தொடர் – 08
அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஞானகுரு அல் குத்புஷ் ஷஹீத் அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் – “பஷீஷ்” – றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொகுத்த “ஸலவாத்” தொகுப்பில் கூறியுள்ள ஞானக் கருத்தக்களில் சில கருத்துக்களை தொடராக எழுதி வருகிறேன். இதுவரை
اللهم صَلِّ عَلَى مَنْ مِنْهُ انْشَقَّتِ الْأَسْرَارُ وَانْفَلَقَتِ الْأَنْوَارُ
என்ற வசனங்களுக்குத் தெளிவாக விளக்கம் எழுதிவிட்டேன். பின்னால் வருகின்ற வசனங்களுக்கும் ஓரளவு எழுதினேன். எனினும் இன்னும் சற்று விரிவாக இத் தொடரில் எழுதுகிறேன்.
اللهم إِنَّهُ سِرُّكَ الْجَامِعُ الدَّالُّ عَلَيْكَ، وَحِجَابُكَ الْأَعْظَمُ الْقَائِمُ لَكَ بَيْنَ يَدَيْكَ
(யா அல்லாஹ்! நிச்சயமாக நபீ மணி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்ட, உன்னைக் காட்டக் கூடிய, உனது இரகசியமாக உள்ளார்கள். இன்னும் உனக்கு முன் நிற்கும் படியான உனது வலுப்பமான திரையாகவும் உள்ளார்கள்)
இவ்விரு கருத்துக்களும் ஞானத்தின் உச்சக்கட்ட, ஆழமான கருத்துக்களாகும்.
முன்னால் கூறிய கருத்துக்குப் பின்னால் கூறிய கருத்து முரண்படுகிறது. மேற்கண்ட இரு கருத்துக்களும் ஒன்றுக்கு மற்றது முரண்படுவதுபோல் மங்கிய புத்தியுள்ளவர்களுக்குத் தோணும். இவர்கள் தூர நோக்குடன் சிந்திக்காமலும், ஆழமாக ஆய்வு செய்யாமலும் அவசரப்பட்டு குத்பு அப்துஸ்ஸலாம் அவர்களைத் தவறாக எடை போட்டுவிடக் கூடும்.
ஆகையால் இவ்விரு வசனங்களில் ஒன்று மற்றதற்கு முரணானதல்ல என்று விளக்கம் கூறி மங்கிய புத்தியுடையவர்களை பாவத்தலிருந்து பாதுகாப்பது நான் ஓர் ஆலிம் என்ற வகையில் கடமைதான். என்மீது 25 வீதம் கடமையென்றால் ஷாதுலிய்யா தரீகாவின் கலீபாஉகள் மீதும், அதைவிட மேலாக “கலீபதுல் குலபாஇ” அவர்கள் மீதும் 75 வீதம் கடமையாகும். நான் சுமார் 58ம் ஆண்டளவில் அஷ்ஷெய்கு டொக்டர் பாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் “பைஅத்” பெற்ற அவர்களின் “முரீது” என்ற வகையிலும், “ஷாதுலிய்யா தரீகா”விற்கோ, ஷெய்குமார்களுக்கோ எந்த ஒரு கெட்ட பெயரும் வரக் கூடாதென்பதில் நான் மிகவும் அக்கறையுள்ளவனாக உள்ளேன். ஷாதுலிய்யா தரீகா போன்றதே வலீமாராலும், “குத்பு”மார்களாலும் தாபிக்கப்பட்ட ஏனைய தரீகாக்களும், அவற்றின் “ஷெய்கு”மார்களுமாவர்.
“தரீகா” வழி நடப்பவர்கள் எவராயினும் அவர் தனது “தரீகா”வின் ஒழுக்கம், விதிமுறை பேணி நடப்பதுடன் ஏனைய தரீகாக்களில் எதையும் கீழ்த்தரமாக நினைக்காமல் கண்ணியம் கொடுத்து நடக்க வேண்டும்.
அல்குத்புஷ் ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் – “பஷீஷ்” அவர்களின் “ஸலவாத்” வரிகளுக்கான பொருளும், விளக்கமும்.
اللهم إِنَّهُ سِرُّكَ الْجَامِعُ الدَّالُّ عَلَيْكَ
“யா அல்லாஹ்! நிச்சயமாக நபீகள் நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உனது “ஸிர்று” இரகசியமாவார்கள். அவர்கள் அனைத்து விஷேடங்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டவர்களும், உன்னைக் காட்டித் தருபவர்களுமாவார்கள்”
மேற்கண்ட இவ்வசனத்தில் பெருமானார் அவர்கள் அல்லாஹ்வின் இரகசியம் என்று கூறியுள்ளார்கள்.
“ஸிர்று” என்றால் இரகசியம் என்று பொருள். அது என்ன இரகசியமெனில் அவனேதான் “அஸ்ஸூறதுல் முஹம்மதிய்யா” முஹம்மத் என்ற “ஸூறத்” உருவத்தில் வெளியாகி இருப்பதாகும். இதை கருத்திற் கொண்டே முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் இரகசியம் என்று குறிப்பிடுகிறார்கள்.
الإبن سرّ الأب
மகன் தந்தையின் இரகசியம் என்று ஒரு தத்துவம் உண்டு. இத் தத்துவமும் இதையே குறிக்கிறது.
அல்லாஹ்வின் “தாத்” அல்லது “வுஜூத்” என்ற உள்ளமையில் அவன் படைத்த, படைத்துக் கொண்டிருக்கின்ற, இதன் பிறகு படைக்கவுள்ள அனைத்தும் மறை பொருட்களாக இருந்தன. எதுபோல் இருந்தன என்றால் ஒரு மை போத்தலில் இருக்கின்ற மையில் இலட்சக்கணக்கான எழுத்துக்கள் மறைந்திருந்தது போல் இருந்தன. மையை விட்டும் எழுத்துக்கள் பிரியாமல் அவை அது தானானவையாக இருந்தன. “மை” என்பதில் எழுத்துக்கள் மறைந்து அது தானானவையாக அவை இருந்தது போல் அல்லாஹ்வின் “தாத்” அல்லது உள்ளமையில் சிருட்டிகள் மறைந்து அது தானானவையாக அவை இருந்தன.
தனது உள்ளமை எனும் மையில் எழுத்துக்கள் மறைந்து மை தானாக இருந்தது போன்று படைப்புக்களும் அவனின் “தாத்”தில் மறைந்து அந்த “தாத்” தானானவையாக இருந்தன.
தனது “தாத்” உள்ளமையில் மறைந்திருந்த கோடிக் கணக்கான சிருட்டிகளில் தனக்கு மிகவும் விருப்பமான ஒன்றையே முதலாவதாக வெளிப்படுத்தினான். அதுவே பெருமானாரின் “அந்நூறுல் முஹம்மதிய்யு” எனும் ஒளியாகும். அதன் பின் தனது உள்ளமையிலிருந்தே இதுகாலவரை வெளியான படைப்புகளைப் படைத்தான். படைத்தான் என்றால் அவனே அவையாக “தஜல்லீ” ஆனான். வெளியானான்.
அல்லாஹ் ஒரு படைப்பாக வெளியாவதால் அவனின் “தாத்” அழிந்து போவதுமில்லை. அது மாறுபட்டுப் போவதுமில்லை. அது விகாரப்பட்டுப் போவதுமில்லை. هو الآن كما كان – அவன் படைப்புக்களைப் படைக்குமுன் எவ்வாறு பரிசுத்த நிலையில் இருந்தானோ அவ்வாறே படைப்புகளைப் படைத்த பின்னும் பரிசுத்த நிலையிலேயே உள்ளான். இவ்வாறு நம்புவதுதான் “ஈமான்” விசுவாசமாகும்.
அல்லாஹ்தான் எல்லாமாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான் என்ற தத்துவத்தை உரிய முறைப்படி விளங்கிக் கொள்ளாதவர்கள் அவன் ஒவ்வொரு படைப்பாக வெளியாகி வெளியாகி இறுதியில் அவன் அழிந்து விடுகிறான், இல்லாமற் போகிறான் என்று நினைக்கிறார்கள். இவ்வாறு நினைப்போர் உரிய முறைப்படி ஸூபிஸ ஞானம் படிக்காதவர்களேயாவர். ஸூபிஸ ஞானம் உரிய முறைப்படி அறிந்து கொள்ளாதவர்களுக்கு அவர்களின் நெஞ்சை பல கேள்விகள் குத்திக் கொண்டும், தொல்லைப் படுத்திக் கொண்டுமே இருக்கும்.
இதற்குப் பிரதான காரணம் “வஹ்ததுல் வுஜூத்” எனும் “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை அவர்களால் நம்ப முடியாமலிருப்பதேயாகும். இதற்குக் காரணம் அவர்கள் சிறு வயதிலிருந்து இதற்கு மாறான கருத்தை ஜீரணித்து வளர்ந்து வந்ததென்றே கூற வேண்டும்.
இதே கருத்தை உள்வாங்கிய நிலையில் புலவர் அப்துல் காதிர் அவர்கள், “மாதா பிதாவும் வருந்தி வருத்தி வைத்த போதனையைப் பார்க்கில் பிழைகாண் நிராமயமே!” என்று பாடியுள்ளார்கள்.
குர்ஆன் பாடசாலைகளில் சிறு வயதிலிருந்தே திருக்கலிமாவின் பொருள் இதுதான் என்று சிறுவர்களின் நெஞ்சில் பதிந்த பொருளை – வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்ற கருத்தை – மாற்றுவது கடினம்தான். ஆயினும் சத்தியம் எதுவோ அதை அறிந்து அதன் வழி நடக்க வேண்டும், அதை ஏற்றுக் கொள்ள வெண்டும் என்ற துணிவோடு முயற்சிப்பவர்களுக்கு அல்லாஹ் அதைக் கற்றுக் கொடுப்பான். முயற்சியுடையோர் இகழச்சியடையார். همة الرجال تهدم الجبال
“அல்கலிமதுத் தையிபா” الكلمة الطيّبة மணக்கும் கலிமா என்றழைக்கப்படும் திருக்கலிமாவின் பொருளைப் புரட்டி அதை “நாறும் கலிமா” الكلمة الخبيثة வாக மாற்றி அந்த நாற்றத்தை இதுகாலவரை நுகர்ந்து நுகர்ந்து பல்லாண்டுகள் பழகி வந்த ஒருவனால் அதை எளிதில் மறக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது. உறங்கும் வேளையிலும் அந்த நாற்றம் இருந்தால்தான் அவனுக்கு தூக்கமும் வரும்.
மீன் வியாபாரம் செய்கின்ற சில பெண்கள் வியாபாரத்தை முடித்துவிட்டு வெறும் மீன் கூடையுடன் வீடு திரும்பும் வழியில் பெரு மழை பெய்யத் தொடங்கியது. நனையாமல் நின்று கொள்வதற்காக பூட்டப்பட்டிருந்த ஒரு பூக்கடையின் முகப்பின் கீழ் நின்றிருந்தார்கள். அவர்கள் மீது கருணை கொண்ட கடைக்காரன் கதவைத் திறந்து உள்ளே வந்து அமருமாறு பணித்தான். கூடைகளையும் எடுத்துக் கொண்டு அந்தப் பெண்கள் கடைக்குள் சென்றனர். மழை தொடராகப் பெய்து கொண்டிருந்ததால் பெண்கள் அக்கடையிலேயே அன்றிரவை கழிக்க வேண்டியதாயிற்று. அவர்களால் உறங்க முடியாமற் போயிற்று. உறங்க விரும்பவில்லை. காரணம் அது பூக்கடை. நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. அவர்களோ மீன் – பிலால் நாற்றத்தை நுகர்ந்து நுகர்ந்து உறங்கிப் பழகியவர்களாவர். இதனால் தொட்டில் பழக்கம் சுடு காடுவரை என்பது போல் வழமையான நாற்றமின்றி அவர்களுக்கு தூக்கம் வராமற் போனதால் காய்ந்து வரண்டு போயிருந்த மீன் கூடைகளில் தண்ணீர் தெளித்து பிலால் நாற்றத்தை ஏற்படுத்திய பின் அந்த நாற்றத்தை நுகர்ந்தவர்களாக நிம்மதியாக உறங்கினார்கள்.
இவ்வாறுதான் திருக்கலிமாவின் பொருளில் புரட்டல் செய்தவர்களின் நிலையுமாகும். இவர்கள் கலிமாவுக்குரிய புரட்டல் பொருளை – நாற்றப் பொருளை நுகர்ந்து நுகர்ந்து அதிலேயே பயிற்றப்பட்டு போனார்கள். இவர்களுக்கு நல்லெண்ணம் இருந்தாலேயன்றி இவர்களைத் திருத்தவும் முடியாது. நாய் வாலை நிமிர்த்தவும் முடியாது.
ذَنَبُ الْكَلْبِ لَا يَسْتَقِيْمُ وَإِنِ اسْتُقِيْمَ
அல்குத்புஷ் ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்ட, அல்லாஹ்வைக் காட்டக் கூடிய இரகசியமாக உள்ளார்கள் என்று புகழ்ந்த அதே தொடரில் وَحِجَابُكَ الْأَعْظَمُ الْقَائِمُ لَكَ بَيْنَ يَدَيْكَ “யா அல்லாஹ்! அவர்கள் உனக்கு முன்னால் நிற்கும் படியான வலுப்பமுள்ள திரையுமாவார்கள்” என்று புகழ்ந்துள்ளார்கள்.
அடியான் அல்லாஹ்வைக் காண முடியாமல் தடுக்கும் திரை பெருமானார் அவர்களென்றால் இது புகழா? இகழா? இது வெளிப்பார்வையில் இகழ் போல் தோற்றினாலும் எதார்த்தத்தில் இது புகழேதான்.
முஹம்மத் எனும் திரை இல்லையானால், அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமிடையிலுள்ள 70 திரைகளும் நீக்கப்படும் போது இறைவனின் ஒளிப்பிளம்பால் படைப்பு எரிந்து சாம்பலாகிவிடாமல் பாதுகாக்கும் திரைதான் முஹம்மத் எனும் திரை என்று பொருள் கொண்டால் இது பெருமானாரின் புகழேயன்றி இகழில்லை என்பது தெளிவாகும். பெருமானாரவர்கள் திரை என்றால் அது இறைவனை அடியான் காணாமல் தடுக்கும் திரையல்ல. அவனின் பேரொளியால் படைப்பு தாக்கப்படாமல் தடுக்கும் திரைதான் முஹம்மத் எனும் திரை என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
தொடரும்…