Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஏகன் அல்லாஹ்வின் முதல் வெளிப்பாடு எங்கள் உயிர் ஏந்தல் நபீ ஆவர்!

ஏகன் அல்லாஹ்வின் முதல் வெளிப்பாடு எங்கள் உயிர் ஏந்தல் நபீ ஆவர்!

தொடர் – 1

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

றபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு “மீலாத்” தினம் வரை அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அகமியங்கள் தொடர்பான கட்டுரைகள் வெளியாகும். அறிந்து கொள்ள விரும்புவோர் தொடராக வாசிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்பவனை அண்ணலெம் பெருமான் அஹ்மத் எங்கள் கோமான் அதிகம் விரும்புகிறார்கள். ஆகையால் ஸலவாத்தை போலொன்றில்லை நபிக்கு சங்கையாய் சொல்லுங்கள். அதிகம் அதிகமாக சொல்லுங்கள். அவர்களின் “ஸூறத்” எதார்த்த உருவத்தை மனக்கண் முன் நிறுத்தி அந்த உருவத்தைப் பார்த்துச் சொல்லுங்கள். அழுது சலித்துச் சொல்லுங்கள்.

அவர்களின் திருவுருவத்தை கற்பனைக் கண் முன் நிறுத்திச் சொல்லும் ஒருவர் அவர்களை நேரில் பார்த்தவராக, அல்லது கனவிலாவது பார்த்தவராயிருக்க வேண்டும். இரண்டில் ஒரு வகையிலேனும் காணாத ஒருவரால் அவர்களின் உருவத்தை அவரின் கற்பனைக் கண் முன் நிறுத்த முடியாமற் போய்விடும். கனவிலோ, விழிப்பிலோ அவர்களைக் காணாத ஒருவர் ஸலவாத் சொல்லும் போது அவரால் அவர்களைக் கற்பனை செய்ய முடியாமற் போய்விடும்.

இன்னோர் ஹதீதுகள் மூலம் அவர்களின் திரு முக, உடலமைப்பை அறிந்து, மூக்கு எவ்வாறிருந்தது, கண் எவ்வாறிருந்தது, நெற்றி எவ்வாறிருந்தது, வாய் எவ்வாறிருந்தது, கண் இமை எவ்வாறிருந்தது, மீசை எவ்வாறிருந்தது, தாடி எவ்வாறிருந்தது என்பதை நபீ மொழிகள் மூலம் நன்கறிந்து ஓர் அழகிய தோற்றத்தை அவர்கள் கற்பனை செய்து அத் தோற்றத்தில் – அதன் மூலம் பெருமானாரை காணலாம் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாகப் பதித்து வைத்துக் கொண்டு அவர்களை நேரில் பார்ப்பவனாக கற்பனையும் செய்து கொண்டு “ஸலவாத்” சொல்ல வேண்டும்.

அவர்களை விழிப்பிலோ, கனவிலோ காணாத ஒருவர் ஒரு ஞானியிடம் – ஷெய்கிடம் “பைஅத்” ஞான தீட்சை பெற்றவராயிருந்தால் அந்தக் குருவின் உருவத்தில் நபீகள் பெருமான் தோற்றுவார்கள் என்ற எண்ணத்தோடு பக்தியுடன் ஸலவாத் சொல்ல வேண்டும்.

கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சிவப்புக் கலந்த வெள்ளை நிறமுள்ளவர்கள். இதனால் அவர்களின் “ஸெய்யித்” வழியில் வருபவர்கள் அனைவரும் சிவப்புக் கலந்த வெள்ளையாக அல்லது பொதுவாக வெள்ளை நிறமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பது கருத்தல்ல.

பெருமானாரின் வழித் தோன்றல்களில் பலர் கருப்பு நிறத்திலும் உள்ளார்கள். நானும் நேரில் பார்த்திருக்கிறேன்.

ஆபிரிக்கா கண்டத்தில் வாழும் கருப்பு இன மக்களில் பலர் “ஸாதாத்”மார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாம் ஓர் உருவத்தைக் கற்பனை செய்யும் போது வெள்ளை நிறத்திலும், கருப்பு நிறத்திலும் கற்பனை செய்து கொள்ளலாம். தவறில்லை.

“ஸலவாத்” சொல்லுதல் என்றால் அதன் சுருக்கம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைப் புகழ்வதையே குறிக்கும். இவ் அடிப்படையில் பெருமானார் அவர்களை எந்த மொழியில் புகழந்தாலும் அது “ஸலவாத்” என்றே கருதப்படும். கணிக்கப்படும்.

இஸ்லாமிய கீதம் என்ற பெயரில் இயற்றப்படுகின்ற நபீ புகழ் காப்பியம், கவிதைகள், பாடல்கள் யாவும் “ஸலவாத்” என்பதிலேயே அடங்கும்.

“கஸீதா பானத் ஸுஆத்”, “கஸீததுல் புர்தா”, “கஸீததுல் முழரிய்யா”, “கஸீததுல் ஹம்சிய்யா”, “கஸீததுல் வித்ரிய்யா” எனும் நபீ புகழ் காப்பியங்கள் எல்லாம் “நபீ புகழ்” என்ற வகையில் “ஸலவாத்” பட்டியலிலேயே இவையாவும் சேரும். இவற்றை ஓதுவதும் “ஸலவாத்” என்பதில் ஐயமில்லை.

ஆயினும் மேற்கண்ட “கஸீதா”க்கள் ஓதுவதையும், “ஸலவாத்” எல்லா நேரங்களில் சொல்வதையும் வஹ்ஹாபிஸ மகான்கள் எதிர்ப்பார்கள். அவர்களுக்கு “நஸீப்” இல்லாமற் போனதற்கு நாம் என்ன செய்யலாம்? நக்குண்பதற்கும் “நஸீப்” வேண்டுமென்று முன்னோர் சொல்வர்.

خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

அவர்களின் இதயங்களின் மீதும், அவர்களின் செவிப் புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இன்னும் அவர்களின் பார்வைகளின் மீது திரையிருக்கிறது. மேலும் அவர்களுக்கு வலுப்பமிகு வேதனை உண்டு. (திருக்குர்அன் 02- 07) அனுபவி ராசா அனுபவி.

“ஸலவாத்”தில் பல வகையுண்டு. அவற்றில் “ஸலவாத் இப்றாஹீமிய்யா” எனும் “ஸலவாத்” ஓதுவதை மட்டுமே வஹ்ஹாபிஸ மகான்கள் சரி என்பர். ஏனெனில் இது ஹதீது வழியாக வந்த “ஸலவாத்” ஆகும். இதனால் இது சிறப்புக்குரியதேயாகும். இதை நாம் மறுக்கவில்லை.

ஆயினும் வலீமார், குத்புமார், ஷெய்குமார்களால் இயற்றப்பட்ட “ஸலவாத்” ஓதுவதை மகான்கள் விரும்பமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தமது வாதத்திற்கு கூறும் காரணம் வலீமாரால் இயற்றப்பட்ட “ஸலவாத்” வசனங்களில் “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடிய வசனங்கள் இருக்கின்றன என்பதாகும். உண்மைதான். கருப்புக் கண்ணாடி அணிந்தால் பாலும் கருப்பாகவே தெரியும். கண்ணாடியை மாற்றினால் எல்லாம் தெளிவாகும்.

ஹதீதில் வந்துள்ள “ஸலவாத்” என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் எமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. இதற்காக ஏனைய “ஸலவாத்” பிழை என்று நாம் சொல்லமாட்டோம். ஆனால் நாக் கூசாமல் அது பிழை என்று மகான்கள் சொல்லிவிடுவார்கள். இது தொடர்பாக எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில், ஹதீதில் வந்துள்ள “ஸலவாத் இப்றாஹீமிய்யா” சிறந்த ஸலவாத் என்பதை நாம் மறுக்கவில்லை. அது ஓர் ஆன்மிக மருந்தாகும். அது அனைத்து நோய்களுக்குமான ஓர் மருந்து. அதில் பெருமானார் மீதும், அவர்களின் “ஆல் – கிளையார்”கள் மீதும் ஸலவாத் சொல்லுதலும், ஸெய்யிதுனா நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீதும், அவர்களின் “ஆல் – கிளையார்”கள் மீதும் “ஸலவாத்” சொல்லுதலும் மட்டுமே உள்ளது.

இந்த ஸலவாத் அமைப்பு சிறுவர், சிறுமியர், ஓதத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிக இலகுவாக ஓதக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருப்பது இதிலுள்ள ஓர் விஷேடமாகும். அனைவரின் நன்மையையும் கருத்திற் கொண்டே இது அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர வலீமார், குத்புமார், ஸூபீகள் ஆகியோர் அமைத்த “ஸலவாத்”துகள் பல்லாயிரம் உள்ளன. அவை சொற்கள் கடினமானவையும், தத்துவங்கள் மற்றும் “துஆ”க்கள் நிறைந்தவையுமாகும். அவற்றை ஓதி வருவதால் ஆன்மிக முன்னேற்றம் கிடைக்கும். அது மட்டுமல்ல. “விலாயத்” எனும் ஒலித்தனம் கூட கிடைக்கும்.

ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆரம்ப காலத்தில் தங்களுக்கு “காமில்” சம்பூரணம் பெற்ற ஞான குரு “ஷெய்கு” ஒருவர் தேவையென்று பல நாடுகள், பல ஊர்கள் சென்று தேடியலைந்து வரும் போது ஒரு “மஜ்தூப்” உடைய தொடர்பு அவர்களுக்கு ஏற்பட்டது. அந்த “மஜ்தூப்” ஷாதுலீ நாயகம் அவர்களிடம் உங்கள் நாட்டிலேயே நீங்கள் தேடி அலையும் “காமில்” ஆன குரு உள்ளார்கள். அவர்களிடம் செல்லுங்கள் என்று கூறினார்.

ஷாதுலீ நாயகம் அங்கு சென்று வினவினார்கள். அங்குள்ள ஓர் மலையில் ஒரு ஞானி இருப்பதாக அறிந்து அந்த மலை மீதேறிச் செல்லுமுன் அந்த மலை உச்சியிலிருந்து அவர்களுக்கு تَعَالَ عُرْيَانًا நிர்வாணியாக வரவும் என்று ஓர் அசரீதி கேட்டது.

ஷாதுலீ நாயகம் மலையடியில் குளித்து, புதிய ஆடை அணிந்து தான் சுமந்திருந்த அறிவு எனும் உடையையும், அமல் என்ற உடையையும் கழட்டி மலையில் ஏறினார்கள். இதையறிந்த ஞானகுரு அவர்கள் இவர்களை வரவேற்பதற்காக மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

வழி நடுவில் இருவரும் சந்தித்தனர். ஞான மகான் ஷாதுலீ நாயகம் அவர்களைக் கண்ட போது ஷாதுலீ நாயகமவர்களின் பெருமானார் வரையிலான அவர்களின் பரம்பரைப் பெயர்கள் யாவையும் சொல்லி முடித்தார்கள். வியப்பிலாழ்ந்த ஷாதுலீ நாயகம் அவர்களைக் கட்டித் தழுவி தனக்கோர் பாக்கியம் கிடைத்ததாக கருதினார்கள். இருவரும் மலையிலேறி ஞானமகானின் இடத்தை அடைந்து இருவரும் பேசிக் கொண்டிருந்த வேளை ஷாதுலீ நாயகம் தனக்கு அல்லாஹ்வின் உயர் திருநாமமான “இஸ்முல் அஃளம்”ஐ கற்றுத் தருமாறு கேட்டார்கள். அப்போது ஞான மகான் உங்கள் மடியில் உள்ள குழந்தையிடம் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார்கள். ஷாதுலீ நாயகம் குனிந்து தங்களின் மடியைப் பார்த்தார்கள். ஸுப்ஹானல்லாஹ்! தங்களின் மடியில் தாங்களே குழந்தையாக இருப்பது கண்டு வியப்படைந்து அக்குழந்தையிடமிருந்தே குறித்த “இஸ்முல் அஃளம்” கற்றுக் கொண்டு ஞான மகானிடம் “பைஅத்” ஞான தீட்சையும் பெற்றுக் கொண்டு வெளியேறினார்கள்.

அந்த மகான்தான் மொறோக்கோ நாட்டின் மலையடியிலிருந்த சங்கைக்குரிய மகான் இறைஞானி அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் ஆவார்கள்.

இந்த மகான் இறுதியில் வஞ்சகம் நிறைந்த ஒரு முஸ்லிமால் நஞ்சூட்டப்பட்டு “ஷஹீத்” ஆனார்கள்.

இந்த மகான் எழுதிய “ஸலவாத்” “அஸ்ஸலாதுல் மஷீஷிய்யா” என்ற பெயரால் உலகம் முழுவதும் பரவியது. அது பற்றிய விபரம் அடுத்த தொடரில் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்!

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments