தொடர் – 05
ஷாதுலீ நாயமவர்களின் சற்குரு “அல்குத்புஷ் ஷஹீத்” அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா”வில் இடம் பெற்ற
اَللهم صَلِّ عَلَى مَنْ مِنْهُ انْشَقَّتِ الْأَسْرَارُ وَانْفَلَقَتِ الْأَنْوَارُ
என்ற வசனத்துக்கான விளக்கம் இத்துடன் நிறைவு பெற்றது.
இதே “ஸலவாத்”தில் இன்னுமோர் இடத்தில் ஷாதுலீ நாயகத்தின் குரு நாதர் அல்குத்பு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்போம்.
اَللهم إِنَّهُ سِرُّكَ الْجَامِعُ الدَّالُّ عَلَيْكَ، وَحِجَابُكَ الْأَعْظَمُ الْقَائِمُ لَكَ بَيْنَ يَدَيْكَ،
யா அல்லாஹ்! நிச்சயமாக முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உன்னைக் காட்டக் கூடிய, அனைத்தையும் ஒன்று சேர்த்த உனது இரகசியமாகும். இன்னும் உனக்கு முன்னால் நிற்கக் கூடிய உனது பெருந்திரையுமாகும்.
மேற்கண்டவாறு பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை வர்ணித்தவர் ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா ஆகிய நான்கு அடிப்படைகளையும் நன்கறிந்த, “குத்பிய்யத்” எனும் அதி உச்ச ஆன்மிகப் பதவி பெற்ற ஒரு மகான் ஆவார்கள். அத்தகைய ஒருவரின் சொல்லோ, செயலோ நான் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படைகளில் எதற்கும் முரணாயிருக்கமாட்டாது.
இவ்வாறு பெருமானாரை வர்ணித்தவர்கள் ஷாதுலீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஞானகுரு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்தான்.
அவர்கள் பெருமானார் அவர்களை அல்லாஹ்வின் “ஸிர்று” இரகசியம் என்று வர்ணித்துள்ளார்கள். மகான் அவர்கள் என்ன கருத்தை மனதிற் கொண்டு அவ்வாறு வர்ணித்தார்கள் என்பது நூறு வீதமும் எமக்குத் தெரியாது போனாலும் அவர்கள் எதைக் கருத்திற் கொண்டு அவ்வாறு சொல்லியிருப்பார்கள் என்று ஓரளவு யூகிக்க முடியும்.
அந்த வகையில் நான் புரிந்து கொண்ட கருத்து என்னவெனில் பெருமானார் அவர்கள் அல்லாஹ் தானானவர் என்பதே அந்த ரகசியமாகும். இது தவிர சொல்வதற்கு வேறென்ன இரகசியம் உண்டு?
لِأَنَّهُ أَوَّلُ قَابِلٍ لِلتَّجَلِّيْ مِنَ الْحَقِيْقَةِ الْكُلِّيَّةِ
ஏனெனில் ஆரிபீன் – இறைஞானிகள் பெருமானார் பற்றிக் கூறுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். ஞானிகளில் யார் யார் அவ்வாறு வர்ணித்துள்ளார்கள் என்று பெயர் குறித்துச் சொல்வதாயின் அவர்கள் ஒரு சிலர் மட்டுமென்றால் அவர்களின் பெயர்களை குறிப்பிட முடியும். ஞானமகான்களில் நூறு வீதமானோர் அவ்வாறுதான் வர்ணித்துள்ளார்கள் அவர்களின் பெயர்களை எழுதி எவ்வாறு முடிவு காண்பது?
நான் மேலே சொன்ன வசனம் வரலாற்றாசியரும், நபீ புகழ் கூறும் “பர்ஸன்ஜீ” வரலாற்றுப் புகழ் மாலையின் கர்த்தாவுமான இமாம் ஜஃபர் றழியல்லாஹு அன்ஹு அவர்களாவர். வசனத்தின் பொருள் “அனைத்துப் படைப்புக்களையும் உள்வாங்கிய தனது “தாத்” எனும் உள்ளமையின் முதல் “தஜல்லீ” வெளிப்பாடு” என்று பெருமானார் வர்ணிக்கப்படுகின்றார்கள்.
அந்த முதல் வெளிப்பாடுதான் “ஸிர்று” இரகசியம் எனப்படுகின்றது. “அல்லாஹ்” என்ற “இஸ்ம்” பெயரின் “முஸம்மா”வான – அப்பெயருக்குரிய அந்த “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமை தான் “அந்நூறுல் முஹம்மதீ” முஹம்மத் எனும் ஒளிப்பிளம்பாக வெளியாயிற்று.
இவ்வாறு வெளியாகுமுன் “ஆறு நூறாண்டு கோடி காலம்” அந்த மெய்ப் பொருளான “வுஜூத்” உள்ளமை “நூரே முஹம்மதிய்யா”வாக வெளியாக வேண்டுமென்ற “இஷ்கு” ஆசை பொங்கிக் கொண்டிருந்தது. அலை எழும்பிக் கொண்டிருந்தது.
இதே கருத்தை இறைஞானி ஒருவர் பின்வருமாறு பாடுகிறார்கள்.
ஆறு நூற்றாண்டு கோடி காலம் அஹதும், அஹ்மதும் ஆசையாகும்.
குறித்த ஆறு நூறாண்டு கோடி காலம் “ஆஷிக்”கும், “மஃஷூக்”கும் ஆசை வெள்ளத்தில் மிதந்தன.
இதே கருத்தை இன்னுமொரு இறைஞானி
ஆசைக் கடல் பொங்கி விந்தாகி
அந்த ஆஷிக்கு மஃஷூக்கு தானாகி
“லா ஷக்க” உருவாகி வெளியாகி
“லா தன்ஸ திக்ரை” நீ என் பிறவி.
என்று பாடியுள்ளார்கள்.
ஒரு கணவன் மனைவியின் மூத்த குழந்தை ஆணாயினும், பெண்ணாயினும் அதன் மீது ஏனைய குழந்தைகளை விட அன்பு அதிகமாகவே இருக்கும். இது முதல் வெளிப்படாட்டுக்குரிய விஷேட அம்சமாகும்.
இதனால்தான் அல்லாஹ் பெருமானார் அவர்களை “ஹபீபுல்லாஹ்” என்று அழைத்தான். நபீ இப்றாஹீம் அவர்களை “கலீலுல்லாஹ்” என்று அழைத்தான். நபீ மூஸா அவர்களை “கலீமுல்லாஹ்” என்றழைத்தான். நபீ நூஹ் அவர்களை “நஜிய்யுல்லாஹ்” என்றழைத்தான். நபீ ஈஸா அவர்களை “றூஹுல்லாஹ்” என்றழைத்தான். நபீ ஆதம் அவர்களை “ஸபிய்யுல்லாஹ்” என்றழைத்தான். (அலைஹிமுஸ்ஸலாது வஸ்ஸலாம்)
மேற்கண்ட சிறப்பு பட்டங்களில்
ஹபீபுல்லாஹ்
கலீலுல்லாஹ்
கலீமுல்லாஹ்
றூஹுல்லாஹ்
நஜிய்யுல்லாஹ்
ஸபிய்யுல்லாஹ்
“ஹபீபுல்லாஹ்” என்ற பட்டமே மிகச் சிறந்ததாகும். சிறந்த பட்டத்தையே சிறந்த நபீ அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான்.
ஹபீப், கலீல் என்ற இரு சொற்களும் நேசன், தோழன் என்ற பொருளுக்கான சொற்களாயிருந்தாலும், வெளிப்பார்வையில் ஒரே பொருளுக்குரியதாயிருந்தாலும் அகமியத்திலும், தாற்பரியத்திலும் “ஹபீப்” என்ற சொல் “கலீல்” என்ற சொல்லை விடச் சிறந்ததாகும்.
ஒருவன் இன்னொருவனை “யா ஹபீபீ” என்றழைப்பதற்கும், “யா கலீலீ” என்றழைப்பதற்கும் வித்தியாசமுண்டு. அந்த வித்தியாசம் எத்தகையதென்று பின்வரும் விளக்கம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை “ஹபீப்” என்றழைத்தான். இதன் அகமியமென்னவெனில் முஹம்மத் நபீ அவர்கள் சொல்வது போல் – அவர்கள் விரும்புவது போல் அல்லாஹ் செயல்படுவான் என்பதும், அவர்கள் எதையும் கேட்காமலேயே அவர்களுக்கு விருப்பமானதை அவன் அறிந்து கொடுப்பான் என்பதுமாகும். நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை “கலீல்” என்றழைத்தான். இப்பட்டம் “ஹபீப்” என்ற பட்டத்துக்கு நேர்மாறானதாகும். அதாவது அல்லாஹ் விரும்புவது போன்றே அவர்கள் செயல்பட வேண்டும். அவர்கள் கேட்டால் மட்டுமே கொடுப்பான். கேட்காமல் கொடுக்கமாட்டான்.
பெருமானார் அவர்கள் “ஸிர்று” அல்லாஹ்வின் இரகசியம் என்பதற்கான பொருள் இப்போது ஓரளவு தெளிவாகியிருக்குமென்று நான் கருதுகிறேன்.
பெருமானார் அவர்கள் “ஹபீபுல்லாஹ்” என்றழைக்கப்படுவது போல் ظِلُّ اللهِ – “ளில்லுல்லாஹ்” என்றும் அழைக்கப்படுகிறார்கள். பின்வரும் பாடலை கவனிப்போம்.
حَسْبِيْ رَبِّيْ جَلَّ اللهُ
مَا فِى قَلْبِيْ غَيْرُ اللهِ
نُوْرُ مُحَمَّدْ ظِلُّ اللهِ
لَا إلـَـهَ إِلَّا اللهُ
என்ற மேற்கண்ட இந்தப் பாடலின் மூன்றாவது அடியில் نُوْرُ مُحَمَّدْ ظِلُّ اللهِ என்று வந்துள்ளது. இதற்குப் பதிலாக சிலர் نُوْرُ مُحَمَّدْ صَلَّى اللهِ என்றும் பாடுகிறார்கள். இவ்வாறு பாடுவதை விட மேலே சொன்னது போல் نُوْرُ مُحَمَّدْ ظِلُّ اللهِ என்று பாடுவதே கருத்துக்கும், வசன அமைப்புக்கும், இலக்கணத்துக்கும் பொருத்தமானதாகும்.
“நூறு முஹம்மத் ளில்லுல்லாஹ்” என்று பாடுதல்தான் இறைஞான தத்துவத்தைக் காட்டும். அத்தோடு “நூர்” என்ற “முப்ததா” எழுவாய்க்கு “ளில்லு” என்பது “கபர்” பயனிலையாகவும் அமையும்.
“நூறு முஹம்மத் ஸல்லல்லாஹ்” என்று பாடுதல் இலக்கணத்திற்கும், கருத்துக்கும் பொருத்தமற்றது மட்டுமன்றி அதில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்திற்கு இடமில்லாமலும் போய்விடும்.
எனவே, نُوْرُ مُحَمَّدْ ظِلُّ اللهِ என்று பாடுவதே சிறந்ததாகும். இதன் பொருள் சுருக்கமாக நோக்கினால் “முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் நிழல்” என்று வரும்.
இப்பொருள் அல்லாஹ்வுக்கு நிழல் உண்டு என்ற கருத்தை தருவதால் இவ்வாறு சொல்லக் கூடாதென்று துணிக்கு மேல் சொறிபவர்கள், வெளி நீச்சல் செய்பவர்கள் சொல்வர். இதனால்தான் அவர்கள் “ளில்லுல்லாஹ்” என்பதை ஸல்லல்லாஹ் என்று மாற்றிவிட்டார்கள் போலும்.
இவ்வாறு நினைப்பவர்கள் இறைஞானிகளினதும், ஸூபீ மகான்களினதும் கலைச் சொல்லை அறியாதவர்களேயாவர். அவர்களின் கலைச் சொல்லாகிய ظِلُّ الله என்பதற்கு وُجُوْدُ اللهِ அல்லாஹ்வின் “தாத்” அல்லது அவனின் உள்ளமை என்று பொருள் கொள்ள வேண்டுமே தவிர அல்லாஹ்வின் நிழல் என்று பொருள் கொள்வது முற்றிலும் பிழையாகும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
أَلَمْ تَرَ إِلَى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ
என்று கூறியுள்ளான். இதன் பொருள்: உங்களின் “றப்பு” இறைவன் நிழலை எவ்வாறு நீட்டியுள்ளான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? என்பதாகும். இத்திரு வசனத்தில் வந்துள்ள ظِلٌّ என்ற சொல்லுக்கு நிழல் என்ற பொருள் கொண்டும் இத்திரு வசனத்தை நோக்கலாம். இதன்படி இறைவன் எவ்வாறு நிழலை நீட்டியுள்ளான் என்று பொருள் கொள்ள வேண்டும். அல்லாஹ் இதைக் குறிப்பாக பார்க்குமாறு சொன்னதற்கான காரணம் அது அதிசயமான ஒன்றாயிருப்பதேயாகும். ஓர் அடி நீளமுள்ள ஒரு குச்சிக்கு பல அடி நீளமான நிழலிருப்பது அதிசயமன்றி வேறென்ன?
இந்த வசனத்தில் வந்துள்ள “ளில்லுன்” என்ற சொல்லுக்கு “வுஜூத்” உள்ளமை என்று பொருள் கொண்டு அல்லாஹ் தனது “வுஜூத்” உள்ளமையை எவ்வாறு நீட்டியுள்ளான் என்றும் சொல்லலாம்.
أَلَمْ تَرَ إِلَى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ أي بَسَطَ الْوُجُوْدَ
எவ்வாறு தனது “வுஜூத்” உள்ளமையை – “தாத்”தை விரித்துள்ளான் என்பதை பார்க்கவில்லையா? என்றும் பொருள் கொள்ள முடியும்.
இதன் மூலம் “ஸிர்றுன்” என்றால் நிழல் மட்டும்தான் அதன் பொருள் என்று இருட்டறையில் இருந்து விடாமல் வெளியுலகுக்கு வந்து பார்க்கவும் வேண்டும். கிணற்றுத் தவளையாக இருந்து கொண்டு “பத்வா” கொடுக்க முன்வருவது முட்டாள்தனமேயாகும்.
தொடரும்..