தொடர் – 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், அவர்களின் கலீபா அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ அவர்களும், இவர்களின் கலீபா தாஜுத்தீன் அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ அவர்களும் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய மகான்கள் என்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் கூற என்னால் முடியும்.
அந்த மகான்கள் அவ்வாறு சொல்லவில்லை என்று யாராவது எனது இக்கட்டுரைக்கு மறுப்பு எழுதினால் சரியான ஆதாரங்கள் கூறி மறுப்பதற்கு நான் ஆயித்தமாகவே உள்ளேன்.
நான் முதலில் “பைஅத்” செய்து கொண்டது சங்கைக்குரிய டாக்டர் பாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடமேயாகும்.
நான் 1958ம் ஆண்டு காலி பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரியில் கல்வி கற்பதற்காகச் சேர்ந்தேன். அதே வருடம், அல்லது அதையடுத்த வருடம் என்று நினைக்கிறேன். சங்கைக்குரிய மர்ஹூம் டொக்டர் பாஸீ அவர்கள் காலி கோட்டைக்கு அழைத்து வரப்பட்டு சில நாட்கள் கல்லூரியில் தங்கியிருந்த காலத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் “பைஅத்” வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு “பைஅத்” வழங்கப்பட்டது. அந்நேரம் சுமார் 60 மாணவர்கள் இருந்திருப்பார்கள்.
நான் ஷாதுலிய்யா தரீகாவையும், அதையடுத்து சில வருடங்களின் பின் காதிரிய்யா தரீகா வழியில் “பைஅத்” பெற்று “தரீகா” வழியில் வாழ்ந்து வருகிறேன். வளீபா, யாகூதிய்யா “ஸலவாத்”களை தினமும் ஓதிக் கொள்வேன். ஷாதுலீ நாயகத்தின் மீதும், அவர்களின் கலீபா சங்கைக்குரிய அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ, இவர்களின் கலீபா சங்கைக்குரிய தாஜுத்தீன் அதாஉல்லாஹ் ஸிக்கந்தரீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் மீதும் கடுமையான “மஹப்பத்” உள்ளவனாகவும் இருக்கிறேன்.
நான் அறிந்தவரை எல்லா தரீகாக்களும், அவற்றின் தாபகர்களும், அவ்வழி வாழ்ந்த ஷெய்குமார்களும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்களாயிருப்பதால் அவர்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்.
எனினும் ஷாதுலீ நாயகம் அவர்களின் ஷெய்கு அல்குத்புஷ் ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் றஹிமஹுல்லாஹ் அவர்களை அனைவரை விடவும் அதிகம் நேசிக்கிறேன். இதற்குக் காரணம் அவர்கள் இயற்றிய “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா” எனும் ஸலவாத் வசனங்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை வாரி வழங்கியிருப்பதேயாகும்.
ஷாதுலீ நாயகம் அவர்களும், அவர்களின் நேரடி கலீபா அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ நாயகம் அவர்களும், இவர்களின் கலீபா தாஜுத்தீன் அதாஉல்லாஹ் றஹிமஹுமுல்லாஹ் அவர்களும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களும், அதைப் பேச்சுருவிலும், எழுத்துருவிலும் பகிரங்கப்படுத்தியவர்களும் என்ற செய்தி பொய்யுமல்ல, இரகசியமானதுமல்ல. அவர்கள் எழுதிய நூல்களே இதற்கு ஆதாரங்களாகும்.
அவர்களின் எழுத்துக்களில் இருந்து அவர்கள் இந்த ஞானக் கொள்கையிலேயே வாழ்ந்தவர்கள் என்பதும், பிறரை வழி நடத்தியவர்கள் என்பதும் தெளிவாகும்.
ஷாதுலீ நாயகமவர்களின் கலீபாவின் கலீபா அதாஉல்லாஹ் அவர்கள் எழுதிய “ஹிகம்” என்ற தத்துவ நூலில் பல இடங்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானக் கருத்துக்களை, இறைஞான முத்துக்களை குவித்து வைத்துள்ளார்கள்.
அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ மகானே இந்த அறிவு பற்றிக் கூறுகையில்
من يتغلغل فى علمنا هذا مات مصرا على الكبائر من حيث لا يشعر
“எங்களுடைய இந்த அறிவில் எவன் வயிறு நிரம்பக் குடிக்கவில்லையோ அவன் தான் அறியாமலேயே பெரும்பாவத்தில் நிலைத்திருந்து மரணிப்பான்” என்று எச்சரிக்கை செய்துள்ளது யாரின் கதவை – கல்பை தட்டாது போனாலும் “ஷாதுலிய்யா” எனும் மகத்தான தரீகாவை வழி நடாத்தும் குலபாஉகளினதும், தரீகாவாதிகளினதும் கதவுகளைத் தட்டவே வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
அந்த மகான் ஷாதுலீ நாயகம் அவர்கள் தங்களுக்கு “காமில்” சம்பூரணம் பெற்ற தரமான ஞானகுரு ஒருவர் தேவையென்று பல நாடுகள், பல ஊர்களை வலம் வந்து தேடியலைந்தார்கள். ஒரு நாள் வெளிநாடொன்றில் வலம் வந்து கொண்டிருக்கையில் இவர்கள் தர்வேஷ் – “மஜ்தூப்” ஒருவரைச் சந்தித்தார்கள். இவர்களுக்கு அந்த “மஜ்தூப்” மகான் நீங்கள் “காமில்” பூரணம் பெற்ற ஒருவரை தேடி எங்குமே அலையத் தேவையில்லை. உங்கள் நாட்டிலுள்ள மலையொன்றிலேயே நீங்கள் தேடும் ஷெய்கு இருக்கிறார்கள் என்று நற்செய்தியொன்று சொன்னார்கள்.
இது கேட்ட “அல்குத்புல் அக்பர்” அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ அவர்கள் தங்களின் நாட்டுக்கு வந்து பலரிடம் வினவிய பின் அந்த மலையை அறிந்து ஒரு நாள் அந்த மலையடிக்கு வந்த போது تَعَالَ عُرْيَانًا நிர்வாணியாக வாருங்கள் என்று ஓர் அசரீரி கேட்டது. சிந்தித்தார்கள். ஜாடையைப் புரிந்து கொண்டார்கள். மலையடியில் இருந்த நீரில் குளித்து புதிய ஆடையும் அணிந்து மலை மீது ஏறிச் செல்கையில் இவர்களின் வருகையை மலை உச்சியிலிருந்து புரிந்து கொண்ட “காமில் குத்பு” ஷாதுலீ நாயகமவர்களின் மகிமையைப் புரிந்து கொண்டு அவர்களை வரவேற்பதற்காக மலை உச்சியிலிருந்து அதன் அடிவாரம் நோக்கி இறங்கி வந்தார்கள். சூரியனும், சந்திரனும் நடுவழியில் சந்தித்தன. அப்போது மலையிலிருந்து இறங்கிய “காமில்” குரு ஷாதுலீ நாயகமவர்களின் பரம்பரையை நபீ பேரர் ஹஸன் றழியல்லாஹு அன்ஹு வரை சொல்லி முடிக்க ஷாதுலீ நாயகம் வியப்பிலாழ்ந்து போனார்கள். இருவரும் மலை உச்சியை நோக்கி நடந்து காமில் குத்புடைய இடத்தை இடைந்தார்கள். சூரியனும், சந்திரனும் சங்கமித்தன.
இந்த நிகழ்வு “தூனுஸ்” நாட்டில் நடைபெற்றது. இருவரும் என்ன பேசிக் கொண்டனர் என்பதை அறிய முடியவில்லை. எனினும் ஒரு விடயம் மட்டும் தெரிய வந்துள்ளது.
ஷாதுலீ நாயகம் “காமில் குத்பு” அவர்களிடம் “எனக்கு அல்லாஹ்வின் “இஸ்முல் அஃளம்” வலுப்பமிகு திரு நாமத்தை சொல்லித் தாருங்கள் என்று கேட்க, “காமில் குத்பு” உங்கள் மடியை பாருங்கள். அதுவே “இஸ்முல் அஃளம்” என்று சொன்னதாகவும், அவர்கள் தங்களின் மடியைப் பார்த்த போது தாங்களே சிறு பிள்ளையாக மடியில் இருந்தது கண்டு வியந்த போது இதுவே “இஸ்முல் அஃளம்” என்று குத்பு அவர்கள் கூறியதாக வரலாறு கூறுகிறது.
மலையில் இருந்த “காமில் குத்பு” தான் இஸ்லாமிய உலகில் பிரசித்த பெற்ற “அல்குத்புஷ் ஷஹீத்” அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அல்லது (பஷீஷ்) ஆவார்கள்.
ஷாதுலீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சில காலம் தங்கியிருந்து பெறவேண்டியவற்றை எல்லாம் பெற்றுக் கொண்டு “பைஅத்” ஞான தீட்சை வழங்குவதற்கான அனுமதியும் பெற்றுக் கொண்டு தங்களின் நாடான “தூனுஸ்” நகர் வந்து தங்களின் “ஷாதுலா” பிறப்பிடத்தை அடைந்தார்கள்.
ஷாதுலீ நாயகமவர்களின் “காமில் குத்பு” அவர்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது “ஸலவாத்” ஒன்று இயற்றியுள்ளார்கள். அந்த “ஸலவாத்” “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா” என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. அந்த “ஸலவாத்” ஷாதுலிய்யா தரீகாவின் கலீபாக்களுக்கும், அந்த தரீகாவைச் சேர்ந்தவர்களுக்கும் தெரிந்ததேயாகும். அவர்களிற் சிலர் அல்லது பலர் அதை தினமும் ஓதி வருவார்கள் என்று நம்புகிறேன். நானும் அதை தினமும் “ஸுப்ஹ்” தொழுகையின் பின் ஓதி வருகிறேன்.
அந்த “ஸலவாத்”தில் இடம் பெற்றுள்ள சில வசனங்களுக்கு மட்டும் விளக்கம் எழுதுகிறேன்.
اللهم صَلِّ عَلَى مَنْ مِنْهُ انْشَقَّتِ الْأَسْرَارُ وَانْفَلَقَتِ الْأَنْوَارُ
எவர்களில் நின்றும் – எவர்களினால் – இரகசியங்கள் வெடித்து வெளியானதோ அவர்கள் மீதும், எவர்களினால் ஒளிகள் பிளந்து வந்தனவோ அவர்கள் மீதும் நீ ஸலவாத் சொல்வாயாக யா அல்லாஹ்!
மேற்கண்ட இவ்வசனங்களில் முந்தின வசனத்திற்கு அஸ்ஸெய்யித் முஹம்மத் இப்னு அப்தில் கரீம் அல்பாஸ்றாவீ றஹிமஹுல்லாஹ் கூறிய விளக்கத்தை கடந்த பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன். தேவையானோர் தேடி வாசித்துப் பயன் பெறவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த விபரம் தேவையான உலமாஉகள் “அல் இப்ரீஸ்” எனும் நூல் 262ம் பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
وَانْفَلَقَتِ الْأَنْوَارُ
ஒளிகள் வெடித்து வெளியானதும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களில் நின்றுமேயாகும்.
இந்த இரண்டாவது வசனத்திற்கு விளக்கம் கூறிய குத்புல் வாஸிலீன் அப்துல் அஸீஸ் தப்பாங் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
إنّ أوَّلَ ما خلق الله تعالى نورُ سيِّدِنا محمد صلّى الله عليه وسلّم، ثمّ خلق منه القلمَ والحُجُبَ السبعين وملائكتَها، ثمّ خلق اللّوح، ثمّ خلق العرشَ والأرواحَ والجنّة والبرزخَ،
அல்லாஹ் தனது படைப்புகளில் முதலில் எம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையே – அவர்களின் ஒளியையே படைத்தான். பின்பு அந்த ஒளியிலிருந்தே “கலம்” எனும் எழுதுகோலைப் படைத்தான். அதேபோல் அவர்களின் ஒளியிலிருந்தே “அர்ஷ்” எனும் சிம்மாசனத்தை படைத்தான். அதன் பின் “அர்வாஹ்” எனும் றூஹுகளைப் படைத்தான். அதன் பின் சுவர்க்கத்தை படைத்தான். அதன் பின் “பர்ஸக்” எனும் “ஆலம்” உலகத்தைப் படைத்தான்.
அல் இப்ரீஸ், பக்கம் 164, ஆசிரியர்: அஷ் ஷெய்கு அஹ்மத் இப்னுல் முபாறக்
மேற்கண்ட இக்குறிப்புகள் குறித்த நூலில் இருந்து பெறப்பட்டவையாகும்.
“அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா”வில் பல இடங்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை இணைத்து ஷாதுலீ நாயகமவர்களின் ஷெய்கு ஆன்மிகக் குரு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். அதன் விபரம் அடுத்த தொடரில் இடம் பெறும். தொடரும்….