தொடர் – 06
ஷாதுலிய்யா “தரீகா”வின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஞானகுரு அல்குத்புஷ் ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் (பஷீஷ்) றழியல்லாஹு அன்ஹு அவர்களின் “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா” எனும் “ஸலவாத்” தொகுப்பில் பல இடங்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானக் கருத்துக்களை கூறியுள்ளார்கள்.
இவர்கள் பற்றிக் குறிப்பாக நான் எழுதக் காரணம் என்னவெனில் இந்த மகானிடமே ஷாதுலீ நாயகம் “பைஅத்” பெற்றார்கள். இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” “கிங்” அரசராக இருந்ததினால்தான் இவர்களிடம் ஞானதீட்சை பெற்ற ஷாதுலீ நாயகமும் “வஹ்ததுல் வுஜூத்” பேசினார்கள். இவர்கள் அதே ஞானம் பேசினதால்தான் இவர்களிடம் “பைஅத்” பெற்ற இவர்களின் “கலீபா” ஸெய்யிதுனா அபுல் அப்பாஸ் அல்முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் பேசினார்கள். இவர்கள் பேசியதினால்தான் இவர்களிடம் “பைஅத்” பெற்ற “கலீபா”வான தாஜுத்தீன் அதாஉல்லாஹ் சிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் பேசினார்கள்.
ஷாதுலிய்யா தரீகாவின் மூன்று தூண்களும், தலைமைத் தூணின் குரு நாதரும் “வஹ்ததுல் வுஜூத்” குடும்பமேயாகும்.
இந்த வழியில் உள்ளவர்தான் கௌரவ மௌலவீ அப்துல் ஹமீத் பஹ்ஜீ அவர்கள். இவர் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசாமல் இருந்தால் இவர் பற்றிச் சிந்திக்கவும் மாட்டோம், எழுதவுமாட்டோம்.
ஆயினுமிவர் வஹ்ஹாபிகளை விடக் கேவலமாக நடந்திருப்பதும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மக்கள் மத்தியில் பிழையாகவும், “குப்ர்” ஆகவும் காட்டுவதற்கு எடுத்த முயற்சியும், நரித்தந்திரமும் எமதுள்ளத்தில் நெருப்புத் தணல்களை அள்ளிக் கொட்டினாற் போலுள்ளது. மனக் கொதிப்பின் வேதனை தாங்க முடியாமல் என்னையறியாமலேயே என் கை பேனாவை எடுத்து எழுதுகிறது.
இலங்கையிலுள்ள “தரீகா” அமைப்பாயினும், உலமா சபையாயினும், வஹ்ஹாபிஸ அமைப்பாயினும் இறைஞானத்திற்கு எதிராக எழும்பும் எந்த ஓர் அமைப்பாயினும் அதோடு போர் தொடுத்தேனும், தலை கொடுத்தேனும் சத்தியத்தை நிலை நாட்ட நாங்கள் பின்வாங்க மாட்டோம். போர் செய்வதாயினும் அல்லாஹ்வின் திருக்குர்ஆன் எனும் ஆயுதம் கொண்டும், நபீ மொழிகள் எனும் ஆயுதம் கொண்டும், அவ்லியாஉகளின் தத்துவங்கள் எனும் ஆயுதம் கொண்டுமே போர் தொடுப்போம். நெருப்பில் உருகிப்போகின்ற, செயற்கை ஆயுதங்களால் நாம் போராடினவர்களுமல்ல, போராடுபவர்களுமல்ல.
ஷாதுலீ நாயகமவர்களின் குரு நாதர் அஷ்ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் மகான் பற்றி ஒரு சில வரிகள்.
له كراماتٌ وخوارق لا تدخل تحت حصرٍ، منها: أنه يوم ولادته سمع سيدي عبدُ القادر الجيلاني رضي الله عنه ونفعنا به آمين، هاتفًا يقول: يا عبد القادر، اِرْفَعْ رِجْلَك عن أهل المغرب، فإنَّ قطبَ المغرب قد وُلد في هذا اليوم، فَتَمَشَّـى الأستاذ عبدُ القادر إلى جبل الأعلام بالمغرب، حيث مولد سيدي عبد السلام، وأتى إلى أبيه سيدي مَشيش، وقال له: أخرِجْ لي ولدك. فخرّجَ له أحدَ أولاده، فقال له: ما هذا أريد. فأخرج له أولادَه كلهم، وقال له: ما بَقِيَ إلّا ولدٌ واحد وُلد في هذا اليوم. فقال له سيدي عبد القادر: عليَّ به؛ فهو الذي أُريده. فأخرجه سيدي مَشيش، فأخذه سيدي عبد القادر، ومسحَ عليه، ودعا له.
சுருக்கம்: அவர்களுக்கு மட்டில்லாத “கறாமாத்” அற்புதங்கள் உண்டு. அவற்றில் ஒன்று பின்வருமாறு.
“மஷீஷ்” என்பது தந்தையின் பெயர். மகனின் பெயர் அப்துஸ்ஸலாம். மகான் அப்துஸ்ஸலாம் பிறந்த அதே நாள் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஓர் அசரீரி கேட்டது. அப்துல் காதிரே! உங்கள் காலை மொறோக்கோ நாட்டிலிருந்து உயர்த்துங்கள். எடுத்து விடுங்கள். ஏனெனில் மொறோக்கோ நாட்டுக்கான “குத்பு” இன்று பிறந்துவிட்டார் என்றது அந்த அசரீரி.
அதே கணம் குத்பு நாயகம் மொறோக்கோ சென்று “பஷீஷ்” அவர்களின் வீட்டைத் தேடிக் கண்டு “பஷீஷ்” அவர்களிடம் உங்கள் பிள்ளையை எனக்கு காட்டுங்கள் என்று கேட்க “பஷீஷ்” அவர்கள் ஆண்குழந்தைகளில் ஒன்றைக் காட்டினார்கள். இந்தக் குழந்தையை நான் கேட்கவில்லை என்றார்கள் குத்பு நாயகம். அதன் பின் அவர் தனது பிள்ளைகள் அனைவரையும் காட்டி இன்று பிறந்த குழந்தை மட்டுமே மிச்சம் என்றார்கள் “பஷீஷ்” அவர்கள். அக்குழந்தைதான் எனக்குத்தேவை. அதைக் கொண்டு வாருங்கள் என்றார்கள் குத்பு நாயகம் அவர்கள். தந்தை “பஷீஷ்” குழந்தையை கொணர்ந்து கொடுத்தார்கள். அக்குழந்தையை எடுத்து அதன் தலை தடவி அதற்காக “துஆ” பிரார்த்தனை செய்தார்கள் குத்பு நாயகம் அவர்கள்.
وكان رضى الله عنه إذا أَهَلَّ هلالُ رمضان يَمْتَنِعُ عَنْ ثَدْيِ أُمِّهِ، فإذا أُذِّنَ المغربُ قَارَبَهُ، وارتَضَعَ منه.
மகானின் அற்புதங்களில் இன்னொன்று, புனித றமழான் தலைப் பிறை வந்தால் அந்த மாதம் முடியும் வரை பகல் வேளையில் தங்களின் தாயிடம் பால் குடிக்கமாட்டார்கள். “மக்ரிப்” உடைய “அதான்” சொல்லப்பட்டால் மட்டும் அருந்துவார்கள். குத்பு நாயகம் அவர்களும் இவ்வாறான அற்புதம் காட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னுமொரு விஷேடம் என்னவெனில்
وَيَكْفِيْكَ في فضله أنَه أستاذُ الأقطاب الثلاثة: سيدي إبراهيم الدَّسوقي، وسيدي أحمد البَدَوِي، وسيدي أبي الحسن الشاذلي رضي الله عنهم،
மகான் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்கள் சாதாரண குத்பு அல்ல. மூன்று குத்புமார்களான அஸ்ஸெய்யித் இப்றாஹீம் அத்தசூகீ, அஸ்ஸெய்யித் அஹ்மதல் பதவீ, அஸ்ஸெய்யித் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களின் “உஸ்தாத்” ஆசிரியராகவும் இருந்தவர்களாவர்.
இத்தகு சிறப்புகளுடைய மகான் 1140ம் ஆண்டு பிறந்து 1227ம் ஆண்டு தங்களின் 87வது வயதில் “வபாத்” ஆனார்கள். இறைஞானிகளில் அநேகர் 80க்கும், 90க்குமிடையிலேயே “வபாத்” ஆகி உள்ளார்கள். இவ் அடியான் குறித்த எல்லை கடந்து குவலயம் பிரிய ஸூபீகளின் கரங்கள் உயரட்டும்.
மகான் அவர்கள் ஒரு நாள் “ஸுப்ஹ்” தொழுகைக்கு “வுழூ” சுத்தம் செய்வதற்காக மலை உச்சியிலிருந்து அதன் அடிவாரத்திற்கு வந்த சமயம் அவர்களின் உணவில் ஓர் எதிரி நஞ்சைக் கலந்து வைத்தான். “வுழூ” உடன் வந்த மகான் “ஸுப்ஹ்” தொழுகையை முடித்துவிட்டு அவ் உணவை உட் கொண்டு சிறிது நேரத்தில் “வபாத்” ஆனார்கள்.
அவர்களைக் கொன்றவன் வேறு யருமில்லை. பல இலட்சம் விசுவாசிகளை – முஃமின்களை “முர்தத்” என்ற ஒரு சொல் மூலம் கொன்று குவித்த முப்திகள் போன்ற ஒரு முஸ்லிம்தான். ஓர் ஆலிமாகவே அவன் இருந்திருப்பான் என்று நான் நினைக்கிறேன். ஆலிமின் மீது பொறாமை ஆலிமுக்கே வரும். “ஆமீ”க்கு வராது.
இத்தகைய மகான்தான் தங்களின் “ஸலவாத்” கோர்வையில் “வஹ்ததுல் வுஜூத்” மணிகளையும் கோர்த்தவராவார்.
தொடர்ந்து அவர்கள் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்கு வருகிறேன்.
اللهم إِنَّهُ سِرُّكَ
“யா அல்லாஹ்! நிச்சயமாக அவர்கள் உனது இரகசியம்” இதற்கான சுருக்கமான விளக்கத்தைக் கூறினேன். இன்னும் சொல்வதாயின் “அவன் அவர்களாக “தஜல்லீ” வெளியானது பரம இரகசியம்தான்”. இரகசியம் என்றால் இருவருக்கிடையில் மட்டும் உள்ளதேயாகும். ஒரு செய்தி இரண்டு நபர்களுக்கிடையில் இருக்கும் வரை மட்டுமே அது இரகசியம். இருவரைக் கடந்தால் அது பகிரங்கம்.
اَلسِّرُّ إِنْ جَاوَزَ الْإِثْنَيْنِ جَهْرٌ
இது ஒரு பொது விதி. ஸிர்றாக இருந்தது இன்று “ஜஹ்ர்” ஆகிவிட்டது.
பெருமானார் அவர்கள் “அல் ஜாமிஉ” اَلْجَامِعُ அனைத்தையும் உள் வாங்கிக் கொண்ட இரகசியமாகும். பஞ்சு திரிக்கப்பட்டு நூலானால் அதுவும் பஞ்சுதான். “அல்ஜாமிஉ” அனைத்தையும் உள்வாங்கியது என்பது அல்லாஹ்வின் அனைத்து தன்மைகளையும் உள்வாங்கிய இரகசியமே பெருமானார் என்றறிய வேண்டும்.
இக்கருத்து اَلْمَظْهَرُ الْأَتَمُّ சம்புருணோதயம் என்றும் சொல்லப்படும். இக்கருத்து
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ
“அந்த றஸூல்மார்களிற் சிலரை வேறு சிலரை விட சிறப்பாக்கி வைத்தோம்”. அல்லாஹ் தனது அஸ்மா – ஸிபாத் எனும் பெயர்கள் மற்றும் தன்மைகள் கொண்டு எம் பெருமானாரில் வெளியானது போல் வேறெந்த நபீயிலும், றஸூலிலும் வெளியாகவில்லை. இதையே “அல் ஜாமிஉ” என்ற சொல் குறிக்கிறது. اَلدَّالُّ عَلَيْكَ முஹம்மத் எனும் அந்த இரகசியம் உன்னையே காட்டுகிறது. அதாவது நபீ பெருமான் அல்லாஹ்வையே காட்டுகிறார்கள். இதனால்தான் مَنْ رَآنِيْ فَقَدْ رَأَى الْحَقَّ என்னைக் கண்டவன் அல்லாஹ்வையே கண்டான் என்று எம்பிரான் ஏந்தல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
இதுவரை اللهم إنّه سرّك الجامع الدال عليك என்ற வசனத்திற்கான விளக்கம் சொன்னேன்.
وَحِجَابُكَ الْأَعْظَمُ الْقَائِمُ لَكَ بَيْنَ يَدَيْكَ
இன்னும் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் திரையாகவும் உள்ளார்கள்.
மகான் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்கள் பெருமானார் அவர்கள் அல்லாஹ்வின் இரகசியம் என்றும், அனைத்தையும் உள்வாங்கியவர்கள் என்றும், அல்லாஹ்வைக் காட்டுபவர்கள் என்றும் புகழந்த பின் அவர்கள் அல்லாஹ்வுக்கிடையில் திரையாகவும் உள்ளார்கள் என்றும் புகழ்ந்துள்ளார்கள். இது முன்னுக்குப் பின் முரணாகத் தோணுகிறது. விளக்கம் அடுத்த தொடரில்….
தொடரும்….