தொடர் – 04
(அற்புத மனிதன் அப்துல் வஹ்ஹாப்)
எனது “பத்வா”வில் கையெழுத்திட்டவர்கள் மற்றும் மதிப்புரை வழங்கிய அறிஞர்களில் அஸ்ஸெய்யித் அப்துல் வஹ்ஹாப் பாகவீ அவர்களும் ஒருவராவார்கள். அவர்களின் மதிப்புரையும், கையெழுத்தும் இத்தொடரில் இடம் பெற்றுள்ளன.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் “ஊடுருவல்” “பத்வா”வுக்கு மறுப்பாக நான் எழுதிய “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற 2000 பக்கங்களுக்கும் அதிக பக்கங்கள் கொண்ட எனது “பத்வா”வுக்கு இந்தியா – தமிழ் நாடு மார்க்க அறிஞர்கள் – உலமாஉகளிற் சிலர் வழங்கிய ஒப்பத்தை பதிவிட்டு வருகிறேன்.
கம்பம் நகரில் அம்பா நாயகம் தைக்காவில் தனது தந்தைக்கு அருகில் அடக்கம் பெற்றுள்ள அல்வலிய்யுல் காமில் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எனது “பத்வா”வில் கையெழுத்திட்ட விபரம் ஆதாரத்தோடு பதிவு செய்து விட்டேன்.
இதேபோல் நாகூர் ஷரீபில் வாழ்கின்ற நடமாடும் வலீ அஷ்ஷெய்கு “ஹிதாயதுல் அனாம்” புகழ் முஹம்மத் பாகர் ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எனது “பத்வா”வில் கையெழுத்திட்ட விபரமும் ஆதாரத்தோடு பதிவு செய்து விட்டேன்.
இன்னுமிதேபோல் கேரளா மாநித்தைச் சேர்ந்த முப்தீ அஷ்ஷெய்கு அப்துல் காதிர் முஸலியார் அவர்கள் எனது “பத்வா”வில் கையெழுத்திட்ட விபரமும் ஆதாரத்தோடு பதிவு செய்துவிட்டேன்.
இத் தொடரில் மௌலவீ அஸ்ஸெய்யித் அப்துல் வஹ்ஹாப் பாகவீ அவர்களின் கையெழுத்துடன் எனது “பத்வா”வில் பதிவான அவர்களின் மதிப்புரையும், கையெழுத்தும் இடம்பெறுகின்றன.
அப்துல் வஹ்ஹாப் பற்றி சில வரிகள்.
1966ம் ஆண்டு நான் தமிழ் நாடு மாயவரத்தை அடுத்துள்ள நீடூர் “மிஸ்பாஹுல் ஹுதா” அறபுக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.
நாகூர் ஷரீபில் நடந்த ஒரு மீலாத் விழாவில் பேசுவதற்கு ஒரு மௌலவீ தேவையென்று அவ்விழாக் குழுத் தலைவர் எமது கல்லூரி அதிபரிடம் கேட்டார். அந்நேரம் எனக்கு 22 வயது. அக்காலம் நான் பேச்சாளன் என்று பெயர் பெற்ற காலம் அல்ல. எனினும் அதிபர் அவர்கள் என்னையே அங்கு அனுப்பி வைத்தார்கள். என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? என்று அறியாத சூழ் நிலையில் அல்லாஹ்வையும், றஸூல் நாயகம் அவர்களையும் நம்பினவனாக நாஹூர் சென்றேன். நான் நாஹூரில் கால் பதித்தது அதுவே முதல் தடவையாகும். சனக் கூட்டமோ சொல்ல முடியாது. பெருந் திரளான மக்கள் கூடியிருந்தனர். அனுபவம் பெற்ற பல பேச்சாளர்கள் வந்திருந்தார்கள். நான் பேசவில்லை. ஷாஹுல் ஹமீத் பாதுஷா எஜமான் தான் எனதுருவில் பேசினார்கள் போலும். அழகாகவும், ஆழமாகவும் பேசி முடித்தேன். அல்ஹம்துலில்லாஹ்!
அதன்பின் தர்ஹாவுக்கு அண்மையிலுள்ள குளத்தடி சென்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அங்கு ஒருவர் வந்து சற்று தூரத்தில் அமர்ந்து தனது நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்நேரம் அவர் யாரென்று நான் அறியவில்லை. எனினும் நான்தான் கூட்டத்தில் பேசிய இலங்கையர் என்பதை அறிந்து கொண்ட அவர் என்னை அழைத்தார். இருவரும் அறிமுகமாகி அளவளாவிக் கொண்டுடிருந்த போது அவர் பின்வருமாறு என்னிடம் சொன்னார்.
(நீங்கள் சிறு வயதுள்ளவர். அனுபவம் குறைந்தவர். எனினும் உங்களின் பேச்சில் ஆழமான ஞானக் கருத்துக்களை அறிய முடிந்தது. உங்களின் பேச்சிலிருந்து நீங்கள் இலங்கையர் எனவும் அறிய முடிந்தது. நீங்கள் உங்கள் நாட்டுத் தமிழில் சில வார்த்தைகள் பேசினீர்கள். ஆயினுமவை பெருங் கூட்டத்தில் பேசுவதற்கு பொருத்தமற்றவையாகும். நீங்கள் பேசும் போது “அந்த எதிரி பயத்தால் சாரத்தை கிளப்பிக் கொண்டு ஓடினான்” என்று பேசினீர்கள். இந்த இடத்தில் உயர்த்திக் கொண்டு ஓடினான் என்று பேசுவதே பொருத்தமானதென்று கூறினார். அதன் பிறகு நீங்கள் எதிர் காலத்தில் ஞானத்துறையில் சிறந்த பேச்சாளராக ஒளிர்வதற்கான அறிகுறிகள் உள்ளன என்றும் கூறினார்)
அன்று முதல் தொடர்ந்து மூன்றாண்டுகள் அவரோடு தொடர்பாக இருந்தேன். இந்தியாவிலிருந்து நான் இலங்கை வந்த பிறகும் அவருடன் கடிதம் மூலம் தொடர்பாக இருந்தேன். “நாஹூர் ஷரீப்” செல்லும் போதெல்லாம் அவரைச் சந்திக்காமல் வரமாட்டேன்.
1979ம் ஆண்டு உலமாஉகள் எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” என்று “பத்வா” வழங்கிய பின் அவர்களின் “பத்வா” பிழையென்று “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற பெயரில் நான் ஒரு “பத்வா” எழுதி 1982ம் ஆண்டு அதை தமிழ் நாட்டுக்கு எடுத்துச் சென்று அங்கு பிரசித்தி பெற்ற உலமாஉகளிற் சிலரிடம் கையெழுத்தும், மதிப்புரையும் பெற்றேன்.
இது தொடர்பாக எனது “பத்வா”வில் கையெழுத்திட்ட மூன்று மகான்களின் விபரங்களை கடந்த தொடர்களில் பதிவு செய்திருந்தேன். வாசிக்கத் தவறியவர்கள் அவற்றை எனது முகநூல் பக்கத்தில் தேடி வாசித்தறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
1982ம் ஆண்டு நாஹூர் ஷரீப் சென்ற நான் மதிப்பிற்குரிய மௌலவீ அப்துல் வஹ்ஹாப் பாகவீ அவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்து உலமா சபையினர் வழங்கிய “பத்வா”வையும் எனது “பத்வா”வையும் அவர்களிடம் கொடுத்து எனது “பத்வா” சரியாக இருந்தால் அதில் கையெழுத்திட்டுத் தருமாறும், பிழையாயிருந்தால் எனக்கு விளக்கி வைக்குமாறும் கேட்டேன்.
அதற்கவர்கள், நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதை நானும் ஒரு தரம் செவியேற்க வேண்டும். அதன் பின் கையெழுத்திடலாம் என்று கூறினார்கள். அதன் படி அவர்களின் இல்லத்திலேயே வீடியோ கெஸட் போடப்பட்டு அவர்களும், இன்னும் அவர்களின் “முரீது”களிற் சிலரும் செவியேற்றார்கள்.
ஹழ்றத் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் என்னைப் பாராட்டி பொன்னாடி போர்த்தி எனது “பத்வா”வில் கையெழுத்திட்டும் தந்தார்கள்.
அவர்கள் அறபு மொழியில் எழுதிய மதிப்புரை, கெயெழுத்து அடங்கிய பிரதியொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எழுதிய வசனங்களுக்கான மொழியாக்கத்தை இங்கு தருகிறேன்.
(அல்லாஹ்வின் “வஹ்தானிய்யத்”தைக் கொண்டே – அவன் ஒருவன் என்று படைப்புகள் யாவும் மொழிந்த அல்லாஹ்வுக்கு எல்லாப் புகழும். ஸலவாத்தும், ஸலாமும் சங்கைமிகு றசூல் நாயகம் அவர்கள் மீது உண்டாவதாக!
மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ எழுதிய கையெழுத்துப் பிரதியை வாசிப்பதற்கு அல்லாஹ் எனக்கு அருள் செய்தான். அந்தப் பிரதியில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் சரியானவையாகும். இந்த “பத்வா” எல்லோரும் விளங்கக் கூடியதுமல்ல. பாடம் படிக்க கூடியதுமல்ல.
அல்லாஹ் அனைவருக்கும், குறிப்பாக எழுதியவருக்கும் அருள் பாலிப்பானாக!
அல்அப்துல் பகீர்
ஸெய்யித் அப்துல் வஹ்ஹாப்
நாஹூர் ஷரீப் (11.07.1982)
இவர் பற்றி சில வரிகள்.
இவர் நாஹூர் நாயகம் ஷாஹுல் ஹமீத் பாதுஷா எஜமான் அவர்கள் பிள்ளைப் பாக்கியமில்லாதிருந்த ஒரு பெண்ணுக்கு வெற்றிலை ஓதிக் கொடுத்து அதன் மூலம் அப்பெண்ணுக்குப் பிறந்த அஸ்ஸெய்யித் தாதா யூஸுப் வலிய்யுல்லாஹ் அவர்களின் பேரப்பிள்ளைகளில் ஒருவராவார்கள்.
அறபு, உர்து, தமிழ், ஆங்கிலம் நான்கு மொழிகளும் அறிந்த ஒருவருமாவார்கள்.
இளமையில் திருமணம் செய்து ஒரு சில மாதங்கள் மட்டும் மனைவியுடன் வாழ்ந்து பின்னர் விவாகரத்துச் செய்தவராவார்கள்.
இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “இஹ்யா உலூமித்தீன்” எனும் நூலை கட்டம் கட்டமாக பாடம் பாடமாக மொழியாக்கம் செய்தவருமாவார்கள்.
“தல்ஸமாத்” எனும் வைத்தியக் கலையில் நம்பத் தகுந்தவராக விளங்கினார்கள். இவர் நாஹூர் ஷரீப் நகரிலேயே இருந்து கொண்டு சிங்கப்பூர், மலேசியா, ஹொங்கொங், பினாங்கு முதலான நாடுகளின் நகரங்களில் வாழும் இந்திய வம்சா வழியினருக்கு “போன்” மூலம் ஊதிப் பார்த்தல், மற்றும் வைத்தியம் செய்தல் போன்ற நற் கருமங்கள் செய்து வந்தார்கள். மனோ தத்துவத்தின் அடிப்படையில் அவரின் வைத்தியம் அமைந்திருந்தது யாவரையும் கவர்ந்திருந்தது.
மேலே எழுதியதுபோல் இவர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா அவர்களின் பெறா மகன் அஸ்ஸெய்யித் யூஸுப் தாதா நாயகம் அவர்களின் வழித் தோன்றல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாஹுல் ஹமீத் பாதுஷா அவர்களின் ஞானகுரு முஹம்மத் கவ்து அல் குவாலீரீ அவர்களுடன் இவர் ஆன்மீக தொடர்பில் உள்ளவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நாஹூர் தர்ஹாவில் ஓர் இடமுண்டு. ஒருவர் பக்தியுடனும், நாஹூர் நாயகம் அவர்களை கனவில் காண வேண்டும் என்ற எண்ணத்துடனும் அவ் இடத்தில் இரவில் உறங்கினால் அவர்களைக் காணும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.
இந்த இடத்தை எனக்கு காண்பித்தவர் ஸெய்யித் அப்துல் வஹ்ஹாப் றஹிமஹுல்லாஹ் அவர்கள்தான். அவ்விடத்தில் உறங்கி பாதுஷா நாயகமவர்களை கனவில் காண்பதற்கு பல முறை முயற்சித்தேன். அப்பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. எனினும் இன்னோர் இடத்தில் உறங்கும் போது அவர்களைக் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!
இதுவரை எனது “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற “பத்வா”வுக்கு மதிப்புரை வழங்கி அதில் கையெழுத்திட்ட நான்கு மகான்களின் மதிப்புரைகளையும், கையெழுத்துகளையும் பதிவு செய்துள்ளேன்.
ஒருவர் ஒரு நூலை அல்லது ஒரு “பத்வா”வை எழுதிவிட்டு அறிஞர்களின் மதிப்புரையோடும், கையெழுத்துக்களோடும் அதை அச்சிட்டு வெளியிடுவது வழக்கம். இதன் நோக்கம் என்னவெனில் அறிஞர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் அந்த நூலின் மீது நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தி வைப்பதேயாகும். ஏனெனில் மனிதர்களின் சுவாபங்கள் ஒரேமாதிரியானவை அல்ல. சிலர் எவரின் மதிப்புரை, கையெழுத்தும் இல்லாமலேயே நூலால் கவரப்படுவார்கள். இன்னும் சிலர் – அதிகமானோர் மதிப்புரைகள் மூலமும், கையெழுத்துக்கள் மூலமும் கவரப்படுவார்கள். இவ்வாறு மனிதனின் சுவாபங்கள் புத்தக விடயத்தில் மட்டுமன்றி எல்லா விடயங்களிலும் காணப்படும்.
ஆரம்ப காலங்களில் யார் எந்த நூல் எழுதினாலும் எவரிடமும் மதிப்புரையோ, கையெழுத்தோ எடுத்ததில்லை. இமாம் ஷாபிஈ, இமாம் அபூ ஹனீபா, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் மாலிக் றஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் போன்று.
அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கும், இக்காலத்தில் வாழும் மக்களுக்கும் பெரிய வித்தியாசமுண்டு. இதனால்தான் இக்காலத்தில் நூல் எழுதுபவர்களும், “பத்வா” எழுதுபவர்களும் ஏனைய அறிஞர்களிடம் கையெழுத்து எடுக்கின்றனர். இந்த விடயத்தில் உலமா சபைக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் எந்த “பத்வா” எழுதினாலும் அவர்களுக்கு எவரின் கையெழுத்தும் தேவையில்லை. அந்த அளவு அவர்களின் வேலைகள் யாவும் நியாயமானவையாகும்.
காத்தான்குடிக்கு வந்த ரிஸ்வி முப்தீ அவர்கள், “நாம் கொடுத்த “பத்வா”க்களில் எந்தவொரு “பத்வா”வையும் வாபஸ் பெற்றதற்கு வரலாறே கிடையாது” என்று மார்தட்டிச் சொல்லிவிட்டுப் போயுள்ளார். அல்லாஹ் மிக அறிந்தவன்.
எல்லாமறிந்த, எல்லாம் வல்ல அல்லாஹ்வே முதலில் தான் சொன்னதை வாபஸ் பெற்று அதற்கு மாறாக பின்னால் சொல்லியுள்ளான் என்பதற்கு திருக்குர்ஆனில் உள்ள “நாஸிக் – மன்ஸூக்” வசனங்கள் ஆதாரங்களாயிருக்கும் நிலையில் முப்தி ஸாஹிபு அவ்வாறு சொன்னது أنا ربّكم الأعلى “அன றப்புகுமுல் அஃலா” நான்தான் உங்களின் பெரிய றப்பு என்று அவன் – فَرَّ عَوْنْ சொன்னது போலுள்ளது.
முற்றும்