Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்முல்லாக்களை மயக்கிய “அத்துஹ்பதுல் முர்ஸலா” தடுமாறும் முல்லாக்கள்!

முல்லாக்களை மயக்கிய “அத்துஹ்பதுல் முர்ஸலா” தடுமாறும் முல்லாக்கள்!

தொடர் – 01

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

“அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூல் அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்ட “எல்லாம் அவனே” என்ற தத்துவம் மிகத் தெளிவாக எழுதப்பட்ட நூலாகும்.

இந்நூலை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை ஏற்றுக் கொண்ட நூல் என்பதற்கு அவர்கள் இந்நூலை எனக்கு எதிராக வழங்கிய “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்திருப்பதேயாகும். (ஆதாரம்: ஏகத்துவத்தில் ஊடுருவல், பக்கம் 28)

இந்நூலாசிரியர் மேலும் தனது நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

قال الشّيخ محمد بن فضل الله فى كتابه ‘ التحفة المرسلة ‘ مع شرحها (هذا كتاب استدلّ به العميان للإفتاء بِرِدَّتِيْ ورِدَّةِ من صدّق قولي، فالعجب كلّ العجب من المفتى وأعوانه الّذين اختاروا هذا الكتاب للإستدلال وجمعوه من العلماء ومِن المكتبات،

وهذا الكتاب ‘ التحفة المرسلة ‘ كتاب مَبدُوءٌ بوحدة الوجود ومختوم بها، فإن كان المفتى عاقلا وحاذقا وأعوانه أيضا عُقلاء وحاذقين لَمَا اسْتدلُّوا بهذا الكتاب، ولكنّ عداوتَهم وحماقتَهم حجبتْ عُقولَهم وجعلهم مُتحيِّرين، وأمّا الإستدلال بهذا الكتاب لِرَدِّ وإبطال وحدة الوجود فحماقةٌ خالصة صافية، وهو كاستعانة رجل بأعدى عدوِّه)

‘عبارات التحفة المرسلة ‘: اعلموا أنّ ذلك الوجود ليس له شكلٌ ولا حدٌّ ولا حصـر، يعنى أنّ ذلك الوجود ليس له حدٌّ فى ذاتِه ولا فى صفاتِه الحقيقيّة كلّها، لأنّ ذلك الوجود كما أنّه من حيث هو هو أي من غيرِ اعتبارِ شيئٍ مَّا معه من صفة ولا اسمٍ مطلقٌ غيرُ محدود، كذلك صفاته الحقيقيّة مُنبَسِطةٌ أي غير مخصوصة بمحلٍّ خاصٍّ من الذات غيرُ محدودة، ومع وجود هذا التنزيه المذكور فقد ظهر وتجلّى فى الخارج بصُور المخلوقات على نفسِه وعلى غيره مدركا لنفسه ولغيره من المخلوقات المُدركة كالثّقلين والملائكة، ولم يتغيّر بسبب هذا الظهور فى المظاهر الخلقيّة ممّا كان هو عليه مِن عدم الشّكل وعدمِ الحدِّ، إذ ظُهورُ أثرِه كذلك لا يلزم منه شيئ من المذكورات المَنْفيّةِ، بل هو الآن كما كان عليه فى الأزل، هذا هو المراد بقول الشّيخ محي الدين ابن عربي رضي الله عنه،

فإن قلت بالتنزيه كُنتَ مُقَيِّدًا – وإن قلت بالتَّشْبِيْهِ كنتَ محدِّدًا
فإن قلتَ بالأمرين كنتَ مُسدِّدًا – وكنت إماما فى المعارف سيّدا
فمن قال بالإشفاعِ قد كان مُشركا – ومن قال بالإفراد كان مُوحِّدا
وإيّاك والتَّشْبيهَ إن كنت ثانيا – وإيّاك والتّنزيهَ إن كنت مُفرِدا

“அத்துஹ்பதுல் முர்ஸலா” என்ற பெயரில் அறபு மொழியில் ஓர் நூல் உண்டு. அதை எழுதியவர் அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களாவர்.

இந்த நூல் வரலாற்று நூலோ, சட்ட நூலோ, இலக்கண நூலோ, இலக்கிய நூலோ அல்ல. ஆரம்பம் முதல் இறுதி வரை “வஹ்ததுல் வுஜூத்” – “எல்லாம் அவனே” என்ற தத்துவம் எந்த ஒரு ஒழிப்பு மறைப்புமின்றி பகிரங்கமாக எழுதப்பட்ட நூலாகும்.

