Monday, October 14, 2024
Homeஎழுத்தாக்கங்கள்தொழுபவன் தொழுகை முடியும் வரை அல்லாஹ்வுன் உரையாடுகின்றான் என்ற ஹதீதின்படி இறை நினைவில் தொழுவதற்கும், உள்ளச்சத்தோடு...

தொழுபவன் தொழுகை முடியும் வரை அல்லாஹ்வுன் உரையாடுகின்றான் என்ற ஹதீதின்படி இறை நினைவில் தொழுவதற்கும், உள்ளச்சத்தோடு தொழுவதற்கும் வழி என்ன?

தொடர் – 02

தொழுகையில் அல்லாஹ்வுடன் உரையாடிக் கொண்டிருப்பவனை யாராவது அழைப்பது ஆகுமா? யாராவது அவ்வாறு அழைத்தால் அவன் தொழுகையை முறித்துவிட்டு அவருக்கு பதில் சொல்வதவசியமா?

இரண்டு விஷயமும் கூடாது. தொழுகின்றவனை அழைப்பது அவனின் சிந்தனையை திசை திருப்புவதாகவும், அல்லாஹ்வுடனான அவனின் உரையாடலைக் கலைப்பதாகவும் ஆகும். இது பொதுவாகப் பாவம்தான்.

தொழுகின்றவன் அழைத்தவனுக்கு பதில் சொல்வதாலும் மேற்கண்ட இரண்டு விபரீதங்களும் ஏற்படவே செய்யும்.

ஆகையால் பொதுவாக தொழுது கொண்டிருப்பவனை அழைப்பதும், அவன் அழைத்தவனுக்கு பதில் கொடுப்பதும் அவசியம் தவிர்க்கப்ட வேண்டியவையாகும்.

ஆயினும் இவ்விடயத்தில் உலகில் வாழ்ந்து மறைந்தும் மறையாமலிருக்கும், மரணித்தும் உயிரோடிருக்கும் மா மனிதர் எம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டும் தொழுகின்ற ஒருவனை அழைப்பதற்கும், அழைக்கப்படுபவன் அவ்வழைப்புக்கு விடை சொல்வதும் கடமை என்பதற்கும் திருக்குர்ஆனில் ஆதாரமுள்ளது.

ஒரு சமயம் தொழுது கொண்டிருந்த தோழர் ஒருவரை எம்பிரான் அவர்கள் அழைத்தார்கள். அவர் அழைப்பை செவியேற்றும் கூட தனது தொழுகையை முடிப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

தொழுகையை முடித்தபின் நபீகளார் அவர்களிடம் வந்தார். நபீகளார் அவரிடம் நான் அழைத்தபோது நீங்கள் ஏன் வரவில்லை? என்று வினவினார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் றஸூலே! நாள் தொழுது கொண்டிருந்தேன் என்றார்.

அல்லாஹ் திருக்குர்ஆனில்

اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ

அல்லாஹ்வுக்கும் றஸூலுக்கும் நீங்கள் பதில் சொல்லுங்கள். அவர் அழைத்தால் என்று கூறியிருப்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். (24-8)

இத்திரு வசனத்தின் மூலம் ஒருவன் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அவனை நபீகள் நாயகம் மட்டும் அழைக்கலாம் என்பதும், அழைக்கப்பட்டவன் அவ்வழைப்புக்கு உடனே பதில் சொல்வது அதாவது தொழுகையை முறித்துவிட்டு பதில் சொல்வது கடமை என்பதும், இந்த விபரம் குறித்த நபீ தோழருக்கு தெரியாமற் போயிற்று என்பதும் தெளிவாகின்றன.

தொழுகின்றவன் ஒரு நாட்டின் மன்னராயிருந்தாலும், ஜனாதிபதியாயிருந்தாலும் பொதுவாக அவன் எந்தப் பதவியிலிருந்தாலும் அவன் முஸ்லிமாயிருந்தால் மேற்கண்ட அச்சட்டத்தில் அடங்குவான்.

நபீமாரிலும் எங்கள் நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டுமே இந்த விஷேடமும், இது போன்ற இன்னும் பல விஷேடங்களும் இருந்ததற்கு வரலாறுகளைக் காண முடிகிறது.

اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ

அல்லாஹ்வுக்கும், றஸூலுக்கும் நீங்கள் விடை கூறுங்கள். அவர் அழைத்தால்.
(திருமறை 24-8)

இந்த வசனம் தருகின்ற கருத்து ஒரு புறமிருந்தாலும் இந்த வசன நடையில் சில சிக்கல்கள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்து பார்ப்போம்.

இத்திருவசனம் பின்வருமாறு வந்திருக்க வேண்டும்.

اِسْتَجِيْبُوْا للهِ وَلِلرَّسُوْلِ إِذَا دَعَوَاكُمْ

அல்லாஹ்வுக்கும், றஸூலுக்கும் நீங்கள் விடை சொல்லுங்கள். அவ்விருவரும் உங்களை அழைத்தால் என்று வந்திருக்க வேண்டும். இவ்வாறு வந்திருந்தால் விளக்கத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டாலும் கூட இலக்கணப் பிழை ஏற்படுவதற்கு வழியே இல்லை.

ஏனெனில் முன்னால் இருவரின் பெயர்கள் சொல்லப்பட்டால் அவ்விருவரும் குறித்தே பின்னால் வசனம் அமைய வேண்டும். உதாரணமாக

أَطْعِمُوْا مُزَمِّلًا وَمُنَاسًا إِنْ حَضَرَا

முசம்மிலும், முனாசும் வந்தால் அவ்விருவருக்கும் உணவு கொடுங்கள் என்பது போன்று. இவ்வசனத்தில் முன்னால் இருவரின் பெயர்கள் கூறப்பட்டுள்ளதால் பின்னால் அவர்களைக் குறிக்கும் சொல் இருமையாகவே வந்துள்ளது. ஒருமையாக வருதல் பொருத்தமற்றதாகும்.

திருக்குர்ஆன் வசனத்தை கவனியுங்கள்.

اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ

அல்லாஹ்வுக்கும், றசூலுக்கும் விடை சொல்லுங்கள். அவர் அழைத்தால் என்று ஒருமையில் வசனம் வந்துள்ளது. இவ்வாறு வந்திருப்பது தொழுது கொண்டிருப்பவனை பெருமானார் அழைத்தால் மட்டும் அவன் பதில் கூற வேண்டும் என்ற கருத்தை தருகிறதேயன்றி அல்லாஹ் அழைத்தால் பதில் கூற வேண்டுமென்ற கருத்தை தரவில்லை.

தொழுகின்ற ஒருவனை எவர் அழைப்பதும் கூடாது. எவர் அழைத்தாலும் கூட அவன் தொழுகையை நிறுத்திவிட்டு அவருக்கு பதில் சொல்வது கூடாது.

இது பொதுவான சட்டம். இதில் பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, ஆசிரியர், ஷெய்கு – குரு உள்ளிட்ட அனைவரும் அடங்குவர். எனினும் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தவிர. ஏனெனில் தொழுகின்றவனை அழைப்பதற்கு அவர்களுக்கு மட்டும் தடையில்லை. அது மட்டுமல்ல அவர்களின் அழைப்புக்கு பதில் சொல்வதும் “பர்ழ்” கட்டாயக் கடமையாகிவிடும்.

அவர்கள் “பர்ழ்” கடமையான தொழுகை தொழுது கொண்டிருப்பவனை அழைத்தாலும், “ஸுன்னத்” கடமையில்லாத தொழுகை தொழுபவனை அழைத்தாலும் அவன் தனது தொழுகையை முறித்துவிட்டு – அதாவது உடனே நிறுத்திவிட்டு பெருமானாரின் அழைப்புக்கு பதில் சொல்வது அவனின் கடமையாகும். அது மட்டும் கடமையல்ல. அவர்களிடம் சென்று ஏன் அழைத்தீர்கள்? நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்பதும் கடமையாகும்.

ஒரு நாள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த நபீ தோழரை அழைத்தார்கள். அவர் பதில் சொல்லவுமில்லை, நபீகளாரிடம் வந்து ஏன் அழைத்தீர்கள்? என்ன செய்ய வேண்டுமென்று கேட்கவுமில்லை. அவர் தனது தொழுகையிலேயே கவனமாயிருந்து தொழுது முடித்தார்.

பின்னர் நபீ பெருமான் அவர்கள் அவரைக் கண்டு நான் அழைத்த போது நீங்கள் ஏன் வரவில்லை? பதில் சொல்லவுமில்லை? என்று கேட்டார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் றஸூலே! நான் தொழுது கொண்டிருந்தேன் என்று கூறினார்கள். அதைக் கேட்ட பெருமானார் அவர்கள் திருக்குர்ஆனில்

اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ

அல்லாஹ்வுக்கும், றஸூலுக்கும் நீங்கள் பதில் கூறுங்கள். அவர் அழைத்தால் என்று கூறியிருப்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள்.

இங்குள்ள மர்மம் என்னவெனில் முதலில் அல்லாஹ்வுக்கும், றசூலுக்கும் விடை சொல்லுங்கள் என்று கூறிய அல்லாஹ் إِذَا دَعَوَاكُمْ அவ்விருவரும் உங்களை அழைத்தால் என்று இருமையில் சொல்லியிருக்க வேண்டும். அவன் அவ்வாறு சொல்லவில்லை. எனினும் ஒருமையில் சொல்லியுள்ளான். இந்த விதிப்படி دَعَا என்ற சொல்லிலுள்ள பிரதிப் பெயர் பெருமானாரை மட்டுமே குறிக்கும். إِذَا دَعَاكُمْ பெருமானார் அவர்கள் அழைத்தால் என்று ஒருமையாக கூறியுள்ளான். பொது மக்கள் இது பற்றிச் சிந்திக்காது போனாலும் உலமாஉகள் மிக நுணுக்கமாக சிந்திக்க வேண்டும்.

றசூல் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒருவரை அழைப்பது சாத்தியமான ஒன்றுதான். ஆயினும் அல்லாஹ் ஒருவனை அழைப்பதென்பது புரிய முடியாமலுள்ளது. அவன் ஒருவரை அழைப்பதென்பது புத்திக்குப் புலப்படாத ஒன்றாகும். அல்லாஹ் அழைப்பது என்று ஒன்றில்லை என்று வைத்துக் கொண்டால் ஏன் அவ்வாறு அல்லாஹ் கூற வேண்டும்? என்று நாம் சிந்திக்க வேண்டும்.

إذا دعاكم

என்ற வசனத்தில் வந்துள்ள دعا என்ற சொல்லில் هُوَ – ஹுவ என்று பிரதிப் பெயர் ஒன்று மறைந்திருக்கிறது. அது “றசூல்” அவர்கள் அழைத்தால் என்பதைக் குறிக்குமேயன்றி அல்லாஹ்வைக் குறிக்காது

ஏனெனில் اَلضَّمِيْرُ يَعُوْدُ إِلَى الْأَقْرَبِ இதன் பொருள் “ழமீர்” பிரதிப் பெயர் என்பது எங்கு வந்தாலும் அது தனக்கு அடுத்துள்ள ஒன்றைக் குறிக்குமேயன்றி தூரத்திலுள்ள ஒன்றைக் குறிக்காது. இது மொழியிலக்கண விதியாகும்.

இங்குள்ள நுட்பத்தைப் புரிந்து கொள்வதற்கு பொது மக்கள் முன்வராமல் உலமாஉகளே முன்வர வேண்டும். பொது மக்கள் கரை காண்பது கடினம்.

திரு வசனத்தில் வந்துள்ள وَلِلرَّسُوْلِ என்ற சொல்லை இதற்கு முன்னால் வந்துள்ள للهِ என்ற சொல்லுக்கு “அத்பு தப்ஸீர்” என்று விளக்கம் கொண்டு அதாவது அல்லாஹ்வும், றசூலும் ஒன்றெனக் கருதி விளக்கம் கொண்டால் தவிர இதற்கு வேறு வழியில் விளக்கம் எடுக்க முடியாதுள்ளது. ஆகையால் இந்த முடிச்சை முப்திகள் அவிழ்த்து பொது மக்களுக்கு விளக்கம் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்த முடிச்சை அவிழ்க்காமல் அவ்வாறு அதை ஒரு புறம் வைத்துவிட்டு தொழுகின்ற ஒருவனை “றசூல்” அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அழைத்தால் அழைக்கப்பட்டவன் தொழுது கொண்டிருந்தாலும் கூட அவன் தொழுகையை நிறுத்தி விட்டேனும் பதில் கூற வேண்டும் என்று மட்டும் கூறுவது அறிவுடைமையல்ல

இதன் மூலம் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட பெருமானார் அவர்களின் அழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஸுப்ஹானல்லாஹ்! இத்தகைய மா மனிதரையா வஹ்ஹாபிகள் நம்போன்ற சாதாரண மனிதரென்று சொல்கிறார்கள்!?

தொழுது கொண்டிருப்பவன் அத்தொழுகையை முறித்து விடுவதற்கு உரிய காரணங்கள் உண்டு. அவற்றுக்காக மட்டும் தொழுகையை முறித்துவிட அனுமதியுண்டு.

உதாரணமாக தன்னுயிரைக் காப்பாற்றுவதற்காக தொழுகையை முறிக்கலாம். ஒருவன் பள்ளிவாயலில் தொழுது கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அங்கு வந்த ஒரு கொலை காரன் அங்கு தொழுது கொண்டிருப்போரை துப்பாக்கியால் சுடுகிறான் என்றும் வைத்துக் கொள்வோம். இவ்வாறான கட்டத்தில் அவன் தொழுகையை விடுவதற்கு “ஷரீஆ”வில் இடமுண்டு.

இன்னுமொரு உதாரணம் கூறலாம். ஒரு தாய் தனது சிறு குழந்தையை தனக்குப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு தொழுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவளின் குழந்தை மெதுவாக நகர்ந்து சென்று உயிருக்கு ஆபத்தான ஒரு வேலையைச் செய்யப் போகிறதென்று அத்தாய் அறிந்தால் அப்பிள்ளையை காப்பாற்றுவதற்காக அவள் தனது தொழுகையை விட முடியும்.

இன்னுமோர் உதாரணம் சொல்கிறேன். ஸுன்னீ கொள்கையுள்ள ஒருவன் பள்ளிவாயலில் தனிமையாக தொழுது கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனின் பின் பக்கமாக ஒருவன் நடமாடும் அறிகுறி அவனுக்கு தென்பட்டது. அவன் உடலைத் திருப்பாமல் தலையை மட்டும் திருப்பிப் பார்த்தான். அங்கு ஒரு “வஹ்ஹாபீ” துப்பாக்கியுடன் நடமாடுவதைக் கண்டான். இவ்வாறான கட்டத்திலும் தொழுகை முறித்துவிட்டு ஓடித் தப்பிக் கொள்ள முடியும்.

தொழுகின்ற ஒருவனை அவனின் பெற்றோர் அழைத்தாலும், அவனின் பிள்ளைகள் அழைத்தாலும், அவனின் ஆசிரியர் அழைத்தாலும், அவனின் குரு – ஷெய்கு அழைத்தாலும் அவன் தொழுகையை முறித்துவிட்டு அவர்களுக்கு பதில் கூறுவது கூடாது. தொழுகையை முறித்தலாகாது.

ஆயினும் எம்பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தேவையிருந்தோ இல்லாதிருந்தோ அழைத்தாலும் அவன் அதை உடனே விட்டு பெருமானாரின் அழைப்புக்கு பதில் சொல் வேண்டும்.

إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ

நான் உங்கள் போன்ற மனிதன்தான் என்ற வசனத்தை மட்டும் இரும்புத்துரும்பென வைத்துக் கொண்டு நபீ முஹம்மத் அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதன்தான் என்று மேடைகளை அதிர வைக்கும் வஹ்ஹாபிகள் لَسْتُ مِثْلَكُمْ நான் உங்கள் போன்றவனல்லன் என்ற நபீ மொழியையும், لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ நான் உங்களில் எவன் போன்றவனுமல்ல என்ற நபீ மொழியையும், لَسْتُ كَهَيْئَتِكُمْ நான் உங்களின் அமைப்பில் உள்ளவனல்ல என்ற நபீ மொழியையும் சற்று ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முற்றும்..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments