தொடர் – 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தமிழ் நாடு கீழக்கரையில் அடக்கம் பெற்றுள்ள இறைஞான மகான் கல்வத் நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபா கம்பம் தைக்காவில் அடக்கம் பெற்றுள்ள இறைஞான மகான் ஜில்லா ஹழ்றத் என்றழைக்கப்பட்ட ஹாஜீ ஆரிப் பில்லாஹ் முஹம்மத் ஸயீத் ஜல்வதீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் அல்வலிய்யுல் காமில், அல் ஆரிப் பில்லாஹ் ஹழ்றத் அப்துர் றஹ்மான் (கம்பம்) அம்பா நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எனது நூலுக்கு – “பத்வா”வுக்கு வழங்கிய மதிப்புரை இத் தொடரில் இடம் பெற்றுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், நான் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் 1979ம் ஆண்டு ஜூன் மாதம் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று உயிரில்லாத “பத்வா” ஒன்று வழங்கியது.
அந்த உயிரற்ற “பத்வா”வை மறுத்து “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற பெயரில் உயிருள்ள “பத்வா” ஒன்று அறபு மொழியில் நான் எழுதினேன். அதை எழுதி முடிக்க இரண்டு வருடங்களும், ஆறு மாதங்களும் தேவையாகின. அதில் முல்லாக்கள் வழங்கிய “முர்தத்” பத்வா பிழை என்றும், “வஹ்ததுல் வுஜூத்” உள்ளமை ஒன்று அல்லது எல்லாம் அவனே என்ற தத்துவம் சரி என்றும் சுருதிப் பிரமாணங்கள் மூலமும், யுக்திப் பிரமாணங்கள் மூலமும் நிறுவியுள்ளேன்.
சில விடயங்களை நிறுவ ஆதாரங்கள் கிடைக்காமற் போனதால் அக்காலப் பகுதியில் “லெபனான்” நாட்டில் வேலை செய்து கொண்டிருந்த எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் ஐந்து கிதாபுகளை வரவழைத்து குறித்த “பத்வா”வை நிறைவு செய்தேன். அல்ஹம்துலில்லாஹ்! இந்த நூல் 2000 பக்கங்களுக்கும் அதிக பக்கங்களைக் கொண்ட அறபும், தமிழும் கலந்த நூலாகும். இன்னும் சில மாதங்களில் உதயமாகும்.
இலங்கையிலும், இந்தியா தமிழ் மாநிலத்திலுமுள்ள மார்க்க மேதைகளிடம் மதிப்புரை, வாழ்த்துரைகளைப் பெறுவதற்காக முதலில் இலங்கையிலுள்ள மார்க்க அறிஞர்களிற் சிலரை சந்தித்த போது அவர்கள் அதில் கையெழுத்திடவோ, மதிப்புரை, வாழ்த்துரை வழங்கவோ விரும்பவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் கூறிய போது நானும் அதை ஏற்றுக் கொண்டு வந்துவிட்டேன்.
எனினும் அக்கால கட்டத்தில் காத்தான்குடியில் எனக்கு ஆதரவான உலமாஉகளிடமிருந்து மட்டும் மதிப்புரைகளும், வாழ்த்துரைகளும் பெற்றுக் கொண்டேன்.
“தவ்ஹீத்” புரட்சி ஏற்பட்டு இரண்டு வருடங்களின் பின் 1982ம் ஆண்டு இந்தியாவில் தமிழ் மாநிலத்திலுள்ள மார்க்க அறிஞர்களிடம் கையெழுத்தும், மதிப்புரையும் பெறலாம் என்ற எண்ணத்தோடு எனது நண்பர் மௌலவீ ALM இஸ்மாயீல் பலாஹீ (சின்னச் சமது மௌலவீ) அவர்களையும் அழைத்துக் கொண்டு தமிழகம் சென்றேன்.
தமிழகம் சென்னையில் பிரசித்தி பெற்ற மார்க்க அறிஞர் ஒருவரிடம் நான் எழுதிய “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் “பத்வா”வை காண்பித்து “இதில் ஒப்பமிடத் தகுதியானவர்கள் தமிழகத்தில் யார் இருப்பார்?” என்று கேட்டேன். அதற்கவர் இருவர் உள்ளனர். ஒருவர் தமிழகத்தில் உள்ளார். மற்றவர் மலையாளத்தில் உள்ளார். தமிழகத்தில் கம்பம் நகரில் ஒரு வலீ இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே இதில் ஒப்பமிடத் தகுதியானவர்கள் என்றார்.
அந்த மகானின் வீடு தேடி கம்பம் சென்றோம். வினவி வினவி வீதிகளில் அலைந்தோம். பள்ளிவாயல் அமைப்பில் சிறியதோர் கட்டிடம் தெரிந்தது. அங்கு “வுழூ” செய்து கொண்டு மகான் அவர்களைச் சந்திக்கலாமென்று அக்கட்டிடத்தை நெருங்கினோம். கட்டிடத்தின் முகப்பில் “ஒன்றும் பூச்சியமும் இரண்டாகாது” எனும் அத்வைத ஒளி வீசியது. நண்பர் இஸ்மாயீல் இதுதான் மகான் அவர்களின் இல்லமோ என்றார். உள்ளே சென்றோம். உண்மை உதித்தது. அதுவே மகானின் இடம்.
மகான் அவர்கள் “வுழூ” செய்து கால் கழுவிக் கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் முன்னறிமுகம் அறவே இல்லாத மகான் “உங்கள் தந்தையின் ஜனாஸாவில் “அப்தால்”களில் ஒருவர் கலந்து கொண்டுள்ளார்” என்றார்கள். என்னைத் தூக்கி வாரிப் போட்டாற் போலிருந்தது. நடுங்கியவர்களாக உள்ளே சென்றோம். “ளுஹ்ர் ஜமாஅத்” தொழுகை நடந்தது. கலந்து கொண்டோம்.
தொழுகை முடிந்தபின் என்னை அழைத்து “உங்கள் மாமி நலமாக இருக்கிறாரா? அவர் நல்ல பெண்” என்றார்கள். பகற் சாப்பாடு இங்குதான். எங்கும் போக வேண்டாம் என்றும் கூறினார்கள்.
சாப்பாடு வந்தது. “நான் “மக்ரிப்” நேரம்தான் சாப்பிடுவேன். நீங்கள் இருவரும் சாப்பிடுங்கள் என்றார்கள். சாப்பிட்டோம். எங்களைக் கவனித்துக் கொண்டு அருகிலேயே இருந்தார்கள். நான் கோழிக் கறியை மட்டும் எடுக்காமல் ஏனைய கறிகளுக்கு சாப்பிட்டேன். கோழி சாப்பிடமாட்டீர்களா? என்று கேட்டார்கள். அது சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும் என்றேன். அவர்களின் திருக்கரத்தாலேயே பீங்கானில் கோழிக் கறியை வைத்தார்கள். “விலாயத்”தின் விளையாட்டை அறிந்திருந்த நான் வழமைக்கு மாறாக அதிகமாக சாப்பிட்டேன். வயிற்று வலி ஏற்படவில்லை.