இந்நூலின் ஆசிரியர் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை பாலருந்தும் பாலகர்களுக்குச் சொல்வது போலும், மங்கிய புத்தியுள்ளவனுக்கு சொல்வது போலும் தெளிவாகவும், உதாரணங்களோடும் விளக்கி வைத்துள்ளார்கள்.

“வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை எதிர்க்கும் ஒருவன் – அது பிழை என்று சொல்லும் ஒருவனுக்கு தலையில் மண்ணளவேனும் மூளை இயக்கம் சரியாக இருந்தால் அவன் அந்த நூலைத் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டான். பக்கத்திலும் வைத்திருக்கமாட்டான். கொரோனாவால் பாதிக்கப்பட்டவனைப் பயந்து அவனைத் தூர வைப்பது போல் அதையும் தூரத்திலேயே வைத்துவிடுவான். இவ்வாறுதான் புத்தியுள்ளவன் செய்வான்.

ஆனால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையோ “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தை மறுப்பதற்கு போயும் போயும் இந்த நூலை ஆதாரமாக எடுத்திருப்பது இவர்களின் தலையில் களிமண் கூட இல்லை என்பதற்கு தெளிவான ஆதாரமாகும்.

உலமா சபை எனக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தால் போதும். “ஊடுருவல் பத்வா”வை உடைத்தெறிவேன். அதிலுள்ள ஊழல்களையும், இருட்டடிப்புக்களையும் அக்குவேறாகவும், ஆணி வேறாகவும் புட்டுக் காட்டுவேன். நீதி மன்றின் மூலம் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே எனும் தத்துவத்தை உலகளாவச் சொல்வேன். அப்படியொரு வாய்ப்பை எதிர்பார்த்தவனாகவும் உள்ளேன். அல்லாஹ் நாடினால் வழங்குவான்.

رُبّما يُثبِتُ الله هذا التّوحيد الحقيقيّ أي عقيدة وحدة الوجود بمُوحِّدٍ مقتولٍ بسيف فتوى العُميان الّذين أعمى الله أبصارَهم وبَصائرَهم، وختم على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة، فإن أنعم الله عليّ بفُرصةٍ سعيدة لإظهار وحدة الوجود فى المحكم فلا رادّ لما قضاه الله عزّ وجلّ ولو ملكا أو سلطانا أو رئيسا أو وزيرا، والله على كلّ شيئ قدير، وبالإجابة جدير، والله قادرعلى نشـر هذه العقيدة بعبدٍ أذلّه المنكرون المعاندون، وكفّروه بجهلهم وحماقتهم وبلادتِهم، وبحِقْدِهم وأضغانهم وإحَنِهم،

“பத்வா” வழங்கிய முல்லாக்கள் புத்திசாலிகளாகவும், விவேகமுள்ளவர்களாகவும் இருந்திருப்பார்களாயின் இந்த நூலை தமது “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்திருக்கவேமாட்டார்கள். ஆயினும் அவர்களுக்கு என்மீதுள்ள பொறாமை அவர்களின் கண்களையும் மறைத்து மூளையையும் கலக்கிவிட்டது. இவர்களின் நடவடிக்கை – இந்நூலை ஆதாரமாக எடுத்துச் செயல்படுவது ஒருவன் தனது எதிரியிடம் உதவி கேட்பது போன்றதாகும்.

“அத்துஹ்பதுல் முர்ஸலா”வின் வசனங்கள்.

குறித்த நூலில் வந்துள்ள வசனங்களை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் மேலே எழுதியுள்ளதோடு அந்த வசனங்கள் தருகின்ற கருத்தின் சுருக்கத்தையும் இங்கு எழுதுகிறேன்.

(அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை, அல்லது “தாத்” என்பதற்கு உருவமுமில்லை, கட்டுப்பாடுமில்லை, மட்டுப்படுத்துதல் என்பதுமில்லை. அதாவது அல்லாஹ்வின் “வுஜூத்” எனும் “தாத்”திற்கு கட்டுப்பாடு, வரையறை இல்லாதது போல் அந்த “தாத்”தின் “ஸிபாத்” தன்மைகளுக்கும் கட்டுப்பாடோ, வரையறையோ கிடையாது. அந்த “தாத்”தின் பெயர், தன்மை என்பவற்றைக் கவனியாமல் அது எந்த ஒரு கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்ட “முத்லக்” பொதுவானதாகும். அந்த “தாத்” கட்டுப்பாடு, எல்லை, வரையறை எதுவுமின்றிப் பொதுவானதாயிருந்தாலும் கூட அது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பொதுவானதாகும். இவ்வாறுதான் அதன் “ஸிபாத்” தன்மைகளுமாகும். அவையும் கட்டுப்பாடற்றவையும், எல்லையற்றவையுமேதான்.

மேலே சொல்லப்பட்ட நிலை “தாத்”திற்குரிய “தன்ஸீஹ்” நிலையாகும். மேற்கண்ட “தன்ஸீஹ்” நிலையில் அந்த “தாத்” இருப்பதுடன் அது சிருட்டிகளின் உருவத்தில் மனு, ஜின், மலக்குகளாக வெளியாகித் தோற்றுகிறது.

சிருட்டிகளின் உருவங்களில் அந்த “தாத்” வெளியானாலும் கூட அது அவ்வாறு வெளியாகுமுன் எவ்வாறிருந்ததோ அவ்வாறே அது இருக்கும். அதன் முன்னைய நிலையில் எந்த ஒரு மாற்றமும், குறைபாடும் ஏற்படுவதில்லை. “தன்ஸீஹ்” நிலையில் அந்த “தாத்” எவ்வாறிருந்ததோ அவ்வாறே அது இருக்கும். அந்த “தாத்” அழிந்துவிடவுமாட்டாது. மாறுபடவுமாட்டாது. விகாரப்படவுமாட்டாது.

بل هو الآن إلى الأبد كما كان عليه فى الأزل

அந்த “தாத்” அல்லது உள்ளமை படைப்பாக “தஜல்லீ” வெளியாகுமுன் எவ்வாறிருந்ததோ அவ்வாறே வெளியான பின்னும் இருக்கும்.

இதன் சுருக்கம் என்னவெனில் அல்லாஹ்வின் “தாத்” என்பது அல்லது “வுஜூத்” உள்ளமை என்பது படைப்பாக வெளியாகுமுன் இருந்த நிலை “தன்ஸீஹ்” அரூப நிலை என்றும், வெளியான பின் உள்ள நிலை “தஷ்பீஹ்” ரூப நிலை என்றும் ஸூபீ மகான்கள் சொல்வார்கள். அவர்கள் இரண்டாம் நிலைக்கு “தஷ்பீஹ்” உடைய நிலை என்று சொல்லிக் கொண்டாலும் “தஷ்பீஹ்” என்ற சொல்லுக்கு ஒப்பாக்கி வைத்தல், நிகராக்கி வைத்தல் என்ற கருத்தில் அவர்கள் இச் சொல்லைப் பயன்படுத்துவதில்லை.

“தன்ஸீஹ்” நிலையில் எதெல்லாம் அல்லாஹ்வுக்கு இல்லையென்று சொல்லப்பட்டதோ அதெல்லாம் அவனுக்கு “தஷ்பீஹ்” நிலையில் உண்டு என்று நாம் நம்ப வேண்டும்.

இதனால்தான் அஷ்ஷெய்குல் காமில், “இன்ஸான் காமில்” நூலாசிரியர் அப்துல் கரீம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் இன்ஸானுல் காமில்” எனும் நூலில்

كُلَّمَا نَفَيْتَهُ فِى التَّنْزِيْهِ فَقَدْ أَثْبَتَّهُ فِى التَّشِبِيْهِ

என்று கூறியுள்ளார்கள்.

இதன் பொருள்: “தன்ஸீஹ்” நிலையில் எதெல்லாம் அல்லாஹ்வின் “தாத்”திற்கு இல்லை என்று சொன்னாயோ அதெல்லாம் “தஷ்பீஹ்” நிலையில் அவனின் “தாத்”திற்கு உண்டு என்று நீ தரிபடுத்து” என்பதாகும்.

இவ்விரு நிலைகள் பற்றியும் கூறிய தற்கலை வாழ் அற்புத வலிய்யுல்லாஹ் பீர் முஹம்மத் அப்பா அவர்கள் கூறுகையில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

தன்ஸீஹ் நிலை பற்றிக் கூறுகையில்,

கண்டதும் கேட்டதுமல்ல – அங்கு
கருதி முடிந்த தலங்களுமல்ல
அண்டமும், பிண்டமும் அல்ல
அகார வுகார சிகாரமுமல்ல
மண்டலம் மூன்றதுமல்ல
மறைவாக நின்றாடும் வாசியுமல்ல
அன்றாதி எங்கும் நிறைந்து – என்னை
ஆளும் றஹுமானைக் கண்டு கொண்டேனே!

என்றும், “தஷ்பீஹ்” நிலை பற்றிக் கூறுகையில்,

கண்டதும் கேட்டதும்தானே – அங்கு
கருதி முடிந்த தலங்களும்தானே
அண்டமும், பிண்டமும்தானே
அகார வுகார சிகாரமும்தானே
மண்டலம் மூன்றதும்தானே
மறைவாக நின்றாடும் வாசியும்தானே
அன்றாதி எங்கும் நிறைந்து – என்னை
ஆளும் றஹுமானைக் கண்டு கொண்டேனே!

என்றும் கூறியுள்ளார்கள்.

பீரப்பா அவர்களின் கூற்றுப்படி ஒரு முஸ்லிம் பூரண விசுவாசியாவதாயின் அவன் அல்லாஹ்வுக்குரிய இரு நிலைகளையும் நம்ப வேண்டும். ஒன்றை மட்டும் நம்புதல் கூடாது. அதனால் நம்பிக்கை முற்றுப் பெறாது.

அவனுக்கு “தன்ஸீஹ்”, “தஷ்பீஹ்” என்ற இரு நிலைகள் உண்டென்பதற்கு திருமறை வசனமே ஆதாரமாக உள்ளது. திருமறை வசனத்தை நம்புவது “ஈமான்” விசுவாசம். நம்பாமல் விடுவது “குப்ர்” நிராகரிப்பு.

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

அவன் போல் எதுவுமில்லை. அவனே கேட்பவனும், பார்ப்பவனுமாவான். (திருக்குர்ஆன் 42-11)


“அவன் போல் எதுவுமில்லை” இது “தன்ஸீஹ்” அரூப நிலையாகும்.

“கேட்பவனும் அவனே, பார்ப்பவனும் அவனே” இது “தஷ்பீஹ்” நிலையாகும். இரண்டு நிலைகளும் அவனின் நிலைதான். இவ்விரு நிலைகளும் அவனுக்கு உண்டு என்று நம்புதல்தான் திருக்குர்ஆனை நம்புதலாகும்.

கேட்பவனும் அவன், பார்ப்பவனும் அவன் என்று சொல்வதற்கும் இரண்டு இடங்களிலும் அவன் என்ற சொல்லை அவனே என்று மாற்றிச் சொல்வதற்கும் வித்தியாசமுண்டு. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட “அவனே” என்பது குறித்த வசனம் தருகின்ற கருத்தை பலப்படுத்துகிறது உறுதி செய்கிறது. இதன்படி கேட்பவனும் அல்லாஹ்தான். பார்ப்பவனும் அல்லாஹ்தான். வேறெவரும் கேட்பதுமில்லை, பார்ப்பதுமில்லை என்ற கருத்து வருகிறது. இது திருக்குர்ஆன் கூறும் கருத்தேயன்றி வேறெவரும் கூறிய கருத்தல்ல.

எனவே, ஒரே வசனத்தில் அல்லாஹ் “தன்ஸீஹ்” நிலையையும், “தஷ்பீஹ்” நிலையையும் கூறியிருப்பது மிக விஷேடமானதாகும்.

அஷ்ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சரிகண்ட உலமா சபையின் கவனத்திற்கும், ஆய்வுக்குமாகவே அவர்களின் பாடல்களின் விளக்கத்தை அடுத்த தொடரில் விளக்கமாக எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!

நான் எப்போது, எக்கட்டுரையில் முல்லாக்கள் என்று குறிப்பிட்டாலும் அது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவரையும், “பத்வா” குழுவினரையும் மட்டுமே குறிக்கும். பொதுவாக உலமாஉகளைக் குறிக்காது.

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments