தொடர் – 02
எனது “பத்வா”வுக்கு மதிப்புரை வழங்கிய மகான்கள்!
கம்பம் அம்பா நாயகம் அவர்களின் மதிப்புரை தொடர்பான விபரங்களை தொடர் ஒன்றில் எழுதியிருந்தேன்.
நான் இந்தியா சென்று உலமாஉகளிடம் மதிப்புரை பெற்ற காலம் 1982ம் ஆண்டாகும். இவ் ஆண்டில் மட்டும் இரண்டு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் நான் இந்தியா சென்றிருப்பேன்.
ஒரு பயணத்தின் போது கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு உஸ்தாத் அவர்களை அஜ்மீரில் சந்தித்தேன். அவர் “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தில் என்னை விட ஒருபடி சிறந்தவர். அங்குள்ள ஓர் அறபுக் கல்லூரியின் அதிபர். அவரிடம் நான் எழுதிய “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற “பத்வா”வை கொடுத்து வாசித்துப் பார்க்குமாறு சொன்னேன். அவர் ஒரு நாள் மட்டும் முடிந்தவரை வாசித்தார். மறு நாள் அவர் ஊருக்குப் பயணமாக இருந்ததால் அவரால் தொடர்ந்து வாசிக்க முடியாமற் போய்விட்டது.
எனினும் அவர் எனக்கு ஓர் ஆலோசனை சொன்னார். அதாவது “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை தொடர்பான இந்த நூலுக்கு தமிழ் நாட்டில் கையொப்பமிடுவதற்கு மூவர் உள்ளனர். ஒருவர் அம்பா நாயகம் வலிய்யுல்லாஹ் அவர்கள். மற்றவர் “ஹிதாயதுல் அனாம் இலா ஸியாறதில் அவ்லியாஇல் கிராம்” புகழ் பாக்கர் ஆலிம் அவர்கள். மற்றவர் கலீபது யாஸீன் மௌலானா யாஸீன் ஹழ்றத் அவர்கள் என்று கூறினார். கேரளா மாநிலத்தில் ஒருவர் உள்ளார். அவரின் கையெழுத்து மட்டுமே ஆயிரம் உலமாஉகளின் கையெழுத்துகளுக்கு சமமானது என்றும் கூறினார். அவர் சுட்டிக் காட்டியவர்தான் நாளைய தொடரின் கதாநாயகர் ஆவார்.
நான் தமிழகத்திலுள்ள மூவரையும் முதலில் நேரில் சந்தித்தேன். முதலில் முஹம்மத் பாக்கர் ஆலிம் அவர்களைக் கண்டு பேசினேன். பாக்கர் ஆலிம் பாரசீக மொழிக் கவிஞராவார்கள். வஹ்ஹாபிஸத்திற்கு கடுமையான எதிரியுமாவார்கள். ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் அவர்களின் ஆசீர்வாதம் பெற்ற ஒரு மகானுமாவார்கள்.
அவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்து “அல்கிப்ரீதுல் அஹ்மர்” தொடர்பான விபரங்களைக் கூறினேன். அவர்கள் என்னிடம் ஒரேயொரு கேள்வி மட்டும் கேட்டார்கள். நீங்கள் “ஹமவோஸ்த்” கொள்கையா? “ஹமஊஸ்த்” கொள்கையா? என்று கேட்டார்கள். அவர்கள் கேட்ட பிறகுதான் அதில் இரண்டு வகையுண்டு என்பதை விளங்கி அவர்களிடமே அவ்விரண்டுக்குமான விளக்கம் கேட்டேன்.
“ஹமவோஸ்த்” என்றால் எல்லாம் அவனே என்று பொருள் வரும். “ஹமஊஸ்த்” என்றால் எல்லாம் அவனில் நின்றுமுள்ளவை என்று பொருள் வரும். இவ்விரண்டிலும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கு பொருத்தமானது “ஹமவோஸ்த்” என்பதேயாகும் என்று விளக்கம் தந்தார்கள்.
“ஹமவோஸ்த்” எல்லாம் அவனே என்பது “ஐனிய்யத்” ஹக்கும், கல்கும் – படைத்தவனும், படைப்பும் ஒன்று என்பதைக் குறிக்கும். “ஹமஊஸ்த்” எல்லாம் அவனில் நின்றுமுள்ளது என்பது “ஙெய்ரிய்யத்” ஹக்கும், கல்கும் வேறு என்பதைக் குறிக்குமென்று கூறினார்கள்.
நான் “ஹமவோஸ்த்” கொள்கையுள்ளவன் என்றும், எனது “பத்வா”விலும் அதே கொள்கையையே எழுதியுள்ளேன் என்றும் சொன்னேன். அவர்கள் சந்தோஷப்பட்டவர்களாக என்னைக் கட்டியணைத்து ஆதரவு தந்தார்கள்.
அவர்கள் எனக்கு ஓர் ஆலோசனை கூறினார்கள். அதாவது நாஹூர் நகரில் பல உலமாஉகள் இருந்தாலும் அவர்களிற் சிலரை மட்டும் தெரிவு செய்து அனைவரும் ஓர் இடத்தில் ஒன்று கூடி உங்களின் நூலை வாசித்து கையொப்பமிடுவோம் என்று சொன்னார்கள். அக்காலம் நோன்பு காலமாயிருந்தது.
அவர்கள் சொன்னபடி ஒரு பள்ளிவாயலில் ஒன்று கூடினோம். சுமார் பத்து உலமாஉகள் கலந்து கொண்டார்கள். “தறாவீஹ்” தொழுகையின் பின் ஒரு மணி நேரம் மட்டும் நான் பேசுவதென்றும், அதன் பின் “ஸஹர்” வரை நூல் வாசிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. அவ்வாறே நிகழ்வுகள் யாவும் நடந்தேறின. கலந்து கொண்ட உலமாஉகளுக்கு என் மீது ஏற்பட்ட “மஹப்பத்”தினால் எனக்கு பொன்னாடை போர்த்தி “ஷம்ஸுல் உலமா” என்று பட்டமும் சூட்டினார்கள்.
பின்னர் அனைவரும் எனது “பத்வா”வில் கையெழுத்திட்டனர். இந் நிகழ்வில் “இஹ்யா உலூமித்தீன்” மொழிபெயர்ப்பாசிரியர் ஹழ்றத் அப்துல் வஹ்ஹாப் பாகவீ அவர்கள் மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை.
எனினும் அவரைத் தனிப்பட நான் சந்தித்த போது, “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக நீங்கள் பேசிய ஒலி, ஒளி நாடாக்கள் உங்களிடம் உண்டா என்று கேட்டார்கள். ஆம் என்றேன். அவ்வாறாயின் ஒளி நாடாவை நான் கேட்டுப் பார்க்க வேண்டும் என்றார்கள். அவர்களின் வீட்டிலேயே மறுநாளிரவு எனது “கிழக்கில் உதித்த ஞான ஒளி” என்ற ஒளி நாடா காண்பிக்கப்பட்டது. நீண்ட நேரம் அலுக்காமலும், சடையாமலும் செவியேற்றிருந்த ஹழ்றத் பாகவீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை இதை விடத் தெளிவாகப் பேசுவதற்கு இந்தியாவிலேயே எவருமிருக்கமாட்டார் என்று என்னைப் பாராட்டி கையெழுத்தும் வைத்து தந்தார்கள்.
அவர்களின் கையெழுத்தும், மற்றும் வெலிகாமம் மர்ஹூம் யாஸீன் மௌலானா அவர்களின் கலீபா நாஹூர் யாஸீன் ஹழ்றத் அவர்களின் கையெழுத்தும், சங்கைக்குரிய ஞான மகான் பார்ஸீ கவிஞர் முஹம்மத் பாகர் நாயகம் அவர்களின் கையெழுத்தும் இன்னும் பல இந்திய உலமாஉகளின் கையெழுத்துகளும் எனது “பத்வா”வில் உள்ளன. அவற்றில் முக்கிய உலமாஉகளின் கையொப்பங்களை தொடராகப் பதிவிடுவேன். இன்ஷா அல்லாஹ்!
இத் தொடரில் நாஹூர் ஷரீப் இறைஞான மகான் “ஹிதாயதுல் அனாம்” புகழ் முஹம்மத் பாகர் ஆலிம் வலீ அவர்களின் கையெழுத்தை பதிவிடுகிறேன். ஏனைய உலமாஉகளின் கையெழுத்துக்களையும் தொடர்ந்து பதிவிடுவேன்.
பாகர் ஆலிம் அவர்களின் மதிப்புரையின் மொழியாக்கம் தமிழில்:
(அல்லாஹ் எனும் திருப் பெயரால் தொடங்குகிறேன்.
சகோதரனே! நீ அறிந்து கொள்! “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் என்பது சுருதிப் பிரமாணங்கள், யுக்திப் பிரமாணங்கள் மூலம் சரியென நிறுவப்பட்ட ஸூபீ மகான்கள் கூறிய கொள்கையாகும். இக்கொள்கை ஸூபிஸ தரீகாவுக்கும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கும் உடன்பாடான கொள்கையாகும். அதுமட்டுமல்ல ஏனைய தவறான கொள்கைகளையும் “பாதில்” பிழையாக்கி வைக்கும் கொள்கையுமாகும்.
தத்துவமேதை ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் முஹம்மத் ஙஸ்ஸாலீ அவர்கள் தங்களின் “இஹ்யாஉ உலூமித்தீன்” எனும் நூலில் “மறுமையின் அறிவுகளின் பிரிவு” எனும் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
அவற்றில் முந்தின வகை “இல்முல் முகாஷபா” ஆகும். அதாவது “பாதின்” உள்ரங்க அறிவாகும். இதுவே அறிவுகளின் உச்சியுமாகும்.
இறைஞானிகளிற் பலர் பின்வருமாறு கூறியுள்ளார்கள். இந்த இறைஞான அறிவில் எவருக்கு பாக்கியமில்லையோ அவரின் இறுதி முடிவு நல்ல முடிவாகாது. அதாவது எவர் இந்த ஞானத்தை மறுக்கின்றாரோ அவர் கெட்ட முடிவைப் பயந்து கொள்ள வேண்டும் என்று ஞானமகான்களிற் பலர் கூறியுள்ளார்கள். மிகக் குறைந்த பாக்கியம் என்னவெனில் எவரும் இந்த ஞானத்தை மறுக்காமல் இது உண்மை என்று நம்புவதும், இந்த அறிவுள்ளவர்களிடம் இதன் விளக்கத்தை ஒப்படைத்துவிடுவதுமேயாகும்.
ஆதாரம்: இஹ்யா உலூமித்தீன்
பாடம்: அறிவு
இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ அவர்கள் தங்களின் “அல்பதாவல் ஹதீதிய்யா” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
அதாவது புத்தியும், மார்க்கப்பற்றும் உள்ள ஒருவன் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுக்காமலும், எதிர்க்காமலும் இருப்பது அவனுக்கு கடமையாகும். ஏனெனில் இதை எதிர்ப்பதானது கடுமையான நஞ்சாகும். இந்த ஞானத்தை எதிர்த்து இக்காலத்திலும், கடந்த காலத்திலும் அழிந்து போன பலர் உள்ளனர். இது கண்ணால் கண்ட உண்மையாகும்.
மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்கள் எழுதிய நூலை – “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் “பத்வா”வை ஆரம்பத்திலிருந்து முடியும் வரை நான் வாசித்த வகையில் எந்த ஒரு சந்தேகமுமின்றி அவரின் நூலில் – “பத்வா”வில் எழுதப்பட்டுள்ள “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்கள் யாவும் சரியானதென்றும், ஏற்றுச் செயல்படத் தகுதியானவை என்றும் நான் திட்டமாகக் கூறுகிறேன்.
அல்லாஹ் இந்நூலை எழுதிய மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் அவர்களுக்கு மேலும் ஞானத்தைக் கொடுப்பானாக! அவரின் அறிவுகளைக் கொண்டு அவனுடைய அடியார்களுக்கு பயனளிப்பானாக! ஆமீன்.
ஒப்பம்: முஹம்மத் பாகர் காதிரீ
நாஹூர்.
றமழான் முபாறக் 19
கி.பி. 11.07.1982
மேற்கண்ட மகான் அவர்களின் கையால் எழுதிய மதிப்புரை எனது “பத்வா”வில் உள்ளது. அதன் நிழற்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பார்வையிட்டுக் கொள்ளுங்கள்.
முஹம்மத் பாகர் ஆலிம் அவர்கள் நாஹூர் ஷாஹுல் ஹமீத் ஆண்டகை பாதுஷா நாயகமவர்களின் அற்புத மைந்தர் ஸெய்யித் தாதா யூஸுப் வலீ நாயகம் அவர்களின் வம்சத்தைச் சேர்ந்த ஒரு ஸெய்யித் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – தமிழ் மாநிலத்திலுள்ள ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் அனைவரும் இவர்களையும், இதற்கு முன்னுள்ள தொடரில் நான் குறிப்பிட்ட கம்பம் – அம்பா நாயகம் அவர்களையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நான் இதற்கு முன்னுள்ள தொடரில் குறிப்பிட்ட அம்பா நாயகமவர்கள் “கறாமத்” எனும் அற்புதமுள்ள மகான் என்பது தமிழ் நாட்டிலுள்ள உலமாஉகள் அனைவரும் அறிந்த, ஏற்றுக் கொண்ட விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், எனது கருத்தைச் சரிகண்ட முஸ்லிம்களுக்கும் மார்க்கத்திற்கு முரணாகவும், மனச்சாட்சிக்கு விரோதமாகவும் “பத்வா” கொடுத்த வேளை 1979 இந்தியா – காயல் பட்டணத்திலிருந்தும் ஒரு பிரசுரம் எனக்கு எதிராக வெளிவந்ததை அதிகமானவர்கள் அறியமாமட்டார்கள். அந்தப் பிரசுரத்தின் சூத்திரதாரியான முத்துவாப்பா ஆலிம் அவர்கள் கம்பம் நாயகம் அவர்களைச் சந்தித்து அருள் பெற நினைத்திருந்தார்கள். ஒரு நாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின் 3.30 மணியளவில் கம்பம் பயணிக்க எல்லா ஒழுங்கும் செய்தார்கள்.
அதே நாள் காலை ஸுப்ஹ் தொழுகையை முடித்த அம்பா நாயகம் வழமைக்கு மாறாக அலுமாரியைத் திறந்து கிதாபுகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை அவர்களுக்குப் பணி செய்து கொண்டிருந்த ஒரு மௌலவீ மிஸ்பாஹீ அம்பா நாயகத்திடம் எதற்காக கிதாபுகள் எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு காயல்பட்டணத்திலிருந்து ஓர் ஆலிம் என்னிடம் சில கேள்விகள் கேட்டு என்னை மடக்குவதற்கு இன்று மாலை பயணிக்கிறார். அவருக்காகவே கிதாபுகள் எடுக்கிறேன் என்று கூறியுள்ளார்கள். மறுநாள் சனிக்கிழமை காலை அவர் அம்பா நாயகமவர்களின் இடத்தை அடைந்தார். அம்பாவைக் கட்டித் தழுவி, அவர்களின் கை, கால்களை முத்தமிட்டு அமர்ந்த போது அம்பா நாயகம் அவரிடம் நீங்கள் கேட்க வந்த கேள்விக்கான விடையை நேற்றிரவு எழுதி நீங்கள் அணிந்துள்ள ஷேட் பொக்கட்டில் வைத்துவிட்டேன் என்றார்கள். வந்தவர் பொக்கட்டில் கையை போட்டார். விடைத்தாள் வந்தது. வாசித்துப் பார்த்துவிட்டு அம்பாவின் பாதத்தில் விழுந்து அவர்களிடம் “பைஅத்”தும் எடுத்துக் கொண்டார்.
இது அம்பாவின் “கறாமத்” அற்புதங்களில் ஒன்றாகும். இன்னும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதங்கள் நிறைய உள்ளன. பொருத்தமான நேரம் பதிவிடுவேன். இன்ஷா அல்லாஹ்!
அடுத்த தொடரில் கேரளாவின் “முப்தீ” அவர்கள் எனது நூலுக்கு வழங்கிய ஆசியுரை இடம் பெறும்.
தொடரும்….