இதேபோல்தான் காத்தான்குடியிலும் எனக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஹாஜீ மீ. அ. மு என்று ஒருவர் இருந்தார். அவர் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவர். அவர் வீட்டில் ஓர் இரவு மௌலானா வாப்பா அப்துர் றஷீத் கோயா தங்கள் றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு சாப்பாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மர்ஹூம் பெரிய சமது மௌலவீ அவர்களும், நானும் அதில் கலந்து கொண்டோம். நாங்கள் நால்வரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம் மௌலானா வாப்பா அவர்கள் சபையில் வைக்கப்பட்டிருந்த அன்னாசிப் பழத்தில் பெரிய துண்டு ஒன்றை எடுத்து எனது பீங்கானில் வைத்தார்கள். அக்கால கட்டத்தில் நான் அன்னாசிப் பழம் சாப்பிடுவதை சுமார் ஆறு வருடங்களாக நிறுத்தியிருந்த காலமாகும். வாப்பா அவர்கள் வைத்துவிட்டார்களே என்று நான் ஒரு நிமிடம் சாப்பிடாமல் இருந்தேன். இதையறிந்த வாப்பா அவர்கள் சாப்பிடுங்கள் ஒன்றும் செய்யாது என்றார்கள். சாப்பிட்டேன். மேலும் ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டேன். எனக்கு எந்த ஒரு வருத்தமும் ஏற்படவில்லை.
அன்று பகல் அங்கேயே அம்பா நாயகமிடமே சாப்பிட்டோம். எனக்கு எந்த ஒரு சிக்கலும் ஏற்படவில்லை. வலீமாரின் கைகள் சாதாரண கைகளல்ல.
கம்பத்து மகான் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அவர்கள் அன்று மாலை நோன்பு திறப்பதற்கு ஆயித்தமாயிருந்தார்கள். நானும் அவர்களுக்கு அருகில் இருந்தேன்.
அவ் ஊர் வாசிகளில் இருவர் அந்நேரம் அங்கு வந்து அமர்ந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு தேவை என்று கேட்டார்கள். ஒருவர் 300 ரூபாய் என்றார். மற்றவர் 200 ரூபாய் என்றார். மகான் அம்பா தங்களின் அகலமான “பெல்ட்” வாரை திறந்து அவர்களுக்கு அவர்கள் கேட்ட பணத்தை எடுத்துக் கொடுத்தார்கள்.
இது பற்றி அவர்களிடம் கேட்காமல் அவர்களின் “காதிம்” பணியாள் மௌலவீ மிஸ்பாஹீயிடம் கேட்டேன். அதற்கவர் “நாயகம் அவர்களுக்கு இவ்வூரில் ஏழு “முரீதீன்”கள் – சிஷ்யர்கள் உள்ளனர். அவர்களைத் தொழில் எதுவும் செய்ய வேண்டாம் என்றும், அன்றாடம் தேவையான பணத்தை மட்டும் தன்னிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்” என்று விளக்கம் சொன்னார்.
மூன்று நாட்கள் நாயகமவர்களின் தைக்காவில் நாங்கள் இருவரும் தங்கியிருந்தோம்.
இரண்டாமிரவு என்னை அழைத்து நீங்கள் கொண்டு வந்த “பத்வா”வை தாருங்கள் என்றார்கள். அது கையெழுத்துப் பிரதியாக இருந்தது. தங்களின் மகன் மௌலவீ அப்துல் கபூர் என்பவரை அழைத்து “இவர் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக ஒரு “பத்வா” எழுதி வந்துள்ளாராம். கையெழுத்து வேணும் என்கிறார். நீங்கள் வாசியுங்கள் என்று மகன் வாசிக்க அமைதியாக செவியேற்றுக் கொண்டே இருந்தார்கள். வாசித்து முடிந்த பின் மகன் மௌலவீ அப்துல் கபூர் அவர்களிடம் இதற்கு ஒரு வாழ்த்துச் செய்தி எழுதித்தருமாறு கேட்டார்கள். அவர் எனது கண் முன்னாலேயே எழுதிக் கொடுத்தார். நாயகம் அவர்கள் அதை வாசித்தபின் என்னைப் பார்த்து “இது காலவரை எவரும் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக எதுவும் எழுதிக் கொண்டுவரவுமில்லை, கையொப்பம் கேட்கவுமில்லை. ஆயினும் “வஹ்ததுல் வுஜூத்” பத்வா ஒன்றில் இதுவே எனது முதல் கையொப்பமும், இறுதி கையொப்பமுமாகும்” என்று கூறிவிட்டு ஒப்பமிட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
தங்களின் மகன் மௌலவீ அப்துல் கபூர் அவர்கள் தனது கையால் எழுதிய வாழ்த்துக் கடிதமும், அதில் அம்பா நாயகம் அவர்களின் கையெழுத்தும் உள்ள படத்தை இத்துடன் இணைத்துள்ளேன். பார்வையிட்டுக் கொள்ளுங்கள்.
அம்பா நாயகமவர்களின் மதிப்புரையின் சுருக்கமான தமிழாக்கம்:
சிறப்புக்குரிய பண்டிதர் மௌலவீ அப்துர் றஊப் இப்னு அப்தில் ஜவாத் அவர்களின் “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் நூலை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நான் பார்த்தேன். இதில் கூறப்பட்ட விடயங்கள் யாவையும் சரியானவையாக நான் கண்டேன்.
இந்த “ரிஸாலா” சிறு நூலையும், இதில் கூறப்பட்ட கருத்துக்களையும் யாராவது கொஞ்சமேனும் மறுத்தானாயின் அவன் “ஸுன்னத் வல் ஜமாஅத்” உலமாஉகளில் ஒருவனாயிருப்பதற்கும், தன்னை “அஷ்அரிய்யா”, அல்லது “மாதுரீதிய்யா” கொள்கையை பின்பற்றியவன் என்று சொல்வதற்கும் அவன் “லாயிக்” அற்றவன் – தகுதியில்லாதவனாவான். அதேபோல் நான்கு மத்ஹபுகளுடைய இமாம்களில் ஒருவரைப் பின்பற்றியவன் என்று சொல்வதற்கும் தகுதியற்றவனாவான்.
எவராவது தான் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கைவாதியென்று சொல்வாராயின் அவர் இந்த நூலையும், இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும், தத்துவங்களையும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இது மட்டுமல்ல. அவரின் உள்ளத்தில் இந்நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு மாறான கருத்துக்கள் ஏற்படவும் கூடாது.
கையொப்பம்.
இக்கையொப்பம் கல்வத்து நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபா ஜில்லா ஹழ்றத் என்றழைக்கப்பட்ட ஹாஜீ ஆரிப் பில்லாஹ் முஹம்மத் ஸஈதுல் ஜல்வதீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் அஷ்ஷெய்குல் காமில் ஆரிப் பில்லாஹ் ஹழ்றத் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அவர்களின் கையொப்பமாகும்.
மேலே நான் எழுதிய விடயத்தில் யாருக்காவது சந்தேகமிருந்தால் என்னிடம் நேரில் வந்து பார்த்துக் கொள்ள முடியும்.
முக்கிய குறிப்பு:
நானும், மௌலவீ ALM இஸ்மாயீல் பலாஹீ (சின்னச் சமது மௌலவீ) அவர்களும் அம்பா நாயகம் அவர்களின் “தைக்கா”வில் தங்கியிருந்த வேளை ஒரு தரம் அவர்களின் கழிவறைக்கும், குளியலறைக்கும் சென்றேன். அப்போது நாயகமவர்கள் என்னிடம் இதுகாலவரை எனது கழிவறைக்கும், குளியலறைக்கும் சென்றவர்கள் இருவர்தான். ஒருவர் நீங்கள். மற்றவர் உங்களின் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ ஹழ்றத் காயல்பட்டணம் அவர்கள் என்று கூறினார்கள்.
கேரளா மாநிலத்தின் ஞானக் கடலும், தப்லீக் வஹ்ஹாபிஸத்திற்கு எதிராக كشف الشبهة எனும் நூல் எழுதியவரும், ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா ஆகிய கலைகளில் நிகரில்லாப் பண்டிதருமான அல்லாமா அப்துல் காதிர் முதலியார் – முஸலியார் அவர்கள் வழங்கிய மதிப்புரை அடுத்த தொடரில் இடம் பெறும்.
தொடரும்..