தொடர் – 03
யார் இந்த அப்துல் காதிர் முதலியார்?
இவர்தான் எனது “பத்வா”வை சரிகண்டு வாழ்த்தனுப்பிய ஞான மாமேதை கேரளா முப்தீ.
இவரின் கையெழுத்தோடு தந்த கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மூலப் பிரதியை நேரில் காண விரும்புவோர் நேரில் வந்து கண்டு கொள்ளவும் முடியும், போட்டோ பிரதி பெற்றுக் கொள்ளவும் முடியும்.
அம்பா நாயகம் அவர்கள் கையெழுத்திட்ட மூலப் பிரதியையும் நேரில் பார்க்கவும் முடியும், பிரதியும் பெறலாம்.
நான் எழுதி அண்மையில் வெளியிடவுள்ள “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் அறிவுக் களஞ்சியம் இந்தியா தமிழ் நாட்டு உலமாஉகளிற் பலராலும், இலங்கை றப்பானீ உலமாஉகளிற் சிலராலும் சரிகண்டு கையெழுத்திடப்பட்ட கடிதங்கள் என்னிடம் உள்ளன.
மேலே பெயர் குறித்த மேதை அப்துல் காதிர் முதலியாரின் விபரம்.
தலைவர்: ஸுன்னத் வல் ஜமாஅத் இளைஞர் அமைப்பு – கேரளா.
தவிசாளர்: இஸ்லாமிய பாடப் புத்தக குழு – கேரளா.
அதிபர்: அல்ஜாமிஅதுஸ் ஸஃதிய்யா அறபுக் கல்லூரி – கல்நாடு.
பொதுச் செயலாளர்: மத்திய ஆசிரியர் சங்கம்.
பொதுச் செயலாளர்: உலமா சபை – கண்ணனூர் மாவட்டம்.
இந்த மகான் தப்லீக் அமைப்பை எதிர்த்து எழுதிய كشف الشّبهة என்ற அறபு நூல் துருக்கி இஸ்தன்பூல் நகரில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நூல்தான் எனக்கும், இவருக்குமிடையில் தொடர்பை ஏற்படுத்திய பாலமாகும்.
இந்த மகான் எனது “பத்வா”வுக்கு வழங்கிய மதிப்புரையின் பிரதியும், தமிழாக்கமும் இத்தொடரில் இடம் பெற்றுள்ளது.
தமிழாக்கம்:
ஹம்து, ஸலவாத் சொன்ன பின்,
மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு.
உங்களின் நூல் கிடைக்கப்பெற்று மகிழ்ந்தேன். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக! நம்மனைவரையும் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கையைப் பின்பற்றினவர்களாகவும், அதைப் பரப்புவதற்கு முயற்சி செய்பவர்களாகவும் ஆக்குவானாக! ஆமீன்.
நான் உங்கள் “பத்வா”வை வாசித்தேன். அது சத்தியவாதிகளுக்கும், ஹகீகத், மஃரிபத் உடையவர்களுக்கும் உடன்பாடாக இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். எனினும் “வஹ்ததுல் வுஜூத்” விடயம் மிக ஆழமானது. அதை ஸூபிஸக் கலையில் ஸூபீகள் பயன்படுத்துகின்ற “இஸ்திலாஹாத்” கலைச் சொற்கள் தெரியாதவர்களிடம் பரப்புவது பொருத்தமற்றதாகும்.
வலீமார்களையும், அவர்கள் கூறிய தத்துவங்களையும் “குப்ர்” என்று சொல்பவன் சந்தேகமின்றி வழிகேடனும், அட்டூழியக்காரனும், நல்வழியிலிருந்து தடம் புரண்டவனுமாவான்.
அல்லாஹ் நம்மனைவரையும், அல்லாஹ்வின் அவ்லியாஉகளை நேசிப்பவர்களாகவும் அவர்களைப் பின்பற்றுபவர்களாகவும் ஆக்கி மறுமையில் அவர்களுடன் எங்களையும் எழுப்புவானாக!
நீங்களும், உங்களுடன் இருப்பவர்களும் இந்த ஏழைக்கும், மனைவி மக்களுக்கும் ஈடேற்றத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்குமாறு ஆதரவு வைக்கிறேன்.
நான் எழுதிய كشف الشبهة என்ற நூலை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட விரும்பினால் செய்யுங்கள். நான் நன்றி கூறுவேன். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்பகீர் அப்துல் காதிர்
29.12.1982
மாமேதை அப்துல் காதிர் முஸலியார் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பிழை என்றோ, “குப்ர்” என்றோ சொல்லவில்லை. அவர்கள் எழுதியுள்ள வசனத்தைக் கவனியுங்கள்.
طَالَعْتُ فَتْوَاكُمْ وَوَجَدْتُهَا حَقًّا مُوَافِقًا لِأَهْلِ الْحَقِّ وَالْحَقِيْقَةِ وَالْمَعْرِفَةِ
உங்களின் “பத்வா”வை நான் பார்வையிட்டேன். அதை உண்மையானதாகவும், சத்தியவாதிகளுக்கும், ஹகீகா, மஃரிபா என்ற எதார்த்தத்திற்கும், இறைஞானத்திற்கும் ஏற்புடையதாக நான் கண்டேன்.
மேற்கண்ட இந்த வசனம் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் சரியென்று விளங்குகிறதா? பிழை என்று விளங்குகிறதா? சந்தேகமின்றி அது சரி என்பது தெளிவாகும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.
இந்த வசனத்தின் பின்னால் இன்னொரு வசனம் எழுதியுள்ளார்கள். இதோ அந்த வசனம்.
ْغَيْرَ أَنَّ تِلْكَ الْمَسْئَلَةَ غَامِضَةٌ، لَا يَحِقُّ نَشْرُهَا إِلَّا عِنْدَ مَنْ يَعْرِفُ مُصْطَلَحَاتِ الصُّوْفِيَّةِ وَإِشَارَاتِهِمْ،
இதன் பொருள்: “எனினும் “வஹ்ததுல் வுஜூத்” என்ற கொள்கை விளக்கம் மிக ஆழமானது. ஸூபீ மகான்களினது கலைச் சொற்களையும், அவர்களின் ஜாடைகளையும் அறியாதவர்களிடம் அதைப் பரப்புவது பொருத்தமாகாது”
ஸூபீகள் தமக்கு மட்டும் விளங்கும் பாணியில் சில சொற்கள் வைத்துள்ளார்கள். இந்த நடைமுறை எல்லாக் கலையுள்ளவர்களிடமும் உண்டு. அவற்றின் பொருள் ஸூபீகளுக்கும், அவர்களுடன் நெருங்கி வாழ்பவர்களுக்கும் மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது.
இவ்வாறான நடைமுறை மனிதர்களின் சாதாரண பேச்சு வழக்கிலும் உண்டு. ஊர்கள், நாடுகளைப் பொறுத்து இந்த நடைமுறையிலும் வித்தியாசங்கள் ஏற்படும். ஒரே ஊர் மக்களாயினும் அவர்களுக்கிடையிலும் நடைமுறைகளில் வித்தியாசங்கள் உண்டு.
உதாரணமாக எனதூரில் இப்றாஹீம் புள்ளை, மின்னல் ஹபீப் என்ற சொற்களை பணத்துக்குப் பயன்படுத்துபவர்களும் உண்டு. உங்களிடம் இப்றாஹீம் புள்ளை எடுக்கலாமா? மின்னல் ஹபீப் எடுக்கலாமா? என்று கேட்பார்கள். இந்த விவகாரம் தெரியாதவர்களுக்குப் புரியாது. இது எனதூர்வாசிகளிற் சிலரின் “இஸ்திலாஹாத்” ஆகும்.
இவ்வாறுதான் சாப்பாடு ராமன் என்று அதிகம் சாப்பிடுபவனுக்கும், கம்புக் காரன் என்று அதிகம் பிள்ளைகள் பெறுபவனுக்கும் சிலர் சொல்வதுண்டு. இது அவர்களின் “இஸ்திலாஹாத்” பரிபாஷை எனப்படும்.
இவ்வாறு எல்லாக் கலையுடையவர்களுக்கும் “பரிபாஷை” என்று ஒன்று உண்டு. உதாரணமாக علم الصـرف “இல்முஸ்ஸர்ப்” சொல்லிலக்கணக் கலையில் ثُلاثي رُباعي என்றும், மொழியிலக்கணக் கலையில் مُبتدأ என்றும், خبرٌ என்றும், مُضاف என்றும் சொல்வார்கள். இதுவும் “இஸ்திலாஹாத்” பரிபாஷை என்றுதான் சொல்லப்படும்.
இதே போல் ஸூபீ மகான்களும் தமக்கு மட்டும் விளங்கும் வகையில் சில சொற்களைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் என்ன கருத்துக்கு என்ன சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாத மக்களிடம் ஸூபிஸ, “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தைப் பரப்புவது பொருத்தமற்றதென்றுதான் கேரள மகான் சொல்கிறார்களேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்றோ, “குப்ர்” என்றோ செல்லவில்லை.
கேரளா மகானின் வசனத்துக்குரிய எதார்த்தம் புரியாமல் பொதுவாக “வஹ்ததுல் வுஜூத்” பேசுவது கூடாதென்பது அறிவாளிகளின் பண்பல்ல.
இன்னும் சிலர்
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّا مَعَاشِرَ الْأَنْبِيَاءِ كَذَلِكَ أُمِرْنَا أَنْ نُكَلِّمَ النَّاسَ بِقَدْرِ عُقُولِهِمْ»
(من حديث خيثمة بن سليمان)
நாங்கள் நபீமார்கள் கூட்டம். மனிதர்களோடு அவர்களின் புத்திக்கு ஏற்றாற்போல் பேசுமாறு பணிக்கப்பட்டுள்ளோம் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
இந்த ஹதீதை ஆதாரமாக வைத்துக் கொண்டு – தவறாகப் புரிந்து கொண்டு பொதுவாக ஸூபிஸம் பேசக் கூடாதென்பதோ, “வஹ்ததுல் வுஜூத்” பேசக் கூடாதென்பதோ வெறும் மன முரண்டேயன்றி அறிவுடைமையல்ல.
கேரளா “முப்தீ” அவர்களின் வாதம் – கருத்து “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதுமல்ல, “குப்ர்” என்பதுமல்ல, அதைப் பொதுவாகப் பேசக் கூடாதென்பதுமல்ல. ஆயினும் ஸூபீகளின் கலைச் சொற்களை அறியாதவர்களிடம் பேசுவது பொருத்தமற்றதென்பதே அவர்களின் கருத்தாகும்.
கேரளா முப்தியின் கருத்துக்கும், நமது நாட்டு முப்திகளின் கருத்துக்கும் மலைக்கும், மடுவுக்குமுள்ள வித்தியாசம் உண்டு.
நமது நாட்டு முப்திகள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானமே “குப்ர்” என்று சொல்கிறார்கள். இவர்கள் சொல்வதுதான் சரியென்றால் அல்லாஹ், நபீமார், வலீமார் அனைவருமே “முர்தத்”துகள்தான். ஸுப்ஹானல்லாஹ்! மார்க்கத்தை, கொள்கையை ஆணிவேருடன் பிடுங்கி எறிகின்றார்கள் நம் நாட்டு உலமாஉகள்.
كَلِّمِ النَّاسَ عَلَى قَدْرِ عُقُوْلِهِمْ
என்றும் ஒரு வசனம் வந்துள்ளது. வசனங்கள் மாறுபட்டாலும் இரண்டு வசனமும் தருகின்ற கருத்தும் ஒன்றுதான்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பேசுவதற்கு மட்டுமுள்ளதல்ல இந்த நபீ மொழி. பொதுவாக எது பேசுவதாயினும் கேட்போருக்கு விளங்கும் பாணியில் பேச வேண்டுமென்பதே சுருக்கமாகும்.
ஸூபிஸவாதிகளான நாங்கள் 1979ம் ஆண்டிலிருந்து ஞானத்தை இன்று வரை பகிரங்கமாகவே பேசி வருகின்றோம். ஆயினும் விளங்கும் பாணியிலும், கேட்போரின் வயதையும், தரத்தையும் கவனித்து விளங்கப்படுத்தியே சொல்லி வருகிறோம்.
ஈமான் என்றால் என்ன? ஸூபிஸம் என்றால் என்னவென்றே தெரியாதிருந்த மக்கள் இன்று எதார்த்தம் புரிந்து அவர்களும் ஞானம் பேசுமளவு முன்னேறிவிட்டார்கள்.
இன்னும் கேரளா முப்தீ என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள்.
وَالْمُكَفِّرُ لِلْأَوْلِيَاءِ وَأَقَاوِيْلِهِمْ لَا مَحَالَةَ ضَالٌّ غَوِيٌّ، وَمَارِقٌ عَنْ نَهْجِ الصِّرَاطِ السَّوِيِّ،
பொருள்: அவ்லியாஉகளை “காபிர்”களாக்குபவனும், அவர்களின் பேச்சுக்களை “குப்ர்” என்று சொல்பவனும் சந்தேகமின்றி வழி கெட்டவனும், வம்பனும், நேரான பாதையிலிருந்து சறுகிச் சென்றவனுமேயாவான்.
குண்டுதாரி சஹ்றான் நான்கு இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்தி சுமார் 300 உயிர்களைக் கொன்றொழித்தான்.
ஆயினும் உலமா சபையின் “பத்வா” குழு ஒரே வார்த்தையால் உலகம் முழுவதிலும் ஸூபிஸக் கருத்தை ஏற்றுக் கொண்ட இலட்சக் கணக்கான முஸ்லிம்களை “பத்வா” என்ற வாளால் கொன்றொழித்துவிட்டார்கள். இதற்கு ஆதாரம்
تَكْفِيْرُ الْمُسْلِمِ كَقَتْلِهِ
இது “ஸஹீஹ்” ஆன ஹதீதாகும். ஒரு முஸ்லிமை காபிர் – என்றோ “முர்தத்” என்றோ சொல்வது அவனைக் கொலை செய்வது போன்றதாகும் என்ற ஹதீதேயாகும்.
இந்த ஹதீதுக்கும் வலிந்துரை கூறி திசையை மாற்றிவிடுவார்களோ!
தொடரும்…