தொடர் – 04
ஏகன் அல்லாஹ்வின் முதல் வெளிப்பாடு எங்கள் உயிர் ஏந்தல் நபீ ஆவர்!
ஷாதுலீ நாயகம் அவர்களின் “ஷெய்கு” ஞான குரு அல்குத்புஷ்ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா” எனும் “ஸலவாத்” தொகுப்பில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானக் கருத்துக்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிலதை இங்கு எழுதுகிறேன்.
அந்த “ஸலவாத்”தில் இடம் பெற்றுள்ள பின்வரும் வசனங்களுக்கு கடந்த பதிவுகளில் விளக்கம் சொல்லிவிட்டேன். கூறிய விளக்கத்தை மீண்டும் கூறாமல் வசனத்தை மட்டும் எழுதிவிட்டு அதில் பிந்தின வசனத்திற்கு மட்டும் சிறு விளக்கம் கூறிய பின் ஏனைய வசனங்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை உணர்த்தும் வசனங்களுக்கு விளக்கம் எழுதுகிறேன்.
اللهم صَلِّ عَلَى مَنْ مِنْهُ انْشَقَّتِ الْأَسْرَارُ وَانْفَلَقَتِ الْأَنْوَارُ
இரண்டு அம்சங்களை உள்ளடக்கிய இவ் வசனத்தில் முந்தின வசனத்திற்கு விளக்கம் கூறிவிட்டேன். இரண்டாம் வசனமான وَانْفَلَقَتِ الْأَنْوَارُ “பெருமானார் அவர்களாலேயே ஒளிகள் பிளந்து வந்தன” என்ற வசனத்திற்கு எழுதிய விளக்கத்தில் இன்னும் சில விளக்கம் எஞ்சியுள்ளது. அதை முதலில் எழுதிவிட்டு தொடர்கிறேன்.
قال السيّد أحمد بن عبد الله الغوث رضي الله عنه لمُريده، يا ولدي! لولا نورُ سيّدِنا محمد صلّى الله عليه وسلّم ‘ ما ظَهَرَ سِرٌّ من أسرار الأرض، فلَوْلَا هو ما تَفَجَّرَتْ عَيْنٌ من العيون، ولا جَرَى نهرٌ من الأنهار، وأنّ نورَه صلّى الله عليه وسلّم يا ولدي يَفُوْحُ فى شهر مارس ثلاث مرّاتٍ على سائر الحُبوب فَيَقَعُ لها الأثمارُ ببركةِ رسولِ الله صلّى الله عليه وسلّم، ولو لا نورُه صلّى الله عليه وسلّم ما أَثْمَرَتْ، ويا ولدي! إنّ أقلّ النّاس إيمانا مَن يرى إيمانَه على ذاتِه مِثل الجبل وأعظمَ منه، فأحْرَى غيره، وأنّ الذّات تَكِلُّ أحْيانًا عن حملِ الإيمان، فتريد أن تَرميه فَيفُوح نورُ النّبيّ صلّى الله عليه وسلّم عليها فيكونُ مُعينا لها على حَمل الإيمان فَتَسْتَحِيْله وتستَطيبه،
الإبريز، ص 263، للشّيخ أحمد بن المبارك رحمه الله.
அஸ்ஸெய்யித் அஹ்மத் இப்னு அப்தில்லாஹ் அல் கவ்து றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது சிஷ்யனுக்கு ஆன்மிக விளக்கம் அருளினார்கள்.
(எனது மகனே! நபீ பொருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஒளி இல்லையானால் பூமியிலுள்ள எந்த ஓர் இரகசியமும் வெளியாகியிருக்க மாட்டாது. இன்னும் அவர்களின் ஒளி இல்லையெனில் நீரூற்றுக்களில் ஒன்றும் வெடித்து நீர் வந்திருக்காது. இதேபோல் ஆறுகளில் ஒன்றும் ஓடியிருக்காது.
எனது மகனே! ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் மாதம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஒளி உலகிலுள்ள – பூமியில் நடப்பட்டுள்ள விதைகள் மீது வீசும். அதாவது அந்த ஒளி அந்த விதைகள் மீது தனது ஒளியை பாய்ச்சும். அப்போது பெருமானாரின் அருளால் விதைகள் வளர்ந்து காய் கனியுள்ள மரமாக ஆகும். நபீ பெருமானின் ஒளியில்லை என்றால் அவை காய்க்கமாட்டா. பூக்க மாட்டா. பழங்கள் தரவுமாட்டா.
எனது மகனே! மனிதர்களில் “ஈமான்” நம்பிக்கை மிகவும் குறைந்த மனிதன் யாரெனில் தனது “ஈமான்” நம்பிக்கை தன் மீது ஒரு மலை இருப்பதுபோல் அல்லது அதை விடப் பாரமான ஒன்று இருப்பது போல் காண்பவனாவான்.
மனிதனின் “தாத்” உடல் சில வேளை “ஈமான்” எனும் நம்பிக்கையை சுமக்க இயலாமலும் போய் விடச் சாத்தியம் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் அந்த உடல் ஈமானை – நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் எறிந்து விடும். இந்நிலை மிகவும் பயங்கர நிலையாகும். பயங்கர கட்டமாகும். இந்த இக்கட்டான சூழ் நிலையில் அவனின் “தாத்” உடல் மீது “றஹ்மதுன் லில் ஆலமீன்” உலக மக்களின் அருட் கொடையாம் அண்ணலெம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “நூர்” ஒளி அவனின் உடல் மீது பாயும். அப்போது அவர்களின் அருளால் அவனின் உடல் அதைச் சுமந்து கொள்ளக் கூடிய ஆற்றலைப் பெற்றுவிடும்.
ஆதாரம்: அல் இப்ரீஸ், பக்கம் – 263.
ஆசிரியர்: அஷ்ஷெய்கு அஹ்மத் இப்னுல் முபாறக்
மூலக்கருத்து: அல்குத்பு அப்துல் அஸீஸ் அத்தப்பாங் அவர்கள்.
ஷாதுலீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஞான குரு அல்குத்புஷ் ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் (பஷீஷ்) றஹிமஹுல்லாஹ் அவர்களின் “ஸலவாத்” வசனத்தில் இரண்டாவது அம்சங்களுக்கான விபரம் இத்துடன் நிறைவு பெறுகிறது.
மேற்கண்ட இந்த வரலாற்றுத் தத்துவம் மூலம் ஸர்தாரே ஆலம் ஸெய்யிதுனா முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மகிமை எத்தகையதென்று தெளிவாகிறதல்லவா?
இதைவிட இன்னும் வியக்கத்தக்க விடயம் என்னவெனில் படைப்புக்களில் வெளிப்படையான உயிர் உள்ளவையும், அத்தகைய உயிர் இல்லாத கற் கரடு, புற் பூண்டு போன்றவற்றுக்கு எவையெல்லாம் தேவையோ அவற்றைக் கொடுப்பவர்களும், எந்த அளவு தேவையோ அந்த அளவை அறிந்து கொடுப்பவர்களும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான் என்றால் அது மிகையாகாது.
ஒரு மனிதன் ஒரு நாளில் எத்தனை தரம் சுவாசிக்கிறான் என்பதும், எத்தனை அவுன்ஸ் நீர் அருந்துகிறான் என்பதும், அவன் என்னென்ன எந்த அளவு சாப்பிடுகிறான், குடிக்கிறான் என்பதும் எம்பிரான் றஸூலே கரீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு தெரியுமென்றால் அந்த நபீகட்கரசரின் மகிமையை என்னென்று சொல்வது? ஒரு மனிதனுக்கு பூமியிலுள்ள மண் எண்ணிக்கை அளவு நாவிருந்தாலும் கூட அந்த மா மனிதர் பெருமையை எண்ணி முடிக்கவோ, அளந்து முடிக்கவோ எவராலும் முடியாது. அலியாரின் “ஸிர்று” அல்லாஹ்வுக்கே தெரியும் என்று சொல்வது போல் அஹ்மதின் ஸிர்று அஹதவனுக்கே தெரியும் என்று சொல்லவே வேண்டும்.
எம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.
وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي (رواه البخاري)
“அல்லாஹ் தருகிறான். நான் பங்கு வைத்துக் கொடுப்பவன் மட்டும்தான்” என்று அருளினார்கள் அண்ணலெம்பிரான் அஹ்மதெங்கள் கோமான் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்.
ஒரு கோடீஸ்வரன் தனது ஊரிலுள்ள மக்களுக்கு அன்பளிப்புச் செய்வதற்காக ஆயிரம் கோடி ரூபாய்களைத் தனது மகனிடம் கொடுத்து இதை இவ்வூர் மக்களுக்கு பங்கு வைத்துக் கொடுத்துவிடு என்று சொன்னால் அவன் அதில் யாருக்கு எவ்வளவு கொடுத்தான் என்பது கொடுத்தவனுக்குத் தெரியாமற் போகாது.
உதாரணமாக தாயின் மடியில் பால் சுவைக்கும் பாலகன் ஒரு நாளில் எந்த அளவு பால் குடிக்கிறதென்று பாலூட்டிய தாய்க்குத் தெரியாது போனாலும் தாஹா நபீக்கு தெரியாமற் போகாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ் மொத்தமாக அவர்களிடம் கொடுத்ததை அவர்கள் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொடுப்பவர்களாதலால் அவர்களுக்கு முழு விபரமும் நன்றாகத் தெரியும்.
அல்லாஹ்வுக்கு எதெல்லாம் தெரியுமோ அதெல்லாம் அண்ணலெம்பிரானுக்கு தெரியும். இதுவே ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை. எனினும் தம்மை ஸுன்னீகள் என்று “சீல்” குத்திக் கொண்ட உலமாஉகளிற் பலருக்கு இவ் உண்மை தெரியவில்லை. இதனால் அவர்கள் மேலே நான் சொன்ன கருத்தை “குப்ர்” என்றும், “ஷிர்க்” என்றும் சொல்வார்கள். இது அவர்களின் உச்சக்கட்ட அறியாமையாகும். அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும், நபீகளாருக்கும் எல்லாம் தெரியும் என்பது உண்மைதான். இதுவே எதார்த்தமுமாகும். ஆயினும் இரண்டுக்குமிடையில் நிச்சயமாக வேறுபாடு உண்டு. அந்த வேறுபாட்டை விளங்கினால் “குப்ர்”, “ஷிர்க்” என்பது இல்லாமற் போய்விடும்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வரும் ஹதீதில் கூறியிருப்பதைக் கவனிப்போம்.
فَوَضَعَ كَفَّهُ عَلَى كَتِفَيَّ فَوَجَدْتُ بَرْدَهَا بَيْنَ ثَدْيَيَّ فَعَلِمْتُ عِلْمَ الْأَوَّلِيْنَ وَالْآخِرِيْنَ وَفِيْ رِوَايَةٍ عِلْمَ مَا كَانَ وَمَا سَيَكُوْنُ،
மேற்கண்ட ஹதீதின் தொடரில் இவ்விடத்துக்குத் தேவையான இந்த அம்சத்தை மட்டும் எடுத்து விளக்கம் சொல்கிறேன்.
நபீ பெருமானாரின் عَلِمْتُ عِلْمَ الْأَوَّلِيْنَ وَالْآخِرِيْنَ முன்னோர், பின்னோர் அனைவரின் அறிவையும் நான் அறிந்து கொண்டேன் என்ற வசனம் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முதல் அண்ணலெம்பிரான் வரை தோன்றிய அனைவரையும் குறிக்கும். உள்வாங்கிக் கொள்ளும். இதேபோல் பெருமானார் முதல் உலக முடிவுக்கு முன் தோன்றக் கூடிய அனைவரையும் உள்வாங்கிக் கொள்ளும்.
இதன் சுருக்கம் முன்னோர், பின்னோர் அனைவரின் அறிவும் நபீகள் நாயகம் அவர்களுக்கு தெரியும் என்பதாகும்.
பெருமையில்லாப் பெருமானாரின் இப்பேச்சு அவர்களுக்கு முன் தோன்றிய 123, 999 நபீமார் உள்ளிட்டவர்களையும், அவர்களுக்குப் பின் உலக முடிவு வரை தோன்றவுள்ள வலீமார், ஸூபீகள், மற்றும் மனிதர்களையும் உள்வாங்கும் என்ற கருத்தின் படி உலகில் தோன்றிய அனைத்து அறிஞர்களின் அறிவும் நபீ பெருமான் அவர்கள் போட்ட அறிவுப் பிச்சையாகும்.
இமாம் முஹம்மத் அல்பூஸீரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “கஸீததுல் புர்தா” நபீ புகழ் காப்பியத்தில்
وَكُلُّهُمْ مِنْ رَسُوْلِ اللهِ مُلْتَمِسٌ – غَرْفًا مِنَ الْبَحْرِ أَوْ رَشْفًا مِنَ الدِّيَمِ
நபீமார் அனைவரும் அல்லாஹ்வின் றஸூல் எனும் கடலில் இருந்து ஒரு சிறங்கை அளவு அல்லது மழைத்துளி அளவுதான் அறிவைப் பெற்றுக் கொண்டார்கள் என்று கூறியுள்ளார்கள்.
இப்பேர்பட்ட நபீகள் திலகம் அவர்களையே வஹ்ஹாபிகள் நம்போன்ற சாதாரண மனிதன் என்று நக்கலடிக்கிறார்கள். இவர்களுக்கும், நபீ பெருமானுக்கும் மிகத்தூரம். இவர்களின் தலைவன்தான்
عصاي هذه خير من محمد
எனது கையிலுள்ள கைக்கோல் முஹம்மதைவிடச் சிறந்தது என்று கூறியவர் ஆவார்.
ஷாதுலீ நாயகம் அவர்களின் ஞான குருவின் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தைப் பொதிந்துள்ள “ஸலவாத்”தின் விளக்கம் அடுத்த தொடரில் இடம் பெறும்.
தொடரும்…