தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
مذهب وحدة الوجود مذهبُ الّذين يُوحِّدون الله والعالم، ويزعمون أنّ كلّ شيئ هو الله، وهو مذهب بعض المتصوّفة، الّذين يقولون إنّ الله هو الحقّ، وليس هناك إلّا موجودٌ واحدٌ، وهو الموجود المطلق، أمّا العالم فهو مَظْهَرٌ من مظاهر الذات الإلهيّة، وليس له وجودٌ فى ذاته، لأنّه صادرٌ عن الله بالتّجلِّي،
لسْنَا بحاجةٍ إلى وحدة الوجود، ولا إلى الحلول ولا إلى الاتّحاد، يكفينا ما جاء فى القرآن والسنّة، فهو واضحٌ جليٌّ مُيسَّرٌ، ولقد يسّرنا القرآن للذّكر فهل مِن مُدَّكر،
ونخشى على من يمشي فى هذا الطريق من الكفر، (هداية المريد إلى جوهرة التوحيد، ص 28، للشّيخ بكري رجب)
அஷ்ஷெய்கு பக்ரீ றஜப் அவர்கள் هداية المريد إلى جوهرة التوحيد என்ற தங்களின் நூலில் “வஹ்ததுல் வுஜூத்” பற்றி சிறிய விளக்கம் கூறியுள்ளார்கள்.
அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை “மத்ஹப்” என்று குறிப்பிட்டதால் அது “ஷரீஆ”வின் “பிக்ஹ்” சட்டக்கலையோடு தொடர்பான ஐந்தாவது “மத்ஹப்” என்று எவரும் விளங்கலாகாது. அவர்கள் அந்தக் கருத்தில் அவ்வாறு எழுதவில்லை.
எனினும் அது பற்றி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
(“வஹ்ததுல் வுஜூத்” என்றால் படைத்தவனும், படைப்பும் இரண்டுமே ஒன்றுதான் எனும் கொள்கையாகும். படைப்புக்கள் யாவும் அல்லாஹ்தான் என்று அக்கொள்கையுடையோர் அபிப்பிராயப்படுகிறார்கள். இது ஸூபீகளிற் சிலரின் கொள்கையாகும். அவர்கள் – அந்தச் சிலர் அல்லாஹ்தான் மெய்ப் பொருள். சத்தியவான், உள்ளது ஒன்றேயாகும். அதுவே பொதுவாக உள்ளதாகும். படைப்பு என்பது இறைவனின் வெளிப்பாடுகளில் உள்ளவையாகும். அந்த வெளிப்பாட்டுக்கு தன்னில் “வுஜூத்” இல்லை. இருப்பு இல்லை. அது அல்லாஹ்வின் “தஜல்லீ” ஆகும்) என்று சுருக்கமாக விளக்கம் கூறியுள்ளார்கள்.
இவ்வாறு கூறிய அஷ்ஷெய்கு பக்ரீ றஜப் அவர்கள் பின்னால் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.
(எமக்கு “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையும் தேவையில்லை. “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையும் தேவையில்லை. திருக்குர்ஆனும், ஹதீதும் எமக்குப் போதும். அவ்விரண்டும் தெளிவானதும், பகிரங்கமானதுமாகும். இவ்வழியிற் செல்பவர்கள் – அதாவது வஹ்ததுல் வுஜூத் வழியிலும், “ஹுலூல் – இத்திஹாத்” வழியிலும் செல்பவர்கள் “குப்ர்” எனும் நிராகரிப்பில் விழுந்து விடலாமென்று நாங்கள் அஞ்சுகிறோம்) என்று கூறியுள்ளார்கள்.
பக்ரீ றஜப் அவர்களின் இக் கூற்றின் மூலம் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கு ஆதரவானவர்களா? இல்லையா என்பதை வாசக நேயர்களில் விவேகமுள்ளவர்கள் விளங்கிக் கொள்வார்கள். நான் சொல்லத் தேவையில்லை.
பக்ரீ றஜப் அவர்கள் யாரென்று நானும் அறியவில்லை. எனினும் இவர் அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஓர் அறிஞர் என்றும், பல நூல்கள் எழுதிய ஓர் எழுத்தாளர் என்றும் விளங்க முடிகிறது. இவர் 1910ம் ஆண்டில் பிறந்து 1979ல் “வபாத்” – மரணித்துள்ளார். அல்லாஹ் அவருக்கு றஹ்மத் செய்வானாக!
நான் அவரின் பாதணியில் ஒட்டியுள்ள மண்ணுக்கும் பெறுமதியற்றவனாயினும் எனது கருத்தைக் கூற வேண்டுமென்பதற்காக சில வரிகள் எழுதுகிறேன்.
இந்த மகான் “வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்ன என்பதற்கு கூறியுள்ள விளக்கத்தை நான் ஆட்சேபிக்கவில்லை. அவர் சரியாகவே விளக்கம் கூறியுள்ளார். எனினும்
لسْنَا بحاجةٍ إلى وحدة الوجود، ولا إلى الحلول ولا إلى الاتّحاد،
எங்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” என்பதும் தேவையில்லை, “ஹுலூல் – இத்திஹாத்” என்பதும் தேவையில்லை என்று கூறியிருப்பதும், ونـخشـى على من يمشـي فى هذا الطريق من الكفر இவ்வழியில் – “வஹ்ததுல் வுஜூத்” வழியிலும், “ஹுலூல் – இத்திஹாத்” வழியிலும் செல்பவர் மீது “குப்ர்”ஐ நாம் பயப்படுகிறோம் என்று சொல்லியிருப்பதும் சிந்திக்க வேண்டியவையாகும். அவர்கள் ஏன் அவ்வாறு சொன்னார்கள் என்று அவர்களிடமே கேட்டறிய வேண்டும். அவர்கள் உயிரோடிருந்து அவர்களின் முகவரி அல்லது கைபேசி இலக்கம் இருக்குமாயின் நான் அவர்களுடன் தொடர்பு கொள்வேன். அவர்களிடம் கேட்க அவர்கள் இல்லை. ஆகையால் இது தொடர்பாக நான் அறிந்த விபரத்தை இங்கு எழுதுகிறேன். இது எனது கருத்தேயன்றி அவருக்கு நான் மறுப்பு எழுதவில்லை.
அஷ்ஷெய்கு பக்ரீ றஜப் அவர்களின் முதல் வசனம் (எமக்கு வஹ்ததுல் வுஜூத், ஹுலூல் – இத்திஹாத் எதுவும் தேவையில்லை) என்ற வசனம் சிந்திக்க வேண்டியதாகும்.
அவர்கள் எமக்குத் தேவையில்லை என்று கூறிய மூன்று விடயங்களையும் ஒருவன் அறிந்திருந்தால்தான் எடுக்க வேண்டியதை எடுப்பதற்கும், எறிய வேண்டியதை எறிவதற்கும் வசதியாயிருக்கும்.
ஏனெனில் அவர்கள் குறிப்பிட்ட மூன்று விடயங்களில் கட்டாயம் நாம் அறிந்து எடுக்க வேண்டியது “வஹ்ததுல் வுஜூத்” ஞானமாகும். கொள்கையாகும். கட்டாயம் தவிர்க்க வேண்டியவை “ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகெட்ட கொள்கையாகும்.
எதுவாயினும் அதை எடுப்பதற்கும், எறிவதற்கும் அது பற்றிய விபரத்தையும், விளக்கத்தையும் நாம் அறிந்திருப்பது அவசியமாகும்.
ஆகையால் ஒருவன் மூன்றையும் தெளிவாக அறிந்து “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை ஏற்க வேண்டும். மற்ற இரண்டையும் எறிய வேண்டும். இதுவே ஏற்பதற்கும், எறிவதற்குமான சரியான வழியாகும்.
ஆகையால் அஷ்ஷெய்கு பக்ரீ றஜப் அவர்கள் சொல்வது போல் குறித்த மூன்று கொள்கையும் எமக்குத் தேவையில்லையென்று விடுவதற்கு அக் கொள்கை எதுவென்று அது பற்றி அறிந்திருக்க வேண்டுமல்லவா? இவ்வாறிருக்கும் நிலையில் அவை தேவையில்லை என்று விடுவது எவ்வாறு?
எனவே, அவை தேவையில்லையென்று தூக்கியெறிந்து விடாமல் அவற்றையறிந்து செயல்பட வேண்டும்.
அஷ்ஷெய்கு பகீர் றஜப் அவர்களின் இரண்டாவது வசனமான
ونخشى على من يمشي فى هذا الطريق من الكفر
“இவ்வழியிற் செல்வோர்களுக்கு “குப்ர்” நிராகரிப்பு ஏற்படலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்ற வசனமும் சிந்திக்க வேண்டியதாகும்.
ஏன் அஞ்ச வேண்டும்? ஒரு விடயத்தை விளக்கி வைக்கும் பாணியில் விளக்கி வைத்தால் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது.
“வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்ன? “ஹுலூல்” என்றால் என்ன? “இத்திஹாத்” என்றால் என்ன? என்று மக்களுக்குப் புரியும் வகையில் கற்றுக் கொடுத்தால் – விளக்கி வைத்தால் அவர்கள் எது சரி? எது பிழை? என்பதை தெரிந்து கொள்வார்கள்.
விஷயம் தெரிந்தவர்கள் “நாங்கள் அஞ்சுகின்றோம்” என்று கூறிக் கொண்டு ஒரு புறம் ஒதுங்குதல் அவர்களின் அறியாமையும், சமுகத்திற்கும், சமயத்திற்கும் அவர்கள் செய்யும் அநீதியுமாகும்.
இன்று “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை “குப்ர்” என்று சொல்லப்பட்டு அது குழி தோண்டிப் புதைக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவதால் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளும், “தரீகா”வாதிகளும், அவ்லியாஉகளை நேசிப்பவர்களும் “ஸூபிஸம்” எனும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ந்து வஹ்ஹாபிகளும், அவர்களால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களும் அழிக்க அல்லது மறைக்க முற்படும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையையும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தையும், தரீகா வழிகளையும் பகிரங்கப்படுத்தி ஊர் ஊராக, வீடு வீடாகச் சென்று போதிக்க முன்வர வேண்டும். இந்தப் பணிக்காக மார்க்க அறிஞர்கள் முன்வர வேண்டும். மார்க்க அறிஞர்கள் மறைந்திருந்து புதினம் பார்ப்பவர்களாக இருத்தலாகாது.
மார்க்க அறிஞர்கள் மார்க்க கல்வி கற்பதற்காக சுமார் ஏழாண்டுகள் அறபுக் கல்லூரிகளில் கல்வி கற்றதும், மௌலவீ தராதரப் பத்திரம் பெற்றதும் எதற்காக என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். கோடீஸ்வரர்களும், ஜமீன்தார்களும் தமது பொருளாதாரத்தை தீனுக்காக கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்க முன்வர வேண்டும். மார்க்கம் கற்ற உலமாஉகள் தமது கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். மார்க்க விடயங்களை பொது மக்கள் மத்தியில் பகிரங்கமாகவும், விளக்கமாகவும் சொல்ல முன்வர வேண்டும். முக்காடு போட்டுக் கொண்டு வீட்டுக்குள் இருந்து வஹ்ஹாபிகளை ஏசுவதால் எந்த ஒரு பயனுமில்லை. பொது மக்களை நல்வழிப்படுத்துவது மார்க்க அறிஞர்களின் கடமையேயன்றி பொது மக்களின் கடமையல்ல. இதை அறிஞர்கள் புரிந்து, உணர்ந்து செயல்படவேண்டும்.
இங்கு சிறிய சம்பவம் ஒன்றை எழுதுகிறேன். இது மார்க்க அறிஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறேன்.
எனது தந்தை மர்ஹூம் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் அறபுக் கல்லூரி அதிபர் ஒருவரும், அவரின் மாணவர் ஒருவரும் அவர்களைச் சந்தித்து சுக செய்தி வினவ வந்தார்களாம். மூவரும் பேசிக் கொண்டிருந்த சமயம் தொழுகைக்காக பள்ளிவாயலில் “அதான்” – பாங்கு சொல்லப்பட்டதாம். மூவரும் பேச்சை நிறுத்திவிட்டு பாங்கிற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்களாம்.
“அஷ்ஹது அன்ன முஹம்மதர் றஸூலுல்லாஹ்” என்ற வசனம் செவியுட் புகுந்த போது என் தந்தை அவர்கள் இரு கைப் பெருவிரல்களையும் வாயில் வைத்து கண்ணில் தடவிக் கொண்டார்களாம். சந்திக்க வந்த உஸ்தாதும், மாணவனும் அவ்வாறு செய்யாமல் பதில் சொல்லிக் கொண்டு சும்மா இருந்தார்களாம்.
“அதான்” முடிந்த பின் தந்தை அவர்கள் வந்திருந்த அதிபர் அவர்களிடம் கண்மணி நாயகம் அவர்களின் பெயர் சொல்லக் கேட்டதும் நான் செய்ததுபோல் நீங்கள் செய்யாமலிருந்தது ஏன்? என்று கேட்டார்களாம். அதற்கு வந்திருந்த “ஷெய்குல் ஜாமிஆ” அவர்கள், “ஸுன்னத் இல்லாத ஒன்றை உலமாஉகளான நாங்கள் செய்தால் பொது மக்கள் அது “ஸுன்னத்” ஆன விடயமென்று விளங்கிக் கொள்வார்கள். மார்க்கத்தில் “ஸுன்னத்” இல்லாத ஒன்றை “ஸுன்னத்” என்று நம்புதல் ஆகாதாகையால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்று கூறினாராம்.
அதிபர் சொன்ன பதில் தந்தைக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போலாகிவிட்டதாம். அதிபர் அவர்களிடம் நீங்கள் ஓதி முடித்து மௌலவீயானது எதற்காக என்று கேட்டார்களாம். அதற்கவர் ஒன்றுமே சொல்லாமல் தலை குனிந்தாராம். தந்தை அவர்கள், “நீங்கள் பல வருடங்கள் பல இன்னல்களை அனுபவித்து மௌலவீயானது எதற்காக? மக்களுக்கு மார்க்கத்தைச் சொல்லிக் கொடுப்பதற்காகத்தானே? நீங்கள் அவர்களுக்கு மார்க்கத்தைச் சொல்லிக் கொடுங்கள். இது “ஸுன்னத்” அல்ல என்று சொல்லிக் கொடுங்கள்” என்று சொன்னார்களாம். இறுதியில் அதிபர் அவர்கள் தந்தை சொன்னதைச் சரி கண்டார்களாம்.
இந்த நிகழ்வு மார்க்கம் கற்ற மௌலவீமார்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று நம்புகிறேன். இனியாவது ஸுன்னீ உலமாஉகளும், தரீகாக்களின் குலபாஉகளும், குருமார்களும் வாய் திறப்பார்களா? சாந்தியின் பக்கம் அழைக்கும் சங்கைமிகு உலமாஉகள் சாந்தி எங்கே இருக்கிறதென்பதை முதலில் தெரிந்து கொண்டு சாந்திக்கு அழைப்பார்களா?
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
முற்றும்