Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஏகன் அல்லாஹ்வின் முதல் வெளிப்பாடு எங்கள் உயிர் ஏந்தல் நபீ ஆவர்!

ஏகன் அல்லாஹ்வின் முதல் வெளிப்பாடு எங்கள் உயிர் ஏந்தல் நபீ ஆவர்!

தொடர் – 2

ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் ஞானகுரு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் (பஷீஷ்) அவர்கள் போலி உலமாஉகளாலும், இறைஞானத்தின் எதிரிகளான வம்பர்களாலும் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டவர்களாவர்.

அவர்கள் கோர்வை செய்த “ஸலவாத்” “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா” என்ற பெயரால் உலகப் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஸலவாத் ஷாதுலிய்யா தரீகா சகோதரர்கள் மத்தியில் மிகப் பிரசித்தி பெற்றதும், அவர்களிற் சிலரால் தினமும் ஓதப்பட்டு வருகின்ற “ஸலாவத்”தும் ஆகும். நானும் தினமும் “ஸுப்ஹ்” தொழுகையின் பின் ஓதி அருள் பெற்று வருகிறேன்.

இந்த “ஸலவாத்” தில் ஞான மகான் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பெருமானாரின் அகமியங்களை எழுதியுள்ளார்கள் என்பதை விட அள்ளிக் கொட்டியுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இந்த ஸலவாத் பிரதி தேவையானோர் மௌலவீ ஜஹானீ றப்பானீ அவர்களை நேரில் கண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த “ஸலவாத்”தை மொழியாக்கம் செய்து விளக்கமும் எழுதுவதாயின் ஒரு புத்தகமே எழுத வேண்டும். எனினும் அவற்றில் இடம் பிடித்துள்ள சில வசனங்களுக்கு மட்டும் விளக்கம் எழுதுகிறேன்.

ஞானமகான் மஷீஷ் அவர்கள் தங்களின் “ஸலவாத்”தை பின்வருமாறு துவங்கியுள்ளார்கள்.

اللهم صَلِّ عَلَى مَنْ مِنْهُ انْشَقَّتِ الْأَسْرَارُ

“யா அல்லாஹ்! எவரிலிருந்து “அஸ்றார்” இரகசியங்கள் வெடித்து வெளியாகி வந்ததோ அவர்கள் மீது நீ “ஸலவாத்” சொல்வாயாக!”

இந்த வசனத்திற்கு விளக்கம் எழுதிய அஸ்ஸெய்யித் முஹம்மத் இப்னு அப்துல் கரீம் அல் பஸ்றாவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்

إن الله لما أراد إخراجَ بَرَكَاتِ الأرْضِ وَأَسْرَارِها مِثْلَ ما فيها من العُيُوْنِ والْآبَارِ وَالْأَنْهَارِ وَالْأَشْجَارِ والثِّمَارِ وَالْأَزْهَارِ أَرْسَلَ سَبْعِيْنَ أَلْفِ مَلَكٍ إلى سبعين أَلْفِ مَلَكٍ إلى سَبْعِيْنَ أَلْفِ مَلَكٍ ثلاث سَبْعِيْنَاتٍ مِن الألوف، فنزلوا يَطُوْفُوْنَ فى الأرض، فالسّبعون الأولى يذكرون اسْمَ النّبيّ صلّى الله عليه وسلّم، والسّبعون الثانية يذكرون قُرْبَه صلّى الله عليه وسلّم من ربّه عز وجلّ، ومَنْزِلَتَهُ صلّى الله عليه وسلّم منه، والسبعون الثالثة تُصَلِّيْ عليه صلّى الله عليه وسلّم، وَنُوْرُهُ صلّى الله عليه وسلّم مع الطّوائف الثلاث، فَتَكَوَّنَتِ الْكَائِنَاتُ بِبَرَكَةِ ذِكْرِ اسْمِهِ صلّى الله عليه وسلّم وحُضُورِه بينها ومُشَاهَدَتِها قُرْبَه صلّى الله عليه وسلّم من ربّه عزّ وجلّ، وذكروه على الأرض فَاسْتَقَرَّتْ، وعلى السموات فاستقَلَّتْ، وعلى مفاصل ذات ابن آدم فَلَانَتْ بِإِذْنِ الله تعالى، وعلى مَوَاضِعَ عَيْنَيْهِ ففَتَحَتْ بالأنوار التي فيها، فهذا معنى قوله ‘ منه انشقّت الأسرار ‘

وبالإسم الّذي وضعتَه على اللّيل فأَظْلَمَ، وعلى النّهار فاسْتَنَارَ، وعلى السموات فاستقلّت وعلى الأرض فاستقرّتْ، وعلى الجبال فَرَسَتْ، وعلى الجبال فَجَرَتْ، وعلى البحار فجرتْ، وعلى العُيُونِ فَنَبَعَتْ، وعلى السحاب فأمطَرَتْ، فقال رضي الله عنه نَعَمْ ذلك الإسمُ هو اسمُ نبيِّنا محمد صلّى الله عليه وسلّم، فبِبَرَكتِهِ تَكَوَّنَتِ الْكَائِنَاتُ،
(الإبريز، ص 262 – 263 للشّيخ أحمد بن المبارك من الشّيخ عبد العزيز الدبّاغ)

பூமியிலுள்ள அருள்களையும், இரகசியங்களையும் அல்லாஹ் வெளியாக்க நாடியபோது – அதாவது பூமியினுள் புதைந்து கிடக்கின்ற – மறைந்து கிடக்கின்ற ஊற்றுக் கண்கள், கிணறுகள், நதிகள், மரங்கள், காய் கனிகள், பூக்கள் யாவையும் அல்லாஹ் வெளியாக்க நாடியபோது 210,000 மலக்குகளை அழைத்து மா பெரும் மாநாடு ஒன்று நடத்தினான்.

அந்த மாநாட்டில் அவர்களை மூன்று குழுவாகப் பிரித்தான். ஒவ்வொரு பிரிவிலும் 70 ஆயிரம் மலக்குகளை நியமித்தான். மூன்று பிரிவிலும் 210, 000 மலக்குகள் பணி செய்தார்கள்.

முதலாம் பிரிவினருக்கு பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பெயரைச் சொன்னவர்களாக பூமியை வலம் வருமாறும், இரண்டாம் பிரிவினரை அழைத்து நீங்கள் அனைவரும் எம் பெருமானார் அல்லாஹ்வுக்கு எந்த அளவில் நெருங்கியுள்ளனார்கள் என்று பேசிக் கொண்டு இப்பூமி எங்கும் சுற்றி வரவேண்டுமென்று கட்டளையிட்டான்.

மூன்றாம் பிரிவினரை அழைத்து நபீ பெருமானார் மீது ஸலவாத் சொன்னவர்களாக பரந்த பூமியை வலம் வர வேண்டுமென்று கட்டளையிட்டான்.

மூன்று பிரிவினரும் தமது கடமைகளை செவ்வனே செய்யத் தொடங்கினர்.

இவ்வாறு அவர்கள் பூமியை வலம் வந்து கொண்டிருந்த சமயம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் புனித “நூர்” ஒளி அம் மூன்று கூட்டத்தோடும் போவதும், வருவமதுமாகவே இருந்தது.

“மலக்” அமரர்கள் மூன்று பிரிவினரில் முதற் பிரிவு பெருமானாரின் முஹம்மத் எனும் பெயரை மொழிந்த அருளாலும், இரண்டாம் பிரிவு பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வை நெருங்கியிருப்பது தொடர்பாகவும், அவர்களின் அந்தஸ்த்து பற்றியும் பேசிய அருளாலும், மூன்றாம் பிரிவு அவர்கள் மீது ஸலவாத் சொன்ன அருளாலும் பூமிக்குள் மறைந்து புதையுண்டு கிடந்தவை யாவும் வெளியே வந்தன.

இன்று உலகில் இலட்சக் கணக்கான நீரூற்றுக்கள் உள்ளன. இவையாவும் பெருமானாரின் மகிமை கேட்டு அவர்களைப் பார்ப்பதாயின் பூமிக்குள்ளிருந்து வெளியே வர வேண்டுமென்பதற்காகவே அவை வெளியே வந்தன. இதேபோல் கிணறுகள் வெளிவந்தன. ஆறுகள் வெளிவந்தன. மரம், செடி, கொடி என்பவையும் வெளி வந்தன. இன்னுமிவை போல் பழ வர்க்கங்களும், பூ வர்க்கங்களும் வெளியே வந்தன.

நீரின் மேல் படைக்கப்பட்ட இந்தப் பூமி ஆடி அசையத் தொடங்கியது. பெருமானாரின் புகழையும், சிறப்பையும் அதன் மீது மலக்குகள் சொல்லச் சொல்ல ஆடியசைந்த பூமி அமைதியானது. மொத்தமாகப் படைக்கப்பட்ட வானம் ஏழாகப் பிரிந்து உயரச் சென்றது. மனித உடலில் உள்ள எலும்பு மூட்டுகள் படைக்கப்பட்ட நேரம் பொத்தி, விரித்தும், மடக்கியும், நீட்டியும் செய்ய முடியாதவாறு இரும்பு போல் பலமாக, திண்ணமாகவும் இருந்தன. பூமியின் மீது மலக்குகள் சொன்ன ஸலவாத்தினால் அவைகள் மிருதுவாகி வளைக்க, மடக்க வசதியாகின. உயிரினத்தின், குறிப்பாக மனிதனின் கண்கள் திறக்காமல் மூடப்பட்ட நிலையில் இருந்தன. பெருமானார் மீது பூமியின் மேல் சொல்லப்பட்ட ஸலவாத்தின் பொருட்டால், அவர்களின் மகிமையால் கண்கள் திறந்தன.

உலகின் ஆரம்ப கால கட்டத்தில் இரவு பகலென்று வகுக்கப்படாமலும், இல்லாமலுமிருந்த காலத்தில் மலக்குகள் பெருமானாரின் புகழை பூமியில் சொன்ன பிறகுதான் இரவு, பகல் உண்டானது. மலை படைக்கப்பட்ட ஆரம்பத்தில் அது ஒரே இடத்தில் உறைந்தது போல் ஆடாமலும், அசையாமலும் இருந்த மலை ஓடத் தொடங்கியது பெருமானாரின் புகழ் பூமியில் பாடப்பட்ட பிறகேதான். மேகக் கூட்டங்கள் மழை பொழிவதும் பெருமானாரின் புகழ் பூமியில் கூறுப்பட்ட பிறகுதான்.

மேலே நான் சொன்ன – எழுதிய விபரங்கள் யாவும் ஷாதுலீ நாயகம் அவர்களின் ஞான குருவான “அல்குத்புஷ் ஷஹீத்” அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா” எனும் ஸலவாத்தில் இடம் பெற்றுள்ள, நான் மேலே எழுதிக்காட்டிய தத்துவங்களையும் اللهم صل على من منه انشقّت الأسرار என்ற வசனம் தந்த தத்துவங்களேயாகும். மேற்கண்ட இந்த விபரங்கள் குறித்த ஸலவாத் வசனத்தின் வயிற்றிலிருந்து எனது அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்ட செல்லக் குழந்தைகளேயாகும்.

மேற்கண்ட விபரங்களை அறிய விரும்பும் அறபு மொழி தெரிந்த ஓர் அறிஞன் பின்வரும் நூலை வாசிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆதாரம்: அல் இப்ரீஸ், பக்கம் 262-263, ஆசிரியர் – அஹ்மத் இப்னு முபாறக்

இந்நூலை எழுதிய இவர் – அஹ்மத் இப்னு முபாறக் தரமான ஓர் ஆலிம். மார்க்க அறிஞரும், ஆன்மிகவாதியுமாவார். இவர் தனக்கு ஒரு “காமில்” பூரணம் பெற்ற ஒரு ஆன்மிக வழிகாட்டி – “ஷெய்கு” தேவையென்று பல வருடங்கள் அலைந்து இறுதியில் “குத்புல் வாஸிலீன்” என்று மக்களால் அழைக்கப்பட்ட “அப்துல் அஸீஸ் அத்தப்பாங்” என்ற மா பெரும் “குத்பு” மகான் ஒருவரை சந்தித்தார்.

குறித்த இந்த மகான் ஓர் “உம்மீ” எழுத வாசிக்கத் தெரியாதவர்கள். ஆயினும் “குத்பு”தான். இந்த மகானிடம் சில காலம் தங்கியிருந்து தனக்குத் தேவையான, தெரியாத, சந்தேகமான திருக்குர்ஆன் வசனங்கள், நபீ மொழிகளுக்கான விளக்கங்களை ஒன்று திரட்டி அவர்களால் எழுதப்பட்ட நூல்தான் “அல் இப்ரீஸ்” என்ற நூலாகும்.

இந்தக் குறிப்பை இங்கு நான் எழுதியதற்கான காரணம் நான் மேலே எழுதிய கருத்தக்களை வஹ்ஹாபீ மகான்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் ஒவ்வொன்றுக்கும் திருக்குர்ஆனிலிருந்தும், ஸஹீஹ் – பலமான ஹதீதில் இருந்தும் ஆதாரம் கேட்பவர்களாவர். இவர்கள் علم الكشف، علم الإلهام، علم اللّدنّي முதலான அறிவுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதனால் இத்தகைய அறிவுகள் வழங்கப்பட்ட மகான்களின் பேச்சையும் நம்பமாட்டார்கள்.

ஆயினும் இப்போது நான் மேலே குறிப்பிட்ட மூன்று வகை அறிவுகளும் உண்மைதான் என்பதற்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் ஆதாரங்கள் உண்டு. அவற்றை இங்கு எழுதத் தொடங்கினால் இந்தக் கட்டுரையை முடிக்க இயலாமற் போய்விடும். இன்ஷா அல்லாஹ் வேறோர் இடத்தில் இது பற்றி எழுதுவோம்.

“இப்ரீஸ்” என்ற நூலில் எழுதப்பட்ட விஷயங்கள் யாவும் அப்துல் அஸீஸ் அத்தப்பாங் என்ற “குத்பு” அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மேலே நான் குறிப்பிட்ட மூன்று வகை அறிவைச் சேர்ந்ததாகும். எவன் குறித்த மூன்று அறிவும் உண்மைதான் என்று நம்புகிறானோ அவன் மட்டுமே குறித்த விளக்கங்களை ஏற்றுக் கொள்வான்.

மேற்கண்ட இத்தகைய அறிவுகள் “வஹீ” போல் நபீமார்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஜிப்ரீல் மூலம் வருகின்ற “வஹீ”மட்டுமே நபீமாருக்கு சொந்தமானதாகும். நான் குறிப்பிட்ட ஏனைய மூன்று வகை அறிவும் அல்லாஹ் விரும்பியவர்களுக்கு கொடுப்பான். அநேகமாக இத்தகைய அறிவுகள் வலீமார்களுக்கே வழங்கப்படுகிறது.

நான் தலைப்பில் எழுதி விளக்கம் எழுதிய “ஸலவாத்” வசனம் குர்ஆன் வசனமுமல்ல, ஹதீது வசனமுமல்ல. அது இறைஞானி அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “ஸலவாத்” ஆகும். இது அவர்களுக்கு “இல்ஹாம்” மூலம் வழங்கப்பட்டதாகும்.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments