Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அண்ணல் பெருந்தகையின் ஆன்மிக நிலைகள்!

அண்ணல் பெருந்தகையின் ஆன்மிக நிலைகள்!

தொடர் – 4

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தற்கொலை செய்ய முயன்றது தொடர்பாக அப்துல் அஸீஸ் அத்தப்பாங் அவர்களிடம் அவர்களின் “முரீத்” சிஷ்யன் அஹ்மத் இப்னுல் முபாறக் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கேட்ட போது அவர்கள் கூறிய பதிலை சிஷ்யன் தங்களின் அல் இப்ரீஸ் எனும் நூல் 105ம் பக்கம் எழுதியுள்ளார்கள். அதை இங்கு முழுமையாக எழுதுகிறேன். முதலில் அறபியில் எழுதி பின்னர் விளக்கத்தை எழுதுகிறேன்.

سئلتُه رضي الله عنه عمّا فى الحديث مِنْ أنَّ سيّد الوجود صلّى الله عليه وسلّم لمَّا تأخَّرَ عنه جبريلُ عليه السّلام فى ابتداء الوحي كان يصعد إلى شاهقِ جبلٍ، ويُريد أن يرمِيَ نفسَه شوقا إلى لِقائِه، فيَبْدُوا له جبريل عليه السّلام فيقول إنّك رسولُ ربّ العالمين، فيسكُنُ عليه الصّلاة والسّلام،

فقلتُ إلقاءُ النّفس من الشّاهقِ يُوجبُ قتلَها، وهو من الكبائر، وإرادةُ فِعلِ ذلك والعزمُ عليه معصيةٌ، والأنبياء عليهم الصّلاة والسّلام ولا سِيَّمَا سيدُ الوجود صلّى الله عليه وسلّم معصوُمون من جميع المعاصي قبلَ البِعثَةِ وبعدها،

فقال رضي الله عنه أعرفُ رجلا رَمَى بنفسِه فى بِدايتِه مِن حلقة دارِه إلى أسفلَ تسعين مرّةً فى يوم واحد، ولم يضرَّهُ ذلك شيئ، كما لا يضرُّه النّوم على الفراش،

وذلك لأنّ الرّوح فى البدايات لها الغلَبَةُ على الذّات، ونِسبةُ الأكوان للرّوح على حدِّ السّواء، فهي تتربَّعُ فى الهواء كما تتربَّعُ على الأرض، وتنام فى الهواء مُضطَجِعةً كما ينام الشّخصُ على فراشِه والحجرُ والحرير والصُّوف والماءُ فى عدم الضَّرَرِ عندهاعلى حدٍّ سواءٍ، فلا أَلَمَ فى ذلك الإلقاء لو وقع منه صلّى الله عليه وسلّم فَضْلًا عن القتل، وحينئذٍ فالعزم عليه لا شيئ فيه،
الإبريز، ص 105، للشّيخ أحمد بن المبارك

அறபு வசனங்களின் சுருக்கம்:

நான் எனது ஞானகுரு அப்துல் அஸீஸ் அத்தப்பாங் றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வருமாறு கேட்டேன்.

(நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு “வஹீ வந்த ஆரம்ப காலத்தில் திடீரென்று “வஹீ” நின்றுவிட்டது. ஜிப்ரீல் அவர்களின் வருகையும் நின்றுவிட்டது. இதனால் நபீ பெருமான் அவர்களை பெருங்கவலை ஆட்கொண்டது. மனதுக்கு வேதனையாயிற்று. கவலை அவர்களை உலுக்கி உருக்கிய போது மக்காவிலுள்ள மலை மீதேறிப் பாய்ந்து தற்கொலை செய்ய நினைத்து முடிவும் செய்து மலை உச்சிக்குச் சென்று பள்ளத்தில் பாய்வதற்கு ஆயத்தமானபோது வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மின்னல் வேகத்தில் பறந்து வந்து “யா முஹம்மத் இன்னக றஸூலுல்லாஹ்” என்று முழங்கினார்கள். அவர்களின் முழக்கம் அண்ணல் பெருமானின் கவலைப் பனிக்கு ஆதவனொளி போலாயிற்று. காருண்ய நபீயின் கவலை கலைந்து போயிற்று.

மலை உச்சியிலிருந்து தரையில் பாய்வது கொலையை ஏற்படுத்தும். கொலை செய்தல் பெரும் பாவமாகும். அதை நாடுவதும், அவ்வாறு முடிவு செய்வதும் பாவத்தைச் சேரும். நபீமாரும், குறிப்பாக பெருமானார் “ஸெய்யிதுல் வுஜூத்” முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும் நபித்துவத்திற்கு முன்னும், பின்னும் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள்)

இந்த நிகழ்வு பற்றி விளக்கம் கூறுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்கள் அவர்களின் சிஷ்யர் அஷ்ஷெய்கு அஹ்மத் இப்னுல் முபாறக் றஹிமஹுல்லாஹ் அவர்கள்.

