Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஒரு கட்டுரையை அறபு மொழியிலும், தமிழ் மொழியிலும் எழுதுவதற்கான காரணம் என்ன?

ஒரு கட்டுரையை அறபு மொழியிலும், தமிழ் மொழியிலும் எழுதுவதற்கான காரணம் என்ன?

தொடர் 01

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

நான் எந்த ஒரு நூல் எழுதினாலும், அல்லது கட்டுரைகள் எழுதினாலும் அவற்றில் வருகின்ற, இடம்பெறுகின்ற முக்கியமான கருத்துக்களை இரு மொழிகளிலும் எழுதுகிறேன்.

இவ்வாறு நான் எழுதுவதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ளாத உலமாஉகளிற் சிலரும், பொது மக்களிற் பலரும் என்னைப் பெருமைக் காரன் என்றும், புகழ் விரும்பி என்றும் முகவரியில்லாக் கடிதங்கள் மூலம் சாடுகின்றார்கள்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் தமிழ் மொழி தெரிந்தவர்களாயிருக்கும் நிலையில் எதற்காக அறபியிலும் எழுத வேண்டுமென்று என்னிடம் கேட்டு நீ பெருமைக்காரன், புகழ் விரும்பி என்று கதையை முடிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் இவ் அடியார்களுக்கு நான் கூற விரும்பும் கருத்து என்னவெனில், கீழ்த்தரமாக முகவரியில்லாத கடிதம் எழுதும் அடியார்களே!

أَحْسِنُوْا ظُنُوْنَكُمْ بِاللهِ وَبِرَسُوْلِهِ وَبِخَلْقِهِ تَعَالَى أَجْمَعِيْنْ،

அல்லாஹ், றஸூல், மற்றும் அவனின் படைப்புகளில் நல்லெண்ணம் கொள்ளுமாறு உங்களை முதலில் கேட்டவனாக உங்களுக்கு சிறிய அறிவுரை வழங்குகிறேன்.

நான் இரு மொழிகளிலும் கருத்துக்கள் பதிவு செய்து வருவதில் நீங்கள் சொல்லியிருப்பது போன்ற சந்தேகமிருந்தால் என்னை நேரில் கண்டு என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.

அதற்கு சாத்தியமில்லாது போயிருந்தால் கடிதம் மூலம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இவ்விரண்டும் தெரியாத விடயத்தை தெரிந்து கொள்வதற்கான வழிகளாகும். நீங்களும் இவ் உண்மையை மறுக்கமாட்டீர்கள்.

உங்களின் மொட்டைக் கடிதங்களுக்கு அதே பாணியில் நான் பதில் தந்தால் எனக்கும், உங்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும் என்பதற்காக நான் அல்லாஹ்வின் “ஜமாலிய்யா” எனும் குணம் கொண்டவனாக உங்கள் போலன்றி மனிதனாயிருந்த நிலையில் பதில் தருகிறேன்.

எனது நூல்களும், பதிவுகளும், எனது CD களும், அறபு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகள் தெரிந்தவர்களை எப்படியோ பல வழிகளில் சென்றடைகின்றன.

நான் அறபு மொழியிலும், தமிழிலும் பதிவிடுகிறேன். சகோதரர் HMM அமீர் (அபிமான்) ஆசிரியர் அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பதிவிடுகிறார். மலையாள மொழியில் மொழியாக்கம் செய்வதற்கு பொருத்தமானவர் கிடைத்தால் அதையும் நாங்கள் செய்வோம். இன்ஷா அல்லாஹ். இது ஒரு காரணம்.

இவ்வாறு மூன்று மொழிகளிலும் பதிவுகள் செய்யப்படுவதால் பல நாடுகளிலுமுள்ள முஸ்லிம், முஸ்லிம் அல்லாத பலர் பயன் பெற்று வருகின்றனர்.

இலங்கையிலும், மற்றும் வெளிநாடுகளிலும் அறபு மொழி மூலம் மார்க்கம் கற்கின்ற மாணவர் சமுகம் பயன் பெறுவதற்கும் அறபு மொழியில் பதிவிடுவது வழி செய்கின்றது. இது இன்னொரு காரணம்.

பல மொழிகளில் கருத்துக்களை பதிவு செய்வதன் மூலம் பலர் பயன் பெற்று வருவதால் அல்லாஹ் தந்த நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மூலம் கல்வியை – அறிவை – இறைஞானத்தை – ஸூபிஸ தத்துவத்தை உலகெலாம் பரப்புவதற்கு இக்கால விஞ்ஞான நவீன கண்டுபிடிப்புகள் உதவுகின்றன.

அல்லாஹ் காலத்திற்கேற்ற கோலத்தில் வெளியாகி வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதை என் கண் காணும்போது எனது நாவு ஸுப்ஹானல்லாஹ் என்று அவனைப் புகழ்கிறது. அந்தப் புகழைக் கேட்ட என் காது என் மூளைக்கு செய்தி சொல்லி என் மூளை இறை வலுப்பத்தை எண்ணி மகிழ்ச்சியால் என்னை ஆடச் செய்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

பின்வரும் நிகழ்வை நான் மேலே எழுதிய விடயத்துக்கு உரமாக இட்டு சிந்தியுங்கள்.

நான் “கத்ர்” நாட்டுக்கு ஒரு வேலையாகச் சென்று அங்குள்ள ஒரு ஹோட்டலில் சுமார் 28 நாட்கள் தங்கியிருந்தேன். அக்கால கட்டத்தில் அங்கு வேலைக்காக வந்திருக்கின்ற கல்முனை, ஏறாவூர், அக்கரைப்பற்று முதலான ஊர்களைச் சேர்ந்த மௌலவீமார் ஐவர் என்னைச் சந்திப்பதற்காக ஹோட்டலுக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கொள்கையில் “ஸுன்னீ”கள் என்பதை அவர்கள் சொல்லாமலேயே நான் புரிந்து கொண்டேன்.

அவர்கள் என்னிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்பினார்கள். நல்லது என்றேன். அவர்கள் ஐவர் சார்பாக பின்வரும் கேள்வியை ஒருவர் முன்வைத்தார்.

கேள்வி:

إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது, அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை, தான் எந்த பூமியில் இறப்பேன் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (திருக்குர்ஆன் 31-34)

குறிப்பிட்ட ஐந்து விடயங்களையும் அல்லாஹ் தவிர வேறு எவரும், எந்த வகையிலும் அறியமாட்டார்கள் என்ற மேற்கண்ட அல்லாஹ்வின் ஆணைப்படி எவராலும் அறிய முடியாது என்பது நிச்சயம். அல்லாஹ் பேச்சு எதார்த்தத்திற்கு முரணாகாது என்பதும் நிச்சயம்.

இந்நிலையில் இன்றைய விஞ்ஞான உலகம் அவ் ஐந்தில் சிலதை மனிதனால் அறிய முடியுமென்று கூறுகிறது. அது ஆதாரங்களோடு நிறுவப்பட்டும் உள்ளது. இது எவ்வாறு சாத்தியம்? இதன் பதில் என்ன?

பதில்: நான் அவர்களிடம் இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? என்ன சந்தேகம்? தெளிவாகக் கூறுங்கள் என்றேன். அதற்கவர்கள் அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று அவனே கூறியிருக்க இன்று விஞ்ஞான ஆய்வின் மூலம் அறிந்து தெளிவாகக் கூறுகின்றார்கள். இவ்வாறு அவர்கள் அறிவது இறையின் திருவசனத்திற்கு முரணாகிறதல்லவா? இதுவே எங்கள் பிரச்சினை என்றார்கள்.

அல்லாஹ் என்றால் யார்? அவன் எங்கே இருக்கிறான்? எவ்வாறிருக்கிறான் என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் விஞ்ஞானிகள் என்ற உடையில் – தோற்றத்தில் அவற்றை அறிந்து சொல்லும் விஞ்ஞானிகள் அல்லாஹ்வுக்கு வேறானவர்களல்ல. விஞ்ஞானிகளாகவும், மெய்ஞ்ஞானிகளாகவும், மற்றுமுள்ள அனைத்துப் படைப்புகளாகவும் உங்கள் கண்களுக்குத் தெரிவதெல்லாம் அவனேயன்றி வேறு யாருமில்லையாதலால் விஞ்ஞானிகள் எனும் مَظَاهِرْ – பாத்திரங்கள் மூலம் “தஜல்லீ” வெளியாகிச் செய்பவன் அல்லாஹ்வேயன்றி விஞ்ஞானிகள் அல்ல. விஞ்ஞானிகளாக விஞ்ஞான தத்துவம் பேசுபவனும் அவன்தான். மெய்ஞ்ஞானிகளாக மெய்ஞ்ஞான தத்துவம் பேசுகிறவனும் அவன்தான் என்று சிறிய விளக்கம் கூறி மேலும் பின்வருமாறும் விபரம் சொன்னேன்.

அல்லாஹ் தனது “தாத்” அல்லது “வுஜூத்” எனும் தனது உள்ளமை கொண்டுதான் படைப்புகளாக வெளியாகியுள்ளானேயன்றி ரிஸ்வி முப்தீ அவர்களும், “பத்வா” குழு முல்லாக்களும் சொல்வது போல் அவன் தனது “ஸிபாத்” தன்மைகள் கொண்டு மட்டும் வெளியாகவில்லை என்பது தொடர்பான விபரங்களையும் கூறி அல்லாஹ் மட்டுமே குறித்த ஐந்து விடயங்களை அறிந்தவன் என்றும், அவற்றை வேறு யார் அறிந்தாலும் அறிந்தவன் அவனேயன்றி வேறு யாருமில்லை என்றும் விபரம் சொன்னேன்.

நீண்ட நேரம் செவியேற்றிருந்த மௌலவீகள் மிக மகிழ்ச்சியோடும், மலர்ந்த முகத்தோடும் விடை பெற்றுச் சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

இவ்வாறுதான் என்னிடம் வருகின்ற உலமாஉகள், மற்றும் படித்தவர்களுக்கும் விளக்கம் கூறி அனுப்பி வைக்கிறேன். ஆயினும் இதுவரை காத்தான்குடி உலமாஉகளில் எவரும், இதேபோல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை நிர்வாகிகளில் எவரும் என்னிடம் கடந்த 42 வருடங்களில் வரவில்லை. வந்தவர்கள் வெளியூர் உலமாஉகளும், இந்திய உலமாஉகளிற் சிலருமேயாவர்.

இன்னும் நான் மரணிக்கவில்லை. உயிரோடுதான் உள்ளேன். உலமாஉகளிலோ, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் படித்து கலாநிதிப் பட்டம் பெற்றவர்களோ நான் கூறி வரும் இறைஞானத்தை என்னிடம் கற்றுக் கொள்ளும் நோக்கம் இருந்தால் மட்டும் அவர்கள் என்னிடம் வரட்டும். மாறாக விவாதிக்கும் நோக்கமிருந்தால் அவர்கள் என்னிடம் வராமல் வேறு யாருடனாவது விவாதிக்கட்டும். கற்றுக் கொள்ளும் நோக்கம் இருந்தால் மட்டும் எவரும் என்னிடம் வரலாம். அறிவை கற்றுக் கொடுக்க நான் என்றும் தயாராகவே உள்ளேன்.

உலமாஉகளில் யாராவது வர விரும்பினால், நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” இறைஞானத்தையும், மற்றும் ஸூபிஸ தத்துவங்களையும் அறிய விரும்பினால் அவர்கள் மாணவர்களாக வருவார்களாயின் மட்டும் என் வீட்டுக் கதவு அவர்களுக்கு என்றும் திறந்திருக்கும். இது பெருமையான பேச்சல்ல. இதுவே எதார்த்தம்.


وأما باب منزلي فهو مفتوح لمن أراد التعلّم منّي، ولكن يجب عليه أن يأتيني متعلّما مع إخلاص النيّة، إنّما الأعمال بالنّيّات،

தொடரும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments