தொடர் – 03
ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்
اَلْخَلْقُ مَوْجُوْدٌ فِى الشُّهُوْدِ، مَفْقُوْدٌ فِى الْوُجُوْدِ،
படைப்பு என்பது பார்வையில் மட்டும் உள்ளதேயன்றி எதார்த்தத்தில் இல்லாததாகும் என்று கூறி அதற்கு உதாரணமும் கூறியதை கடந்த தொடர் 02ல் பதிவிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து ஷாதுலிய்யா “தரீகா”வைச் சேர்ந்த “இக்வான்”கள் தினமும் ஓதி வருகின்ற வளீபா, யாகூதிய்யா பற்றியும் எழுதுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன். இதோ அவ்விரண்டிலும் கூறப்பட்ட “வஹ்ததுல் வுஜூத்” தத்துவங்களை கவனியுங்கள்.
ஷாதுலிய்யா “தரீகா” உலகின் பல முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் அமுலில் இருந்து வருகிறது.
நமது நாட்டில் மேல், மற்றும் தென் மாகாணங்களில் அதிகமானவர்களாலும், வேறு சில மாகாணங்களில் குறைந்தவர்களாலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இதேபோல் காதிரிய்யா தரீகாவும் உலக நாடுகளிலும், இலங்கை நாட்டின் பல ஊர்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இவைபோல் ரிபாஇய்யா, நக்ஷபந்திய்யா, ஸுஹ்றவர்திய்யா, ஜிப்ரிய்யா, அலவிய்யா, சிஷ்திய்யா, அறூஸிய்யா “தரீகா”க்களும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
எனினும் கவலைப்பட்டு கண்ணீர் வடிக்க வேண்டிய விடயம் என்னவெனில் “தரீகா”வின் “றூஹ்” எதுவோ அதை “தரீகா”வாதிகள் அறியாமலிருப்பதேயாகும். தரீகாக்களின் உயிர் இறைஞானமும், ஸூபிஸ ஞானமுமேயாகும். குறிப்பாக “வஹ்ததுல் வுஜூத்” ஞானமுமேயாகும்.
நான் இத்தொடரில் “ஷாதுலிய்யா” “தரீகா” பற்றியே குறிப்பிடுகிறேன். இத்தரீகாவில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதை விளக்கி வைப்பதே எனது இலட்சியமாகும்.
ஏனெனில் இத்தரீகாவின் தாபகரும், அவர்களின் கலீபாவும், இவர்களின் கலீபாவும் – மூன்று ஞான மகான்களும் தெட்டத் தெளிவாக இறைஞானம் பேசியிருக்கும் நிலையில் இத்தரீகாவின் “கலீபதுல் குலபா”வாக இருக்கின்றவர் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பொய்யென்று நிறுவுவதற்காக கையாண்ட கள்ள வேலை தொடர்பாக கடந்த பதிவுகளில் விளக்கமாக எழுதியுள்ளோம்.
அல்வளீபதுல் முபாறகா الوظيفة المباركة
இது ஷாதுலிய்யா “தரீகா”வில் காலையும், மாலையும் வழமையாக ஓதி வருகின்ற “ஸலவாத்” ஆகும். குறித்த “தரீகா”வைச் சேர்ந்த “இக்வான்” சகோதரர்கள் இதை ஓதி வருவார்கள். நானும் தொடர்ந்து 1958ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை காலிக் கோட்டையில் கல்லூரிக் காலங்களில் ஓதி வந்திருக்கிறேன். ஓதிக் கொண்டிருந்த காலத்தில் இந்த “ஸலவாத்”தின் மகிமை எனக்கும் புரியவில்லை. ஓதிக் கொண்டிருந்த மாணவர்களுக்கும் புரியவில்லை. ஆயினும் ஹழ்றத்மார் புரிந்திருப்பார்கள் என்று நான் அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்கிறேன்.
இந்த மகிமையுள்ள “ஸலவாத்”தின் பொருளும், கருத்தும், தத்துவமும் முழுமையாக எனக்கும் புரியவில்லை. தற்போது “கலீபதுல் குலபா”வாக ஒளிரும் மதிப்புக்குரிய தலைவர் அவர்களுக்கும் புரிந்திருக்காதென்றே நினைக்கிறேன். உங்களுக்குப் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் “கலீபா”வுக்கு புரியவில்லை என்று நீங்கள் எவ்வாறு சொல்வீர்கள்? என்று ஒருவர் என்னிடம் கேட்டால் அவருக்குப் பின்வருமாறு விளக்கம் சொல்வேன்.
மதிப்புக்குரிய “கலீபதுல் குலபா” அவர்கள் அந்த “ஸலவாத்”தை இன்றுவரை பல்லாயிரம் தரம் நிச்சயமாக ஓதியே இருப்பார். இதில் சந்தேகமே இல்லை. இந்த “ஸலவாத்” வசனங்களில் பல வசனங்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை கூறிக் கொண்டிருப்பதை பரவலான அறிவுள்ளவர் எவரும் மறுக்கமாட்டார். கலீபா அவர்கள் தான் ஓதி வந்த, “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் சொல்லப்பட்ட இந்த “ஸலவாத்”தின் கருத்தை அறிந்திருந்தால் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைப் பொய் என்றும், “குப்ர்” என்றும் சொல்லியிருக்கவுமாட்டார். அதை பிழையென்று நிறுவுவதற்கு கள்ளத் தனமான வேலை செய்திருக்கவுமாட்டார். கள்ளத்தனமான வேலை செய்து மாட்டியிருக்கவுமாட்டார். இது பற்றிய விபரம் சமுக வலைத் தளங்களில் உலா வந்தன.
எனவே, அறிவுக்கடல் “கலீபதுல் குலபா” அவர்கள் பல்லாயிரம் தரம் குறித்த “ஸலவாத்” ஓதி வந்தவராயிருந்தாலும் அதன் அர்த்தமும், கருத்தும் புரியாமலேயே ஓதி வந்துள்ளார் என்பது இதன் மூலம் வெளிச்சமாகின்றது.
இவர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையுடன் கருத்து முரண்பட்ட நிலையில் இருந்த போது தெவடகஹ உத்மான் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களின் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்ற மாநாடொன்றில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையை கடுமையாக சாடிப் பேசியுள்ளார். ஆதாரம் உண்டு.
இப்போது மீண்டும் உலமா சபையுடன் சேர்ந்து விட்டார் போலும். அல்லது சேர ரிஸ்வீ ஹழ்றத் அவர்களுக்கு ஆதரவு வளங்குகிறார் போலும். உண்மை மிக விரைவில் வெளிவரும். “கலீபா” அவர்களின் இச்செயல் சரியானதா? பிழையானதா? என்பதை நீதி என்ற தராசில் பொது மக்கள் நிறுத்துப் பார்க்க வேண்டும்.
இன்னுமொரு நிகழ்வை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கொழும்பில் ஒரு சிறிய மாநாடு நடைபெற்றது. அதற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். சுமார் 50க்கும் குறைவான மௌலவீமார் கலந்து கொண்டார்கள்.
மாநாட்டு மண்டபத்தினுள் நான் சென்ற போது சுமார் 25 மௌலவீமார் உள்ளே இருந்தனர். கதிரைகளும் குறைவாகவே இருந்தன. சங்கைக்குரிய அஷ்ஷெய்குஸ் ஸெய்யித் அபீபுத்தீன் கைலானீ தால உம்றுஹூ அவர்கள் மட்டும் பேசினார்கள். மதிப்புக்குரிய மௌலவீ யஹ்யா அஸ்ஹரீ அவர்கள் மொழியாக்கம் செய்தார்கள்.
முன்வரிசையில் அமர்வதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அமர்ந்த பின் வலதில் திரும்பினேன். மதிப்புக்குரிய உஸ்தாத் முஹாஜிரீன் ஹழ்றத் அவர்கள் இருந்தார்கள். இடது பக்கம் ஒருவர் இருந்தார். அவர் யாரென்று எனக்குப் புரியவில்லை.
நான் முதலில் முஹாஜிரீன் ஹழ்றத் அவர்களோடு சிறிது நேரம் மட்டும் பேசினேன். எனக்கு இடதில் இருந்தவர் அவராகவே எனக்கு ஸலாம் சொன்னார். நான் பதில் சொன்னேன். அவர் என்னைத் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றேன். நான்தான் அப்துல் ஹமீத் பஹ்ஜீ என்றார். அப்போது எனக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்கியவர்களில் நீங்களும் ஒருவரல்லவா? என்று கேட்டேன். அதற்கவர் இல்லை. நான் “பத்வா” வழங்கிய கூட்டத்திற்கு கூட போகவில்லை என்றும், “பத்வா” கொடுக்குமுன் அவ்வாறு “பத்வா” கொடுக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொல்லியும் கூட அவர்கள் எனது பேச்சை கேட்கவுமில்லை என்றும் சொன்னார்.
நான் அவ்விடத்தில் அவருடன் தர்க்கம் செய்ய விரும்பவில்லையாதலால் அவர் சொன்னதைச் செவியேற்றிருந்தேன்.
இதுவும் கலீபா அவர்களின் ஒரு நாடகமேதான். இதற்கு ஆதாரம் இன்று அவர் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை எதிர்த்துக் கொண்டிருப்பதேயாகும்.
இவர்தான் பெரும் மகான்களால் உருவாக்கப்பட்ட “தரீகா”வின் கலீபதுல் குலபாவாகவும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் கூறப்பட்ட “ஸலவாத்” – “வளீபா”வையும் ஓதிக் கொண்டிருக்கிறார். ஸுப்ஹானல்லாஹ்!
கலீபா அவர்களை இழிவு படுத்துவதற்காக நான் இவ்வாறெல்லாம் எழுதவில்லை. அவரை اَلْخَلْقُ عِيَالُ الله “படைப்பு அல்லாஹ்வின் குடும்பம்” என்ற வகையிலேயே நான் பார்க்கிறேன். அந்த வகையில் அவர் அண்ணன் அல்லது தம்பி அல்லது மகன் போன்றவர்தான். ஆயினும் அவரின் மேற்கண்ட நடவடிக்கைகள் ஓர் ஆலிம் மூலம் அதிலும் ஒரு கலீபாவின் மூலம் வெளியாவதையிட்டும், வெளியானதையிட்டும் நான் பெரிதும் வருந்துகிறேன். வேதனையடைகிறேன். என் மனம் குமுறுகிறது. என் மனக் குமுறலை எழுத்து மூலம் வெளிப்படுத்தி என் சுமையை இறக்கி வைக்கிறேன். இனியாவது அவர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்று அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
கலீபா அவர்களோ அல்லது “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் “குப்ர்” என்று சொல்கின்ற எவரோ ஹக்கை – சத்தியத்தை சத்தியமாக அறிந்து கொள்ள விரும்பினால் என்னைச் சந்திக்கலாம். நான் “பங்கர்” பதுங்கு குழியில் ஒழித்திருக்கவில்லை. என்னை முஸ்லிம் என்று ஏற்றுக் கொண்டவர்களான ஸூபிஸ சமுகத்துடன் அவர்களின் நன்மைகளில் கலந்து பகிரங்கமாகவே வாழ்கிறேன். உலமா சபையின் “பத்வா”வை வேதவாக்கென்று கருதிய, அட்டூழியம் செய்வதையே தொழிலாகக் கொண்ட சில சல்லறைகளின் துப்பாக்கி என்னைக் குறி வைத்திருக்கும் நிலையிலும் சத்தியத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறேன். சத்தியம் ஒருபோதும் சாகாது. அது உயிர். உயிர் சாகாது. உடல்தான் சாகும்.
“வளீபா ஸலவாத்” மிக ஆழமான தத்துவங்களையும், இறை இரகசியங்களையும் உள்வாங்கிய ஒன்றாகும். இறைஞானக் கடலில் 1979ம் ஆண்டு முதல் இன்று வரை குழியோடும் என்னால் குறித்த “ஸலவாத்”தின் ஆழத்தை அடைந்து கொள்ள முடியாமல் தவிக்கிறேன். எனினும் அந்தக் கோர்வையில் எனக்குப் புரிந்த ஒரு சில துளிகளை இங்கு பதிவு செய்கிறேன்.
“வளீபா”வின் ஓர் இடத்தில்
وَلَا شَيْئَ إِلَّا وَهُوَ بِهِ مَنُوْطٌ، وَبِسرِّهِ السَّارِيْ مَحُوْطٌ،
என்று கூறியுள்ளார்கள்.
இவ்வசனத்தின் வெளிப் பொருள் “எந்தவொரு வஸ்த்தாயினும் அல்லாஹ் அதைச் சூழ்ந்தவனாகவே உள்ளான் என்பதும், ஊடறுக்கும் அவனின் இரகசியத்தால் அது பாதுகாக்கப்பட்டதுமாகும்” என்பதாம்.
இந்த வசனத்தை தெளிவான, கள்ளங் கபடமற்ற உள்ளத்தோடு நோக்கினால் அல்லாஹ் அனைத்து வஸ்த்துக்களாகவும் உள்ளான் என்ற உண்மையும், அவனின் “ஸிர்று” சகல வஸ்த்தையும் பாதுகாத்துள்ளதென்ற தத்துவமும் துலங்கும்.
“ஸலவாத்”தை எழுதிய மகான் கண்ணை மூடிக் கொண்டு எழுதவுமில்லை, கல்பு எனும் உள்ளத்திற்கு திரை போட்டுக் கொண்டு எழுதவுமில்லை. ஆயினும் பின்வரும் திருமறை வசனத்தை ஆதாரமாகவும், கருவாகவும் கொண்டே எழுதியுள்ளார்கள்.
أَلَا إِنَّهُمْ فِي مِرْيَةٍ مِنْ لِقَاءِ رَبِّهِمْ أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيطٌ
“அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் – காபிர்கள் அல்லாஹ்வைச் சந்திப்பதில் சந்தேகமுள்ளவர்களாக உள்ளனர்.
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் – அல்லாஹ் சகல வஸ்த்தையும் சூழ்ந்தவனாக உள்ளான்” (திருமறை 41-54)
இத்திரு வசனத்தின் சுருக்கம்:
“காபிர்”கள் அல்லாஹ்வை தலைக் கண்ணால் காண முடியுமா? என்று சந்தேகமுள்ளவர்களாக இருந்தார்கள் என்று கூறிய அல்லாஹ் அதைத் தொடர்ந்து அல்லாஹ் சகல வஸ்த்தையும் சூழ்ந்தவனாக உள்ளான் என்று கூறியுள்ளான்.
சிந்தனையாளர்களின் கவனத்திற்கு!
சிந்தனையாளர்களே! சற்று சிந்தியுங்கள்! மேற்கண்ட திரு வசனம் ஒரு வசனமாயிருந்தாலும் இரண்டு அடிகளைக் கொண்ட ஒரு வசனம் போல் அமைந்திருப்பது ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல.
أَلَا إِنَّهُمْ فِي مِرْيَةٍ مِنْ لِقَاءِ رَبِّهِمْ
வசனத்தின் ஓர் அடி.
أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيطٌ
வசனத்தின் மறு அடி.
இரண்டும் சேர்ந்தே ஒரு வசனமாயிற்று.
முதலடி ஒரு கேள்வி போலும் இரண்டாம் அடி அதற்கு பதில் போலும் அமைந்திருப்பதும் ஆய்வாளர்களுக்கு மறையாது.
“காபிர்”கள் அல்லாஹ்வை சந்திப்பதில் சந்தேகமுள்ளவர்களாக உள்ளனர் என்ற முதலடிக்கு அவர்கள் சந்தேகப்படத் தேவையில்லை என்று இரண்டாம் அடியில் பதில் சொல்லியிருக்க வேண்டும். இதுவே பொருத்தம். எனினும் அல்லாஹ் அவ்வாறு சொல்லாமல் அல்லாஹ் சகல வஸ்த்தையும் சூழ்ந்தவனாயிருக்கிறான் என்று பதில் சொல்லியுள்ளான். இந்த பதில் எந்த வகையில் முந்தின கேள்விக்கு பொருத்தமானதென்று கவனிப்போம்.
தொடரும்..