ஷெய்கு அவர்களின் பதில்:

எனக்கு ஒருவரைத் தெரியும். அவர் ஆன்மிக வழி நடக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் தனது வீட்டு மாடியிலிருந்து ஒரே நாளில் 90 தரம் தரையை நோக்கிப் பாய்ந்தார். ஆனால் அவருக்கு எந்த ஒரு ஆபத்தும் – தீமையும் ஏற்படவில்லை. அவர் நான்தான். வேறு யாருமில்லை என்று கூறி பின்வருமாறு விளக்கம் கூறினார்கள்.

“றூஹ்” எனும் அற்புதமான உயிருக்கு اَلْغَلَبَةُ عَلَى الذَّاتِ அது தங்கி நிற்கும் உடலைக்காண மேலோங்கும் தன்மை உண்டு. அதாவது சுருக்கமாகக் கூறவதாயின் “றூஹ்” தங்கி நிற்கும் கூடான அதன் “தாத்”தை விடச் சக்தி அந்த “றூஹ்”க்கு உண்டு என்று கூறலாம். فى البدايات என்றால் ஆரம்ப கட்டங்களில் என்று பொருள் வரும். இது பற்றிய விபரத்தை இன்னும் சில வரிகளை எழுதிய பின் எழுதுவேன்.

இந்நிலை ஏற்பட்டோர், அதாவது “தாத்” மீது – “தாத்”தை விட “றூஹ்” அதிக அதிகாரம் கொள்ளும் நிலை ஏற்படும் போது அந்த “தாத்” றூஹின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். அவ்வாறு வந்தால் அந்த “தாத்” ஆனது “றூஹ்” சொல்வது போல் செய்யும். பூமியில் சப்பணம் போட்டு அமர்வது போல் ஆகாயத்தில் சப்பணம் போட்டு அமர விரும்பினால் அது அமரும். அதேபோல் தரையில் சாய்ந்த நிலையில் உறங்குவது போல் ஆகாயத்தில் சாய்ந்த நிலையில் உறங்க விரும்பினாலும் அது உறங்கும். அதேபோல் கல்லில், பட்டுத்துணியில், கம்பளித்துணியில், நீரில் உறங்க நினைத்தாலும் எந்த ஒரு தடையும், வேதனையுமின்றி அது உறங்கும்.

எனவே, இந்த மாதிரியான நிலையில் எந்தவொரு “ஆபத்” தீய விளைவும் ஏற்படமாட்டாது. எனவே, அவர்கள் இவ்வாறான நிலையில் மலையிலிருந்து கீழே பாய்வதினால் எந்த ஒரு தீமையும் ஏற்படமாட்டாது. அவ்வாறு முடிவு செய்வதும் பிழையாகமாட்டாது.

ஆதாரம்: அல்இப்ரீஸ், பக்கம் 105,
ஆசிரியர்: அஹ்மத் இப்னுல் முபாறக்

“இப்ரீஸ்” எனும் ஞான நூலை எழுதிய அஷ்ஷெய்க் அஹ்மத் இப்னுல் முபாறக் றஹிமஹுல்லாஹ் அவர்கள் அக்கால “குத்புஸ்ஸமான்” ஆன அஷ்ஷெய்கு, அல்வலிய்யுல் காமில் அப்துல் அஸீஸ் அத்தப்பாங் றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் தங்களுக்கு விளங்காத திருக்குர்ஆன் வசனங்களுக்கும், நபீ மொழிகளுக்கும் விளக்கம் கேட்ட போது அந்த மகான் கொடுத்த விளக்கங்களை நேரில் செவியேற்று எழுதிய நூல்தான் அல்இப்ரீஸ் எனும் நூலாகும்.

பெருமானார் தற்கொலை செய்ய நினைத்ததும், அதற்காக முயற்சித்ததும் பாவச் செயல்களாயிருக்கும் நிலையில் நபித்துவத்திற்கு முன்னும், அதன் பின்னும் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட நபீ பெருமான் தற்கொலை செய்ய நினைத்ததற்கும், அதற்காக மலையிலிருந்து துள்ளிப் பாய்ந்து உயிர் துறக்க முயற்சித்ததற்கும் விளக்கம் கேட்ட போதுதான் மிகச் சுருக்கமாக மேற்கண்டவாறு பதில் கூறினார்கள். அந்த பதிலை நானும் மிகச் சுருக்கமாக எழுதியுள்ளேன். வாசகர்கள் அனைவரும் கூறப்பட்ட விளக்கத்தை உரிய வகையில் விளங்கிக் கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. எனவே, இன்னோரின் நலன் கருதி குறித்த “குத்பு” அவர்கள் தங்களின் பதிலில் குறிப்பிடாத, ஆனால் அவர்களின் கருத்தை உறுதி செய்யக் கூடிய நான் அறிந்த சில விளக்கங்கள் கூற விரும்புகிறேன். ஆனால் நான் கூறப்போவது “குத்பு” அவர்களின் கருத்தை உறுதிப்படுத்துமேயன்றி அதற்கு முரணாகாது.

விபரம்:
உயிர், உடல் என்று இரண்டு அம்சங்கள் உள்ளன. இவ்விரண்டில் ஒவ்வொன்றுக்கும் “ஸிபாத்” தன்மைகள் உள்ளன. ஒவ்வொன்றிலிருந்தும் அதன் தன்மைகள் வெளியாகும். ஆயினும் உடலின் தன்மைகள் எல்லையிடப்பட்டவையாகவும், உயிரின் தன்மைகள் எல்லையிடப்படாததாகவும் இருக்கும். எல்லையிடப்பட்டது “முகய்யத்” என்றும், எல்லையிடப்படாதது “முத்லக்” என்றும் சொல்லப்படும். எல்லையிடப்பட்டதென்று கட்டுப்பாடுள்ள தன்மையை நான் குறிப்பிடுகிறேன். எல்லையிடப்படாததென்று கட்டுப்பாடில்லாத தன்மையை நான் குறிப்பிடுகிறேன்.

இதற்கு உதாரணங்கள் கூறி விளக்கம் கூறினால் தெளிவினும் தெளிவு கிடைக்குமென்பதற்காக இங்கு சில உதாரணங்கள் கூறுகிறேன்.

உடலின் தன்மை கட்டுப்பாடுள்ளதென்பதற்கு உதாரணம் பின்வருமாறு. ஒரு மனிதன் சாதாரணமாக அல்லது தனது முழு சக்தியையும் பயன்படுத்தி நடந்தாலும் கூட அவனால் ஒரு மணி நேரத்தில் சுமார் 20 கிலோமீற்றர் தூரத்தை தாண்ட முடியும் என்று வைத்துக் கொள்வோம். இது உடலின் தன்மை.

உயிர் என்பது ஆன்மிகத்தோடு தொடர்புள்ள விடயம். உச்சக்கட்ட ஆன்மிகப் பலமுள்ள ஓர் ஆன்மிக வாதி ஒரு மணி நேரத்தில் 1000 கிலோமீற்றர் தூரத்தையும் கடந்துவிட முடியும். இது “றூஹ்” எனும் உயிரின் தன்மை. இது ஆன்மிகத்தோடு தொடர்புடையது.

நபீமாருக்கு “முஃஜிஸாத்” இருப்பதும், வலீமாருக்கு “கறாமத்” அற்புதம் இருப்பதும் ஆன்மிகத்தோடு சம்பந்தப்பட்டதாகும்.

ஆன்மிகப் பலத்தால் அதாவது றூஹின் பலத்தால் உடற் பலத்தை வெல்ல முடியும். இறைஞானிகள் பின்வருமாறு சொல்வார்கள்.
اَلْعَارِفُ طَيَّارٌ وَالْعَابِدُ سَيَّارٌ
இறைஞானி பறப்பவர். இறை பக்தன் நடப்பவன் என்பது முன்னோர் சொன்ன தத்துவமாகும்.

“றூஹ்” – உயிரின் தன்மை என்றும், உடலின் தன்மை என்றும் இரண்டு இருப்பதாகவும், இவ்விரண்டிலும் உயிரின் தன்மை கட்டுப்பாடு இல்லாததென்றும், உடலின் தன்மை கட்டுப்பாடு உள்ளதென்றும் எழுதினேன்.

உடலின் தன்மையை உயிரின் தன்மை மிகைத்தால் உடலைத் தாக்கும் எதுவும் அதைத் தாக்காது. நெருப்புச் சுடாது. கத்தி வெட்டாது. ஆயிரம் மீற்றர் உயரத்திலிருந்து விழுந்தாலும் எந்த ஒரு தாக்கமும் ஏற்படமாட்டாது.

இது பற்றித் தொடர்ந்து விளக்கம் சொன்ன மகான் அப்துல் அஸீஸ் அத்தப்பாங் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்னால் எவ்வாறு சொல்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.

ومِن هذا ما يُشاهَدُ فى أَرْبَابِ الأَحْوَالِ، فَتَرَى الْوَاحِدَ منهم إذا نَزَلَ به حالٌ ضَرَبَ الحائِطَ برأسِه على ما فيه من الجهد، ولا يقع فى رأسه خَدَشٌ فضلا عن غيره، فلله هذه المعارف الصادرة عن شيخنا رضي الله عنه،

ஆன்மிக நிலைகள் உள்ளவர் ஒருவர் தனக்கு அந்நிலை மிகைத்தால் தனது தலையால் சுவரில் தனது முழுப்பலத்தைக் கொண்டு அடிப்பதை நாம் காண்கிறோம். ஆயினும் அதனால் அவரின் தலையில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதையும் காண்கிறோம். இது “றூஹ்” எனும் உயிரின் தன்மை உடலின் தன்மையை மிகைப்பதால் ஏற்படுவதாகும்.

இவ்வாறான நிலைகளை பால் குடித்துக் கொண்டிருக்கும் சுமார் இரண்டு வயதுக்குட்பட்ட பாலகர்களிடமும் நாம் காணலாம். ஊஞ்சலில் இருந்து பாலகன் தரையில் விழுகிறது. அதற்கு ஆபத்து ஒன்றும் ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் அந்தப் பாலகனிடம் ஆன்மிக நிலை மிகைத்திருப்பதேயாகும்.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments