Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்தொழுபவன் தொழுகை முடியும் வரை அல்லாஹ்வுன் உரையாடுகின்றான் என்ற ஹதீதின்படி இறை நினைவில் தொழுவதற்கும், உள்ளச்சத்தோடு...

தொழுபவன் தொழுகை முடியும் வரை அல்லாஹ்வுன் உரையாடுகின்றான் என்ற ஹதீதின்படி இறை நினைவில் தொழுவதற்கும், உள்ளச்சத்தோடு தொழுவதற்கும் வழி என்ன?

தொடர் – 01

அடியான் தொழுகையில் இறைவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவனை பெருமானார் அழைத்தார்களாயின் அவர்களுக்கு பதில் சொல்வது அவசியமா? தொழுகையை தொடர்வது அவசியமா?

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” குழு இதற்கு ஒரு “பத்வா” வழங்கி வழிகாட்ட வேண்டும்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஒரு முதலாளியிடம் தொழில் செய்யும் தொழிலாளி அவருடன் பேசிக் கொண்டிருக்கும் வேளை அவரை விடத் தரம் குறைந்த ஒருவருடன் பேசுவதற்காக முதலாளியுடனான பேச்சை துண்டிப்பது கூடாது. அதாவது பொருத்தமற்றதாகும். அல்லது தண்டனைக்குரிய குற்றமாகும். தவிர்க்க முடியாத இக்கட்டான கட்டத்தில் மட்டுமேயொழிய.

உதாரணமாக முதலாளியிடம் தொழில் செய்கின்ற ஒருவன் அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அதே முதலாளியிடம் தொழில் செய்கின்ற இன்னொருவனோடு பேசுவதற்காக முதலாளியின் தொடர்பை துண்டித்தலும் கூடாது. இதுவும் பொருத்தமற்றதேயாகும். அவ்வாறு சொல்வதை விட கூடாதென்று சொல்வதே பொருத்தமானது.

எனினும் தொழிலாளி முதலாளியுடன் பேசிக் கொண்டிருக்கும் வேளை முதலாளியின் மிக நெருங்கிய நண்பனோடு அல்லது உறவினரோடு அவர் பேசுவதற்காக முதலாளியுடனான பேச்சை துண்டிப்பது கூடாதென்றோ, பொருத்தமற்றதென்றோ சொல்ல முடியாது. சொல்வதாயின் துண்டிப்பது நல்லதென்றே சொல்ல வேண்டும்.

قال النبيّ صلّى الله عليه وسلّم: إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلَاتِهِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ، وَإِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ

உங்களில் ஒருவன் தொழ நின்றால் – தொழத் தொடங்கினால் அவன் தனது “றப்பு” அல்லாஹ்வுடன் பேசுகிறான். நிச்சயமாக அவனின் அல்லாஹ் அவனுக்கும், “கிப்லா”வுக்குமிடையில் உள்ளான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.

இந்த ஹதீதின் மூலம் தொழுபவன் அல்லாஹ்வுடன் சம்பாசிக்கிறான் – பேசுகிறான் என்ற விடயமும், அல்லாஹ் அவனுக்கும், “கிப்லா”வுக்கும் – “கஃபா”வுக்கும் இடையில் உள்ளான் என்ற விடயமும் விளங்கப்படுகின்றன.

இந்த ஹதீதில் மேற்கண்ட இரண்டு விடயங்கள் விளங்கப்பட்டாலும் கூட எமது தலைப்புக்கு தேவையான அம்சம் ஒன்று மட்டும்தான். அது தொழுகையில் அடியான் அல்லாஹ்வுடன் பேசுவதாகும். ஆகையால் அது பற்றி மட்டும் எழுதுகிறேன்.

இன்று தொழுபவர்களில் அநேகரிடம் தாம் அல்லாஹ்வுடன் பேசுகின்றோம் என்ற உணர்வு இல்லாமற் போய்விட்டது. தொழுபவனுக்கு இந்த உணர்வு தானாகவே வர வேண்டும். அநேகருக்கு இந்த உணர்வு வராமற் போவதற்கான காரணம் அவர்களிடம் “தஸவ்வுப்” எனும் ஸூபிஸம் இல்லாமற் போனதேயாகும். இந்த உணர்வு இருந்தால் மட்டும்தான் தொழுகை பக்தியுள்ளதாக அமையும். அவ்வாறு தொழுதவர்களே வெற்றி பெற்றவர்களுமாவர்.

தொழுகைக்காக முதல் “தக்பீர்” சொன்னது முதல் ஸலாம் சொல்லும் வரையிலான இடைப்பட்ட நேரம் முழுவதும் அல்லாஹ்வின் எண்ணத்திலேயே தொழுபவன் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் எண்ணம் – அவனின் நினைவு தொழுபவனின் உள்ளத்தை விட்டும் ஒரு நொடி நேரமேனும் இல்லாமற் போனால் அவனின் தொழுகை உயிரோட்டமுள்ள தொழுகையாகாது.

قال الشّيخ تاج الدين عطاءُ الله السِّكّندري خليفةُ خليفةِ الشّاذلي رضي الله عنهم، الأعمال صورٌ قائمةٌ، وأرواحُها وجودُ سرِّ الإخلاص فيها، (الحِكم للشّيخ المذكور)

ஷாதுலீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபா அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபா தாஜுத்தீன் அதாஉல்லாஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “ஹிகம்” என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

“அமல்கள் என்பன வெறும் பொம்மைகளேயாகும். உருவங்களேயாகும். அவற்றுக்கான உயிர்கள் அவ் அமல்கள் செய்கின்ற நேரம் அவற்றில் “இக்லாஸ்” எனும் கலப்பில்லா நிலை இருப்பதேயாகும்”

மனிதன் செய்கின்ற எந்த ஓர் “அமல்” வணக்கமாயினும் அது கலப்பின்றி சுத்தமானதாயிருக்க வேண்டும். கலப்பின்றி இருக்க வேண்டும் என்றால் அது எவ்வாறு என்பதை வணக்கம் செய்யுமுன் தெரிந்து கொள்வதவசியம்.

இதில் இரண்டு வகையுண்டு. ஒன்று. முகத்துதி, புகழ், பெருமை, நயவஞ்சகம் போன்ற அசூசிகள் கலக்காத அமல் – வணக்கம்.

இரண்டு: ஹக்கு வேறு, கல்கு வேறு (படைத்தவன் வேறு, படைப்பு வேறு) எனும் “ஙெய்ரிய்யத்” என்ற அசூசி கலக்காத வணக்கம். இவ்விரு வகைச் சுத்தங்களுடனும் செய்யப்படுகின்ற வணக்கம் மட்டும்தான் உயிரோட்டமுள்ள வணக்கமாகும். இதற்கு முரணானது வணக்கமாக கணிக்கப்படமாட்டாது.

ஆன்மிகத்தின் ஆரம்பப் படியிலுள்ள ஒருவன் முந்தின வகையில் சொல்லப்பட்ட அசுத்தங்களை நீக்கி அவை கலக்காமல் வணக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

ஆன்மிகத்தில் ஓரளவு முன்னேறிய ஒருவன் பிந்தின வகையில் சொல்லப்பட்ட படி அசுத்தங்களை நீக்கி அவை கலக்காமல் வணக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

முந்தின வகையில் வணக்கம் செய்வது முயற்சி உள்ளவர்களுக்கு சாத்தியமான இலகுவான ஒன்றுதான். ஆயினும் இரண்டாம் வகையில் வணக்கம் செய்வது சற்றுக் கடினமானதேயாகும். ஆயினும் “ஹிம்மதுர் ரிஜால் தஹ்திமுல் ஜிபால்” هِمَّةُ الرِّجَالْ تَهْدِمُ الْجِبَالْ தொழுகை மட்டுமன்றி வணக்கம் எதுவாயினும் அதற்கு குறிப்பிட்ட நிபந்தனை அவசியம்தான்.

இமாம் முஹம்மத் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு அஹ்மத் என்ற பெயரில் ஒரு சகோதரர் இருந்தார். இமாம் ஙஸ்ஸாலீ ஒரு பள்ளிவாயலில் இமாமாக கடமை செய்த காலம் அது. அவர்களின் தம்பி அஹ்மத் பள்ளிவாயலுக்குத் தொழச் சென்றால் சகோதரன் ஙஸ்ஸாலீ அவர்களைப் பின்பற்றாமல் தனிமையாக தொழுதுவிட்டு வந்துவிடுவார்.

இதை அவதானித்து வந்த ஊர் மக்கள் இமாம் ஙஸ்ஸாலீ அவர்களிடம் சகோதரனின் நடவடிக்கை பற்றி முறையிட்டார்கள். இமாம் அவர்களுக்கு அவமானமாயிற்று. தனது தாயிடம் சென்று தம்பியின் நடவடிக்கை பற்றி முறையிட்டார்கள். என்னைப் பின்பற்றித் தொழுமாறு பணியுங்கள் என்றும் தாயிடம் சொன்னார்கள்.

தாயார் மகன் அஹ்மத் அவர்களை அழைத்து விசாரித்த போது அவர் தாயிடம் உம்மா! சகோதரன் ஙஸ்ஸாலீ இரத்தத்தில் நின்று தொழுகை நடத்துகிறார். இது தவறு. தொழுகை நிறைவேறாது. நான் அவரைப் பின்பற்றி எவ்வாறு தொழ முடியும்? இரத்தம் அசுத்தமல்லவா? என்று கேட்டார். தாய்க்கு ஒன்றும் புரியவில்லை. மூத்த மகன் முஹம்மத் ஙஸ்ஸாலீயிடம் இது பற்றி வினவினார்கள். அவர் தம்பியிடமே அதற்கு விளக்கம் கேளுங்கள் என்று தாயிடம் சொன்னார்கள். தாய் மகன் அஹ்மதிடம் விளக்கம் கேட்டார்கள்.

உம்மா! சகோதரன் முஹம்மத் ஙஸ்ஸாலீ பெண்களின் “ஹைழ்” மாதத்தீட்டு சம்பந்தமான ஆய்விலேயே இராப் பகலாக சிந்தனை பண்ணிக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் தொழுகையின் போதும் அதே எண்ணத்திலிருப்பது முறையல்ல. இதனால் நான் அவரை பின்பற்றித் தொழ முடியாது என்று கூறினார்.

தொழுகின்ற ஒருவன் தொழுகைக்காக “நிய்யத்” செய்து முதலாவதாக அவன் சொல்கின்ற “அல்லாஹு அக்பர்” “தக்பீறதுத் தஹ்ரீம்” என்ற பெயரால் அழைக்கப்படும். இதன் பொருள் “ஹறாமாக்கி வைக்கும் தக்பீர்” என்பதாகும். இதற்கு இவ்வாறு “ஷரீஆ”வில் பெயர் வரக் காரணம் இத் “தக்பீர்” சொன்னது முதல் தொழுகை முடியும் வரை “ஹலால்” ஆக இருந்த பல விடயங்கள் “ஹறாம்” ஆகிவிடுகின்றன.

உதாரணமாக உண்ணல், உறங்கல், பருகுதல், பேசுதல், தொடர்ச்சியாக கை போன்ற உறுப்புக்களை அசைத்தல் என்பன “ஹறாம்” ஆகிவிடுகின்றன. இது வெளிப்பார்வையில் மட்டும் தான். ஆயினும் குறித்த “தக்பீர்” இவற்றை மட்டும் தடை செய்யவில்லை. தொழுபவனின் உள்ளத்தில் அல்லாஹ்வின் எண்ணம் – நினைவு தவிர வேறு எந்த நினைவு வருவதையும் அந்த தக்பீர் ஹறாமாக்கிவிடும்.

இன்று தொழுபவர்களில் அநேகர் முதலில் சொல்லப்பட்டவற்றை தவிர்த்துக் கொள்கிறார்கள். ஆயினும் இரண்டாவதாக சொல்லப்பட்ட விடயத்தில் 90 வீதமானோர் கோட்டைவிடுகின்றார்கள். இவர்கள் “ஙெய்ரிய்யத்” எனும் வேற்றுமையில் மூழ்கிப் போனார்கள்.

முதல் தக்பீர் சொன்னதிலிருந்து ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பதற்கிடையில் ஆயிரம் எண்ணங்கள் அவர் உள்ளத்தில் முட்டி மோதிச் செல்கின்றன. இவற்றைத் தடை செய்ய வேண்டும். இவற்றைத் தடை செய்வதற்கான வழி எது என்பதை மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியவர்கள் உலமாஉகளேயாவர். சொல்லிக் கொடுக்கின்றார்களாயினும் அல்லாஹ்வின் நினைவில் பக்தியுடன் தொழுங்கள் என்று மட்டும்தான் சொல்லிக் கொடுக்கின்றார்களேயன்றி அல்லாஹ்வின் நினைவில் நிற்பதற்கான வழியை சொல்லிக் கொடுக்கிறார்களில்லை. உணவைக் கொடுக்கிறார்களேயன்றி உயிரைக் கொடுக்கிறார்களில்லை.

சிலர் இப்படியும் சொல்லிக் கொடுப்பார்கள். தொழுகின்றவன் ஓதும் ஓதலின் பொருளை அவன் கவனித்தால் அது அல்லாஹ்வின் நினைவில் நின்றதாகிவிடும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். நான் அவர்களிடம் பொருள் என்பது அல்லாஹ்வா? என்று கேட்க விரும்புகிறேன். ஆம் என்று அவர்கள் சொன்னால் திருக்குர்ஆன் வசனத்தில் பன்றியை குறிக்கும் சொல், நாயை குறிக்கும் சொல், பிர்அவ்ன் என்பவனைக் குறிக்கும் சொல்லை மொழியும் போது அவற்றை நினைக்க வேண்டுமே! அவ்வாறாயின் அவையெல்லாம் அல்லாஹ் என்றா நம்ப வேண்டும்? ஆம் என்று அவர்கள் சொன்னால் அவர்களை உலமா சபையிடம் ஒப்படைத்து அவர்களுக்கு என்ன “பத்வா” என்று கேட்க வேண்டும்.

இவ்வாறு செய்வதும் பிழை என்றால் தொழுகையில் மனதை ஒரு நிலைப்படுத்துவது எவ்வாறு என்பதற்கு வழி சொல்ல வேண்டியவர்கள் உலமாஉகளேயாவர்.

“பத்வா” வழங்கும் முப்தீகளே!

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ، الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

“தமது தொழுகையில் உள்ளச்சத்துடன் தொழுகின்ற விசுவாசிகள் நிச்சமாக வெற்றி பெற்று விட்டனர்” என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

இத்திரு வசனத்தின்படி நாம் செயல்பட்டு வெற்றியாளர்களாக மாறுவதற்கு வழிகாட்டுங்கள். “பத்வா” வழங்கி உதவுங்கள் என்று மக்கள் கேட்கின்றனர்.

மனிதன் உறங்கும் நேரம் தவிர ஏனைய எல்லா நேரங்களிலும் அவனின் உள்ளம் ஏதாவதொன்றோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். இது உள்ளத்தின் இயல்பு. ஏதாவதொன்றோடு சம்பந்தமின்றி ஒரு நொடி நேரம் கூட அது சும்மா இருக்காது. நாம் அதற்கு ஏதாவதொரு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நாம் தொழும் போது உள்ளத்திற்கு என்ன வேலை கொடுக்க வேண்டும்? நாம் ஓதக் கூடிய ஓதல்களின் பொருளைக் கவனிக்க வேண்டும் என்று நீங்கள் கூறினால் பொருள் என்பது அல்லாஹ் அல்ல. ஆகையால் அதில் கவனம் செலுத்துவது அல்லாஹ்வில் கவனம் செலுத்துவதாகாது. இது தவிர வேறென்னதான் செய்யலாம்? பொருளைக் கவனிப்பதிலும் சிக்கல்தான் ஏற்படும். “கின்ஸீர்” என்ற சொல்லை மொழியும் போது அதை நினைத்தாக வேண்டும். “கல்புன்” என்ற சொல்லை மொழியும் போது நாயை நினைத்தாக வேண்டும். “பிர்அவ்ன்” என்ற சொல்லை மொழியும் போது அவனை நினைக்க வேண்டும். இவ்வாறுதான் செய்ய வேண்டுமென்றால் இவற்றை நினைப்பது அல்லாஹ்வை நினைத்ததாகுமா? எதையும் நினைக்காமல் தொழ வேண்டுமென்று நீங்கள் சொன்னால் அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். ஒருவன் தனது ஞான குருவை நினைத்துக் கொண்டு தொழ வேண்டும் என்று நீங்கள் சொன்னால் இதுவும் பிழையானதாகிவிடும்.

எனவே, திருக்குர்ஆனின் கூற்றுப்படி உள்ளச்சத்தோடு தொழுவதற்கு வழிகாட்டுமாறும், அதற்கு ஒரு “பத்வா” வழங்குமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன். உங்களின் விடை கண்டபின் தொடர்கிறேன்.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments