Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அண்ணல் பெருந்தகையின் ஆன்மிக நிலைகள்!

அண்ணல் பெருந்தகையின் ஆன்மிக நிலைகள்!

தொடர் – 3

அல்லாஹ்வின் பேச்சு படைப்பின் – மனிதனின் பேச்சுக்கு மாறானதாகும். மனிதனின் பேச்சுக்கு சத்தமுண்டு. திசையுண்டு. எழுத்துண்டு. ஆனால் அல்லாஹ்வின் كلام பேச்சு சிருஷ;டியின் – மனிதனின் பேச்சுக்கு மாறானது. மனிதனின் பேச்சு படைப்பாகும். அல்லாஹ்வின் பேச்சு قديم பூர்வீகமானதாகும். படைப்பல்ல.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ் அவர்களின் காலத்தில் (ஹிஜ்ரீ 164 – 241) அல்லாஹ்வின் பேச்சு படைக்கப்பட்டதா? இல்லையா? என்று ஒரு சர்ச்சை எழுந்தது. அக்கால அரசன் அது படைக்கப்பட்டதென்ற கொள்கையுள்ளவராயிருந்தார். அவருக்கு இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள் குர்ஆன் படைக்கப்படாததென்று கூறுகின்றார் என்ற தகவல் கிடைத்தது. தன் கொள்கைக்கு மாறான ஒருவர் இங்கு இமாம் ஆக இருப்பதா? அவரை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். இமாம் அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இமாம் அவர்களிடம் குர்ஆன் படைக்கப்பட்டதா? இல்லையா? என்று கேட்டார் அரசர். அதற்கவர்கள் எனக்கு முன்னால் ஓர் “முஸ்ஹப்” குர்ஆன் பிரதியை கொண்டு வந்து வையுங்கள் என்றார்கள். வைக்கப்பட்டது. அதை அவர்களின் விரலால் சுட்டிக் காட்டி “இது படைக்கப்பட்டது” என்று கூறினார்கள். அரசன் அவர்களை அனுப்பிவிட்டான்.

நடந்தது என்ன? இமாம் அவர்கள் கொள்கை மாறவில்லை. ஆயினும் பொய்யில்லாத வகையில் “ஹீலா” தந்திரத்தைக் கையாண்டு கொலை செய்யப்படாமல் தப்பிக் கொண்டார்கள். அவர்கள் செய்த உபாயம் என்னவெனில் தனக்கு முன்னால் வைக்கப்பட்ட தாளில் மையால் எழுதப்பட்ட தாளையும், மையையும் சுட்டி அவற்றை கருத்திற் கொண்டு இது படைக்கப்பட்டதென்று கூறினார்கள். அரசன் இமாம் அவர்கள் குர்ஆனையே சொல்கிறார்களென்று விளங்கி அவர்களை அனுப்பிவிட்டான். உண்மையில் அவர்கள் “குர்ஆன்” அல்லாஹ்வின் பேச்சை அவ்வாறு சொல்லவில்லை. முன்னால் வைக்கப்பட்டிருந்த “பேப்பர்” தாளைக் கருத்திற் கொண்டே அவ்வாறு சொன்னார்கள். புத்தியைப் பயன்படுத்தி தப்பிக் கொண்டார்கள். இன்றேல் அவர்களின் கழுத்து வாளுக்கு இரையாகியிருக்கும்.

இதன் மூலம் ஹன்பலீ மத்ஹபாயினும், வேறு மத்ஹபுகளாயினும் அல்லாஹ்வின் “கலாம்” பேச்சு – அதாவது 6666 வசனங்களும் படைப்பைச் சேரமாட்டாதென்பது தெளிவாகின்றது.

அல்லாஹ்வின் பேச்சுக்கு சத்தம், திசை என்பன இல்லாதிருப்பதால் அதை அறிந்திருந்த எம் பெருமான் அவர்கள் சத்தம், திசையில்லாத “கலாம்” பேச்சை நான் எவ்வாறு ஓதுவேன்? என்ற தத்துவத்தைக் கூறினார்களேயன்றி எனக்கு ஓதத்தெரியாதென்று கூறவில்லை. பெருமானார் கூறிய இத்தத்துவத்தை விளங்கிக் கொண்டதினால்தான் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபீயவர்களைக் கட்டியணைத்தார்களேயன்றி ஓதும் சக்தியை பெருமானாருக்கு கொடுத்தார்கள் என்பது கருத்தல்ல. நான் எழுதியுள்ள இத்தத்துவம் இந்தியாவைச் சேர்ந்த “இல்ஹாம்” வழங்கப்பட்ட ஒரு “வலீ” மூலம் நான் அறிந்ததேயாகும்.

இந்த விபரத்தோடு தொடர்புள்ள சுவாரஷ்யமான ஒரு கதை சொல்கிறேன். எனக்கு ஒரு நண்பர் இருந்தார். என்னை விட சுமார் 10 வயது கூடியவர். இவர் தன்னை ஒரு ஞானியென்றோ, “மஜ்தூப்” என்றோ பிறர் சொல்ல வேண்டும் என்பதற்காக அதற்கேற்றவாறு நடிப்பவராயிருந்தார். அவரின் பெயர் அப்துல் காதிர்.

ஒரு நாள் அவரைச் சந்திப்பதற்காக அவரின் வீட்டுக்குச் சென்றேன். அவர் தற்போது எங்களின் தோட்டத்தில் குடிசையொன்று அமைத்துக் கொண்டு தியானத்தில் இருக்கிறார் என்று அவரின் மனைவி சொன்னார். நான் அங்கு சென்று பார்த்த போது தலையில் தலைப்பாகை அணிந்தவராகவும், கழுத்தில் ஒரு தொகை “தஸ்பீஹ்” மாலைகள் – ஜெப மாலைகள் அணிந்தவராகவும் குனிந்த நிலையில் இருந்தார். நீண்ட நேரத்தின் பின் என்ன தலைப்பாகையும், ஜெப மாலையும் என்று கேட்டேன். அதற்கவர் அல்லாஹ்விடமிருந்து இவ்வாறு இருக்குமாறு எனக்கு ஓர் அசரீரி கேட்டது என்றார். அந்த அசரீரி எந்தப் பக்கத்திலிருந்து கேட்டது என்று கேட்டேன். வலப்பக்கத்திலிருந்து கேட்டது என்றார். அப்போது நான், அது அல்லாஹ்வின் அசரீரி அல்ல. அது ஷெய்தானின் அசரீரிதான். ஏனெனில் அல்லாஹ்வின் சத்தத்திற்கு திசையில்லை. இன்றுடன் தலைப்பாகையை கழட்டி விடுங்கள். தஸ்பீஹ் மணிக் கோர்வையை பள்ளிவாயலுக்கு கொடுத்து விடுங்கள் என்றேன். அவர் என் கதையை கேட்கவில்லை. அவருடன் பேசாமலேயே வந்து விட்டேன். ஒரு வாரம் மட்டுமே அவர் உயிருடனிருந்தார். பின்னர் மரணித்துவிட்டார்.

இதுவரை கூறிய விடயத்தின் மூலம் குர்ஆன் என்பது அல்லாஹ்வின் பேச்சு என்பதும், அது 6666 வசனங்களைக் குறிக்குமேயன்றி அவை எழுதப்பட்ட தாளைக் குறிக்காது என்பதும், அல்லாஹ்வின் பேச்சுக்கு சத்தம், திசை என்பன இல்லையென்றும், குர்ஆன் வசனங்கள் தாளில் அச்சிடப்பட்டு கோர்த்து புத்தகம் போல் கட்டப்பட்டது “முஸ்ஹப்” என்று சொல்லப்படும் என்பதும் விளங்கப்படுகிறது.

இதுவே எதார்த்தம். ஆயினும் சத்தம், திசையற்ற அல்லாஹ்வின் பூர்வீகமான பேச்சு சிருஷ்டியின் மூலம் வெளியாகும் போது அது சத்தமுள்ளதாயும், திசையுள்ளதாயும் இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சிருட்டி என்பது சத்தமுள்ளதாயும், திசை உள்ளதாயுமே இருக்கும்.

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெருமானாரைக் கடிட்யணைத்து ஆலிங்கனம் செய்தது பெருமானார் அவர்களைப் பலப்படுத்துவதற்காக அல்ல. பெருமானார் அவர்கள் என்றும் பலமானவர்கள்தான். அவர்களைப் பலப்படுத்துவதற்கு அல்லாஹ்வால் மட்டுமே முடியும். ஆயினும் ஜிப்ரீல் அவர்களைக் கட்டியணைத்தது அவர்களுக்கு பலத்தை – சக்தியை ஏற்படுத்துவதற்காக என்று போலிகள் கூறும் கதை, கிழக்கிலிருந்து மறைந்த ஒரு ஞானிசொன்ன கதையை எனக்கு நினைவூட்டுகின்றது. பக்தாதில் வாழும் குத்பு நாயகமவர்களுக்கு சில தத்துவங்களில் சந்தேகம் வந்தால் அவர்கள் கிழக்கில் வாழும் அவரிடம் வந்துதான் தெளிவு பெற்றுப் போவார்கள் என்று சொன்னாராம். ஸுப்ஹானல்லாஹ்! பதவி மோகம் தலைக்கேறியதால் அவர் அவ்வாறு சொன்னார் போலும்.

முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் போல் “கமாலிய்யத்” பூரணத்துவம் பெற்ற எவரும் பிறக்கவுமில்லை. பிறக்கப் போவதுமில்லை. அல்லாஹ் தனது “தாத்”, அஸ்மாஉ, ஸிபாத் அனைத்தைக் கொண்டும் அவர்களிலேயே பூரணமாக வெளியானான். உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் இவ்வாறுதான் நம்ப வேண்டும். இதற்கு மாறாக அவர்களை நம் போன்ற மனிதனாக நம்புவது “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்திவிடும். இதை அறியாதவர்களே அவ்வாறு கூறுவர். இன்னும் சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் பெருமானாரை “மிஸ்டர் முஹம்மத்” என்று அவர்கள் கூறுவார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்கிறேன்.

எனவே, ஜிப்ரீல் கட்டியணைத்தது பெருமானாரிலுள்ள சக்தியையும், அருளையும் தான் பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி தனது சக்தியை அவர்களுக்கு கொடுப்பதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெருமானார் மலை மீதேறி தற்கொலை செய்ய முயற்சித்தது உண்மையா?

இந்த தகவைல எமக்குத் தந்தது “ஸஹீஹுல் புகாரீ” எனும் நூலில் பதிவாகியுள்ள ஆயிஷா நாயகி றழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் அறிவித்துள்ள ஹதீதேயாகும். எனது கற்பனையல்ல.

ஹதீது பொய்யுமல்ல. பலவீனமானதுமல்ல. ஹதீதில் கூறப்பட்ட சம்பவங்கள் யாவும் நடந்தவையேயாகும். இது 1400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மைச் சம்பவமேயன்றி கட்டுக் கதையல்ல. இப்படியொரு ஹதீது இருப்பது உலமாஉகள் அறியாததுமல்ல.

எனினும் தெரிந்த உலமாஉகளும் கூட இதை மக்கள் மத்தியில் சொல்லாமல் மறைத்து விட்டார்கள். ஏன் மறைத்தார்கள் என்பதற்கான சரியான, உண்மையான காரணம் எனக்குப் புரியவில்லை. ஆயினும் இவ்வாறான விடயங்களைச் சொல்வதால் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அவர்களால் முகம் கொடுத்து நிற்க முடியாதென்ற அச்சம் காரணமாகவும் அவர்கள் சொல்லாமல் இருக்கலாம். அல்லது தாம் வெளியிடும் கருத்தை சரியென்று நிறுவுவதற்கு தெளிவான, விளக்கமான ஆதாரங்கள் அவர்களிடம் இல்லாத காரணமாகவும் இருக்கலாம். இவ்வாறுதான் நான் நினைக்கிறேன்.

உலமாஉகள் என்னதான் காரணம் சொன்னாலும் அவர்கள் மறுமையில் அவர்களின் மௌனம் பற்றி விசாரிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் உலமாஉகள் திருக்குர்ஆனையும், ஹதீதுகளையும் மக்கள் மத்தியில் கூறுவதும், அவற்றுக்கு விளக்கம் சொல்லி அவர்களுக்குப் புரிய வைப்பதும் அவர்களின் கடமையாகும். குறைந்தபட்சம் இது சரி, இது பிழை என்று மட்டுமாவது அவர்கள் சொன்னால்தான் இறைவனின் பிடியிலிருந்து தப்புவார்கள். இன்றேல் தண்டனைதான்.

இன்று நமது நாட்டிலுள்ள உலமாஉகளிற் பலர் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையும், ஸூபிஸ ஞானமும் தெரிந்தவர்களாயிருந்தும் கூட உண்மை புரட்டப்பட்டும், பொய்யாக்கப்பட்டும், ஷிர்க், குப்ர் என்று “பத்வா” வழங்கப்பட்டுமிருக்கும் நிலையில் சரி என்று “சிக்னல்” கூட காட்டாமல் மெய்யைப் பொய்யாக்கும் கூட்டத்துடன் சேர்ந்து கோவிந்தா போடுவது அவர்கள் இறைஞானத்திற்குச் செய்கின்ற அநீதியும், துரோகமுமேயாகும்.

“எல்லாம் அவனே” என்ற கருத்து தொனிக்கும் வகையில் பொது மக்கள் மத்தியில் பேசுவது கூடாதென்பதற்காகவே நாங்கள் பேசாமலிருக்கிறோம் என்று அந்த உலமாஉகள் சொல்வார்களாயின் அவர்கள் வாதத்திற்கான ஆதாரங்களை முன் வைக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் வைத்தாலும் கூட அதை மறுத்துரைப்பதற்கு ஆதாரங்கள் நிறைய உள்ளன. அவற்றை அவர்கள் கூறுவார்களாயின் ஒரு நொடியில் அவற்றை உடைத்தெறிவதற்குத் தேவையான ஆயுதங்கள் எம்மிடமுள்ளன.

எம்மிடம் LMG போன்ற திருக்குர்ஆன் ஆதாரங்களும், Ak47 போன்ற ஹதீது ஆதாரங்களும், மிஷின் கன் போன்ற ஆரிபீன்களின் பேச்சு ஆதாரங்களும் உள்ளன. முன்வைத்தால் நாமும் முன்வைப்போம். அல்ஹம்துலில்லாஹ்.

தற்கொலை பற்றிய விளக்கம்.

தற்கொலை செய்வது “ஹறாம்”. அவ்வாறு செய்ய நினைப்பதும் “ஹறாம்”. அதற்காக முயற்சிப்பதும் “ஹறாம்”. இவ்வாறு எமக்கு சொல்லித் தந்த, நபீமார் அனைவருக்கும் அரசரான முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இப்படியொரு பஞ்சமா பாதகத்தை செய்வார்களா? செய்வதற்கு நினைப்பார்களா? இல்லை. இல்லவே இல்லை. இதோ விளக்கம் கூறுகிறேன்.

இவ்விளக்கம் காத்தான்குடி அப்துர் றஊபின் விளக்கமல்ல. அவரின் கற்பனையில் ஊற்றெடுத்ததுமல்ல. பின்வரும் விளக்கம் சொன்ன மகான் பற்றி முன்னால் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன். வாசிக்கத் தவறியவர்களின் நன்மை கருதி இவ்விடத்திலும் குறிப்பிடுகிறேன்.

مولانا عبد العزيز الدَّبَّاغُ، (ولادة – 1095 هجري، الوفاة – 1131) الوليّ الكامل، الغوث الحافل، الصوفيّ الباهر، نجم العرفان الزاهر، صاحبُ الإشارات العليّة، والعبارات السنيّة، والحقائق القُدسيّة، والأنوار المحمّديّة، والأسرار الربّانيّة، والهِمَم العرشيّة، مُنشئُ معالِم الطريقة بعد خَفاء آثارِها، ومُبدِئُ معالِم الحقائق بعد خَبْوِ أنوارها، الشّريفُ الحسيبُ الوَجِيهُ النَّسِيبُ، ذُو النِّسبَتَين الطاهرتين، الجِسميّة والرُّوحيّة، والسُّلالتَين الطّيِّبتين، الشّاهديّة والغَيبِيّة، والوِلايَتَين الكريمتين، المَلَكِيَّةِ والمَلَكُوتِيّة، المُحمَّدِيُّ العلويُّ الحسنِيُّ، قطْبُ السالكين، وحاملُ لواءِ العارفين، شيخُنا وسيّدُنا ومولانا سيّدي عبد العزيز بن سيّدنا ومولانا مسعود الدَّبَّاغُ، رضي الله عنه،

இவர்களின் பரம்பரை குறிப்பும், அவர்களின் புகழுமே மேலே அறபு மொழியில் எழுதப்பட்டிருப்பதாகும். இவர்கள் மா பெரும் மேதையும், குத்பும் ஆவார்கள். இவர்களின் பரம்பரை ஹஸன் இப்னுல் முதன்னா, ஹஸன் இப்னு அலீ வழியாக அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களில் முடிகின்றது. இவர்கள் அப்துல் அஸீஸ் அத்தப்பாங் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள். ஹிஜ்ரீ 1095ல் “பாஸ்” நாட்டில் பிறந்து ஹிஜ்ரீ 1131ல் “வபாத்” ஆனார்கள். இவர்களின் அற்புதங்களை எழுதத் தொடங்கினால் இக்கட்டுரை பல தொடர்களைத் தாண்டிவிடும். தேவையானோர் அஹ்மத் இப்னுல் முபாறக் (குத்பு அவர்களின் முரீத்) எழுதிய “அல் இப்ரீஸ்” எனும் ஞான நூலைப் பார்க்கவும்.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments