தொடர் – 03
கண்ணியத்திற்குரிய உலமாஉகளின் கவனத்திற்கு!
நான் எழுதி றபீஉனில் அவ்வல் 12ம் இரவு காத்தான்குடி 05 பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்ற “ஸலவாத்” மஜ்லிஸ் நிகழ்வின் போது வெளியிட்ட “அல்பர்கதுல் பரீத் பீ ஷர்ஹி கலிமதித் தவ்ஹீத்” என்ற அறபு நூலின் தமிழாக்கமும், விளக்கமும் மிகவிரைவில் நான் எழுதி வெளியிடவிருக்கும் 2000 பக்கங்களுக்கும் அதிக பக்கங்கள் கொண்ட “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் நூலில் இடம் பெறும்.
உலமாஉகளுக்கு நான் கூறும் பணிவான ஆலோசனையும், அறிவுரையும் என்னவெனில் நான் எழுதியுள்ள இந்நூலில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் என்னுடையவையல்ல. நான் பெயர் குறிப்பிட்டு மேலே கூறிய மூன்று நூல்களிலும் அவற்றின் ஆசிரியர்கள் எழுதிய கருத்துக்களேயாகும். அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை அலசி ஆய்வு செய்தால், திருக்கலிமாவுக்கு நாம் சொல்லிக் கொண்டிருக்கும் “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை” என்ற கருத்து முற்றிலும் பிழை என்பது ஆதாரங்கள் மூலம் தெளிவாகும்.
தமிழ் நாட்டில் “நெல்லிக்குப்பம்” என்று ஓர் ஊர் உண்டு. அவ் ஊரிலுள்ள அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் ஆலிம் என்பவர் திருக்கலிமாவின் உண்மையான, எதார்த்தமான பொருளைப் புரிந்து கொள்ளும் நோக்கத்தோடு தமிழ் நாடு முழுவதும் அலைந்து பல நூறு தரமான உலமாஉகளைச் சந்தித்தார். அவர்களில் எவரும் இவரின் அறிவுத் தாகத்தை தீர்க்கவில்லையாதலால் “லக்னோ” எனும் ஊரில் “கறாமத்” அற்புதமுள்ள ஒரு “காமில்” சம்பூரணம் பெற்ற ஒரு மகான் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைச் சந்திப்பதற்காக “லக்னோ” சென்றார்கள் நெல்லிக்குப்பம் சின்ன அப்துர் றஹ்மான் அவர்கள்.
லக்னோ நகரிலுள்ள “காமில்”, ஹாதித் தகலைன் – هَادِى الثَّقَلَيْنِ “மனு, ஜின்களை நல்வழிப்படுத்தும் மகான்” அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் றஹிமஹுல்லாஹ் அவர்களை சின்ன அப்துர் றஹ்மான் சந்தித்து அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி சில காலம் அங்கேயே தங்கியிருந்து அவர்களிடமிருந்து திருக்கலிமாவின் சரியான பொருளைக் கற்றார்கள். இவர்களுக்கு – சின்ன அப்துர் றஹ்மான் அவர்களுக்கு ஏற்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுத்து அவருக்கு தெளிவை ஏற்படுத்தினார்கள். இறுதியில் இவர்களுக்கு “பைஅத்” எனும் ஞானதீட்சையும் வழங்கி அவர்கள் அறபு மொழியில் எழுதிய “கலிமதுல் ஹக்” எனும் நூலில் ஒரு பிரதியும் கொடுத்து நெல்லிக்குப்பம் அனுப்பி வைத்தார்கள்.
நெல்லிக்குப்பம் மீண்ட அஷ்ஷெய்கு சின்ன அப்துர் றஹ்மான் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் ஷெய்கு அவர்கள் கொடுத்த அறபு நூலை ஆய்வு செய்து அந்த நூலை தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்பினார்கள். ஆயினும் அந்த நூல் முழுவதையும் மொழியாக்கம் செய்ய அவர்களால் முடியாமற் போயிற்று. எனினும் அந்த நூலில் தங்களுக்கு விளங்கிய விடயங்களை மட்டும் மொழியாக்கம் செய்து “முஸ்லிம் அத்வைத மூல மொழி” என்று அதற்குப் பெயரிட்டு நூலாக வெளியாக்கினார்கள்.
அவர்களின் முஸ்லிம் அத்வைத மூல மொழி எனும் நூல் இன்று அச்சில் உள்ளது. எனினும் இந்நூல் தமிழ் நாட்டில் சில நூலகங்களிலும், சில புத்தகக் கடைகளிலுமே வாங்க முடியும். இது கூட தேடித்தான் எடுக்க வேண்டும்.
தரமான ஓர் ஆலிம் – மார்க்க அறிஞன் இந்நூலையோ, நான் எழுதி வெளியிட்ட “அல்பர்கதுல் பரீத் பீ ஷர்ஹி கலிமதித் தவ்ஹீத்” என்ற நூலையோ திரும்பத் திரும்ப வாசித்தாராயின் அவர் திருக்கலிமாவை சரியாக விளங்கிய அறிவுச் சீமானாகிவிடுவார். நான் கீழ் மாடியில் நின்று பேசினால் அவர் மேல் மாடியில் நின்று ஆயிரம் ஒலி பெருக்கி மூலம் திருக்கலிமாப் பிரகடனம் செய்யவும் துணிந்து விடுவார். பரந்து விரிந்த இப்புவியில் வாழும் 300 கோடி முஸ்லிம்களில் திருக்கலிமாவின் சரியான கருத்தை விளங்கியவர் 50 ஆயிரம் பேர் இருப்பார்களா? என்று நான் சந்தேகப் படுகிறேன்.
எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்த நூற்றாண்டும், அதையடுத்த இரண்டு நூற்றாண்டுகளுமே திருக்கலிமாவின் பொருளில் ஊடுருவல் செய்யப்படாத காலங்களாகும். அதன்பின் கலிமாவின் பொருளில் புரட்டல், ஊடுருவல் ஏற்பட்டுவிட்டன.
இதையே நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
خَيْرُ الْقُرُوْنِ قَرْنِيْ، ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ، ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ، ثُمَّ يَفْشُو الْكَذِبُ،
என்று கூறினார்கள்.
நூற்றாண்டுகளிற் சிறந்தது எனது நூற்றாண்டு. சிறப்பில் அதையடுத்தது அடுத்த நூற்றாண்டு. அதையடுத்தது அடுத்த நூற்றாண்டு என்று நபீ பெருமான் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் மூன்று நூற்றாண்டுகள் – 300 ஆண்டுகள் சிறந்ததென்றும், அதன் பிறகு பொய் பரவுமென்றும் அருளினார்கள்.
இந்த நபீ மொழி மூலம் நபீ மணி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்த நூற்றாண்டிலும், அதையடுத்த இரண்டு நூற்றாண்டுகளிலும் – 300 வருடங்களிலும் பொய் பரவவில்லையென்றால் எதில் பொய் பரவவில்லை என்று விளங்கிக் கொள்ள வேண்டும். உலக விடயத்தில் பொய் பரவவில்லையா? அல்லது மார்க்க விடயத்தில் பொய் பரவவில்லையா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
பெருமானார் அவர்கள் பொதுவாகத்தான் சென்னார்களேயன்றி என்ன விடயத்தில் பொய் பரவவில்லையென்று ஒரு விடயம் குறித்து அவர்கள் சொல்லவில்லை. இந்நிலையில் உலக விடயத்தில் பொய் பரவவில்லை என்று சொன்னார்களா? அல்லது மார்க்க விடயத்தில் பொய் பரவவில்லை என்று சொன்னார்களா? என்பது குறித்து நபீ மொழியில் விளங்கப்படவுமில்லை.
எனவே, இவ்விடத்தில் மார்க்க விடயத்தில் பொய் பரவவில்லை என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும். உலக விடயத்தில் என்று பொருள் கொள்ள முடியாது. அது பற்றி நபீ பெருமான் அவர்கள் சொல்லத் தேவையுமில்லை.
எனவே, நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பொய் பரவாத 300 வருடங்கள் என்று குறிப்பிட்டது மார்க்கத்தில் பொய் பரவாக்காலமென்பதையே குறிக்கும்.
நபீகளார் குறித்த 300 ஆண்டுகளும் திருக்கலிமாவில் பொய் பரவாக் காலம் என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது திருக்கலிமாவின் வசனமான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதற்கு “அல்லாஹ் அல்லாத எந்த ஓர் “இலாஹ்” நாயனும் இல்லை” என்ற பொருள்தான் இருந்து வந்ததேயன்றி எவரும் இதற்கு மாறான பொருள் சொல்லவில்லை. இவ்வாறு பொருள் சொல்வது என்ன விளக்கத்தை தருமென்றால் “அல்லாஹ்வான “இலாஹ்” நாயன் உண்டு” என்ற பொருளைத் தரும்.
திருக்கலிமாவான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தின் மேலே நான் எழுதிய நேரடிப் பொருளான “அல்லாஹ் அல்லாத எந்த ஓர் “இலாஹ்” நாயனும் – தெய்வமும் இல்லை” என்று திருக்கலிமாவுக்கு பொருள் கொண்டால் இன்று உலகில் வணங்கப்படுகின்ற யாவும் அல்லாஹ் தானானவை என்றல்லவா சொல்ல வேண்டியும், நம்ப வேண்டியும் வரும் என்று பயந்தததினால்தான் முன்னோர்களிற் சிலர் திசையை மாற்றி பொய்யான – இல்லாத வலிந்துரைப் பொருள் கொண்டு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயனோ, தெய்வமோ இல்லை” என்று மாற்றிக் கொண்டார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட பயமே தவிர திருக்கலிமாவின் பொருள் அவர்கள் சொல்வது போலில்லை. உண்மையான பொருளை அவர்கள் விளங்காமலேயே இருந்தார்கள் என்று சொல்லவுமில்லை.
நான் எழுதி வெளியிட்டுள்ள “அல்பர்கதுல் பரீத் பீ ஷர்ஹி கலிமதித் தவ்ஹீத்” என்ற திருக்கலிமா விளக்க நூலில் எனது சொந்தக் கருத்து ஒன்றுமே இல்லை. இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் மேலே நான் பெயர் குறித்த மூன்று மகான்களின் கருத்துக்களேதான்.
இச்சிறிய நூலும், இன்னும் சில மாதங்களில் வெளிவரவுள்ள 2000 பக்கங்களுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நூலும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை சுருதிப் பிரமாணங்கள், மற்றும் யுக்திப் பிரமாணங்கள் மூலம் நிறுவி எழுதப்பட்ட நூல்களாகும். அண்மையில் வெளியிட்ட “அல்பர்கதுல் பரீத்” எனும் நூலில் திருக்கலிமாவுக்குரிய விளக்கத்தை மட்டுமே எழுதியுள்ளேன்.
உலமாஉகளில் யாராவது இந்நூலில் பிழை இருக்கக் கண்டால் அப்பிழை குறித்து எனக்கு அறிவிக்குமாறும், அல்லது எனது நூலை மறுத்து ஆதாரங்களுடன் அது பிழையென்று ஓர் நூல் எழுதி நிறுவுமாறும் அன்பாய் கேட்டுக் கொள்கிறேன். இஸ்லாம் கூறும் இவ்வழியை விட்டு மொட்டைக் கடிதம் எழுதுவதையும், வெள்ளிக்கிழமை “குத்பா” பிரசங்கத்தின்போது எனது நூல் பற்றி தாறுமாறாய்ப் பேசுவதையும் தவிர்க்குமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்நூல் கிடைக்காத உலமாஉகள் தமது முகவரியை எமது அலுவலகத்திற்கு அனுப்பி பிரதியை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
முற்றும்.