தொடர் – 5
கடந்த தொடரில் நபீகள் திலகம் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தது பற்றி குத்புஸ்ஸமான் அப்துல் அஸீஸ் அத்தப்பாங் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் சிஷ்யர் அஷ் ஷெய்கு அஹ்மத் இப்னுல் முபாறக் றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த விளக்கம் தொடர்பாக எழுதினேன்.
وقال قطب الزمان أيضا وهم يعرفون أنّ ذلك الإلقاءَ ونحوه لا يضرُّهُمْ شيئًا، ولا يدفع عنهم شيئا ممّا نزل بهم، إلّا أنّه طُبع فى الذّات، فتفعله على مقتضى طَبعها، (الإبريز، ص 105)
அவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்ததால் எந்த ஓர் ஆபத்தும் நடக்காதென்பது நிச்சயமாக அவர்களுக்குத் தெரிந்த விடயமேதான். அவ்வாறு செய்வதால் அவர்களுக்கு பாதகம் ஏற்படாதது போல் அதனால் அவர்களுக்கு எந்த ஓர் சாதகமும் ஏற்படாதென்பதும் அவர்களுக்குத் தெரிந்த விஷயம்தான்.
எனினும் ஒரு மனிதனுக்கு மன வேதனை, மனக்கவலை ஏற்படும் போது அவனின் “தபீஅத்” இயற்கை சுவாபம் அவனுக்குப் பல எண்ணங்களை ஏற்படுத்துவதை நாம் நிதர்சனமாக காண்கிறோம்.
உதாரணமாக காதலில் தோல்வி கண்ட ஒருவனின் மனதில் பல்வேறு தீய எண்ணங்கள் தோன்றும். காதலியைக் கொலை செய்யுமாறும், அவனைத் தற்ககொலை செய்யுமாறும், அல்லது அவனின் காதல் தோல்விக்கு காரணமாயிருந்த காதலியின் குடும்பத்தவர்களைப் பழிவாங்குமாறும் அவனின் இயற்கை அவனைத் தூண்டும். அவன் ஆன்மிகம் அவனின் “தாத்”தை விட மேலானதாயிருந்தால் அவன் கூறப்பட்ட விடயங்களில் எதையும் செய்யமாட்டான். அவனின் ஆன்மிகம் அவற்றில் எதையும் செய்வதற்கு விடாது. அவனின் ஆன்மிகம் அவனை காப்பாற்றுகிறது.
இத்தகைய சூழல் ஏற்பட்டவன் பாவமில்லாத வகையில் தனது ஆத்திரத்தை அடக்கிக் கொள்வதுண்டு. இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.
ஓர் ஊரில் எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரின் மனைவி அவருடன் கோபித்துக் கொண்டு எந்நேரமும் உரட்டிக் கல் போன்று இருந்தாளாயின் அவருக்கு கோபமும், ரோஷமும் ஏற்பட்டு விடும். அவர் ஸூபிஸ வழி நடந்து ஆன்மிகம் மிகைத்தவர். அதனால் மனைவியைத் தீண்ட விரும்பாத அவர் கடைக்குச் சென்று இந்திய, பெரிய அகலமான “பப்படம்” வாங்கி வந்து அவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி ஒரு பலமான தடியால் ஓங்கி அடித்து தனது மனதிலுள்ள ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வார். இவரை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் இவர்போல் செயல்படுவது மனைவிக்கு அடித்து துன்புறுத்துவதை விடச் சிறந்ததே.
இவ் உதாரணம் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்னவெனில் நமது “தாத்” உடலின் தன்மையும், அதன் இயற்கையான சுவாபமும் என்னவெனில் நமது “றூஹ்” உயிரை – ஆன்மிகத்தை மிகைக்குமாயின் அது தனது “அஸ்லிய்யத்” அடிப்படையை காட்டவே செய்யும். அந்நேரம்தான் நாம் உடலோடு – நப்ஸோடு – மனவெழுச்சியோடு – இயற்கை சுவாபத்தோடு போராட வேண்டிய நிலையாகும்.
ஒரு மனிதன் தனது உடலின் “ஸிபத்” தன்மையான மனவெழுச்சிக்கு அடிமையாவதே அனைத்து பாவங்களுக்கும் ஆணிவேராகும். அந்த ஆணிவேரை அறுத்தெறியாத வரை “றூஹ்” ஆன்மிகம் வலுவடையாது.
பெருமானார் நபீகள் திலகம் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்களின் தற்கொலை முயற்சி தற்கொலை முயற்சியே அல்ல.
இதையும் ஓர் உதாரணம் மூலம் தெளிவுபடுத்தலாம். ஒருவன் தனது வீட்டின் முன்னாலுள்ள வீட்டின் படிகட்டுகளின் கீழ் படியில் நின்று கொண்டு தரையில் பாய்ந்து தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் நிற்கும் படிக்கும், மண்ணுக்கும் அதாவது தரைக்கும் இடையில் சுமார் 5 அங்குலமே உயரமுள்ளது.
இவ்வாறிருக்கும் நிலையில் அவன் அவ்வாறு சொன்னால் நாம் அவனின் பேச்சைக் கவனத்தில் எடுத்து அவனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்போமா? நிச்சயமாக எடுக்க மாட்டோம். ஏனெனில் ஒருவன் 5 அங்குல உயரத்திலிருந்து தரையில் பாய்ந்தால் அவனுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படமாட்டாது. அவ்வாறு செய்வதால் அவன் மனதிலுள்ள ஆத்திரம் அவனைப் பொறுத்து ஓரளவு குறைந்து விடும்.
இன்னுமோர் உதாரணம் சொல்கிறேன்.
நான் ஒரு நாள் பத்ரிய்யா பள்ளிவாயல் வழியாக வரும்போது அங்கு ஓர் இடத்தில் சனக் கூட்டம் நிற்பதைக் கண்டு அதை நெருங்கினேன்.
ஓர் இளைஞன் நஞ்சுத் திரவிய போத்தல் ஒன்றைத் திறந்து வைத்துக் கொண்டு அதைக் குடித்து தற்கொலை செய்யப் போவதாகச் சொல்கிறான். அவனை ஒரு கூட்டம் சூழ்ந்து நின்று அல்லாஹ்வுக்காக குடிக்க வேண்டாம் என்று அவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் அவனிடம் போத்தலை வாங்கி நான் குடித்துவிட்டுச் சென்றேன்.
ஏனெனில் அந்நிகழ்வுக்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன் அவன் ஒரு ஹோட்டலில் “பிலேன்டி” வாங்கியதை நான் கண்டேன். அங்கு கூடி நின்றவர்களுக்கு இந்த விடயம் தெரியாது. அதனால்தான் அவர்கள் பயந்து அவனைச் சூழ்ந்து நின்று அவனைக் காப்பாற்ற நினைத்தனர்.
இதேபோல் இன்னுமோர் உதாரணம் தருகிறேன்.
ஒருவன் “பேப்பர்” – தாளால் கத்தி போல் செய்து அதைக் கையில் வைத்துக் கொண்டு தனது வயிற்றில் குத்தி தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொன்னால் அது பொய்க்கத்தி என்று அறிந்தவர்கள் அவனைக் காப்பாற்ற முன்வரமாட்டார்கள். தெரியாதவர்கள் தான் முன்வருவார்கள்.
மேற்கண்ட உதாரணங்களை ஏன் நான் கூறினேன் என்றால் ஒரு மனிதனுக்கு கவலை, பிரச்சினை, சிக்கல்கள் ஏற்படும் போது அவன் உடலின் தன்மை “றூஹ்” உடைய தன்மையைவிட மிகைத்தவனாயிருந்தால் அவன் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதற்காக எடுக்கும் நடவடிக்கைகளால் அவனின் உடலுக்கு தாக்கம் ஏற்படும். மரணமும் நிகழலாம்.
ஆயினும் மனமொடிந்து கவலைக்குள்ளான மனிதன் உடல் தன்மையை விட “றூஹ்” ஆன்மிக தன்மை மிகைத்தவனாயிருந்தால் அவன் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகளால் அவனின் உடலுக்கு எந்த ஒரு தாக்கமும் ஏற்படமாட்டாது.
கண்மணி நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு “வஹீ” வருவது சில காலம் – சுமார் ஆறு மாத காலம் தடைப்பட்டது. ஆறு மாத காலம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும் வரவில்லை.
இதனால் மனமொடிந்து கவலைக்குள்ளான நபீகள் பெருமான் மலையொன்றில் ஏறி அதன் உச்சியில் நின்று தரையில் பாய்வதற்காக ஆயித்தமானபோது வானவர் ஜிப்ரீல் மின்னல் வேகத்தில் அங்கு வந்து “யா முஹம்மத்! இன்னக றஸூலுல்லாஹ்” முஹம்மதே நீங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்று முழங்கினார்கள். அவரின் முழக்கம் செம்மல் நபீயின் செவியினுட்புகுந்து அவர்களின் உள்ளத்தை தொட்டது. சாந்தி அடைந்தார்கள் அண்ணல் நபீ அவர்கள். இவ்வாறு பல தடவைகள் நடந்தது.
ஒருவரின் “தாத்” உடலின் தன்மையை விட “றூஹ்” உயிரின் தன்மை அதாவது அவரின் ஆன்மிகம் மிகைத்தால் அவர் எது செய்தாலும் அவருக்கு எந்த ஒரு தாக்கமும் ஏற்படமாட்டாது. ஆயினும் அதைச் செய்வதன் மூலம் அவருக்கு சாந்தியும், மன நிம்மதியும் ஏற்பட்டு விடும். தன்னை ஆட் கொண்டிருந்த கவலையும் நீங்கிவிடும்.
இந்நிலையுள்ளவர் ஆயிரம் அடி உயரத்திலிருந்து கருங்கல்லில் பாய்ந்தாலும் அவரின் உடலுக்கு எந்த ஒரு தீமையும் ஏற்படமாட்டாது. அவரின் பார்வையில் ஆயிரம் அடி உயரம் அரையடி உயரம் போல் அவருக்கு மட்டும் தோற்றும். பாய்கின்றவருக்கே தனதுயிர் போகாதென்று நிச்சயமாகத் தெரியும். அவ்வாறு அறிந்திருந்தும் அதை அவர் செய்தது தனது ஆத்திரத்தையும், கவலையையும் தீர்த்துக் கொள்வதற்கேயாகும்.
இது தொடர்பாக நான் எழுதிய தொடரில் பப்படம் அடுக்கி வைத்து அதை உடைத்தவரின் கதை பற்றியும், பேப்பர் – தாளால் செய்யப்பட்ட கத்தியை கையில் வைத்துக் கொண்டு தற்கொலை செய்யப் போவதாகச் சொன்னவர் பற்றியும், பிலேன்டியை போத்தலில் ஊத்திக் கொண்டு நஞ்சு குடித்து தற்கொலை செய்யப் போவதாக கூறிய ஒருவர் பற்றியும் எழுதியுள்ளேன்.
இவ்வுதாரணங்களை சரியாக ஆய்வு செய்து விளங்கினால் எந்த வகையிலும் கொலையை ஏற்படுத்தாத ஒன்றைச் செய்வதன் மூலம் அது கொலை முயற்சியாகாது. அதற்குத் தண்டனையுமில்லை என்பது புரியும்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் ஜிப்ரீல் “வஹீ” கொண்டுவரவில்லை என்பதால் அவர்களைக் கவலை ஆட்கொண்டதென்று சொல்வதை விட அல்லாஹ்வின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அல்லது ஜிப்ரீல் என்ற கண்ணாடியில் – பாத்திரத்தில் அல்லாஹ்வை காணும் வாய்ப்பு இல்லாமற் போனதால் ஏற்பட்ட கவலையென்று சொல்வதே பொருத்தம். ஏனெனில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் காண முடியாமற் போனது பெருமானாருக்கு அல்லாஹ்வைக் காண முடியாமற் போனது போன்றாயிற்று.
சிற்றின்ப காதலியை சில நாட்கள் காண முடியாமற் போனதற்காக தற் கொலை செய்து கொண்ட காதலனின் வரலாறும் உண்டு. அல்லாஹ்வுக்கும், அண்ணலெம் பெருமானாருக்குமுள்ள காதல் பேரின்பக் காதலாகும்.
மேற்கண்ட தலைப்பில் தொடராக நான் எழுதி வந்த பெருமானாரின் தற்கொலை முயற்சி தொடர்பான சுருக்கம் என்னவெனில் பெருமானாரவர்கள் பேரின்பக் கடலில் மூழ்கிய நிலையில், இறை போதை தலைக் கேறி நடந்த நிகழ்வுதான் அது. அது தற்கொலைக்கான முயற்சியாகாது. பெருமானார் அந்நிலையில் மலை உச்சியிலிருந்து பாய்ந்திருந்தாற் கூட அவர்களின் திரு முடிகளில் ஒன்றுக்கேனும் எந்த அழிவும் ஏற்பட்டிருக்கமாட்டாது. இதுவே உண்மை.
நபீமார் குறிப்பாக பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அனைவரும் “நுபுவ்வத்” நபித்துவத்துக்கு முன்னும், பின்னும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். இவ்வாறுதான் எமது ஈமான் – நம்பிக்கை இருக்க வேண்டும்.
(முற்றும்)