தொடர் – 02
தொடர் 01ல் “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலின் வசனத்தில் எந்த மாற்றமுமின்றி எழுதியுள்ளேன். தொடர் 01ஐ வாசிக்கத் தவறியவர்கள் அதை வாசித்தறிந்து கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
குறித்த அத்தொடரின் பிரதான வசனத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.
اعلموا أنّ ذلك الوجود ليس له شكلٌ ولا حدٌّ ولا حصـر،ومع وجود هذا التنزيه المذكور فقد ظَهَرَ وتَجَلَّى فى الخارج بصُور المخلوقات، ولم يَتَغَيَّرْ بسبب هذا الظهور فى المظاهر الخلقيّة ممّا كان هو عليه مِن عدم الشّكل وعدمِ الحدِّ،بل هو الآن كما كان عليه فى الأزل،
அல்லாஹ்வின் “தாத்”திற்கு அல்லது அவனின் “வுஜூத்” உள்ளமைக்கு உருவமுமில்லை, எல்லையுமில்லை, மற்றும் எந்தவொரு கட்டுப்பாடுமில்லை, இந்த நிலைதான் “தன்ஸீஹ்” நிலையென்று ஸூபீகள் சொல்வர். இந்நிலையில் அவனை எவராலும் அறியவும் முடியாது. எப்படியென்று வர்ணிக்கவும் முடியாது. இதையே பின்வரும் பாடல் உணர்த்துகிறது.
عَلَا رَبُّنَا عَنْ كَيْفَ أَوْ أَيْنَ أَوْ مَتَى – وَعَنْ كُلِّ مَا فِى بَالِنَا يَتَصَوَّرُ
எப்படி, எங்கே, எப்போது எனும் கேள்விகளை விட்டும் அவன் துய்யவன். இன்னும் எங்களின் உள்ளங்களில் உதிக்கும் எண்ணங்களை விட்டும் துய்யவன்.
எனினும் அந்த “தன்ஸீஹ்” நிலை இருந்தவாறே இருக்க அந்த “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமை படைப்புக்களின் உருவங்களில் வெளியாகியுள்ளது. படைப்புக்களின் உருவத்தில் அது வெளியானதால் அது முன்னிருந்த நிலையிலிருந்து அழிந்துவிடவோ, மாறுபடவோ, விகாரப்பட்டு விடவோ இல்லை. எனினும் அது படைப்பாக வெளியாகுமுன் எவ்வாறிருந்ததோ அவ்வாறே படைப்பாக வெளியான பின்னும் உள்ளது. இது “தஷ்பீஹ்” நிலை என்று ஸூபீகள் சொல்வர். இவ்விரு நிலைகளையும் அறியாதவர் முஸ்லிமாக வாழ்ந்தும் எந்தப் பயனுமில்லை. இது பற்றி ஒரு பாடலில் ஞான மகான் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
இருக்கு முதலெல்லாம் கொடுத்திட்டாலும்
இரவு பகலெலாம் வணங்கிட்டாலும்
வருட முழு நோன்பு நோற்றிட்டாலும்
வரிசை ஹஜ்ஜதை செய்திட்டாலும்
ஹறத்தில் கிதாபெல்லாம் ஓதிட்டாலும்
அநேக நன்மைகள் செய்திட்டாலும்
கருத்தில் இது ரெண்டை அறியாதவர்
கடைசி நரகிற்கிரையாவரே!
மேற்கண்ட இந்த விபரம் உலமா சபையின் “பத்வா” குழு தமது “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்த “அத்துஹ்பதுல் முர்ஸலா” என்ற அதே நூலிலேயே இடம் பெற்றுள்ளது.
இந்த வசனங்கள் மூலம் அதன் ஆசிரியர் என்ன கருத்துச் சொல்கிறார்கள் என்றால் அல்லாஹ்வின் “தாத்”திற்கு இரு நிலைகள் உள்ளன என்றும், அவ்விரண்டில் முந்தினது “தன்ஸீஹ்” நிலையென்றும், பிந்தினது “தஷ்பீஹ்” நிலையென்றும், உருவமில்லாமலும், வரையறை எதுவுமில்லாமலும், கட்டுப்பாடு எதுவுமில்லாமலும் இருந்த அந்த “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமை அல்லது மெய்ப் பொருள் படைப்பாக வெளியானதால் அந்த “தாத்” அழியவோ, மாறுபடவோ, விகாரப்படவோ இல்லை என்றும் “துஹ்பதுல் முர்ஸலா” ஆசிரியர் அவர்கள் கூறுகின்றார்கள்.
இதே கருத்தையே ஸூபீகளான நாங்களும் சொல்கிறோம். இவ்வாறு “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற கருத்து கூறப்பட்ட நூலை ஆதாரமாக ஏற்றுக் கொண்ட உலமா சபை அதே நூலில் கூறப்பட்ட கருத்தை மறுப்பது விந்தையானதும், விசனத்தை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது மனமுரண்டா? அறியாமையா? நடுநிலைவாதிகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அறிவுள்ளவர்கள் விடை கூற வேண்டும்.
மேற்கண்ட இரு நிலைகள் பற்றியே இப்னு அறபீ நாயகம் அவர்கள் கவிதைகள் மூலம் கூறியுள்ளார்கள். அவர்களின் இப்பாடல் கடந்த தொடர் 01ல் முழுமையாக எழுதப்பட்டுள்ளது. ஆகையால் பாடலை மீண்டும் எழுதாமல் அவற்றின் கருத்தை எழுதுகிறேன்.
பாடலின் பொருள்:
நீ “தன்ஸீஹ்” நிலையை மட்டும் நம்பினாலும் நீ அவனை அந்த நிலையில் கட்டுப்படுத்தியவன்தான். நீ “தஷ்பீஹ்” நிலையை மட்டும் நம்கினாலும் நீ அவனை அந்த நிலையில் கட்டுப்படுத்தியவன்தான். அவனைக் கட்டுப்படுத்த நீ யார்?
நீ இரு நிலைகளையும் நம்பினால் நீ நேர்வழி பெற்றவன்தான். அது மட்டுமன்றி நீ இறைஞானத்தின் தலைவனும்தான்.
இரண்டு என்று சொன்னவன் – நம்பினவன் – அதாவது படைப்பாக வெளியானவன் அல்லாஹ் அல்ல என்று நம்பி அவன் வேறு, படைப்பு வேறு என்று சொன்னவன் நிச்சயமாக “முஷ்ரிக்” இணை வைத்தவன்தான். ஆயினும் இரண்டும் ஒன்றுதான் என்றவன் நிச்சயமாக விசுவாசிதான்.
எனவே, நீ “தன்ஸீஹ்” நிலையை மட்டும் நம்பக் கூடாதென்றும், அதேபோல் “தஷ்பீஹ்” நிலையை மட்டும் நம்பக் கூடாதென்றும் உன்னை நான் எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் இரு நிலைகளான தன்ஸீஹ், தஷ்பீஹ் இரண்டையும் ஒரே நேரத்தில் நம்பினவன்தான் உண்மை “முவஹ்ஹித்” ஆவான் என்று சொன்ன இமாம் இப்னு அறபீ அவர்களின் பேச்சை தூக்கியெறியப் போகிறதா அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா? ஏன் இந்த அட்டூழியம்? இவ்விரு நிலைகள் பற்றியும் மேற்கண்டவாறு தெளிவாகச் சொன்ன இப்னு அறபீ நாயகமவர்களை தமது “பத்வா”வின் மூலம் முழுமையாக ஏற்றுக் கொண்ட உலமா சபை அவர்களைப் புறக்கணிப்பதேன்? இது சரியா? தவறா? இதேபோல் குறித்த இரு நிலைகள் பற்றியும் மிகத் தெளிவாகப் பாடல் மூலம் கூறிய தற்கலை பீர் அப்பா அவர்களின் கருத்தையும் தூக்கியெறிவதேன்? அவர்களின் மகிமை இவர்களுக்குத் தெரியாதா? அவர்கள் 300 ஆண்டுகள் வாழ்ந்து தங்களின் விருப்பத்திற்கேற்ப மரணித்த மகான் என்பது இவர்களுக்குப் புரியாதா?
“அத்துஹ்பதுல் முர்ஸலா” ஆசிரியர் அதே நூலில் இன்னோர் இடத்தில் கூறியிருப்பதைக் கவனியுங்கள்.
وأنّ جميع الموجودات من حينُ الوجود عينُ الحقِّ سُبحانه، ولكنّها من حيثُ التَّعيُّنِ غيرُ الحق سبحانه، والغيريّةُ اِعتباريّة،
وأمّا من حيث الحقيقة فالكلُّ هو الحقُّ سبحانه، ومِثالُه الحَبابُ والموجُ والثّلجُ، فإنّ كُلَّهُنَّ مِن حيث الحقيقة عينُ الماء، ومن حيثُ التَّعيُّن غير الماء،
والسّرابُ (هذا معطوف على ما قبله الحبابُ والموجُ والثّلجُ) أي ومثاله السّرابُ، فإنّه من حيثُ الحقيقة عينُ الهواء، ومن حيث التعيُّنِ غيرُ الهواء، ولأنّ السّرابَ فى الحقيقة هواءٌ ظَهَرَ بصورة الماء،
மேற்கண்ட இந்த வசனங்கள் யாவும் உலமா சபை முப்திகளும், தலைவர் அவர்களும் தமது “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்த “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலில் உள்ள வசனங்களேயாகும். இவ்வசனங்கள் உலமா சபையின் கண்களுக்குத் தெரியாமற் போனது அவர்களின் “கறாமத்” என்று கூறினால் அது மிகையாகாது.
இந்த வசனங்களை ஆரம்பத்திலிருந்து கவனிப்போம்.
உலகிலுள்ள படைப்புக்கள் அனைத்தும் அவற்றின் “வுஜூத்” உள்ளமையைப் பொறுத்து – அவற்றின் கருவைப் பொறுத்து அல்லாஹ் தானானவையாகவே உள்ளன. அதாவது அல்லாஹ்வாகவே உள்ளன. ஆயினும் “தஅய்யுன்” குறிப்பை பொறுத்து அதற்கு அவை வேறானவைகளாக உள்ளன. வேறு என்பது கூட கவனிப்பைப் பொறுத்ததேயாகும். எதார்த்தத்தைப் பொறுத்ததல்ல.
எதார்த்தம் என்னவெனில் அல்லாஹ்வின் “வுஜூத்”க்கு வேறான எந்தவொரு வஸ்த்துமில்லை. அது கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய வஸ்த்தாயினும் சரியே! அனைத்தும் அவனே!
இது பற்றியும் “துஹ்பதுல் முர்ஸலா” ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்கள். இது “துஹ்பதுல் முர்ஸலா”வின் வசனமாகும்.
وَأَنَّ ذَلِكَ الْوُجُوْدَ حَقِيْقَةُ جَمِيْعِ الْمَوْجُوْدَاتِ وَبَاطِنُهَا، وَأَنَّ جَمِيْعَ الْكَائِنَاتِ حَتَّى الذَّرَّةِ لَا تَخْلُوْ عَنْ ذَلِكَ الْوُجُوْدِ،
அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை என்பது படைப்புக்கள் அனைத்தினதும் எதார்த்தமும், அவற்றின் “பாதின்” உள்ரங்கமுமாகும். அணு உள்ளிட்ட எந்த ஒரு வஸ்த்தாயினும் அந்த “வுஜூத்” உள்ளமையை விட்டும் அது காலியானதாயிருக்காது.
“துஹ்பதுல் முர்ஸலா” ஆசிரியர் அவர்கள் முதலில் தத்துவத்தை கூறிவிட்டு அதற்குப் பின்வருமாறு உதாரணங்கள் கூறி விளக்கி வைக்கிறார்கள்.
அவ் உதாரணங்களாவன. நீர்குமிழி, கடல் அலை, ஐஸ்கட்டி என்பனவாம். இன்னுமோர் உதாரணம் சொல்லியுள்ளார்கள். அதை இம்மூன்றுடனும் சேர்க்காமல் தனியே கூறியுள்ளார்கள். பின்னால் அது வரும்.
இம்மூன்றின் எதார்த்தமும் அதாவது இம்மூன்றுக்கும் மூலம் நீர்தான். இம் மூன்றும் عينُ الماءِ தண்ணீர் தானானதேயன்றி அதற்கு வேறானவையல்ல. غيرُ الماءِ தண்ணீருக்கு வேறானவையல்ல.
இம்மூன்றும் தண்ணீரின் வெளிப்பாடுகளேதான். இவை பெயரில் வேறானவையாக இருந்தாலும் கூட இவை தண்ணீரின் வெளிப்பாடுகள் என்பதை எவரும் மறுக்கமாமட்டார்கள். மறுக்கவும் முடியாது.
யாராவதொரு வடிகட்டிய முட்டாளாயினும் குமிழி நீரல்ல என்றோ, அலை நீரல்ல என்றோ, ஐஸ் கட்டி நீரல்ல என்றோ சொல்வானா? பைத்தியக் காரனைத் தவிர வேறு எவனும் சொல்லமாட்டான். யாராவதொருவன் சொன்னால் அவன் அங்கோடை பைத்திய வைத்திய சாலையில் சேர்க்கப்பட வேண்டியவனேயாவான்.
ஒரு வஸ்த்து எதன் வெளிப்பாடோ அந்த வஸ்த்து அது தானானதே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நூல் பஞ்சின் வெளிப்பாடு என்றால் நூல் பஞ்சுதான் என்றும், மண் சட்டி மண்ணின் வெளிப்பாடு என்றால் சட்டி மண்தான் என்றும், கைக் கோல் மரத்தின் வெளிப்பாடு என்றால் கைக்கோல் மரம்தான் என்றுமே சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்லாமல் வேறெவ்வாறு சொல்வது?
இவ்வாறு காத்தான்குடி அப்துர் றஊப் ஆகிய நானா சொல்கிறேன்? இல்லை. இதுதான் சரியான தத்துவமென்று எவர் சொன்னாலும் அவரைத் தூக்கியெறிந்து விடலாம். ஆயினும் அல்லாஹ் சொன்னால், அண்ணலெம் பெருமான் சொன்னால், அவ்லியாஉகள் சொன்னால் என்ன செய்வது? இவர்களையும் பைத்தியக் காரர்கள் என்றா சொல்வது? மஆதல்லாஹ்! இவர்களுக்குப் பைத்தியம் என்று சொல்பவர் மிகவிரைவில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய ஆசாமிதான். அழுக்கான ஆடைகளோடும், மூட்டை முடிச்சுகளோடும் சாலைகளை வலம் வருபவன் மட்டும் பைத்தியமில்லை. சத்தியத்தை புரட்டுபவனும் அவன்தான்.
குமிழி, அலை, ஐஸ் மூன்றையும் “துஹ்பதுல் முர்ஸலா” ஆசிரியர் அல்லாஹ்வுக்கும் அவனின் வெளிப்பாடுகளான படைப்புகளுக்கும் உதாரணமாகச் சொல்லி “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை சிறு பிள்ளைக்கு விளங்கப்படுத்தும் பாணியில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை விளங்கப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் அதே நூலை தமது “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்து எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் மதம் மாறியவர்கள் என்றும், நாங்கள் கொலை செய்யப்பட வேண்டுமென்றும் பகிரங்கமாக “பத்வா” வழங்கிவிட்டு ஒரு பாவமும், ஒரு தப்பும் செய்யாத அவ்லியாஉகள் போல் நடிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” குழுவினருக்கு நீதி என்ன? சட்டம் என்ன? என்று இந்நாட்டின் அரசையும், நீதிவான்களையும், வழக்கறிஞர்களையும் கேட்கிறேன். நமது நாட்டில் முஸ்லிம் பெற்றோருக்கு ஹலாலான முறையில் பிறந்த பல்லாயிரம் முஸ்லிம்களைக் காபிர்கள் – முர்தத்துகள் என்று “பத்வா” மூலம் மதம் மாற்றிவிட்டு அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்றும் சட்டமும் கூறிவிட்டு கொலை வெறியர்களையும், மினிமறுவாக்களையும் “பத்வா”வின் மூலம் ஊக்குவித்து வருகின்ற இந்த அநீதியாளர்களுக்கு நியாயம் சொல்ல இந்த நாட்டில் யாருமில்லையே! என்பதை எண்ணும் போது பிறந்த நாட்டையே துறக்க வேணும் போல தெரிகிறது.
அறபு நாடுகளிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பல இறை நேசர்கள் இலங்கை நாட்டுக்கு வந்து காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து “கறாமாத்” எனும் அற்புதங்கள் மூலமும், இறைஞான அறிவுகள் மூலமும் மக்களைக் கவர்ந்து அவர்களைத் தமது சிஷ்யர்களாக்கி இறையடி சேர்ந்த வலீமார் பலர் இலங்கையில் மறைந்து வாழ்கிறார்கள். அடக்கம் பெற்றுள்ளார்கள்.
இன்னோர் தமது நாடுகளையும், வீடுகளையும், மனைவி மக்களையும் துறந்து வெளிநாடுகளை நாடியதற்கான காரணம் தமது நாட்டிலுன்ன பொறாமைக் காரர்களால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியும், எதிர்ப்புமேயாகும்.
أَوْحَى الله إلى عيسى عليه السّلام لَا يَفْقِدُ نَبِيٌّ حُرْمَتَهُ إِلَّا فِى بَلَدِهِ
எந்த ஒரு நபீ ஆயினும் அவர் தனது கௌரவத்தை தனதூரிலேயே இழப்பார் என்று நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்தான். இது எத்தனை உண்மை என்பதை எனது வாழ்வில் நான் கண்டு கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்!
ஒரு நபீ அவர்களுக்கே இந்நிலைமை என்றால் நபீமாரின் வாரிஸ்களான “உலமாஉர் றப்பானிய்யூன்”களின் நிலைமை சொல்லவா வேண்டும்?
தொடரும்….