தொடர் – 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ، (سورة النساء – 3)
அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்கள் விஷயத்தில் நீதம் செய்ய முடியாது என நீங்கள் அஞ்சினால் மற்றப் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடக்க முடியாதெனப் பயந்தால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட – அடிமைப் பெண்களில் உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அநீதி செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமான வழியாகும். (திருமறை 04-03)
قَالَ الشَّافِعِيُّ: وَبَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَنَاكَحُوا تَكْثُرُوا فَإِنِّي أُبَاهِي بِكُمُ الْأُمَمَ حَتَّى بِالسَّقْطِ»،
(معرفة السنن والآثار)
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொன்னதாக இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். (நீங்கள் திருமணம் செய்யுங்கள். அதிகமாக்குங்கள். ஏனெனில் நான் உங்களைக் காட்டி பெருமை பேசுவேன். விழும் கட்டி கொண்டாயினும் சரியே)
عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَنَاكَحُوا، تَكْثُرُوا، فَإِنِّي أُبَاهِي بِكُمُ الْأُمَمَ يَوْمَ الْقِيَامَةِ، يَنْكِحُ الرَّجُلُ الشَّابَّةَ الْوَضِيئَةَ مِنْ أَهْلِ الذِّمَّةِ، فَإِذَا كَبِرَتْ طَلَّقَهَا، اللَّهَ اللَّهَ فِي النِّسَاءِ، إِنَّ مِنْ حَقِّ الْمَرْأَةِ عَلَى زَوْجِهَا أَنْ يُطْعِمَهَا وَيَكْسُوَهَا، فَإِنْ أَتَتْ بِفَاحِشَةٍ فيَضْرِبُهَا ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ» (مصنف عبد الرزاق)
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள். (நீங்கள் திருமணம் செய்யுங்கள். அதிகமாக்குங்கள். ஏனெனில் மறுமை நாளில் உங்களைக் கொண்டு ஏனைய சமுகத்திடம் நான் பெருமை பேசுவேன். “திம்மத்” உடையோரில் அழகான யுவதியை ஒருவன் திருமணம் செய்வான். அவள் வயது முதிர்ந்தவளானால் அவளை விவாகரத்துச் செய்துவிடுவான். பெண்கள் விடயத்தில் அல்லாஹ்வை – அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். ஒரு கணவன் தனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை அவளுக்கு உணவு கொடுப்பதும், உடை வழங்குவதுமாகும். அவள் ஒரு தீமை செய்தால் காயமின்றி அவன் அடிக்கட்டும். (முஸன்னப் அப்திர் றஸ்ஸாக்)
மேற்கண்ட இறை வசனமும், நபீ மொழிகளும் திருமணத்தின் சிறப்பையும், அதிகம் திருமணம் செய்ய வேண்டும் என்ற உணர்வையும், விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. அதோடு அதிக பிள்ளைகள் பெற வேண்டும் என்ற உணர்வையும் தட்டியெழுப்புகின்றன.
நபீமார் அனைவரின் வரலாறுகளையும், அதேபோல் வலீமார் அனைவரின் வரலாறுகளையும் அறிவது கஷ்டமான ஒன்றாகும். இவ் விபரங்களை விரிவான ஆய்வின் மூலமே அறிய முடியும்.
திருக்குர்ஆனும், நபீ மொழிகளும் அதிக திருமணம் பற்றியும், அதன் சிறப்பு பற்றியும், அதிக பிள்ளைகள் பெறுவது பற்றியும் எடுத்துரைத்தாலும் கூட வலீமார், அறிஞர்களிற் பலர் திருமணம் செய்யாமல் வாழ்ந்ததற்கும் வரலாறுண்டு. இதேபோல் அதிக திருமணம் செய்ததற்கும், அதிக பிள்ளைகள் பெற்றதற்கும் வரலாறுண்டு.
நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரே நேரம் 500 மனைவியர்கள் வைத்திருந்ததாகவும், எங்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒரே நேரம் ஒன்பதுக்கும் மேற்பட்ட மனைவியர் வைத்திருந்ததாகவும், நபீ பெருமானார் அவர்களின் பேரர்களில் ஒருவரான ஸெய்யிதுனா ஹஸன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரே நேரத்திலன்றி ஒன்றன் பின் ஒன்றாக 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்ததாகவும், வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் 49 பிள்ளைகள் பெற்றதாகவும், பெருமானாரின் தோழர்களில் அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு 100 ஆண் மக்கள் இருந்ததாகவும், எம் பெருமானாரின் இன்னுமொரு தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அபீ பக்றத றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு 40க்கும் மேற்பட்ட ஆண் மக்கள் இருந்ததாகவும், எனது தந்தை மர்ஹூம் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்களுக்கு 11 பிள்ளைகள் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
நபீமாரில் திருமணம் செய்யாதவர்களும் இருந்துள்ளார்களா என்பது தொடர்பாக நான் அறியவில்லை. ஆயினும் நபீ பெருமானாரின் தோழர்களிற் பலரும் திருமணம் செய்யாமலிருந்ததற்கு ஆதாரம் உண்டு. குறிப்பாக நபீ தோழர்களில் அதிக நபீ மொழிகளை அறிவித்த நபீ தோழர் அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிட வேண்டியவர்களாவார்கள்.
வலீமாரில் அநேகர் திருமணம் செய்யாதிருந்ததற்கு ஆதாரம் உண்டு. ஸெய்யிதுனா குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் நாகூர் நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்களையும், இவர்கள் போன்ற இன்னும் பலரையும் குறிப்பிடலாம்.
சட்ட மேதைகளிற் பலரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்ததற்கும் ஆதாரம் உண்டு. அவர்களில் இமாம் நவவீ அவர்களைக் குறிப்பிடலாம்.
வலீமாரில் இன்னும் சிலர் வயோதிபம் வரை திருமணம் செய்யாமலிருந்து மரணிப்பதற்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்தவர்களும் உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜா ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் திருமணம் செய்யும் போது இவர்களுக்கு 90 வயதாகும். அதன் பின் தொடராக மூன்று ஆண் மக்களையும், ஒரு மகளையும் பெற்றார்கள்.
இன்று நம்மில் சிலர் திருமணம் செய்யாமலும் உள்ளார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்தவர்களும் உள்ளார்கள்.
திருமணம் செய்தல் பொதுவாக “ஸுன்னத்” நபீ வழி என்று சொல்லப்பட்டாலும் கூட திருமணம் செய்தல் “வாஜிப்” கடமையான கட்டமும், “ஹறாம்” விலக்கப்பட்ட கட்டமும் உண்டு. இதன் விபரம் இதற்குரிய இடத்தில் இடம் பெறும்.
நாம் இங்கு ஆராய வேண்டிய விடயம் என்னவெனில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வது பற்றியும், அதிக பிள்ளைகள் பெறுவது பற்றியுமேயாகும்.
தலைப்பில் நான் எழுதியுள்ள திருமறை வசனமும், பெருமானாரின் அருள் மொழியும் அதிகம் திருமணம் செய்ய வேண்டுமென்றும், அதிகம் பிள்ளைகள் பெற வேண்டுமென்றும் கூறுகின்றன. ஆசையும் ஊட்டுகின்றன.
மனிதர்களில் சிலர் உள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்திருப்பார்கள். ஏன் என்று அவர்களிடம் கேட்டால்
تَنَاكَحُوْا وَتَوَالَدُوْا وَتَكَاثَرُوْا
அதிகம் திருமணம் செய்யுங்கள், அதிகம் பிள்ளைகள் பெறுங்கள் என்று நபீ பெருமான் சொல்லியிருக்கும் நிலையில் அவர்களின் சொல்லுக்கு மாறு செய்யலாமா? என்று நம்மிடம் கேட்பார்கள். ஆயினும் தொழமாட்டார்கள். மார்க்க முறைப்படி வாழ மாட்டார்கள். திருமணம் செய்கின்ற விடயத்தில் மட்டும் நபீ மொழியின் படி செயல்படுவார்கள். இவர்கள் போலிகளாவர். ஏனெனில் – இவர்கள் தமது சிற்றின்பத்தை அனுபவிப்பதற்காக பெருமானாரின் நபீ மொழிகளை ஆதாரமாக கூறுபவர்கள். இவர்கள் “ஸுன்னத்” ஆன கருமத்தைப் பேணுவார்கள். அதே நேரம் தொழமாட்டார்கள். அதாவது “ஹறாம்” செய்வார்கள். இவர்கள் சந்தர்ப்பவாதிகள்.
இன்னும் சிலர் உள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வார்கள். நான்கு ஊர்களில் நான்கு மனைவியர் வைத்திருப்பார்கள். மார்க்க முறைப்படி ஒரு மனைவியைக் கூட கவனிக்கமாட்டார்கள். இவர்களும் போலிகளேதான்.
இன்னும் சிலருளர். திருமணம் செய்வார்கள். அவர்கள் நினைப்பது போல், விரும்புவது போல் மனைவி நடக்கவில்லையானால் அவளுடன் அன்பில்லாமல் வெறுப்போடு வாழ்வார்கள். தமது சிற்றின்பத் தேவைகளை மார்க்கத்துக்கு முரணான வகையில் நிறைவேற்றிக் கொள்வார்கள். இவர்களும் போலிகள்தான்.
இன்னும் சிலருளர். திருமணம் செய்வார்கள். மனைவியர்களுடன் அன்பாகவும் ஒழுக்கமாகவும், கண்ணியமாகவும் வாழ்வார்கள். அவர்களின் தேவைகளை குறையின்றி நிறைவேற்றி வைப்பார்கள். இவர்கள் போலிகள் அல்லர்.
நபீமார், வலீமார், பொதுவாக மார்க்க மேதைகள், ஆன்மிகவாதிகள் திருமணம் செய்வார்கள். சந்தானங்களை அதிகமாகப் பெற்றெடுப்பார்கள். ஆனால் அவர்களிடம் சிற்றின்ப நோக்கம் இருக்காது. மனைவியருடன் உடலுறவு கொண்டால் கூட அதன் மூலம் பேரின்பத்தை அனுபவிப்பார்களே தவிர சிற்றின்பத்தைச் சற்றும் அனுபவிக்கமாட்டார்கள். இன்னோர் பெண்களை சிற்றின்பமெனும் மலம் கழிக்கும் மல கூடமாக நோக்கமாட்டார்கள். பார்க்கவுமாட்டார்கள். மாறாக இறைவனின் “ஷுஹூத்” காட்சிக்கு அவர்களைக் கண்ணாடியாகப் பயன்படுத்துவார்கள். அதன் மூலம் பேரின்பம் ருசிப்பார்கள். பெண்களில் பேரின்பம் காணும் நிலையென்று ஆன்மிகத்தில் ஒரு நிலையுண்டு. இந்நிலையையும், இன்ப சுகத்தையும் எவருக்கும் வார்த்தையில் சொல்லியோ, எழுதியோ புரிய வைக்க முடியாது.
ஒரு சமயம் இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவர் ஒருவர் பெண்கள் மூலம் கிடைக்கின்ற ஆன்மிகப் பேரின்பம் எவ்வாறிருக்கும் என்று அவர்களிடம் கேட்டார். அதற்கவர்கள் பதில் சொல்லாமல் தேன் எவ்வாறு இனிக்கும் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கவர் பதில் கூறாமல் மௌனியாக இருந்தார். இமாம் அவர்கள் தேன் ஒரு சொட்டை அவரின் நாக்கில் வைத்து எப்படியிருக்கிறதென்று கேட்டார்கள். அதற்கவர் இனிக்கின்றதென்றுதான் என்னால் கூற முடியுமே தவிர எவ்வாறு இனிக்கின்றதென்று கூற முடியாது என்றார். இமாம் அவர்கள் இவ்வாறுதான் பேரின்பமுமாகும். நீ இப்போது ருசித்த தேன் ருசியை விட பேரின்ப ருசி கோடான கோடி மடங்கு அதிகமானது. அதை எவ்வாறு வர்ணிக்க முடியும்? என்று கூறினார்கள்.
இப்பேரின்பம் குறித்தே பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُبِّبَ إِلَيَّ مِنْ دُنْيَاكُمْ ثَلَاثٌ اَلنِّسَاءُ وَالطِّيْبُ وَقُرَّةُ عَيْنِيْ فِى الصَّلَاةِ،
உங்களின் “துன்யா” எனும் இவ்வுலகிலிருந்து மூன்று விஷயங்கள் எனக்கு விருப்பமாக்கப்பட்டுள்ளன. அவை மணம், பெண்கள், தொழுகையில் என் கண் குளிர்தல் என்று கூறினார்கள்.
தொடரும்…