Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அத்துர்ருல் அஃலா - உயரிய முத்துக்கள்

அத்துர்ருல் அஃலா – உயரிய முத்துக்கள்

மெளலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA (Hons)
ஜனாப். MI.ஜெம்ஸீத் (CompTIA A+)

ஆகியோர் இணைந்து எழுதிய,

மிக விரைவில் இணையத்தளத்தில் வெளிவரவுள்ள

அத்துர்ருல் அஃலா – உயரிய முத்துக்கள்

(கலிமதுத்தையிபாவின் மெய்ஞானக் கருத்துக்கள்) எனும் நூலில் இருந்து…

அல்லாஹ்வுக்கு சிருஷ்டி உள்ளமையில் வேறானது எனும் துவிதக்கொள்கையுடையோர் முன்வைக்கும் வாதங்களை நிவர்த்திசெய்தல்.
கலிமாவின் அடிப்படை தத்துவமான அல்லாஹ்வுக்கு வேறான எந்த இலாஹுமேயில்லை-எதுவுமேயில்லை என்பதை போதுமான அளவு இந்நூலில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இருப்பினும் ‘ஙெய்ரிய்யத் இஃதிபாரி’ எனும் கவனிப்புகளின் அடிப்டையில் அல்லாஹ் – சிருஷ்டி என்ற சொற்களைக்கொண்டு அருளப்பட்டுள்ள திருவசனங்களைக்காண்பித்து வுஜூதிலும் தாத்திலும் அல்லாஹ்வுக்கு சிருஷ்டி வேறானது என்று ஒரு பிரிவினரும், வுஜூதில் அல்லாஹ்வுக்கு சிருஷ்டி வேறானதல்ல ஆனால் தாத்தில் அல்லாஹ்வுக்கு சிருஷ்டி வேறானது என்று மற்றொரு பிரிவினரும் தம் துவிதக்கொள்கையை நிறுவ முனைகின்றனர்.
அதற்கான தெளிவை இப்பகுதி வழங்குகிறது.

இஸ்லாத்தின் மூலாதாரங்களான திருமறையிலிருந்தும் நபிமொழிகளிலிருந்தும் எந்தவொன்றும் கலிமதுத் தவ்ஹீதாஹிய ‘லா இலாஹ இல்லல்லாஹு’வுடைய பொருளுக்கு முரண்படாமல் நேர்பாடாய் ஒத்திருக்கும்.
ஆயினும் கலிமதுத் தவ்ஹீதுடன் எந்தெந்த திருவசனங்களும் ஹதீதுகளும் முரண்பாடானது போன்று வஹ்ம் எனும் பேதபுத்திக்கு தோற்றுகிறதோ அவற்றை, தஃவீல் எனும் நேரான வலிந்துரைகள் கொண்டு அவற்றின் மூலத்துடன் பொருந்தும்படி விளங்கிக்கொள்ளவேண்டும்.

‘லா இலாஹ இல்லல்லாஹு’வின் பொருள் அல்லாஹ்வுக்கு வேறான எந்த இலாஹும் இல்லை என்றிருக்க,
திருக்குர்ஆன் வசனங்களில் சில அல்லாஹ்வுக்கு இலாஹு வேறானது என்பது போன்ற வசன நடையில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்று பார்ப்போம்.

‎ {قُلْ أَفَغَيْرَ اللَّهِ تَأْمُرُونِّي أَعْبُدُ أَيُّهَا الْجَاهِلُونَ [الزمر: 64
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: “மூடர்களே! அல்லாஹ்வுக்கு வேறாயிருப்பவற்றையா வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகின்றீர்கள்?”
(அல்குர்ஆன்: 39:64)

‎ { قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبًّا [الأنعام: 164
அல்லாஹ்வுக்கு வேறாயிருப்பதையா எனக்கு இறைவனாகத் தேடிக்கொள்வேன். (அல்குர்ஆன்: 6:164)

 

‎ {قُلْ أَغَيْرَ اللَّهِ أَتَّخِذُ وَلِيًّا [الأنعام: 14
அல்லாஹ்வுக்கு வேறாயிருப்பதையா எனக்கு பாதுகாவலனாகத் தேடிக்கொள்வேன்? (அல்குர்ஆன்: 6:14)


{قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِضِيَاءٍ أَفَلَا تَسْمَعُونَ} [القصص: 71]

(நபியே!) நீர் கூறுவீராக: “கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வுக்கு வேறாயிருக்கின்ற நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? (அல்குர்ஆன்: 28:71)


{قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِلَيْلٍ تَسْكُنُونَ فِيهِ أَفَلَا تُبْصِرُونَ} [القصص: 72]

“கியாம நாள்வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வுக்கு வேறாயிருக்கின்ற நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா?” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 28:72)

{ قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَخَذَ اللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَارَكُمْ وَخَتَمَ عَلَى قُلُوبِكُمْ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِهِ انْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ} [الأنعام: 46]
“அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் – அதை உங்களுக்கு அல்லாஹ்வுக்கு வேறாயிருக்கின்ற எந்த நாயன் கொடுப்பான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக; (இவ்வாறு இருந்தும்) பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர். ! (அல்குர்ஆன்: 06:46)

{يَا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللَّهِ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ} [فاطر: 3]
மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வுக்கு வேறாயிருக்கின்ற படைப்பாளன் இருக்கின்றானா? அவனுக்கு வேறான நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். (அல்குர்ஆன்: 35:03)

இத்திருவசனங்கள் அல்லாஹ்வுக்கு வேறானவை இருக்கின்றன என்ற கருத்தை வெளிரங்கத்தில் தருகின்றன. ஆனால் இந்த திருவசனங்களை மூலப்பிரமாணமான (அடிப்படை ஆதாரமான) கலிமதுத்தவ்ஹீதின் பொருளுக்கு பொருந்தும்படி தஃவீல் – வலிந்துரை கொண்டு நாம் விளங்கவேண்டும்.


அதாவது,
 அல்லாஹ்வுக்கு வேறான(வை என்று நீங்கள் நினைக்கின்ற)வற்றையா வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகின்றீர்கள்.
 “(நீங்கள் அல்லாஹ்வுக்கு வேறாக நினைக்கின்ற) விக்கிரகங்களையா நான் என் இறைவனாகவும் பாதுகாவலனாகவும் தேடி எடுத்துக்கொள்வேன்?”

 உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வுக்கு வேறான(வன் என்று நீங்கள் நினைக்கின்ற) நாயன் உண்டா
 உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வுக்கு வேறான(வன் என்று நீங்கள் நினைக்கின்ற) நாயன் உண்டா ?

 அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் – அதை உங்களுக்கு அல்லாஹ்வுக்கு வேறான(வன் என்று நீங்கள் நினைக்கின்ற) எந்த நாயன் கொடுப்பான்?
 வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வுக்கு வேறான(வன் என்று நீங்கள் நினைக்கின்ற) படைப்பாளன் இருக்கின்றானா? அவனுக்கு வேறான நாயன் இல்லை.

என்று வலிந்துரையுடன் விளங்கவேண்டும்.
இன்னும் இதுபோன்றே குர்ஆனில் பல இடங்களில் மின் தூனீ (எனக்கு வேறான), மின் தூனில்லாஹி (அல்லாஹ்வுக்கு வேறான) , மின் தூனிஹீ (அவனுக்கு வேறான) ஆகிய சொற்களையும் கலிமதுத்தையிபாவின் பொருளுக்கிணங்க தஃவீல் செய்து விளங்கவேண்டும்.
இல்லாவிட்டால் அதாவது மேற்குறிப்பிட்ட திருவசனங்களுக்கு தஃவீல்- வலிந்துரை கொண்டு விளங்காவிட்டால் இந்த ‘வேறு’ என்னும் வெளிப்படையான அர்த்தமும் தவ்ஹீதுக்கலிமாவின் வெளிப்படையான அர்த்தமும் ஒன்றுக்கொன்று முரண்படும்.
ஆனால் கலிமா வசனம் ஓர் முஹ்கம். அதாவது தஃவீல்கள் கொண்டு பொருள்கொள்ளமுடியாத வெளிப்படையான பொருளின்படியே எடுத்து நடக்கவேண்டிய மூலப்பிரமாணம்.
ஆகவே அதன்கருத்துக்கு வெளிப்படையாக முரணானது போன்று தென்படுகின்ற ஏனைய வசனங்களை தஃவீல்கள் மூலம் விளங்க வேண்டும்.
ஏனெனில் கலிமதுத் தவ்ஹீதானது அல்லாஹ்வுக்கு வேறானதாக எந்த இலாஹும் இல்லை (ஹக்குக்கு வேறானதாக ஹல்க் இல்லை) என்ற வெளிப்படையான பொருளை தருகின்றமை நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.

நாம் மேலே குறிப்பிட்டது போன்ற சில திருக்குர்ஆன் வசனங்கள், எமது வஹ்ம்- பேதபுத்திக்கு ‘வேறு’ என்ற கருத்தை ஏற்படுத்தினாலும் அந்த வசனங்கள் எவையும் ‘ஹக்குக்கு வேறானதாக ஹல்குகள் உண்டு’ என்ற வசன நடையில் கூறப்பட்ட வசனங்களாக இல்லை.
‘ஹக்குக்கு வேறானதாக ஹல்குகள்) உண்டு’ என்ற வேற்றுமை கருத்தை நேரடியாக வலியுறுத்துவதாயின் கீழ்வரும் விதங்களையொத்த திருவசனங்கள் வந்திருக்கவேண்டும்.

الالهة غير الله
(இலாஹுகள் அல்லாஹ்வுக்கு வேறானவைகள்)
السماء ليس بالله
(இந்த வானம் அல்லாஹ் தானானது அல்ல)
العالم غيرالله
(சர்வ உலகமும் அல்லாஹ்வுக்கு வேறானது)
غيرك ليس بـإله
(நீ அல்லாதது இலாஹு அல்ல)

மேற்குறிப்பிடப்பட்டது போன்று ‘வேறு’ என்ற பொருளை நேர் நடையில் அதாவது வெளிப்படையாக கருத்தை அறிவிக்கக்கூடிய விதத்தில் திருவசனங்கள் வந்திருக்கவேண்டும்.
ஆயினும் இப்படியான இதையொத்த எந்த வசனங்களும் திருக்குர்ஆனிலும் ஹதீதிலும் அறவே வரவில்லை.

வுஜூத் (தாத்) எனும் உள்ளமையில் ஹக்கும் ஹல்கும் வெவ்வேறானவை (ஙெய்ரிய்யத்) என்பவர்கள் கீழ்வரும் திருவசனத்தை மேற்கோள்காட்டுவர்:

‎ اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌
அல்லாஹ்வானவன் எல்லா பொருள்களையும் சிருஷ்டிப்பவன்.
(அல்குர்ஆன்: 39:62)

இத்திருவசனத்தின் மூலம் விளங்கப்படுகின்ற வேற்றுமையானது அதாவது தச்சனும் கதிரையும் (அல்லது குயவனும் குடமும்) போன்று வெவ்வேறானவை என்ற யுக்திப்படி (அக்லிய்யத்படி) ஒவ்வொரு சிருஷ்டிப்பொருளும் வுஜூதில் தன் சிருஷ்டி கர்த்தாவுக்கு வேறானது என்று விளக்கமளிக்கமளிக்கப்படுகின்றது. பின்வரும் நியாயங்களால் இந்த விளக்கம் தவறென்பதை காணலாம்.

முதலாவதாக, மேற்சொன்ன தச்சனும் கதிரையும் என்ற யுக்தியானது எவ்வாறு அல்லாஹ்வுடைய வுஜூதுக்கும் சிருஷ்டிகளின் வுஜூதுக்கும் இடையே வேறு பிரித்தலைக்காட்டுகிறதோ அவ்வாறே அவ்விரண்டுக்கும் இடையே نوع வகைப்படுத்தலின் (Category) அடிப்படையில் ஒத்திருத்தலையும் (Similarity) காட்டுகின்றது.
எவ்வாறெனில், தச்சனும் கதிரையும் என்ற உவமானத்தில் அவை வுஜூதில் வேறு பிரிந்தும், ஒரே ஜாதி (நெளஉ) என்ற அடிப்படையில் அதாவது சடம் அல்லது கண்டப்பொருள் என்கின்ற வகையில் ஒன்றையொன்று ஒத்தும் காணப்படுகின்றது.
சிலர், சிருஷ்டியும் சிருஷ்டிகர்த்தாவும் வெவ்வேறாக இருக்கின்றன அவை ஒன்றையொன்று ஒத்திருக்கவில்லை எனக்கூறி அதற்கு ஆதாரமாக ‘லைஸக மித்லிஹீ ஷைஉன்’ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ (அவனை ஒத்த எதுவும் இல்லை) என்ற ஆதாரத்தைக்காட்டுவர்.
அதற்கு நாம், لا إلٰه الا الله (அல்லாஹ்வுக்கு வேறான எதுவுமேயில்லை) என்ற கலிமாவையும் அதற்கு சார்பான திருவசனங்களையும் لا إلٰه غيرك (உனக்கு வேறான எந்த இலாஹும் இல்லை), لا شريك له (அவனுடன் எந்தவிதமான கூட்டும் இல்லை) என்ற மிகத்தெளிவான ஹதீதுகளையும் ஆதாரமாகக்காட்டுவோம்.

சிருஷ்டி கர்த்தாவும் சிருஷ்டியும் வுஜூதில் வெவ்வேறு என்பதற்கு தச்சனும் கதிரையும் என்பதை உவமானமாக்குவது பொருத்தமற்றதாகும்.
ஏனெனில், தச்சனும் அவன் படைத்த கதிரையும் வெவ்வேறாக பிரிந்திருப்பதுபோன்று அவையிரண்டும் கண்டப்பொருள் என்பதில் ஒன்றையொன்று ஒத்தும் (கூட்டாக) இருக்கின்றன.
ஆயினும் மேற்படி உவமானம் போன்று சிருஷ்டி கர்த்தாவும் சிருஷ்டியும் வுஜூதில் வேறு பிரிந்தும் கண்டப்பொருள் என்ற ரீதியில் ஒத்ததாகவும் இல்லை.

‘லைஸக மித்லிஹீ ஷைஉன்’ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ என்ற ஆதாரத்தின்படி, அவனோடு எந்த வகையிலும் ஒப்பாகுவதற்கு உண்மையில் ஒரு பொருளுமேயில்லை. ஆகவே குர்ஆனுடைய மேற்படி ஆதாரத்தைக்கொண்டு இல்லையென்று நிரூபிக்கப்பட்ட இல்லாத இந்த (தச்சனும் கதிரையும் போல என்ற) யுக்திப்பிரமாணத்தால் (அக்லிய்யத்தால்) ஹக்குக்கு ஹல்க் வேறு என்பதை எப்படி நிறுவமுடியும்?

மேலும் ‘வேறு’ என்பது ‘லா இலாஹ இல்லல்லாஹு’ என்னும் பிரபலமான சுருதிப்பிரமாணத்தால் (நக்லிய்யத்தால்) இல்லையென்று ஆணித்தரமாக மறுக்கப்பட்டும் உள்ளது.

ஒரு விடயத்தில் அக்ல்-யுக்தியைப்பிரயோகிப்பதற்கு அந்த விடயத்தைப்பற்றி நக்ல்-சுருதிப்பிரமாணமாகிய திருவசன ஆதாரங்கள் ஏதும் வராமல் இருக்கவேண்டும்.

அல்லாஹ்வுக்கு வேறாக (இணையாக/ துணையாக/ நிகராக) எதுவும் இல்லை என்ற விடயத்தைப்பற்றி உறுதியான ஆதாரமாக கலிமாவும் பிற வசனங்களும் வந்துள்ள நிலையில் இதில் யுக்தியை பிரயோகிப்பது கூடாது.

இரண்டாவதாக, (அதாவது வேற்றுமை எனும் தவறான எண்ணத்தை ஒழிப்பதற்கான மற்றுமொரு விளக்கம்);

‎ اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌
அல்லாஹ்வானவன் எல்லா பொருள்களையும் சிருஷ்டிப்பவன்.(அல்குர்ஆன்: 39:62) என்ற திருவசனமானது மூன்று கருத்துக்களைக் கருதக்கூடிய இடமாக உள்ளது.

1- சிருஷ்டிகர்த்தா வுஜூதில் அவனே சிருஷ்டியாய் இருக்கிறான்.
2- சிருஷ்டிகர்த்தா வுஜூதில் சிருஷ்டி அல்லாததாக (வேறாக) இருக்கிறான்.
3- அல்லாஹு தஆலா ஒவ்வொரு வஸ்துவின் சிருஷ்டிகர்த்தனாயும் (படைப்பாளனாயும்) ஒவ்வொரு வஸ்த்துவும் அவனுடைய சிருஷ்டியாயும் (படைப்பாயும்) இருக்கிறது.

இதில் மூன்றாவது கருத்துக்கே திருவசனம் ஆதாரமாக உள்ளது. ஏனெனில், அந்த திருவசனம் அல்லாஹ்வுடைய படைக்கும் ஆற்றல் பற்றிய கருத்தை குறிப்பிடுகின்ற வசன நடையாக நடத்தபட்டு அக்கருத்தை எளிதாக விளக்குகின்ற ஒரு வாக்கியமாகும்.
முதல் இரண்டு கருத்துக்களையும் மறைவாக குறிப்பிடும் வகையில்கூட திருவசனத்தின் வசனநடை அமையவில்லை. பின்னர் எவ்வாறு இத்திருவசனம் அல்லாஹ்வுக்கு சிருஷ்டி வேறானது என்ற வேற்றுமைக்கருத்திற்கு ஆதாரமாக முடியும்? ஆதாரமாகாதென்பதே வெளிப்படை.

சிருஷ்டி கர்த்தாவுக்கு சிருஷ்டி உள்ளமை என்ற அடிப்படையில் வேறானது என்ற துவித (ஙெய்ரிய்யத்) எண்ணம்பற்றி தெளிவுகண்டு அதை அகற்றும் போது ‘முஹம்மதுன் அப்துஹூ வரஸூலுஹூ’ (முஹம்மத் (ﷺ) அவர்கள் அவனுடைய அடியாரும் திருத்தூதருமாயிருக்கிறார்கள்) என்ற வாசகம் நம் முன் வைக்கப்படுகிறது.

நாம் மேலே குறிப்பிட்ட ‘அல்லாஹ்தான் பொருள்களை சிருஷ்டித்தான்’ என்ற திருவசனத்திற்கு விளக்கமளித்தது போன்று இதனையும் விளங்கவேண்டும்.
அதாவது முஹம்மத் (ﷺ) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய றஸூலும் என்ற அந்தஸ்து பற்றிய பொருளில் மாத்திரம் நடத்தப்பட்ட வசனம் இதுவாகும். மாறாக இவ்வசனம் வேறானது என்பதையோ அல்லது தானானது என்பதையோ குறிப்பிடும் நடையில் அமைந்த வசனம் அல்ல.

முஹம்மத் (ﷺ) அவர்கள்; அல்லாஹ்வுக்கு வேறு என்ற கருத்திலுமல்லாமல், அல்லாஹ்தான் என்ற கருத்திலுமல்லாமல் அல்லாஹ்வுடைய அடிமையும் அவனுடைய றஸூலும் என்ற கருத்தில் மாத்திரம் நடத்தப்பட்ட நடையாகிய முஹம்மதுன் அப்துஹூ வறஸூலுஹூ என்ற இந்த வசனத்தையும் நாம் மேலே குறிப்பிட்ட திருவசனம் போன்று விளங்கிக்கொள்ளல்வேண்டும்.
அதாவது மேற்குறிப்பிட்டதிருவசனத்தின் வசன நடையானது சிருஷ்டிப்பொருள் அல்லாஹ்வுக்கு வேறு என்ற கருத்திலோ அல்லது அல்லாஹ் தானானது என்ற கருத்திலோ அமையாமல் அவன் கர்த்தாவும் மற்றவை அவனுடைய சிருஷ்டியும் என்ற கருத்தில் மாத்திரம் நடத்தப்பட்டுள்ளது.
முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ என்ற வசனமும் அங்கணமேயாகும். ஆனால் வஹ்மானது எஜமானுக்கும் அடிமைக்கும் இடையில், இன்னும் தூது அனுப்பியவனுக்கும் தூதனுக்கும் இடையில் ஒரு வேற்றுமையையும் ஒரு ஒற்றுமையையயும் (ஒத்த தன்மையையும்) தனது ஊகத்தால் கற்பித்துக்கொள்கிறது.
இதேபோன்றே வேற்றுமையை (ஙெய்ரிய்யத் இஃதிபாரியை) கற்பிக்கின்ற ஏனைய திருவசனங்களையும் சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.
உதாரணமாக:

‎ {خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ} [البقرة: 7]
‎‏ அல்லாஹு தஆலா அவர்களின் கல்புகளிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை பதித்துவிட்டான். (அல்குர்ஆன்: 2:7)

{أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ [هود: 18
அல்லாஹ்வுடைய சாபம் அநியாயக்காரர்கள் மீது உண்டாகட்டும். (அல்குர்ஆன்: 11:18)
{ فَلَعْنَةُ اللَّهِ عَلَى الْكَافِرِينَ [البقرة: 89
அல்லாஹ்வுடைய சாபம் காபிர்கள் மீது உண்டாகட்டும். (அல்குர்ஆன்: 2:89)

{فَنَجْعَلْ لَعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ [آل عمران: 61
அல்லாஹ்வுடைய சாபம் பொய்யர்கள் மீது உண்டாகட்டும். (அல்குர்ஆன்: 3:61)

சகோதரா! நன்கு சிந்திப்பீராக!
மேலே தரப்பட்ட திருவசனங்களின் வசனநடை; முத்திரை பதித்தவனும் லஃனத் செய்தவனும் அல்லாஹு தஆலாவாயிருக்கிறான் என்பதும், முத்திரை பதிக்கப்பட்டவரும் லஃனத் செய்யப்பட்டவரும் அந்த காபிர்களும் அக்கிரமக்காரர்களும் பொய்யருமாயிருக்கிறார்கள் ஆகிய இந்தக்கருத்துக்களில்தான் திருவசனம் நடத்தப்பட்டிருக்கிறது. மாறாக முத்திரை பதித்த அல்லது லஃனத் செய்த அல்லாஹ்வும் முத்திரை பதிக்கப்பட்ட அல்லது லஃனத் செய்யப்பட்ட காபிர் ஆகியோரும் ஏகம் என்ற கருத்திலோ அல்லது அவன் வேறு அவர்கள் வேறு என்ற துவிதத்தை வலியுறுத்தும் கருத்திலோ வசனம் நடத்தப்படவில்லை.
ஆகவே மேற்கூறிய திருவாக்கியங்கள் வேற்றுமையைப் வலியுறுத்திப்பேசவில்லை.
ஙெய்ரிய்யத் வஹ்மீ – வஹ்ம் எனும் பேதபுத்தியினால்தான் வேற்றுமை தென்படும்.
ஆகமொத்தத்தில் வஹ்மினால் (உள்ளமையில் ஹக்குக்கு ஹல்க் வேறு என்ற) துவிதம் (வேற்றுமை) விளங்கப்படுகின்ற ஒவ்வொரு திருவாக்கியமும் வேற்றுமையை வலியுறுத்தாத கருத்தில் நடத்தப்பட்டுள்ளது.
எனவே அந்த திருவாக்கியம் மறைவாகவேனும் துவிதத்தை வலியுறுத்துவதற்கு ஆதாரமாக இல்லாதபோது மேற்கொண்டு அது வெளிப்படையாக துவிதத்தை அறிவிப்பதில் எங்கணம் ஆதாரமாகும்?

அல்குர்ஆனின் வசனங்களான ‘அல்லாஹ் எல்லா வஸ்துக்களையும் சிருஷ்டிப்பவன்’ என்பதையும் ‘அல்லாஹ் உங்களைப்படைத்தான்’ என்பதையும் ‘ஙெய்ரிய்யத் இஃதிபாரி’ – சொல்லாடல் ரீதியான வேற்றுமை என்ற கோணத்தில் அவனுடைய வேறு சில திருவசனங்களைக்கொண்டு விளங்குவோம்.

‎ { ظَالِمِي أَنْفُسِهِمْ} [النساء: 97]
அவர்கள் தங்கள் நப்சுகளின்பேரில் கொடுமை செய்பவர்கள்.
(அல்குர்ஆன்: 4:97)

‎ {وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ} [النحل: 118]
அவர்கள் தங்கள் நப்சுகளுக்கு கொடுமை செய்கிறவர்களாக இருக்கின்றார்கள்.
(அல்குர்ஆன்: 16:118)

இந்த இரண்டு திருமறை வசனங்களிலும் ‘தங்களுடைய நப்ஸ்’ என்ற வாசகத்தில், “உடைய” எனும் ஆறாம் வேற்றுமை உருபு: உடைமைக்காரனும் உடைமைப்பொருளும் வெவ்வேறாகாத (என்னுடைய உயிர் என்பது போல்) ஒற்றுமைப்பொருளில் வந்துள்ளது.
மாறாக ‘என்னுடைய தோட்டம்’ என்பது போல் பிறிதின்கிழமைப்பொருளில் வரவில்லை.

ஆகவே மேற்கண்ட திருமறை வசனங்களில் தாங்கள் வேறு தங்களது நப்ஸு வேறு என்பது பொருளல்ல. தாங்களே நப்ஸு, நப்ஸே தாங்கள் என்பதுதான் அர்த்தமாகும்.
விடயம் இவ்வாறிருக்க, அந்த திருமறை வசனங்களில் அவர்கள் என்பது வேறாகவும் அவர்களுடைய நப்ஸு என்பது வேறாகவும் தோற்றுகின்ற வேற்றுமையானது வஹ்மினால் ஏற்பட்ட கற்பனையாகும். அவை சொல்லாடல் ரீதியாக அதாவது கவனிப்புக்களின் அடிப்படையில் குறிப்பிட்டு சொல்லப்பட்டவைகளாகும்.

அவன் வேறு அவனுடைய நப்ஸு வேறு என்ற வேற்றுமை உண்மையாயிருந்தால்,

‎ وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
‘அவர்கள் தங்கள் நப்சுகளுக்கு கொடுமை செய்கிறவர்களாக இருக்கின்றார்கள்’ என்ற திருவசனத்தின் அர்த்தம்; அவர்களுக்கு வேறான அந்த நப்ஸுகள் அவர்களுக்கு கொடுமை செய்யவில்லையென்றும், நப்ஸுகள் மீது அவர்கள்தான் கொடுமை செய்தார்கள் என்றும் பிறிதின்கிழமைப்பொருளாய் அமையும். இது தவறானது. காரணம் அந்த நப்ஸுகளே அவர்களாயிருக்கிறார்கள்.
ஆகவே கொடுமை செய்தவரும் கொடுமை செய்யப்பட்டவரும் வெவ்வேறாகாமல் ஒருவரேயாவர். வெவ்வேறு என்ற பாவனையானது வெறும் பேச்சு வழக்கே தவிர எதார்த்தமல்ல.

முஹம்மதுர் றஸூலுல்லாஹ் – முஹம்மத் (ﷺ) அவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதர் என்பதில் உடைமைக்காரப்பொருளையும் உடைமைப்பொருளையும் ஒன்றாக்குவதற்கு அந்த திருவசனத்தை,
‎ مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ
உங்கள் ஆண்களின் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (அல்குர்ஆன்: 33:40)
என்ற வசனத்தின் அடிப்டையில் கருத்திற்கொள்ளவேண்டும்.

அதாவது ‘உங்கள் ஆண்கள்’ என்றதில் ‘உங்கள்’ என்ற உடைமைக்காரப்பொருளும் ‘ஆண்கள்’ என்ற உடமைப்பொருளும் உண்மையில் வெவ்வேறாகாமல் ஒரே பொருளாயிருக்கிறது.
ஆனால் வஹ்மில் அவ்விரண்டுக்கும் இடையில் வேற்றுமை தோன்றுகிறது. இது துவிதக்கொள்கையுடையோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும்.

இதேபோன்று ‘முஹம்மத் (ﷺ) அவர்கள் அல்லாஹ்வுடைய றஸூல்’ என்பதில் உடைமைக்கார அல்லாஹ் என்பதும் உடைமைப்பொருளான றஸூல் என்பதும் உண்மையில் ஒன்றாயிருந்துகொண்டு வஹ்மின் கற்பனையால் வெவ்வேறாகத்தோற்றுகின்றது.

இதன் சாராம்சம் என்னவெனில், ‘நப்ஸு முஹம்மதின்’ முஹம்மதுடைய உயிர் என்பதுபோல், ஒரு பொருள் அது தானானதாகவே இருக்கின்ற தன்னோடு சேர்க்கப்பட்டால் அப்போது உடமைக்காரப்பொருளும் உடமைப்பொருளும் வெவ்வேறு என்றாகாமல் ஒன்றாகவேயிருந்துகொண்டு வஹ்மில் வெவ்வேறாக தோற்றுகின்ற எடுத்துக்காட்டே இந்த தவறான விளக்கத்தை போக்குவதற்கு போதிய சான்றாகும்.

மேலும் இதே அடிப்படையில் இன்னொரு திருவசனத்தை துவித உள்ளமை உண்டு என்பதற்கு காட்டுவார்கள்.

‎وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ [الحديد: 4]
‘நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான்’
என்று அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்.

அல்லாஹி மஈ الله معي
(அல்லாஹ் என்னுடன் இருக்கின்றான்) என்பதன் அர்த்தத்தை எவ்வாறு நாம் விளங்கவேண்டும்? இரு இருப்புக்கள் என்ற ஷிர்க்-கூட்டின் அடிப்படையிலா அல்லது ஒரே இருப்பு என்ற தவ்ஹீதின் (கலிமாவின்) அடிப்படையிலா?

ஒரு வெள்ளி மோதிரத்தை சுட்டிக்காட்டி, இந்த வெள்ளிமோதிரத்துடன் வெள்ளி இருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம்?
மோதிரம் முழுவதும் வெள்ளியே உள்ளது என்றுதான் அர்த்தம். அதாவது வெள்ளிதான் மோதிரமாக உள்ளது. அதுபோல், அலையுடன் நீர் இருக்கிறது என்றாலும் அந்த அலை முழுவதும் நீராலானது என்பதே உண்மை.
அதேபோல்,மண் பானையுடன் மண் இருக்கிறது. சேட்டுடன் பஞ்சு இருக்கிறது.
பாயுடன் கோரைப்புல்,பன் இருக்கிறது. இவ்வாறு, எந்தவொரு வஸ்துவையும் சுட்டிக்காட்டும்போது அந்தந்த பொருளுடன் அதனதன் மூலப்பொருளே உள்ளது என்பது எவ்வளவு நிதர்சனமோ, அதே போன்று என்னுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று சுட்டும்போது என்னின் மற்றும் அனைத்தின் ஆதிமூலமான அல்லாஹ்வே என்னாக என் உடலாக, உயிராக, மனமாக, ஆன்மாவாக எல்லாமாக இருக்கின்றான் என்பதே அர்த்தமாகும்.
இதனையே معية حقيقية ‘மஈஅத்தே ஹக்கீகிய்யஹ்’ என்பர்.


‎ وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌؕ
(நபியே!) என்னைப் பற்றி என்னுடைய அடியார்கள் உங்களிடம் கேட்டால் நான் (ஹகீகத்தை-எதார்த்தத்தைக் கொண்டு) சமீபமாக இருக்கிறேன். (என்று சொல்வீராக!) (அல்குர்ஆன் 2:186)

‎ وَفِىْۤ اَنْفُسِكُمْ‌ؕ اَفَلَا تُبْصِرُوْنَ‏
உங்களிலே (எனது வுஜூதை) நீங்கள் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 51:21)
என்ற திருவசனம் இதனை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

எனவே அல்லாஹ்வுடைய தாத் சிருஷ்டியுடன் எந்த வகையான நெருக்கத்தை கொண்டது!
அல்லாஹ்வுடைய தாத் சிருஷ்டியுடன் எந்த வகையான உடமைத்துவத்தை கொண்டது என்பதை ஷிர்க் (கூட்டு) இற்கு இடம்வைக்காமல் புரிந்துகொள்ளவேண்டும்.

அதாவது இருமைப் பாவனையில் பாவிக்கப்பட்டுள்ள திருவசனங்களையும் கலிமாவின் ஒருமைக்கு முரண்படாதவாறு விளங்கிக்கொள்ளவேண்டும்.

‎ اَلَاۤ اِنَّهُمْ فِىْ مِرْيَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْ‌ؕ اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍ مُّحِيْطٌ‏
அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தமது (றப்பு) இரட்சகனைக் காண்பதில் சந்தேகமுள்ளவர்களாக உள்ளனர். (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 41:54)

(இங்கு ‘இஹாதத்’ சூழ்தல் என்பது மோதிரத்தை வெள்ளி சூழ்துள்ளது போன்ற நெருக்கமேயன்றி கடித்தை கடித உறை சூழ்ந்துள்ள நெருக்கம் போன்றது அன்று)

‎ وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ مُّحِيْـطًا‏
வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் சகல பொருள்களையும் சூழ்ந்தவனாக உள்ளான்.
(அல்குர்ஆன்: 4:126)

(இவ்வசனத்தில் வந்துள்ள உடமைத்தனம்-அதையடுத்து குறிப்பிடப்பட்டுள்ள ‘இஹாதத்’-சூழ்ந்திருத்தல் ஆகிய சொற்கள்; பிரியாத-இரண்டாகாத -தாத்திய்யத்தான நெருக்கத்தின் நுட்பத்தை காட்டி நிற்கின்றது. அதாவது தண்ணீருக்கு அலை எவ்வாறு சொந்தமோ, தண்ணீர் பனிக்கட்டியை எவ்வாறு சூழ்ந்துள்ளதோ அத்தகைய உள்ளமையின் அடிப்படையில் இரண்டுக்கு இடமில்லாத தொடர்பை காட்டிக்கொண்டிருக்கின்றது.)

‎ وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ‌
ஒளிர்ந்த பிரதேசமும், இருண்ட பிரதேசமும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்);
(அல்குர்ஆன்: 2:115)
(இங்கு பிரபஞ்சம் அல்லாஹ்வுக்கு என்ன விதத்திலான உடமைத்துவமுடையது என்பதை அதே வசனத்தின் தொடர்ச்சியான கீழ்வரும் வசனம் சொல்கிறது)

‎فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ‌ؕ ‏
நீங்கள் எங்குதிரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் வஜ்ஹ் – முகம் உள்ளது. (அல்குர்ஆன்: 2:115)
(இங்கு அல்லாஹ்வின் வஜ்ஹ் – முகம் என்பது அல்லாஹ்வுக்கு வேறான ஒன்றல்ல. அது அல்லாஹ்வுடைய தாத்து தான். அதாவது அது அல்லாஹ்தான்)

‎وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ
நாங்கள் மனிதனுக்கு, அவனின் பிடரி நரம்பு அவனுக்கு நெருங்கியிருப்பதை விட அதி நெருக்கமாக உள்ளோம்
(அல்குர்ஆன்: 50:16)
(பிடரி நரம்பு என்பது அந்த மனிதன் தானானதாக நெருங்கி காணப்படும் ஒன்றே தவிர மனிதனுக்கு வேறாக பிரிந்து நெருங்கி காணப்படும் ஒன்றல்ல. அதாவது அல்லாஹ் தன் படைப்பைவிட்டும் பிரிந்த நெருக்கம் உடையவனல்ல. பிரியாத நெருக்கம் உடையவன் என்பதைத்தான் அக்ரபு என்ற சொல் வலியுறுத்துகிறது.)
இவ்வாறே لا إلٰه الا الله என்ற இந்த கலிமா வசனமும்,
‎بدل substitute (அதுவாக இருப்பது இதுதான் எனும் ஒருமையின்) விதத்தைக்காட்டும் வண்ணம் அமைந்துள்ளது.
அதாவது ‘எல்லா இலாஹும் அல்லாஹ் எனும் மெய்யிருப்பு தானானதானது என்ற ஒருமையை உணர்த்துகின்றது.

இதனையே அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்,
سبحان من أظهر الأشياء وهو عينها

“படைப்புகள் தானானதாக அவனே இருக்க, அவற்றை வெளிப்படுத்தியவன் துய்யவன்” என்று குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: புதூஹாதுல் மக்கிய்யஹ், பக்கம்: 218- 8)

காதிரிய்யாவின் ஞானமகான் குத்புஸ்ஸமான் உமர் வலியுல்லாஹில் காஹிரீ றஹிமஹுல்லாஹ் (1751-1803) அவர்கள், யதார்தத்தில் உள்ள ஒருமையையும் கருத்தாடலில் உள்ள இருமையையும் பிரதிபலிக்கும் வகையில் பின்வருமாறு பாடுகிறார்கள்.

‎الهي كم تبقيني * اليك لا ترقيني
‎وعني لا ترقيني * بفيض منك ياالله

இறைவா! எவ்வளவு காலம் என்னை தரிபடுத்துவாய்?
உன் அருள் கொண்டு உன்னளவில் என்னை உயர்த்தமாட்டாயா?
என்னை விட்டும் (நான்) என்னை பரிசுத்தப்படுத்தமாட்டாயா?
.
‎الهي الخلق في التمثال * بثلج يضرب الامثال
‎فثلج ماء لدى الامثال * بكل الحال ياالله

இறைவா! உதாரணப்படுத்துதலில் படைப்பு என்பது ஐஸ் கட்டி போன்றது. ஐஸ் கட்டி என்பது எந்நிலையிலும் அது நீர்தான்.
.
‎الهي الخلق مثل حباب * علا ماء لدى الاحباب
‎فماء في الفناء حباب * وحال بقاء ياالله

இறைவா! கல்கு எனும் பிரபஞ்சம் நீரின்மேல் எழுந்து நிற்கும் குமிழி போன்றது.
குமிழி என்பது உண்மையிலேயே அது குமிழியாயிருக்கும்போதும் தண்ணீர்தான்.
அது அழிந்து உடைந்த பின்னும் தண்ணீர்தான்.
.
‎فأين انا اذا انت * بذاتي دائما كنت
‎فما بنت ولابنت * ولاتا بيننا الله

இறைவா! என்னுடைய தாத்திலே (என்னிலே) நீ நிலைபெற்றிருக்கின்ற பொழுது ‘அன’ நான் என்பது எங்கே?
எனவே நான் உன்னைப் பிரியவுமில்லை, நீ என்னைப் பிரியவுமில்லை.
இறைவா! எமக்கிடையில் ‘தே’ என்பதே இல்லை.

குமிழி என்பது பூரண அடிமைத்துவத்தின் குறியீடு. நீர் மெய்யிருப்பான றப்பின் குறியீடு.
இரண்டுக்கும் இடையேயான தொடர்பு, அந்த நெருக்கத்தின் விதத்தை மேற்படி பாடலில் குறிப்பிடுகிறார்கள்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments