தொடர் – 2
الإنسان الكامل – “அல் இன்ஸானுல் காமில்” முழு மனிதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அகமியங்கள்.
மேற்கண்ட தலைப்பில் தொடர் 01ல் கண்மணி நாயகம் அவர்களுக்கு முதன் முதலாக வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மூலம் “வஹீ” இறையறிவிப்பு வந்தது தொடர்பான சில குறிப்புகளையும், நபீ பெருமானாருக்கு சில காலம் – சுமார் ஆறு மாதங்கள் “வஹீ” வராமல் இருந்த வேளை அவர்களை கடுங்கவலை ஆட்கொண்ட போது பல முறை மலை ஒன்றில் ஏறி தரையில் குதிக்க முயன்ற போதெல்லாம் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து ஆறுதல் கூறி தடுத்த குறிப்புக்களையும் பதிவு செய்திருந்தேன்.
குறித்த ஹதீதில் பல அறிவு ஞானங்களும், பாடங்களும் உள்ளன. அவையாவுக்கும் விளக்கம் சொல்லாமல் இரண்டு விடயங்களுக்கு மட்டும் விளக்கம் எழுதுகிறேன்.
ஒன்று – நபீ பெருமான் “ஹிறா” குகையில் தன்னந்தனியாக இருந்த வேளை வானவர் ஜிப்ரீல் திடீரென்று – எதிர்பாராமல் அங்கு வந்தார்கள். நபீ மொழியில் இக்கருத்தை தருகின்ற அறபு வசனம் حَتَّى فَجِئَهُ الْحَقُّ என்ற வசனம்தான். இவ்வசனத்தில் வந்துள்ள “அல்ஹக்கு” என்ற சொல்லுக்கு சத்தியம், உண்மை என்றும் பொருள் கூறச் சாத்தியம் உண்டு. இறைவன் என்று பொருள் கூறவும் சாத்தியம் உண்டு. ஏனெனில் இறைவனின் திருப் பெயர்களில் “அல்ஹக்கு” என்பதும் ஒன்றாகும். இச் சொல் لَفْظٌ مُشْتَرِكٌ இரு பொருளுக்குப் பொருத்தமான சொல்லாகும். சத்தியம், உண்மை என்ற பொருளுக்கும், இறைவன் என்ற பொருளுக்கும் பயன்படுத்தலாம். இது “இலாஹ்” என்ற சொல் போன்றதாகும். அல்லாஹ்வுக்கும், விக்கிரகத்திற்கும் பயன்படுத்தலாம்.
இரு பொருளுக்குச் சாத்தியமான ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் மட்டும் கூறிவிட்டு அதற்கு வேறு பொருள் ஒன்றும் கிடையாதென்று வாதிடுவது அறிவுடைமையல்ல. இது மன முரண்டேயாகும். மனச்சாட்சிக்கு முரணானதுமாகும்.
வெளி நீச்சலடிக்கின்ற علماء الظاهر மார்க்க அறிஞர்கள் இவ்வசனத்திற்கு சத்தியம் வந்ததென்று மட்டும் பொருள் கூறி இறைவன் வந்தான் என்று பொருள் கூறுவது பிழை என்றும், “ஷிர்க்” என்றும் சொல்கிறார்கள். இது உச்சக்கட்ட அறியாமையாகும். இந்த அறிஞர்கள் அவ்வசனத்திற்குரிய மறு பொருளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது “அல்ஹக்கு” என்ற இறைவன் வந்தான் என்ற பொருளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இரு பொருளுக்குச் சாத்தியமான சொல்லுக்கு ஒரு பொருள் மட்டும்தான் என்று அடம் பிடிப்பதும், மறு பொருள் இல்லையென்று உடும்பாகி நிற்பதும் மன முரண்டேயன்றி வேறு எதுவுமே இல்லை.
மார்க்க அறிஞர்களிடம் மன முரண்டிருப்பது அவர்களின் உள்ளம் பரிசுத்தமானதல்ல என்பதற்கு பால் போன்ற தெளிவான ஆதாரமாகும். அவர்கள் முதலில் உள்ளத்தை சுத்திகரித்து மனிதர்களாக வேண்டும். இப்லீஸ் என்ற வம்பனின் குணங்களை உள்ளத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். பெருமை என்ற ஷெய்தானை விலங்கிலிட வேண்டும்.
அவர்கள் “அல்ஹக்கு” என்ற சொல்லுக்குரிய மறு பொருளான “இறைவன் வந்தான்” என்ற பொருளை நிராகரிப்பதற்குக் காரணம் நான் அறிந்த வரை ஒன்றே ஒன்றுதான். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு இறைவன் வந்தான் என்று சொன்னார்களாயின் அவர்களை நோக்கி கேள்விகள் பல ஏவுகணைகளாய்ப் பாயும். அவற்றைச் செயலிழக்கச் செய்யும் மாற்று மருந்து அவர்களிடம் இல்லை. காரணம் அவர்கள் “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ பல்கலைக் கழகங்களில் கற்றுக் கொள்ளாததேயாகும்.
அவர்கள் பின்வருமாறு ஏவுகணைகளைச் சமாளிக்கலாம். இதுவே சரியான வழியுமாகும். “அல்ஹக்கு” என்ற சொல்லுக்கு சத்தியம் என்றும், இறைவன் என்றும் இரு பொருள்கள் உள்ளன. நாங்கள் علماء الشـريعة ஷரீஆவின் உலமாஉகளாயிருப்பதால் அதற்கு சத்தியம் என்று பொருள் கூறுவோம். அதற்கு விளக்கமும் சொல்கிறோம். ஆயினும் அதற்கு இறைவன் என்று பொருள் கூறும் علماء التصوّف ஸூபிஸ உலமாஉகள் உள்ளனர். அவர்களிடம் அதற்கான விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி ஏவுகணைகளைச் சமாளிக்கவும் முடியும். இதுவே சரியான, அறிவுள்ள எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். மார்க்க அறிஞர்கள் இவ்வாறு செய்வார்களா? செய்யமாட்டார்கள். இதற்கு காரணம் وفوق كل ذي علم عليم எந்த ஓர் அறிஞனாயினும் அவனுக்கு மேல் ஓர் அறிஞன் இருப்பான் என்ற ஆன்மிக “இஞ்ஜக்ஷன்” அவர்களில் ஏறாமலிருப்பதேயாகும்.
ஸூபிஸ உலமாஉகளான நாங்கள் அச் சொல்லுக்குரிய இரு பொருளையும் ஏற்றுக் கொண்டு ஏவுகணைகளுக்கு ஏற்ற வகையில் சமாளிப்போம். அச் சொல்லுக்கு இறைவன் என்று பொருள் கொடுத்து “தஜல்லீ” அடிப்படையில் விளக்கம் கொடுப்போம். அல்ஹம்துலில்லாஹ்!
தஸவ்வுப் – ஸூபிஸக் கலையில் تجليات الحق تعالى அல்லாஹ்வின் வெளிப்பாடுகள் என்று ஓர் அம்சம் கூறப்படுகின்றது. சுருக்கமாக அதன் விபரத்தை இங்கு எழுதுகிறேன்.
இறைவன் எதற்கும் சக்தியுள்ளவன். அவனின் சக்திக்கப்பாற்பட்டது எதுவுமே இல்லை. சாத்தியமானதையும் செய்வான். எமது பார்வையில் அசாத்தியமானதையும் செய்வான். அவனுக்கு அசாத்தியமானதென்று ஒன்றுமே இல்லை. (இந்த விடயத்தில் “முதகல்லிமீன்” எனும் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உண்டு. அதுபற்றி இங்கு விளக்க விரும்பவில்லை) அல்லாஹ்வுக்கு அசாத்தியமானது ஒன்றுமே இல்லை. அவ்லியாஉகளால் வெளியாகின்ற அநேக செயல்கள் அசாத்தியமானவைதான். அவைகள் யாரின் செயல்கள்? அல்லாஹ்வின் செயல்கள்தானே! அசாத்தியமானவற்றை அவன்தானே செய்கிறான். இந்நிலையில் அல்லாஹ் அசாத்தியமான ஒன்றை செய்யமாட்டான் என்று எவ்வாறு சொல்ல முடியும்? அவையும் அல்லாஹ்வின் செயல்கள்தான். அதாவது அல்லாஹ் செய்பவைதான். “முதகல்லிமீன்”கள் அல்லாஹ் அசாத்தியமானதை செய்யமாட்டான் என்று கூறுவர். ஸூபீகள் இதற்கு மாற்றமான கருத்துக் கூறுவர். இவ்விரு சாராரின் கருத்தில் ஸூபீகளின் கருத்தே 100 வீதம் சரியானதாகும். அசாத்தியமானதை அல்லாஹ் செய்யமாட்டான் என்றால் நபீமார், வலீமார்களால் வெளியாகும் அசாத்தியமானவற்றைச் செய்பவன் யாரென்று அவர்கள் பதில் கூற வேண்டும். சொல்வார்களா? அல்லது பின்வழியால் செல்வார்களா?
அல்லாஹ் மனித உருவத்திலோ, மரத்தின் உருவத்திலோ, ஜிப்ரீலின் உருவத்திலோ “தஜல்லீ” வெளியாவது அவனுக்கு அசாத்தியமானதல்ல. எனவே, “ஹிறா” குகையில் ஜிப்ரீல் உருவத்தில் “தஜல்லீ” வெளியானவன் அல்லாஹ்தான் என்றும், அது அவனுக்கு அசாத்தியமானதல்ல என்றும் நம்ப வேண்டும். இதுவே “ஈமான்”.
நபீ பெருமானிடம் மனித உருவில் வானவர் ஜிப்ரீல் அவர்களுக்கு வெளியாகி வர சாத்தியமென்றால் அது ஏன் அல்லாஹ்வுக்கு சாத்தியமாகாது? நபீ தோழர் “திஹ்யதுல் கல்பீ” உடைய தோற்றத்திலும், வேறு இனம் தெரியாத மனிதனின் உருவத்திலும் பல முறை ஜிப்ரீல் வந்ததற்கு ஆதாரம் உண்டு.
ஜிப்ரீல் பெருமானாரைக் கட்டியணைத்தது ஏன்?
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் குகைக்கு வந்த வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபீ பெருமானிடம் ஓதுங்கள் என்றார்கள். அதற்கு நபீ பெருமான் அவர்கள் مَا أَنَا بِقَارِئٍ என்று கூறினார்கள். அப்போதவர் பெருமானாரைக் கட்டியணைத்து ஆலிங்கனம் செய்துவிட்டு ஓதுங்கள் என்றார். அப்போதும் நபீ பெருமானார் முன் சொன்னது போலவே சொன்னார்கள். அப்போதும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபீ நாதரைக் கட்டியணைத்து விட்டு ஓதுங்கள் என்றார். அப்போதும் நபீகளார் முன் பொலவே சொன்னார்கள். இவ்வாறு மூன்று தரம் நடந்தது. மூன்றாம் முறையும் மேற்கண்டவாறு நடந்தபின் إِقْرَأْ بِسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَ என்ற வசனத்திலிருந்து தொடராக ஐந்து வசனங்களை ஜிப்ரீல் ஓதினார். அதன் பிறகுதான் நபீ பெருமான் அவர் ஓதியது போன்றே ஓதினார்கள்.
இந்த ஹதீதின் வெளிப்படையான பொருள் என்னவெனில் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “உம்மீ” எழுத வாசிக்கத் தெரியாதவர்களாயிருந்ததால் வானவர் ஜிப்ரீல் அவர்களைக் கட்டியணைத்து தனது வல்லமையை அவர்களில் ஏற்றிய பின் – பாய்ச்சிய பின் ஓதச் சக்தி பெற்று ஓதினார்கள் என்பதாகும்.
