தொடர் 04
பெருமகனார் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மகளின் மகன் மரணித்த போது அன்பு மகள் தந்தை றஸூலுல்லாஹ் அவர்களுக்கு தூது அனுப்பிய போது அவர்களிடம் நபீகளார் சொல்லியனுப்பிய தகவலில் إِنَّ للهِ مَا أَخَذَ لَهُ مَا أَعْطَى என்ற வசனத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று அல்லாஹ் எடுத்தது அவனுக்குச் சொந்தமானதாயிருப்பது போல் அவன் கொடுத்ததும் அவனுக்குச் சொந்தமானதேயென்ற உண்மை இங்கு தெளிவாகிறது.
பெருமானாரின் பேரரை அவரின் தாய்க்கு வழங்கியவனும் அல்லாஹ்தான். அவரிடமிருந்து அவரை எடுத்தவனும் அல்லாஹ்தான். ஏனெனில் நபீ பெருமானின் பேரரும் அல்லாஹ்வின் சொத்து என்பது தெளிவாகிறது.
மேலே எழுதிய நபீ மொழியிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடமும், படிப்பினைகளும் என்னவெனில், நாமும், நமது உடைமைகளும், நமக்குள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு சொந்தமானவையேயன்றி அவற்றில் ஒரு மண்ணளவு கூட நமக்குச் சொந்தமானதல்ல என்பதும், அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை அவன் எடுத்துக் கொள்ளும் போது அதற்காக கவலைப்படுவதும், கண்ணீர் வடிப்பதும், கதறி அழுவதும், தலைகளிலும், நெஞ்சுகளிலும் அடித்துக் கொள்வதும் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.
இந்த நபீ மொழி பற்றிக் கூறிய ஸெய்யிதுல் புகஹாஇ யஹ்யா இப்னு ஷறப் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
هذا الحديث من أعْظَمِ قواعدِ الإسلام المُشْتَمِلَةِ على مُهِمَّاتٍ كثيرةٍ من أصول الدين وفُروعه والآداب، والصَّبْرِ على النَّوازِل كلّها والهُمُوم والأسقام وغير ذلك،
மேற்கண்ட ஹதீது “தீன்” மார்க்கத்தின் அடிப்படைகளிலிருந்தும், அதன் கிளைகளிலிருந்தும் மிக முக்கிய அம்சங்களையும், சோதனைகள் வரும் வேளை பொறுமை செய்தல், நோய் நொடிகளை சகித்துக் கொள்தல் போன்றவற்றையும் உள்வாங்கிய ஹதீதாகும்.
இந்த ஹதீதில் இடம் பெற்றுள்ள إِنَّ للهِ مَا أَخَذَ – لَهُ مَا أَعْطَى என்ற சிறிய வசனம் தன்னுள் அடக்கி வைத்துள்ள தத்துவங்களுக்கு விளக்கம் எழுதுவதாயின் விரிவான, இறைஞானத்தோடு தொடர்புள்ள விளக்கம் எழுதலாம். இன்ஷா அல்லாஹ்!
(மேற்கண்ட விபரங்களுக்கு ஆதாரம் – அல் அத்கார், பக்கம் 261)
“தஃஸியத்” என்றால் என்ன? என்ற தலைப்பில் தொடர் 01ல் “தஃஸியத்” செய்யும் போது ஓத வேண்டிய ஓதல்களில் ஒரு “காபிர்” மரணித்ததற்காக அவரின் உறவினனான ஒரு காபிரை சலிப்பாற்றும் போது
أَخْلَفَ اللهُ عَلَيْكَ وَلَا نَقَصَ عَدَدَكَ
என்று ஓத வேண்டுமென்று எழுதியிருந்தேன். ஆயினும் அதன் பொருளையும், விளக்கத்தையும் எழுத தவறிவிட்டேன். வாசகர்களின் நன்மை கருதி இங்கு எழுதுகிறேன்.
மரணித்த ஒரு காபிரின் உறவினர்களான காபிர்களை சலிப்பாற்றலாம். அவனுக்கு கை கொடுத்தோ, கொடுக்காமலோ செய்யலாம்.
இதன் பொருள்: “மரணித்தவனுக்குப் பதிலாக அல்லாஹ் உனக்கு வேறொருவனை தருவானாக! இன்னும் உனது சனத் தொகையை குறைக்காமல் இருப்பானாக!”
இந்த “துஆ”வின் வெளிப்படையான பொருள் காபிர்களுக்கு சாதகமானது போல் அமைந்துள்ளது. விளங்குகின்றது. ஆயினும் இது எதார்த்தத்தில் அவர்களுக்கு சாதகமானதல்ல.
இதன் சரியான பொருள்:
أي جعل الله لك خَلَفًا يَجِيْئُ بَعْدَكَ يَكُوْنُ عِوَضًا لَكَ مِمَّنْ مَاتَ، وَلَا نَقَصَ عَدَدَكَ، لِتَكْثُرَ الْجِزْيَةُ وَلَا نَقَصَ مِمَّنْ مَاتَ،
மரணித்தவனுக்கு பகரமாக – பதிலாக அல்லாஹ் ஒருவனை உனக்குத் தருவானாக! உனது தொகையை குறைக்காமலும் இருப்பானாக! என்பதாகும்.
இது ஒருவனின் முதுகை கையால் தட்டி நீ நல்ல ஒரு மாடு என்று சொல்லி கோபத்தைக் காட்டாமல் நீ ஒரு பசு என்று சொல்வது போன்றதாகும்.
இந்த பிரார்த்தனையின் பின்னணி முஸ்லிம்களுக்கு சாதகமானதேயாகும்.
“தஃஸியத்” செய்வதற்கு மரணித்தவர் எவ்வாறு வாழ்ந்தவராயினும் சரியே! அதாவது ஷரீஆ, தரீகா வழி வாழ்ந்தவராகவோ, சிறியவராகவோ, பெரியவராகவோ, முஸ்லிமாகவோ, காபிராகவோ, ஸுன்னீயாகவோ, வஹ்ஹாபியாகவோ எவ்வாறிருந்தாலும் சரியே!
அதேபோல் யாரை சலிப்பாற்றுகிறோமோ அவரும் மரணித்தவர் போன்றவரே! அவனுக்கும் எந்தவொரு நிபந்தனையும் கிடையாது.
ஏனெனில் சலிப்பாற்றுதல் என்பது முஸ்லிமை சலிப்பாற்றுவதை மட்டும் குறிக்காது.
நமது நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அல்லாத பௌதர்களோ, இந்துக்களோ, கிறித்துவர்களோ எம்முடன் – முஸ்லிம்களுடன் தொடர்புள்ளவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களோ அவர்கள் மரணித்தால் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் கை குலுக்குவதோ, “முஆனகா” கட்டியணைப்பதோ, அவர்கள் தருபவற்றை உண்பதோ, குடிப்பதோ ஹறாம் ஆகாது.
குறிப்பாக நமது இலங்கை நாட்டைப் பொறுத்த வரை முஸ்லிம்கள் மட்டும் வாழும் ஊர்களும் உள்ளன. மற்ற மதத்தைச் சேர்ந்த சகோதரர்களுடன் முஸ்லிம்கள் கலந்து வாழும் ஊர்களும் உள்ளன.
பல மதத்தவர்களுடன் கலந்து வாழும் முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களுடன் மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் சகோதரர்கள் போல் வாழ வேண்டும்.
அவர்களின் மரண வீடுகளுக்குச் சென்று சலிப்பாற்றுதல், அங்கு நடைபெறும் சமையல் வேலைகளில் பங்கு கொள்ளுதல், ஜனாசாவை தூக்கிச் செல்லுதல் போன்ற விடயங்களில் வேறுபாடு காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும். ஆயினும் நல்லிணக்கம், சமாதானம் என்பவற்றை கருத்திற் கொண்டு பிற மதத்வர்களின் சமய அனுஷ்டானங்களை மட்டும் தவிர்த்து ஏனைய இவ்வுலக விவகாரங்களில் அவர்களுடன் இணைந்து செயல்படலாம். குற்றமாகாது.
முஸ்லிம் அல்லாத ஒருவர் மரணித்ததற்காக முஸ்லிம்கள் அல்லாத அவரின் உறவினர்களை சலிப்பாற்றும் போது மட்டும்
أَخْلَفَ اللهُ عَلَيْكَ وَلَا نَقَصَ عَدَدَكَ،
என்று சொல்ல வேண்டுமென்று கூறி أَخْلَفَ اللهُ عَلَيْكَ அல்லாஹ் அவருக்கு பதிலாக வேறொருவரை தருவானாக என்ற பாதி வசனத்திற்கு மட்டும் விளக்கம் எழுதினேன்.
இப்போது وَلَا نَقَصَ عَدَدَكَ உனது சனத் தொகையில் குறைவை ஏற்படுத்தாமல் இருப்பானாக என்ற வசனத்திற்கு விளக்கம் எழுதுகிறேன்.
“மரணித்தவனால் உன்னுடைய சனத் தொகையில் குறைவை ஏற்படுத்தாமல் இருப்பானாக” இந்த வசனமும், இதற்கு முந்தின வசனமும் முஸ்லிம்களுக்கு மற்றவர்களால் “ஜிஸ்யா” வரி செலுத்துவதை – அவர்களுக்கு வரி கிடைப்பதை கருத்திற் கொண்டு சொல்லப்பட்டதாகும். அவர்களில் ஒருவர் குறைந்தால் அவரால் கிடைத்து வந்த வரி இல்லாமற் போய் விடும். இந்தக் கருத்தை மனதிற்கொண்டே அவ்வாறு பெருமகனார் பிரார்த்தனை செய்தார்கள். இப்போது மேற்கண்ட வசனத்திலுள்ள மூடல் தெளிவாகியிருக்கும் என்று நினைக்கிறேன்.