தொடர் – 02
இதற்கு முன் பதிவான தொடரில் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் ஷாதுலீ, அவர்களின் முதலாவது கலீபா அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ, மற்றும் இவர்களின் கலீபா அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் “வஹ்ததுல் வுஜூத்” பேசியவர்கள் என்றும், எழுதியவர்கள் என்றும் கூறினேன். என் கூற்றுக்கான ஆதாரங்களை தொடர்ந்து தந்து கொண்டே இருப்பேன்.
முதலில் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்றை முன்வைக்கிறேன்.
قال الشّيخ أبو الحسن الشّاذلي رضي الله عنه قَدْ مَحَقَ الْحَقُّ تعالى جَمِيْعَ الْأَغْيَارِ بقوله هُوَ الْأَوَّلُ والآخِرُ والظاهر والباطن، فَقِيْلَ لَهُ فَأَيْنَ الخلق؟ فقال مَوْجُوْدُوْن، ولَكِنْ حُكمُهم مَعَ الحقِّ تعالى كَالْأَنَابِيْبِ الّتي فى كُوَّةِ الشَّمْسِ، تراها صاعدةً هابطةً، فإذا قبضتَ عليها لا تراها، فهي موجودةٌ فى الشُّهود ومفقودةٌ فى الوجود، (اليواقيت، ج 1، ص 65)
அபுல் ஹஸன் ஷாதுலீ நாயகம் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் தனது “முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே” என்ற திருமறை வசனத்தின் மூலம் அல்லாஹ்வுக்கு வேறானவை அனைத்தையும் அழித்துவிட்டான் என்று சொன்ன போது அப்படியானால் படைப்பு எங்கே? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் படைப்பு உண்டு. ஆயினுமது பார்வையில் மட்டும் உள்ளதேயன்றி எதார்த்தத்தில் இல்லாததேயாகும். “ஓர் ஓலைக் குடிசையின் முகட்டிலுள்ள ஒரு துவாரத்தின் வழியாக ஒரு பBட்டை – குளாய் உருவில் வெளியாகும் சூரிய வெளிச்சத்தில் இலட்சக்கணக்கான கண்ணுக்குத் தோற்றுகின்ற தூசிகள் போன்றதேயாகும். அவை பார்வைக்கு மட்டுமே தெரியும். அது மேலே ஏறுவது போலும், கீழே இறங்குவது போலும் தோற்றும், அதை நீ கையால் பிடித்தால் பிடிக்க முடியாது. தூசிகள் பார்வையில் மட்டும் உள்ளவையே தவிர எதார்த்தத்தில் இல்லாதவையாகும்” என்று இமாம் மகான் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் அர்த்தமின்றி வளவளவென்று பேசுவதற்கு உலமா சபையின் “பத்வா” குழு போன்ற கற்றுமறிவற்ற அறிவிலியல்ல.
ஷாதுலீ நாயகம் இவ்வாறு சொல்லியுள்ளார்கள் என்று நாமும், மற்றும் கலீபாக்களும் சொல்லிவிட்டுப் போகாமல் அவர்கள் கூறியுள்ள தத்துவத்தை அலசி ஆய்வு செய்து பார்க்க வேண்டும். ஷாதுலிய்யா கலீபாக்கள் இதை ஆய்வு செய்தறிந்து அதன் விபரத்தை மக்களுக்குச் சொல்லி அல்லாஹ் என்றால் யார்? என்று மக்களுக்கு விளக்கி வைப்பது அவர்களின் கடமை என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும். எந்த ஒரு “தரீகா” வாயினும் அது தத்துவமுள்ளதாகவே இருக்கும். குறிப்பாக “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமுள்ளதாகவே இருக்கும். இக் கொள்கை “தரீகா”வின் உயிர் என்பதை தரீகாவின் கலீபாக்களும், தரீகாவாதிகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.
“தரீகா”வின் உயிர் இறைஞானமேதான். இறைஞானம் தெரியாமல் “தரீகா”வில் இருப்பது அறியாமையும், தரீகாவை கிண்டல் செய்வதுமேயாகும்.
ஷாதுலீ நாயகம் என்ன சொல்கிறார்கள். அவ்வல், ஆகிர், ளாஹிர், பாதின் என்ற அல்லாஹ்வின் நான்கு திரு நாமங்கள் கொண்டும் அல்லாஹ் அவனல்லாத அனைத்தையும் அழித்து விட்டான் என்று கூறுகிறார்கள். இதன் கருத்து அவற்றை அழித்து இல்லாமாலாக்கிவிட்டான் என்பதல்ல. அதுவே அதன் கருத்தென்றால் அல்லாஹ் தவிர படைப்பு என்பது இல்லை என்றாகிவிடும். அல்லாஹ் படைப்பை அழிக்கவில்லை. படைப்பு என்ற பெயரையே அழித்துள்ளான். அப்பெயர் அழிக்கப்பட்டால் அந்தப் படைப்புக்கு அல்லாஹ் என்ற பெயர் தவிர வேறு பெயர் சொல்ல முடியாது. சொன்னால் அது படைப்பாகிவிடும். படைப்பை – படைப்பின் பெயரை அல்லாஹ் அழித்துவிட்டான் என்றால் படைப்பு எவ்வாறு இருக்கும்? அல்லாஹ் அல்லாத எதுவுமே இல்லை என்பதே சுருக்கமாகும்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைக் கூறும் திருமறை வசனங்களில் மேற்கண்ட இறைவனின் நான்கு திரு நாமங்களை ஒன்று சேர்த்துக் கொண்ட இவ்வசனம் மிகவும் தெளிவான வசனமாகும்.
இத்திரு வசனத்தில் வந்துள்ள நான்கு திரு நாமங்களும் அறபு மொழியிலக்கணத்தில் கூறப்பட்ட இணைக்கும் எழுத்துக்களில் “வாவு” என்ற எழுத்து கொண்டு இணைக்கப்பட்டிருப்பது அல்லாஹ் ஒரே நேரத்திலேயே மேற்கண்டவாறு நான்கு நிலைகளிலும் உள்ளான் என்பதை உணர்த்துகிறது. இந் நான்கும் “அவ்” என்ற எழுத்து கொண்டு இணைக்கப்படவில்லை என்பதை பின்வருமாறு விளக்கம் சொன்ன “தப்லீக்” மௌலவீ புரிந்து கொள்ள வேண்டும்.
தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த யாரோ ஒரு மௌலவீயிடம் இது பற்றிக் கேட்கப்பட்டதற்கு பின்வருமாறு விளக்கம் சொன்னாராம்.
அல்லாஹ் படைப்புக்களைப் படைக்குமுன் அவன் மட்டுமே இருந்தான். அந்த வகையில் அவன் “அவ்வல்” முந்தினவன் என்றும். படைப்புக்கள் யாவும் அழிந்தபின் அவன் மட்டுமே இருப்பான். அந்த வகையில் அவன் பிந்தினவன் என்றும், அவர் தனது உள்ளங்கையை விரித்துக் காட்டி அவன் வெளியானவன் என்றும், அதைப் பொத்திக் காட்டி அவன் உள்ளானவன் என்றும் விளக்கம் சொன்னாராம். ஸுப்ஹானல்லாஹ்! இவர் அறபு மொழியிலக்கணத்தில் باب حروف العطف என்ற பாடத்தை மீண்டும் ஒரு முறை கற்றுக் கொள்ள வேண்டும்.
இவர் தப்லீக் ஜமாஅத்தில் சுமார் 40 வருடங்களாக ஊறிப்போன ஒருவராவார். ஆதிபிதா மண்ணால் படைக்கப்பட்டவர்கள். இவர் “நுத்பா”வினால் படைக்கப்பட்டவர். தப்லீக் அமைப்பில் இருப்பவர்களுக்கு இறைஞானம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களிடம் “தஸவ்வுப்” இல்லை.
இதனால் குறித்த மௌலவீ இறைஞானத்தை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இதனால்தான் அவர் அவ்வாறு விளக்கம் கூறியுள்ளார். அவர் ஒரு மௌலவீயாக இருந்தும் திரு வசனத்தில் வந்துள்ள அல்லாஹ்வின் குறித்த நன்கு திரு நாமங்களும் “வாவு” என்ற எழுத்து கொண்டு இணைக்கப்படுள்ளன என்பதையும், “அவ்” என்ற எழுத்து கொண்டு இணைக்கப்படவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளத் தவறிவிட்டார். அவர் திரும்பவும் ஆய்வு செய்ய வேண்டும்.
இமாம் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் ஷாதுலீ நாயகமவர்கள் الخق موجود فى الشهود ومفقود فى الوجود படைப்பு என்பது கண் பார்வையில் மட்டும் தோற்றுகின்ற ஒன்றேயன்றி அப்படியொன்று எதார்த்தத்தில் இல்லை என்று சொன்னதை சிறு பிள்ளைகளின் கதையை கணக்கெடுக்காமல் விடுவது போல் கணக்கெடுக்காமல் இருக்கின்றார்கள் ஷாதுலிய்யா தரீகாவின் கலீபாக்களும், இக்வான்களும். இவ்வசனத்தின் மூலம் படைப்புக்கு “வுஜூத்” இருப்பு இல்லையென்று – அதாவது படைப்பு இல்லையென்று ஷாதுலீ நாயகம் கூறியுள்ளார்கள்.
قال أبوالحسن علي الشّاذلي رضي الله عنه، قِيْلَ لِيْ يَا عَلِيْ بِيْ قُلْ، وَعَلَيَّ دُلَّ، وَأَنَا الْكُلُّ، (بِيْ قُلْ، وَعَلَيَّ دُلْ، وَأَنَا الْكُلْ)
இமாம் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அஷ்ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்.
(எனக்கு சொல்லப்பட்டது. அலீயே! என்னைக் கொண்டு சொல். என்னைப் பற்றி அறிவி. எல்லாம் நான்தான்.)
இமாம் அவர்களுக்கு இவ்வாறு ஓர் அசரீரி கேட்டது. بِيْ قُلْ என்றால் என்னைக் கொண்டு சொல் என்று பொருள் வரும். இதற்கு என்னைப் பற்றிச் சொல் என்று பொருள் வராது. அவ்வாறு பொருள் வருவதாயின் قُلْ عَنِّيْ என்று வசனம் வந்திருக்க வேண்டும். அவ்வாறு வரவில்லை.
என்னைக் கொண்டு சொல் என்பதற்கு நான் ஆய்வு செய்த வகையில் எனக்கு கிடைத்த விளக்கம் என்னவெனில் “நீ என்னாகிச் சொல்” என்பதேயாகும். அதாவது என்னில் “பனா” ஆகிப் பேசுங்கள் என்பதாகும்.
இவ்வாறு பொருள் கொள்வது பிழையென்று சிலர் சொல்வர். அவர்கள் யாரெனில் ஸூபிஸ தத்துவமும், இறைஞானம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமும் தெரியாதவர்களேயாவர். அல்லாஹ் அவர்களுக்கு ஞான விளக்கத்தை கொடுப்பானாக!
சுமார் 100 வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலமாஉகளுக்கும், அதற்குப் பின்னுள்ள உலமாஉகளுக்கும் வித்தியாசமுண்டு.
முன்னர் வாழ்ந்த உலமாஉகளிற் பலர் இந்தியாவிலும், இலங்கையிலும் கல்வி கற்றார்கள். இந்தியாவில் கற்றவர்களில் அநேகர் “தஸவ்வுப்” ஸூபிஸக் கலை கற்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.
இலங்கையில் ஆரம்பத்திலிருந்து மௌலவீ பட்டம் பெறும் வரை கல்வி கற்றவர்களிற் பலர் “தஸவ்வுப்” கலை கற்கத் தவறிவிட்டார்கள். அதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கவில்லை.
நான் காலி பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரியில் 1958ம் ஆண்டு முதல் தொடராக ஆறு ஆண்டுகள் கல்வி கற்றேன். அக்கால கட்டத்தில் அங்கு ஸூபிஸ நூற்களில் இரண்டு நூற்கள் பாடத்திட்டத்தில் இருந்தன. அவை இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “இஹ்யாஉ உலூமித்தீன்”, இமாம் தாஜுத்தீன் அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “ஹிகம்”. ஹிகம் ஏட்டுச் சுரக்காய் போல் எழுத்தில்தான் – பாடத்திட்டத்தில் மட்டும்தான் இருந்ததே தவிர அது கற்றுக் கொடுக்கப்பட வில்லை. எனக்கு முன்னுள்ள காலத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டது பற்றி நான் அறியேன்.
எனினும் கல்லூரி அதிபர் மர்ஹூம் மதிப்பிற்குரிய அப்துல் ஹமீத் ஹழ்றத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் சில நாட்களில் மட்டும் “ஸுப்ஹ்” தொழுகையைத் தொடர்ந்து இஹ்யாஉ உலூமித்தீன் பாடம் பெரிய மாணவர்களுக்கு மட்டும் நடத்துவார்கள்.
சுமார் 7 ஆண்டுகள் தொடராக ஓதி மௌலவீயாக வெளியாகும் ஒருவர் குறைந்த பட்சம் “தஸவ்வுப்” கலையில் குறித்த இரண்டு நூற்களாவது கற்றிருக்க வேண்டும். ஒன்று – இஹ்யா உலூமித்தீன், மற்றது “ஹிகம்”. “ஹிகம்” கற்றுக் கொடுப்பதற்குத் தகுதியானவர் இப்போது இலங்கையில் இருப்பாரா என்பது கேள்விக்குறிதான்.
1960ம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் எந்த ஓர் அறபுக் கல்லூரியிலும் ஓதி மௌலவீயாக வெளியான எவரும் “தஸவ்வுப்” கலையில் தாகம் தீரக் கற்றவராக இருக்கமாட்டார் என்று நான் நினைக்கிறேன். சுமார் 50 ஆண்டுகளுக்குட்பட்ட காலப்பகுதியில் வெளியான எந்த ஒரு மௌலவீயும் “ஹிகம்” போன்ற நூற்களை கற்றிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
பாணந்துறை தீனிய்யா அறபுக் கல்லூரியில் மதிப்புக்குரிய மர்ஹூம் அப்துஸ்ஸமத் ஹழறத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஹிகம்” என்ற நூலை பாடத்திட்டத்தில் சேர்த்திருந்தாலும்கூட அதை அவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை. அங்கு அக்கால கட்டத்தில் பெரிய பாட மாணவன் என்று நானும், அட்டாளைச்சேனை மௌலவீ ஸெய்யித் அஹ்மத் மௌலானா அவர்களுமே இருந்தோம். எமக்கு அவர்கள் “ஹிகம்” எனும் நூலை கற்றுத் தரவில்லை.
இக்காலத்தில் நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை உலமாஉகளிற் பலர் எதிர்ப்பதற்கு பிரதான காரணம் அவர்கள் அதை அறியாமற் போனதேயாகும்.
அடுத்த தொடரில் வளீபா யாகூதிய்யா பற்றிய விளக்கம் தொடரும்..