Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த பயங்கர நோய்கள் பற்றிய குறிப்புகள்!

இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த பயங்கர நோய்கள் பற்றிய குறிப்புகள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

மரணத்தின் பின் சலிப்பாற்றுதல் தொடர்பாக எழுதியதைத் தொடர்ந்து இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற பயங்கர நோய்கள் தொடர்பான சில குறிப்புகளை இங்கு எழுதுகிறேன்.

இத்தலைப்பில் எழுதுவதற்கான காரணம் என்னவெனில் பல மாதங்களாக உலக நாடுகளை உசுப்பி அசைத்து வைத்த கொரோனா நோய் காரணமாக பல உயிர்களை இழந்தும், பல கஷ்டங்கள், நஷ்டங்களை அனுபவித்தும் வந்த முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவருக்கும் நான் “தஃஸியத்” சொல்வதேயாகும்.

கொரோனா வைரஸ் நோயால் பல உயிர்களை இழந்தும், பல துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் சகோதரர்களே! முஸ்லிம் அல்லாத ஏனைய பௌத, இந்து, கிறித்துவ சகோதரர்களே!

உங்கள் அனைவருக்கும் “தஃஸியத்” சொல்லும் நோக்கத்தோடும், உங்களுக்கு ஏற்பட்ட மனக் கவலைகளை நீக்கி மன நிம்மதியை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் இதை நான் எழுதுகிறேன்.

நோய், மரணம் என்பன அல்லாஹ் படைத்த அனைவருக்கும், அதாவது உயிரினம் அனைத்திற்கும் ஏற்படுகின்ற ஒன்றேயாகும். இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரையும் இவ்விரண்டும் பதம் பார்க்கவே செய்யும். இவ்விரண்டிலும் மரணம் என்பது அனைவரையும் பதம் பார்க்கும். அதன் பிடியிலிருந்து எவரும் தப்பிக் கொள்ள முடியாது. இறைவனை அது பதம் பார்க்காது. நபீமார், ஞானிகள், வலீமார் உள்ளிட்ட அனைவரையும் அது சந்திக்கவே செய்யும். அது முஸ்லிம்களின் மதத் தலைவரான முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையும் விடவில்லை. பௌதர்களின் மதத் தலைவரான சித்தாத்தர் கௌரவ புத்தர் அவர்களையும் விடவில்லை. இதேபோல் இந்து மதத் தலைவர்களையும் விடவில்லை. இதேபோல் கிறித்துவ மதத் தலைவர், முஸ்லிம்களின் கௌரவத்திற்குரிய நபீ ஈஸா அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்களையும் முதல் வாழ்வில் விடவுமில்லை, இரண்டாம் வாழ்வில் விடப்போவதுமில்லை. முஸ்லிம்களின் கொள்கைப்படி அவர்கள் இன்றுவரை உயிரோடுதான் உள்ளார்கள். இவர்கள் போல் இன்னும் சிலர் – நபீ கழிர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம், நபீ இல்யாஸ் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் ஆகியோர்களும் இன்றுவரை உயிரோடுதான் உள்ளார்கள். ஆயினும் இவர்களும் உலக முடிவிற்குள் மரணிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

மரணம் பதம் பார்க்க முடியாதவன் அல்லாஹ் மாத்திரமே! அவன் என்றும் “ஹையுன்”தான். حَيٌّ என்று சொல்லி வருபவர்கள் – “திக்ர்” செய்து வருவோர் நீண்ட காலம் உயிர் வாழ்வார்கள். இதற்கு ஞான குரு ஒருவரின் அனுமதி வேண்டும்.

மரணம் என்பது எந்த ஒரு மன்னரையும் விடாதாகையால் அனைவரும் அதை அனுபவிக்கத்தான் வேண்டும். மரணம் என்பது சிலருக்கு மட்டுமே வரும், வேறு சிலருக்கு வராதென்றிருந்தால் மரணத்தை நினைத்து பயப்படுவதில் அர்த்தமுண்டு. ஒருவரும் அதன் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாதென்பது நிச்சயமான விடயமாயிருப்பதால் அதை நினைத்து பயப்படுதல் அர்த்தமற்றதாகிவிடும். اَلْمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ ஒருவனின் செருப்பின் வார் அவனின் காலுக்கு நெருங்கியிருப்பதை விட மரணம் அவனுக்கு நெருங்கியுள்ளது.

ஆகையால் எவரும் மரணத்திற்கு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அது குடும்பத்தில் எவருக்காவது வந்தால் எவரும் கவலைப்படத் தேவையுமில்லை. கவலைப்படத் தேவையில்லை என்பதற்கு இன்னொரு பிரதான காரணம் என்னவெனில் மரணம் நபீமார், றஸூல்மார், குத்புமார், வலீமார் அனைவருக்கும் நடந்த நிகழ்வாயிருப்பதேயாகும். குறிப்பாக கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு அது ஏற்பட்டிருப்பதேயாகும்.

ஒருவரின் குடும்பத்தில் எவருக்காவது மரணம் ஏற்பட்டால் குறிப்பாக கொரோனா வைரஸ் போன்ற பயங்கர நோயால் ஒருவர் மரணித்தால் எவரும் கவலைப்படத் தேவையில்லை. உலகில் மருத்துவ விஞ்ஞானம் மருந்து கண்டுபிடிக்காத நோய் என்றால் அது மரணம் மட்டும்தான். உலக வரலாற்றில் ஒரு “காபிர்” முஸ்லிமல்லாத ஒருவர் 4000 – நாலாயிரம் வருடங்கள் உயிரோடு வாழ்ந்திருக்கிறார். இந்தக் குறிப்பு இமாம் கமாலுத்தீன் அத்தமீரீ றஹிமஹுல்லாஹ் எழுதிய “ஹயாதுல் ஹயவான்” எனும் நூலில் இடம் பெற்றுள்ளது. பக்கம் என் நினைவில் இல்லை. கிடைத்தால் பதிவிடுவேன். இன்ஷா அல்லாஹ்!

பின்வரும் தகவலைக் கவனித்தால் விபரம் தெளிவாகும்.

قال أبو الحسن المدائني: ‘ كانت الطواعين المشهورةُ العِظَامُ في الإِسلام خمسةً: طَاعُوْنُ شِيْرُوْيَهْ بالمَدَائِن في عهد رسول الله صلى الله عليه وسلم سَنَةَ سِتٍّ من الهجرة، ثم طاعون عَمَوَاسٍ في زمن عمر بن الخطاب رضي الله عنه كان بالشام، مات فيه خمسة وعشرون ألفًا، ثم طاعون في زَمَنِ ابْنِ الزُّبَيْرِ في شوّال سنةَ تِسْعٍ وَسِتِّيْنَ، وهو طاعون الجَارِفْ، مات في ثلاثة أيام في كلّ يوم سبعون ألفاً، مات فيه لأنس بن مالك رضي الله عنه ثلاثة وثمانون ابناً، وقيل: ثلاثة وسبعون ابناً، ومات لعبد الرحمن بن أبي بكرة أربعون ابناً، ثم طاعون الفَتَيَاتِ في شوّال سنة سبع وثمانين، ثم طاعونٌ سنة إحدى وثلاثين وَمِأَةٍ في رجب، واشتدّ في رمضان، وكان يُحصـى في سِكَّةِ المِرْبَدِ في كل يوم ألف جنازة، ثم خفّ في شوّال، وكان بالكوفة طاعون سنة خمسين، وفيه توفي المغيرة بن شعبة،

அஷ்ஷெய்கு அபுல் ஹஸன் அல்மதாயினிய்யு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

(இஸ்லாமிய வரலாற்றில் கொரோனா வைரஸ் போன்ற ஐந்து மா பெரும் நோய்கள் ஏற்பட்டுள்ளன.

ஒன்று – இதன் பெயர் “தாஊன் ஷீறூயஹ்” எனப்படும். இது பெருமகனார் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் ஹிஜ்ரீ 06ம் ஆண்டு “மதாயின்” எனுமிடத்தில் ஏற்பட்டதாம். “மதாயின்” எனுமிடம் இறாக் நாட்டில் உள்ளது.

இரண்டு – இரண்டாவது கலீபா ஸெய்யிதுனா உமர் இப்னுல் கத்தாப் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிரியாவில் ஏற்பட்டது. இந்த நோயால் 25 ஆயிரம் பேர் மரணித்தனர்.

மூன்று – இது ஹிஜ்ரீ 69ம் ஆண்டு ஷவ்வால் மாதம் நபீ தோழர் இப்னுஸ் ஸுபைர் அவர்களின் காலத்தில் நிகழ்ந்தது. இது “தாஊனுல் ஜாரிப்” என்று அழைக்கப்பட்டது. இந் நோயால் ஒரு நாளில் 70 ஆயிரம் பேர் வீதம் மூன்று நாட்களில் மரணித்தனர். இதே நோயால் நபீ தோழர் அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் 83 ஆண் மக்கள் மரணித்தனர். 70 மக்கள் என்றும் ஒரு தகவல் உண்டு. இதே நோயால் நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அபீ பக்றத றழியல்லாஹு அன்ஹு என்பவரின் 40 ஆண் மக்களும் மரணித்தனர்.

நான்கு – ஹிஜ்ரீ 87ம் ஆண்டு ஷவ்வால் மாதம் ஒரு நோய் பரவியது. இது “தாஊனுல் பதயாத்” என்றழைக்கப்படும்.

ஐந்து – இது ஹிஜ்ரீ 131 றஜப் மாதம் நிகழ்ந்தது. றமழான் மாதம் இது வேகமாகப் பரவியது. “சிக்கதுல் மிர்பத்” எனுமிடத்தில் தினமும் 1000 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன. பின்னர் ஷவ்வால் மாதம் அந்நோய் குறைந்துவிட்டது.

ஆறு – கூபாவில் ஹிஜ்ரீ 50ம் ஆண்டு ஒரு நோய் பரவியது. இந்நோயினால் நபீ தோழர் முஙீறதுப்னு ஷுஃபா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்தார்கள்)
ஆதாரம் – அல் அத்கார், பக்கம் 265.

பயங்கர நோயால் மரணிப்பவர்களும், விபத்தால் மரணிப்பவர்களும், மரம் விழுந்து மரணிப்பவர்களும், சுட்டுக் கொலை செய்யப்பட்டு மரணிப்பவர்களும், கத்தி, வாள் போன்றவற்றால் குத்தப்பட்டும், வெட்டப்பட்டும் மரணிப்போரும், நீரில் மூழ்கி மரணிப்போரும், சூனியம் செய்யப்பட்டு மரணிப்பவர்களும், குண்டு வெடிப்பில் மரணிப்பவர்களும் இன்னுமிவை போன்று வெள்ளம் இழுத்துச் சென்று மரணிப்பவர்களும், பிரசவ வருத்த நேரம் மரணிப்பவர்களும் “ஷுஹதாஉ”களின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

ஆயினும் இன்னோர் “தறஜா” அந்தஸ்த்து குறைந்த “ஷுஹதாஉ”களாவர். இவர்களின் ஜனாஸாவுக்கு நான்கு கடமைகளான குளிப்பாட்டுதல், “கபன்” செய்தல், தொழுகை நடத்துதல், அடக்கம் செய்தல் ஆகிய நான்கு விடயங்களும் செய்வது கடமையாகும்.

“ஜிஹாத்” எனும் இஸ்லாமியப் போரில் மரணிப்பவர்கள் “ஷுஹதாஉ”களில் அந்தஸ்த்து உயர்ந்தவர்களாவர். இவர்களின் ஜனாஸாவுக்கு நான்கு கடமைகளும் செய்தல் கூடாது. இவர்களின் ஜனாஸாவுக்கு நல்லடக்கம் மட்டுமே கடமையாகும்.

சென்ற முதலாவது தொடரில் இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட பயங்கர “தாஊன்” நோய்கள் பற்றியும், அந்நோயால் மரணித்தவர்கள் பற்றியும் எழுதியிருந்தேன்.

நபீ தோழர் இப்னுஸ் ஸுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் ஹிஜ்ரீ 69ல் ஏற்பட்ட பயங்கர நோயால் நபீ தோழர் அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆண் மக்களில் 83 பேர்கள் மரணித்ததாகவும், இன்னும் நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அபீ பக்றத றழியல்லாஹு அன்ஹு அவர்களின் 40 ஆண் மக்கள் மரணித்ததாகவும் எழுதியிருந்தேன்.

இந்த விபரத்தை வாசித்த சிலருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதாவது மேற்கண்ட தந்தைமார் நபீ தோழர்களாயிருந்தும் கூட இப்படிப் பெருந்தொகையான பிள்ளைகளை ஏன் பெற்றார்கள்? அவர்களுக்கு அந்த அளவு சிற்றின்ப உணர்வு ஏற்பட்டதற்கான காரணம் என்ன? அத்தனை பிள்ளைகளையும் வளர்ப்பதற்கான பொருளாதார வசதி அவர்களிடம் இருந்ததா? இவை போன்ற இன்னும் பல கேள்விகள் எழுந்திருக்கலாம்.

இன்ஷா அல்லாஹ் இவற்றுக்கான பதில்களை இதே தொடரில் அல்லது இதையடுத்த தொடரில் விளக்கமாக எழுதுவேன்.

இத் தொடரில் இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த பயங்கர நோய் தொடர்பாகவும், மரணித்தோர் தொடர்பாகவும் இன்னும் சில குறிப்புகளும் எழுதி முடிந்தபின் கேள்விகளுக்கான பதில்களை பதிவிடுவேன். பொறுமையுடன் தொடர்ந்து வாசிப்பது வாசக நேயர்களைப் பொறுத்ததாகும்.

“தாஊன் இம்வாஸ்” طَاعُوْنْ عِمْوَاسْ

قال الواقديّ تُوُفِّي في ”طاعون عِمْواس” من المسلمين في الشام خمسة وعشرُون ألفاً، وقال غيره ثلاثون ألفاً،

இந்த நோயால் “ஷாம்” சிரியா முஸ்லிம்களில் 25 ஆயிரம் பேர் அல்லது 30 ஆயிரம் பேர் மரணித்தனர்.


இம்வாஸ் பயங்கர நோயால் உயிர் துறந்து “ஷஹீத்” ஆன நபீ தோழர்களின் பெயர்கள்.

01) அபூ உபைத் இப்னுல் ஜர்றாஹ் – أبو عبيدة بن الجرّاح

02. அல் பழ்ல் இப்னுல் அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் – الفضل بن العبّاس بن عبد المطلب

03. ஷுறஹ்பீல் ஹஸனா – شُرحبيل حسنة

04. முஆத் இப்னு ஜபல் அல் கஸ்றஜீ – معاذ بن جبل الخزرجي

05. அப்துர் றஹ்மான் இப்னு முஆத் இப்னு ஜபல் – عبد الرحمان بن معاذ بن جبل

06. அல் ஹாரித் இப்னு ஹிஷாம் அல்மக்ஸூமீ – الحارث بن هشام المخزومي

07. அம்ர் இப்னு ஸுஹைல் அல் ஆமிரீ – عمرو بن سُهيل العامري

08. அபூ ஜந்தல் இப்னு அம்ர் இப்னு ஸுஹைல் – أبو جندل بن عمر بن سهيل

09. உத்பா இப்னு அம்ர் இப்னு ஸுஹைல் – عتبة بن عمرو بن سهيل

10. ஆமிர் இப்னு ஙய்லான் அத்தகபீ – عامر بن غيلان الثقفي

11. அம்மார் இப்னு ஙய்லான் அத்தகபீ – عمّار بن غيلان الثقفي

12. நஸ்ர் இப்னு ஙானிம் அல் அதவீ – نصر بن غائم العدوي

13. ஹுதாபத் இப்னு நஸ்ர் அல் அதவீ – حذافة بن نصر العدوي

14. ஸலமத் இப்னு நஸ்ர் அல் அதவீ – سلمة بن نصر العدوي

15. ஸக்ர் இப்னு நஸ்ர் அல் அதவீ – صخر بن نصر العدوي

16. ஸுகைர் இப்னு நஸ்ர் அல் அதவீ – صُخير بن نصر العدوي

17. ஹம்தத் இப்னு ஷுரைக் அல் அதவீ – حَمْطَطْ بن شريق العدوي

18. வாயில் இப்னு ரிதாப் – وائل بن رثاب

19. மஃமர் இப்னு ரிதாப் – معمر بن رثاب

20. ஹபீப் இப்னு ரிதாப் – حبيب بن رثاب

21. யஸீத் இப்னு அபீ ஸுப்யான் – يزيد بن أبي سفيان

22. ஸுஹைல் இப்னு அம்று – سُهيل بن عمرو

23. ழிறார் இப்னு அல்அஸ்வர் – ضرار بن الأزور

இவர்களும், இன்னும் பலரும் “இம்வாஸ்” நோயால் பாதிக்கப்பட்டு “ஷஹீத்” ஆயினர்.


”طاعُون عِمْوَاسْ” وهو وباء وقع في بلاد الشام في أيّام خلافة عمر بن الخطاب، سنة 18 هجرية ، 640 ميلادية، بعد فتح بيت المقدس، ومات فيه كثير من المسلمين ومن صحابة النبي محمد صلى الله عليه وسلم،

“தாஊன் இம்வாஸ்” என்ற பயங்கர நோய் தொற்று நோயென்று கருதப்பட்ட நோயாகும். இது (ஹிஜ்ரீ 18ல் – கி-பி 640ல்) இரண்டாவது கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் “ஷாம்” சிரியா நாட்டுப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நோய் என்று வரலாறு கூறுகின்றது.

இந்தச் சம்பவம் “பைத்துல் மக்திஸ்” வெற்றிக்குப் பின் நிகழ்ந்ததாகும். இந் நோயால் அநேக முஸ்லிம்களும், குறிப்பாக நபீ தோழர்களும் “ஷஹீத்” ஆயினர்.

இந் நோய் “தாஊன் இம்வாஸ்” என்று அழைக்கப்பட்டது. இதற்கான காரணம் பின்வருமாறு கூறப்படுகின்றது.

وإنّمَا سُمِّيَ ”بطاعون عمواس” نسبةً إلى بلدة صغيرة في فلسطين، بين الرملة وبيت المقدس، وذلك لأنّ الطاعون نَجَمَ بهَا أوّلاً ثم انتَشَر في بلاد الشام، فنُسب إليها، وبلدة عمْواس هدمتها إسرائيل عام 1967م وشردت أهلها وزرعت مكانَها غابةً بأموالِ المُتَبَرِّعين اليهود.

இந் நோயின் “இம்வாஸ்” என்ற பெயர் பலஸ்தீனிலுள்ள ஒரு கிராமத்தின் பெயராகும். இது றம்லா என்ற ஊருக்கும், “பைதுல் மக்திஸ்” ஊருக்கும் இடையில் உள்ளது. இக்கிராமத்திலேதான் முதலில் இம்வாஸ் நோய் உருப்பெற்று طَلَعَ نَجَمَ – வெளியாகி பின்னர் “ஷாம்” சிரியப் பிரதேசங்களில் பரவியது. இக் கிராமத்தின் நினைவாக இந் நோய்க்கு இம்வாஸ் என்று பெயர் வைக்கப்பட்து.

இந்த “இம்வாஸ்” கிராமத்தை இஸ்ரவேலர்கள் 1967ம் ஆண்டு தகர்ந்தழித்து தரைமட்டமாக்கி அவ்வூர் வாசிகளை வெளியேற்றி விட்டு யூதர்களின் நன்கொடை நிதியால் ஒரு பெரும் காட்டை வளர்த்துள்ளனர்.

தொற்று நோயென்று சொல்லப்படுகின்ற கொரோனா, தாஊன் இம்வாஸ் போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் நல்லடியார்கள் இல்லையென்ற தவறான எண்ணத்தை – கருத்தை அந்த நோயால் நபீ தோழர்களான ஸஹாபாக்கள் பாதிக்கப்பட்டிருப்பது நீக்கி விடுமென்று நினைக்கிறேன்.

இலங்கைத் திரு நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் உற்றார், உறவினர், மற்றும் மனைவி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் அனைவரின் மறுமை நல் வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கின்றேன். சோதனைகளைச் சுமந்து சொர்க்கம் சென்ற நபீ தோழர்களுக்கும், நல்லடியார்களுக்கும் எனது நல் வாழ்த்தையும் கூறிக் கொள்கின்றேன்.

கொரோனா மீண்டும் வரச் சாத்தியமுண்டா?

கொரோனா வைரஸ் மீண்டும் வரச் சாத்தியமுண்டா? ஆம், சாத்தியமுண்டு. சாத்தியம் என்று சொல்வதை விட நிச்சயமாக வரும் என்பதே சிறந்தது எனலாம்.

عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّ هَذَا الْوَجَعَ أَوِ السَّقَمَ رِجْزٌ عُذِّبَ بِهِ بَعْضُ الْأُمَمِ قَبْلَكُمْ، ثُمَّ بَقِيَ بَعْدُ بِالْأَرْضِ، فَيَذْهَبُ الْمَرَّةَ وَيَأْتِي الْأُخْرَى، فَمَنْ سَمِعَ بِهِ بِأَرْضٍ، فَلَا يَقْدَمَنَّ عَلَيْهِ، وَمَنْ وَقَعَ بِأَرْضٍ وَهُوَ بِهَا فَلَا يُخْرِجَنَّهُ الْفِرَارُ مِنْهُ»

நிச்சயமாக இந்த வலி அல்லது நோய் அசுத்தமானது. உங்களுக்கு முன் வாழ்ந்த சமுகத்தவர்கள் இதன் மூலம் வேதனை செய்யப்பட்டுள்ளார்கள். பின்பு இந்த நோய் பூமியில் தங்கிவிட்டது. ஒரு சமயம் போகும். இன்னொரு சமயம் வரும். எங்காவது ஓர் இடத்தில் அது இருப்பதாக கேள்விப்பட்டால் அங்கு செல்ல வேண்டாம். ஒருவர் எங்காவது ஓர் இடத்தில் இருக்கும் போது அது வந்தால் அவர் அந்த இடத்தை விட்டும் வெளியேறிவிடவும் வேண்டாம். அந்த நோயை பயப்படுவது அவனை வெளியேற்றி விட வேண்டாம்.
ஆதாரம்: ஷர்ஹ் முஸ்லிம்
ஆசிரியர் – இமாம் நவவீ
பக்கம் 204, பாகம் 14

மேற்கண்ட இந்த நபீ மொழி ஒன்றே கொரோனா மீண்டும் வரச் சாத்தியமுண்டு என்பதற்கான ஆதாரமாகும்.

முற்றும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments