தொடர் – 07
“ஷாதுலிய்யா” தரீகாவின் தாபகர் “அல்குத்புல் அக்பர்” அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் ஞானகுரு அல்குத்புஷ்ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் (பஷீஷ்) றஹிமஹுல்லாஹ் அவர்கள் கோர்வை செய்த “ஸலவாத்” தொகுப்பில் உயிரினும் மேலான உத்தம நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை
اللهم إِنَّهُ سِرُّكَ الْجَامِعُ الدَّالُّ عَلَيْكَ
யா அல்லாஹ்! நிச்சயமாக முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உன்னைக் காட்டக் கூடிய, அனைத்தையும் உள்வாங்கிய உனது “ஸிர்று” இரகசியம் என்று புகழ்ந்துள்ளார்கள்.
இது தொடர்பாக கடந்த தொடர்களில் எழுதியுள்ளேன். வாசிக்கத் தவறியவர்கள் அத்தொடரை தேடியெடுத்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அவர்கள் இவ்வாறு அண்ணலெம்பெருமானை புகழ்ந்துவிட்டு, இந்தப் புகழுக்கு நேர்மாறான செய்தியொன்றைக் கூறுகின்றார்கள். இதுவும் அவர்களின் புகழிலேயே சேர்க்கப்பட வேண்டும். என்ன சொல்கிறார்களென்று கவனியுங்கள்.
وَحِجَابُكَ الْأَعْظَمُ الْقَائِمُ لَكَ بَيْنَ يَدَيْكَ
என்று புகழ்ந்துள்ளார்கள். இது புகழா? இகழா? தொடர்ந்து கவனியுங்கள்.
“முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உனக்கு முன்னால் நிற்கின்ற வலுப்பமுள்ள திரையுமாவார்கள்” என்று கூறியுள்ளார்கள்.
முதலில் الدَّالُّ عَلَيْكَ உன்னைக் காட்டுபவர்கள் என்று பெருமானாரைப் புகழ்ந்து அதே வரியிலேயே அதற்கு மாறான கருத்தை – அதாவது பெருமானார் அவர்கள் உனக்கு முன்னால் நிற்கின்ற வலுப்பமான திரை என்ற கருத்தை கூறியுள்ளார்கள். அந்தப் பெரிய “குத்பு” அர்த்தமில்லாமல் அவ்வாறு சொல்லவில்லை. அவர்கள் உளறவுமில்லை. அவர்கள் எதைச் சொல்கிறார்கள் என்று ஆய்வு செய்ய வேண்டும். எதார்த்தம் எமக்குப் புரியவில்லையானால் ஞானமகான்களை அணுகி விளக்கம் பெற வேண்டும்.
அந்த “குத்பு” அவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் உளறவில்லை. உண்மையையே கூறினார்கள்.
உண்மை என்ன? சற்று ஆய்வு செய்து பார்ப்போமா?
بَيْنَ الْعَبْدِ وَرَبِّهِ سَبْعُوْنَ حِجَابًا، لَوْ كَشَفَهَا لَأَحْرَقَتْ سُبْحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ،
இது “ஸஹீஹ்” ஆன ஹதீது என்பதில் மாற்றமில்லை.
இதன் பொருள்: “அடியான் – மனிதனுக்கும், இறைவனுக்குமிடையில் 70 திரைகள் உள்ளன. அவற்றை அவன் நீக்கிவிட்டானாயின் அவன் எதையெல்லாம் பார்க்கின்றானோ அவையாவும் அவனின் “தாத்” உள்ளமையின் சுடரால் – அதன் கதிர் வீச்சால் – எரிந்து சாம்பலாகிவிடும்” என்பதாம்.
இந்த ஹதீதின் மூலம் மனிதனுக்கும், இறைவனுக்குமிடையில் 70 திரைகள் உள்ளன என்பது உறுதியாகிறது. அத்திரைகள் அவனை – அல்லாஹ்வை மனிதன் கண்டு கொள்ளாமல் மறைக்கின்றன.
இந்த நபீ மொழியின் வெளிப் பொருள் அவனை யாரும் காணாமல் அவன் 70 திரைகளை தன் மீது போட்டுக் கொண்டான் என்பதாகும்.
இவ்வாறு பொருள் கொள்ளுதல் “குப்ர்” மத மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இவ்வாறு பொருள் கொண்டால் அல்லாஹ் مَحْجُوْبْ திரையிடப்பட்டவனாகவும், திரை அவனை மறைத்த வஸ்த்தாயும் ஆகிவிடும். அல்லாஹ்வை திரை மறைத்தால் திரை என்ற படைப்புக்கு படைத்தவனை மறைக்கும் ஆற்றல் உண்டு என்ற கருத்து வந்து விடும். இதை இன்னும் விபரமாகச் சொல்வதாயின் – غَالِبْ – مَغْلُوْبْ எனும் சொற்களையும் பயன்படுத்தி சொல்ல வேண்டும். “ஙாலிப்” என்றால் மிகைத்தது என்று பொருள். “மக்லூப்” என்றால் மிகைக்கப்பட்டது என்று பொருள். மிகைத்தது என்றால் வென்றது என்று பொருள். மிகைக்கப்பட்டது என்றால் தோற்றது என்று பொருள். அல்லாஹ் திரை போட்டுக் கொண்டான் என்று விளங்கினவன் அல்லாஹ் தோற்றுவிட்டான் என்று நம்பினவனாவான். இது “குப்ர்” மத மாற்றமா? இல்லையா? மத மாற்றம்தான்.
எனவே அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமிடையில் 70 திரைகள் இருப்பது உண்மைதான். ஆயினும் அத்திரைகள் கொண்டு திரை போட்டுக் கொண்டவன் மனிதனேயன்றி அல்லாஹ் அன்று என விளங்கிக் கொள்ள வேண்டும்.
திரை என்று சொல்லும் போதே மறைத்தல் என்ற பொருள். ஆள் வரும்போதே நிழல் வருவதுபோல் வந்துவிடும். மறைத்தது திரை. மறைக்கப்பட்டவன் மனிதன்தான். இறைவனல்ல. படைப்பு எனும் திரை படைத்தவனை மறைக்குமா? மறைக்கப்பட்டவன் இறைவனாயிருக்க முடியுமா? எதார்த்தம் புரண்டுவிடும்.
எனவே 70 திரைகளாயினும், 70 ஆயிரம் திரைகளாயினும் “மஹ்ஜூப்” திரை போட்டுக் கொண்டவன் அடியானேயன்றி அல்லாஹ் அல்ல.
திரைகளில் இருவகை உண்டு. ஒன்று ஒளித்தரை. மற்றது இருட் திரை. اَلْحُجُبُ النُّوْرَانِيَّةُ என்றால் ஒளித்திரைகள் என்றும், اَلْحُجُبُ الظُّلْمَانِيَّةُ என்றால் இருட்திரைகள் என்றும் சொல்லப்படும். இரண்டுமே திரைகள்தான். கடும் ஒளி கண்ணைக் கெடுக்கும் என்பர். شِدَّةُ النُّوْرِ ظُلْمَةٌ கடும் ஒளி இருள் என்றும் ஒரு தத்துவம் உண்டு. அல்லாஹ் மட்டுமே உள்ளான். படைப்பு என்பதே இல்லை. அவன் கடும் ஒளியாயிருப்பதினால் அவனைக் காண முடியாதுள்ளது. شِدَّةُ ظُهُوْرِهِ أَخْفَاهُ அவன் கடுமையாக வெளியானதினால் தான் அவன் தெரியாமலிருக்கிறான். கடும் நெருக்கமும் ஒரு வகையில் திரைதான். கண் விழியால் இமையை பார்க்க முடியாதிருப்பது ஏன்? புரிகிறதல்லவா? கடும் நெருக்கமேயன்றி வேறென்ன?
எம் பெருமானார் அவர்களை “அல்ஹிஜாபுல் அஃளம்” பெருந்திரை என்று மகான் அஷ்ஷஹீத் அப்துஸ்ஸலாம் அவர்கள் குறிப்பிட்டிருப்பது அல்லாஹ் தனது திரைகளை நீக்கும் போது அவனின் திரு முகத்தின் ஒளிப்பிளம்பு படைப்புக்களைத் தாக்காமல் இருக்கும் திரையாக இருப்பதையே குறிக்கிறது. இது ஒளித்தரையில் அருட் திரை முஹம்மத் அவர்களாவர். அத்திரையின்றேல் எல்லாமே எரிந்து சாம்பலாகிவிடும். அவர்கள் “றஹ்மதுன் லில் ஆலமீன்” உலக மக்கள் அனைவருக்கும் அருளானவர்கள். அவர்கள் “லா றஹ்மதுன் லில் முஸ்லிமீன பகத்” முஸ்லிம்களுக்கு மட்டும் அருளானவர்கள் அல்ல.
அவர்கள் “ட்றான்ஸ்போமர்” போன்றவர்கள். மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வருகின்ற மொத்த மின்சாரமும் முதலில் “ட்றான்ஸ்போமர்” க்கு வந்து பிரிவது போல் அல்லாஹ்வின் மொத்த சக்தியும் “முஹம்மத்” எனும் “ட்றான்ஸ்போமர்” மின்மாற்றிக்கு முதலில் வந்துதான் பின்னர் அது தேவைக்கேற்றவாறு பிரிகின்றது. மொத்த மின்சாரத்தையும் தாங்குவது “ட்றான்ஸ்போமர்” மின்மாற்றிதான்.
இதனால்தான் அண்ணலெம்பிரான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “அல்மள்ஹறுல் அதம்மு” சம்பூரண “மள்ஹர்” என்று அழைக்கப்பட்டார்கள்.
இந்த விபரங்களை உள்வாங்கியே அல்குத்புஷ்ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் நாயகம் மேற்கண்டவாறு கூறினார்கள் என்பது நான் புரிந்த கருத்தாகும். அல்லாஹ் அறிந்தவன்.
மேலும் அவர்கள்
وَزُجَّ بِيْ فِى بِحَارِ الْأَحَدِيَّةِ
“அஹதிய்யத்” எனும் கடல்களில் என்னை எறிந்துவிடுவாயாக! என்று கூறியுள்ளார்கள். “அஹதிய்யத்” என்பது அல்லாஹ்வின் “தாத்” உள்ளமைக்குரிய நிலையாகும். “அஹதிய்யத்” எனும் “மகாம்” என்று சொல்லப்படும்.
இந்த “மகாம்” பற்றிக் கூறிய இறைஞானி عَالِمُ الْفِضَّةِ வெள்ளி ஆலிம் அஹ்மத் மீரான் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில்
“அஹதிய்யத்” எனும் கடலே
ஆதியுமாச்சு
அதிலெழுந்த அலைகளது
ஆலமுமாச்சு – ஆலமுமாச்சு
அதுவே கோலமுமாச்சு
என்று கூறியுள்ளார்கள்.
இந்தப் பாடலில் “அஹதிய்யத்” என்று அல்லாஹ்வின் “தாத்” அல்லது “வுஜூத்” என்பதைக் குறிப்பிடுகிறார்கள். அதைக் கடல் என்று சொல்கிறார்கள். கடல் என்று ஏன் சொன்னார்கள் என்றால் அல்லாஹ்வின் “தாத்”திற்கும், படைப்புக்கும் உதாரணம் சொல்வதற்காக அதற்குப் பொருத்தமாக அவ்வாறு சொல்லிவிட்டு பின்னால் உதாரணம் சொல்கிறார்கள்.
“அஹதிய்யத்” என்ற “தாத்” அல்லது “வுஜூத்” கடல் என்றும், அந்தக் கடலின் அலைகள் “ஆலம்” படைப்பு என்றும் சொல்கிறார்கள்.
இந்தக் கருத்ததை உள்வாங்கி “அஹதிய்யத்” எனும் கடலே ஆதியும் என்றும், அதிலெழுந்த அலைகளது ஆலமுமாச்சு என்றும் கூறியுள்ளார்கள். அதன்பின் அது ஆலமானது மட்டுமன்றி அதுவே கோலமுமாச்சு என்றும் கூறியுள்ளார்கள். அதாவது பல உருவங்களிலும் தோற்றுகிறது என்று கூறியுள்ளார்கள்.
இவ்வுதாரணம் மூலம் அவர்கள் கூறும் கருத்தென்னவெனில் அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமைதான் அனைத்து சிருட்டிகளாகவும் வெளியாகியுள்ளன என்பதாகும்.
கடலுக்கு அலை வேறில்லாமல் இருப்பது போல் – அலையானது கடல் தானானதாயிருப்பது போல் அல்லாஹ்வுக்குப் படைப்புகள் வேறானவையாக இல்லை என்றும், அவை அவன் தானானவையாகவே இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்கள்.
கடல் அலையாக தோற்றுவது அதன் “தஜல்லீ” வெளிப்பாடாயிருப்பது போல் அல்லாஹ்வின் “வுஜூத்” படைப்பாக தோற்றுவது அதன் “தஜல்லீ”யேயாகும்.
“தஜல்லீ” என்றால் வெளியாதல் என்று பொருள். இதேபோல் “ளுஹூர்” என்றாலும் வெளியாதல் என்றே பொருள் வரும்.
அல்லாஹ் வெளியானான் என்றால் எங்கோ ஒரு பெட்டிக்குள்ளிருந்து வெளியானான் என்று நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது. அவன் பெட்டிக்குள்ளிருந்து வெளியாகவுமில்லை, சட்டிக்குள்ளிருந்து வெளியாகவுமில்லை. ஆயினும் பொது மக்கள் மட்டுமன்றி அரை குறை ஆலிம்கள் கூட இவ்வாறுதான் நினைக்கிறார்கள். இது தவறு.
நாம் எவ்வாறு விளங்க வேண்டும் என்றால் அல்லாஹ்வின் “வுஜூத்” அல்லது “தாத்” அழியாமலும், மாறுபடாமலும், விகாரப்படாமலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமலும், அது எவ்வாறிருந்ததோ அவ்வாறேயிருக்க சர்வ பிரபஞ்சங்களாகவும் வெளியாகித் தோற்றுகின்றதென்று விளங்கிக் கொள்வது மட்டுமன்றி நம்பிக் கொள்ளவும் வேண்டும்.
இத்தத்துவத்தை பல உதாரணங்கள் மூலம் விளக்கி வைக்கலாம். இன்ஷா அல்லாஹ்!
தொடரும்…