லை.
பூமி யாருக்குச் சொந்தம்? பூமியிலுள்ளவை யாவும் யாருக்குச் சொந்தம்? மலை, கடல், நதி, பாதாளம் எல்லாம் யாருக்குச் சொந்தம்? மொத்தத்தில் படைப்புக்கள் யாவும் கண்ணுக்குப் புலப்படாத சிற்றெறும்பாயினும், இளனிக்குள் இருக்கும் நீர் உள்ளிட்ட, யானையின் தந்தத்தினுள் இருக்கின்ற முத்து உள்ளிட்ட யாவும், பொதுவாக அண்ட கோடிகள் அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையேயாகும். இவ்வடிப்படையில் படைப்புகள் யாவும் படைத்தவனுக்கே சொந்தம். சொந்தம் கொண்டாட வேறு யாரும் இருக்கவுமில்லை.
அனைத்து இன, மத மக்களினதும் தந்தை ஆதம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முதல் மனிதனாகப் படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மனித படைப்பாதலால் மனிதனை படைத்த அல்லாஹ் அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் படைக்க வேண்டியதாயிற்று.
பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் வாழ்வதற்கு மட்டுமே எண்ணற்ற அவனின் அவசியத் தேவைக்குரிய, தேவையில்லாத அதிக பொருட்களைப் படைத்தான் அல்லாஹ். உயிரினங்களில் அதிக தேவையுள்ள உயிரினமும், வாழ்க்கைக்குரிய அதிக பொருட்கள் – சாமான்கள் தேவையுள்ள உயிரினமும் மனிதன் மட்டுமேயாவான்.
உதாரணமாக பறவை இனத்தில் கோழியை எடுத்துக் கொண்டால் அதற்கு உண்ண உணவும், குடிக்க நீரும் அவசியம். வீடு கூடத் தேவையில்லை. கூடு இருந்தாலே போதும். அது கூட இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை. இவ்வாறுதான் உயிரினங்களில் அதிகமானவற்றின் நிலைகளுமாகும்.
ஆனால் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் என்ற இந்தப் பிராணி இவ்வுலகில் வாழ்வதற்கு பல பொருட்கள், சாமான்கள் தேவைப்படுகின்றன. பகுத்தறிவற்ற ஒரு பிராணி ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குப் போவதாயின் அது மட்டுமே போகும். அதோடு எந்த ஒரு தளபாடமும் செல்லாது. மனிதன் செல்வதாயின் கைபேசி உள்ளிட்ட பல நூறு சாமான்கள் தேவைப்படும். ஏசீயும் வேண்டும். அதோடு வீசியும் விட வேண்டும்.
மேற்கண்ட நபீ மொழியில் வந்துள்ள إِنَّ للهِ تَعَالَى مَا أَخَذَ அல்லாஹ் எடுத்தது அவனுக்குச் சொந்தமானது என்ற வசனம் சிறிய வசனமாயினும் மிக ஆழமான கருத்துக்களையும், அகமியங்களையும் உள்வாங்கிய ஒரு வசனமாகும். அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்ற தத்துவத்தை வெளிரங்கமாக, பட்டவர்த்தனமாகக் காட்டும் வசனமாகும். அல்லாஹ் எதை எடுத்துக் கொண்டாலும் அவனுக்குச் சொந்தமானதையே எடுக்கிறான்.
அவன் மனிதனில் உள்ள ஏழு வகையான தன்மைகளையும் – அதாவது “குத்றத்” என்ற சக்தியையும், “இறாதத்” என்ற நாட்டத்தையும், “ஸம்உன்” என்ற கேள்வியையும், “பஸறுன்” என்ற பார்வையையும், “இல்முன்” என்ற அறிவையும், “கலாமுன்” என்ற பேச்சையும், “ஹயாதுன்” என்ற உயிரையும் எமக்கு இரவலாகவே தந்துள்ளான்.
ஒருவன் ஒரு பொருளை எமக்கு சொந்தமாக்கித் தந்தால் அது எமக்குரியதேயாகும். அதை நாம் விரும்பினால்தான் அவன் எம்மிடம் கேட்டாலும், கேட்காவிட்டாலும் கொடுக்கலாம். ஆனால் அது கடமையல்ல.
உதாரணமாக ஒருவர் ஒரு காணியை – நிலத்தை சொந்தமாக நமக்கு எழுதித் தந்தால் அது எமக்குச் சொந்தமானதேயாகும். அவன் எம்முடன் கோபித்துக் கொண்டு அவன் எழுதித் தந்ததை திரும்பக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அதை அவனுக்கு கொடுப்பது கடமையல்ல. ஒருவன் தனது எந்த ஒரு பொருளை ஒருவனுக்கு சொந்தமாக்கி கொடுத்த பின் மீண்டும் அவனிடம் அதைக் கேட்பது எடுத்த வாந்தியை – சத்தியை மீண்டும் அவனே சாப்பிடுவது போன்றதாகும். அதை அவனுக்கு கொடுப்பது கடமையல்ல. விரும்பினால் மட்டும்தான் கொடுக்கலாம்.
திருமணத்தின் போது கணவன் மனைவிக்கு கொடுக்கும் “மஹர்” மனைவிக்குச் சொந்தமானதேயாகும். எக்காரணம் கொண்டும் அதை அவன் கேட்கவும் கூடாது. கோபத்தினால் கேட்டால் அதைக் கொடுப்பது அவளுக்கு அவசியமில்லை. விரும்பினால் கொடுக்கலாம்.
பொதுவாக பெண்ணுக்கு எந்தவொரு நிபந்தனையுமின்றி கணவன் கொடுக்கும் எல்லாமே அவளுக்குச் சொந்தமானதேயாகும். மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவது “பித்அத்” என்று வஹ்ஹாபிகள் கூச்சலிட்டாலும் அது “பித்அத் ழலாலத்” வழிகேடான “பித்அத்” அல்ல. தாராளமாக கட்டலாம். அது ஒரு வகையில் மனைவிக்கு கணவன் கட்டும் வேலியாகவும் இருக்கலாம். எனினும் இக்காலத்தைப் பொறுத்தவரை கணவன் மனைவிக்கு கட்டும் தாலி அவன் தனக்கு கட்டிக் கொள்ளும் வேலியென்றே சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வதை விட அவன் தனக்கு போட்டுக் கொள்ளும் கால் விலங்கு என்று சொன்னால் அது மிகையாகாது.
இதுவரை நான் எழுதி வந்த إِنَّ للهِ مَا أَخَذَ அல்லாஹ் அடியானிடமிருந்து எதை எடுத்துக் கொண்டாலும் அது அவன் இரவலாக தந்ததையே எடுக்கிறான் என்று விளங்கி அவனின் செயலைப் பொறுமையுடன் பொருந்திக் கொள்வதே இஸ்லாம் காட்டும் வழியாகும்.
தொடரும்…