இவ்வாறு பொருள் கொள்வது பெருமானாரின் அந்தஸ்த்தை குறைத்தும் ஜிப்ரீலுடைய அந்தஸ்த்தை கூட்டியும் காட்டுகிறது. இது பிழையும் பொருத்தமற்றதுமாகும்.
ஏனெனில் ஜிப்ரீல் படைக்கப்பட்டது கூட பெருமானாருக்காக என்றும், இன்னுமவர் خَادِمُ النَّبِيِّ நபீ பெருமானின் பணியாள் என்றும் கூறப்பட்டிருப்பதால் எல்லா வகையிலும் ஜிப்ரீல் அவர்களை விடப் பெருமானார் அவர்களே சிறந்தவர்களாதலால் ஜிப்ரீல் பெருமானாருக்கு சக்தி கொடுத்தார்கள் என்று கூறுவது பிழையாகிவிடும்.
இதிலுள்ள இரகசியம் பெருமானாருக்கு சக்தி கொடுப்பதல்ல. பெருமானாரைக் கொண்டு – அவர்களைக் கட்டியணைத்து ஜிப்ரீல் அருள் பெற்றுக் கொண்டதேயாகும். அந்த நேரம், அந்தக் கட்டத்தில் ஜிப்ரீல் அருள் பெற்றதற்கான காரணம் பெருமானார் مَا أَنَا بِقَارِئٍ என்று ஏன் சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொண்ட ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொல்லொணா மகிழ்ச்சி ஏற்பட்டதாலேயே கட்டியணைத்து அருள் பெற்றார்கள்.
ஏன் ஜிப்ரீலுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டது? இதற்கான காரணம் என்னவென்று ஆய்வு செய்தால் ஓர் உண்மை துலங்கும். அதாவது مَا أَنَا بِقَارِئٍ என்ற வசனத்துக்கு “எனக்கு ஓதத் தெரியாது” என்று பொருள் கூறுவது பிழையாகும். இவ்வாறு பொருள் கூறுவதாயின் لَا أَعْرِفُ الْقِرَائَةَ என்றோ, لَا أَسْتَطِيْعُ الْقِرَائَةَ என்றோ பெருமானார் அவர்கள் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் கூறவில்லை. எதார்த்தத்தில் அவர்களுக்கு ஓதத்தெரியாமலுமில்லை. அவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாதவர்கள் போல் பாவனை செய்து வாழ்ந்துள்ளார்களேயன்றி எதார்த்தத்தில் அவர்கள் அவ்வாறில்லை. அவர்கள் அவ்வாறு பாவனை செய்து கொண்டதற்கு நியாயமான, மறுக்க முடியாத காரணம் உண்டு. எனினும் தங்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியுமென்பதை ஒரு சமயம் அவர்கள் வெளிப்படையாகக் காண்பித்துள்ளார்கள். இதற்குப் பலமான ஹதீது ஆதாரமாக உள்ளது.
எனவே, உம்மீ நபீ என்பதன் பொருள் مَكِّيٌّ – மக்காவைப் பிறப்பிடமாக கொண்டவர்கள் என்பதாகும். ஏனெனில் திரு மக்கா நகர் ஆரம்ப காலத்தில் “உம்முல் குறா” ஊர்களின் தாய் என்று அழைக்கப்பட்டது இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.
பெருமானார் مَا أَنَا بِقَارِئٍ என்று கூறிய வசனத்திற்கு எனக்கு ஓதத் தெரியாதென்று பொருள் கொள்ளாமல் “நான் ஓதமாட்டேன்” என்று அல்லது “நான் ஓதக் கூடியவனாக இல்லை” என்று பொருள் கொள்ள வேண்டும்.
இதற்கான காரணம் பின்னால் அடுத்த தொடரில் இடம் பெறும். அதோடு பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தற்கொலை முயற்சி செய்ததற்கான விளக்கமும் இடம் பெறும்.
தொடரும்..