Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இறைவனுக்கு நிகராக எவருமில்லை, எதுவுமில்லை!

இறைவனுக்கு நிகராக எவருமில்லை, எதுவுமில்லை!

தொடர்: 02

அல்லாஹ்வுக்கு நிகராக எதுவுமில்லை, எவருமில்லை என்பதற்கு திருக்குர்ஆனில் ஆதாரங்கள் உண்டு. அவற்றில் இரண்டை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

அல்லாஹ்வுக்கு நிகராக எதுவுமில்லை, எவருமில்லை என்றால் அவன் போல் எவருமில்லை, எதுவுமில்லை என்பதே இதன் பொருளாகும்.

பின்வரும் இரு திரு வசனங்களும் இக்கருத்தை உறுதி செய்கின்றன.

وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

அல்லாஹ்வுக்கு நிகராக எவருமில்லை. (திருமறை 112-04)

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

அவன் – அல்லாஹ் போல் எதுவுமில்லை, அவனே கேட்பவனாயும், பார்ப்பவனாயும் உள்ளான். (திருமறை 42-11)

மேற்கண்ட திரு வசனங்கள் இரண்டும் அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்பதை தெளிவாகக் கூறுகின்றன. இதை யாரும் மறுத்து அவனுக்கு நிகர் உண்டு என்றோ, அவன் போல் ஏதாவதொரு வஸ்த்து உண்டு என்றோ கூற முடியாது.

மேற்கண்ட இரு திரு வசனங்களும் ஒரே கருத்தைக் காட்டினாலும் இரு வசனங்களிலும் வந்துள்ள சொற்கள் வித்தியாசமாக உள்ளன.

முதலாம் வசனத்தில் “நிகர்” என்ற பொருளுக்கு كُفْوٌ “குப்வுன்” என்ற சொல்லும், இரண்டாம் வசனத்தில் அதே பொருளுக்கு مِثْلٌ – “மித்லுன்” என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரு சொற்களும் ஒரே பொருளுக்குரியவைதான்.

நிகர் என்றால் இரண்டு பொருட்களை எடுத்து இது அதற்கு நிகரானது என்று சொல்வதாகும். அவ்விரண்டும் தோற்றம், அமைப்பு, நிறம், தன்மை, எடை யாவிலும் ஒரேமாதிரியாக இருத்தல் பிரதான அம்சமாகும். ஓர் அணுவளவேனும் வித்தியாசமிருந்தால் அது நிகர் என்று சொல்ல “லாயிக்” அற்றதாகும். சொல்ல முடியாததாகும்.

‘اَلْمِثْلُ أَوِ الْكُفْوُ ‘ يَسْتَدْعِيْ الْمُسَاوَاةَ فِى جَمِيْعِ الصِّفَاتِ كَالسَّوَادَيْنِ وَالْجَوْهَرَيْنِ، وَيَقُوْمُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا مَقَامَ الْآخَرِ مِنْ جَمِيْعِ الْوُجُوْهِ فِى كُلِّ حَالٍ،

“மித்ல்” مِثْلٌ என்றாலும், “குப்வுன்” كُفْوٌ என்றாலும் நிகர் என்ற பொருள்தான். நிகர் சொல்வதற்கு இரண்டு வஸ்த்துக்கள் வேண்டும். ஒரேயொரு வஸ்த்தை வைத்துக் கொண்டு நிகர் சொல்வதற்கு முடியாது. இது அதற்கு நிகரானது, அது இதற்கு நிகரானது என்று சொல்வதாயின் இரண்டு வஸ்த்துக்கள் அவசியமேதான். அவ்விரண்டும் தோற்றத்திலும், அமைப்பிலும், நிறம், மற்றும் எடை, தன்மை அனைத்திலும் இரண்டும் ஒன்று போலவே இருப்பதவசியம்.

மேலே நிகர் என்பதற்கு நான் அறபியில் எழுதிய வரிகளின் விளக்கத்தையே மேலே தமிழில் எழுதிக் காட்டியுள்ளேன். எல்லா அம்சங்களிலும் ஒன்று போலிருந்தால் மட்டும்தான் நிகர் சொல்ல முடியும். இன்றேல் நிகர் சொல்ல முடியாது.

உதாரணமாக ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு 1000 ரூபாய் புதிய தாள்கள் போன்று. அவ்விரு தாள்களையும் பார்த்தால் ஓர் அணுவளவேனும் வித்தியாசமின்றி அவ்விரண்டும் ஒன்று போலவே இருக்கும். இவ்வாறிருந்தால் தாள் தாளுக்கு நிகரானதென்று சொல்ல முடியும்.

இன்னும் ஓர் உதாரணம் கூறுகிறேன். ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு தங்க மோதிரங்கள் போன்று. இவ்விரண்டும் எல்லா அம்சங்களிலும் ஒன்று போலவே இருக்கும். எந்த ஒரு மாற்றமும் இருக்காது.

பண நோட்டுக்கள் இரண்டில் ஒன்று மற்றது போன்றே இருப்பதால் இந்த நோட்டு அந்த நோட்டுக்கு நிகரானதென்று சொல்ல முடியும். இதேபோல் இரண்டு மோதிரங்களில் ஒன்று மற்றது போன்றே எல்லா அம்சங்களிலும் இருப்பதால் இது அதற்கு நிகரானது, அது இதற்கு நிகரானது என்று சொல்ல முடியும்.

நிகர் என்பதற்கு நான் மேலே எழுதிய வரைவிலக்கணத்தின்படி இருந்தால் நிகர் சொல்ல முடியும்.

நிகர் என்றால் என்னவென்று விளங்கியபின் அல்லாஹ்வுக்கு நிகர் உண்டா? இல்லையா? என்பதைக் கண்டு பிடித்துவிடலாம்.

ஒரு நுட்பம்:

“மித்ல்” مِثْلْ என்ற சொல் நிகர் என்ற பொருளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். இச் சொல்லை உதாரணம் என்ற பொருளுக்கு பயன்டுத்த முடியாது.

ஆயினும் مَثَلْ – “மதல்” என்ற சொல்லை நிகர் என்ற பொருளுக்கு பயன்படுத்தாமல் உதாரணம் என்ற பொருளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். அல்லாஹ்வுக்கு مَثَلْ – “மதல்” உதாரணம் கூறலாம். مِثْلْ “மித்ல்” நிகர்தான் கூற முடியாது. அவனுக்கு مَثَلْ – “மதல்” உதாரணம் கூறலாம் என்பதற்கு திருக்குர்ஆன் வசனமே ஆதாரமாக உள்ளது.
وَللهِ الْمَثَلُ الْأَعْلَى
அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு. (திருமறை 16-60)

அவனுக்கு உயர்வான உதாரணம் உண்டு என்றால் ஒரு நாட்டின் அரசன் போன்று, ஜனாதிபதி போன்று என்று உதாரணம் கூறலாம். கீழ்த்தரமான உதாரணம் கூறுவது ஒழுக்கமில்லை.

இதிலுள்ள நுட்பம் தெரியாத உலமாஉகளிற் சிலரும், பொது மக்களில் பலரும் فَلَا تَضْرِبُوْا للهِ الْأَمْثَالَ என்ற திரு வசனத்தை தலை கீழாய் விளங்கிக் கொண்டு அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறாதீர்கள் என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு கூறுவோர் தமது ஆய்வை இன்னும் சற்று விரித்துப் பார்க்க வேண்டும். அதாவது மேற்கண்ட திரு வசனத்தில் வந்துள்ள اَمْثَالْ “அம்தால்” என்ற சொல் உதாரணம் என்ற பொருளுக்குரிய مَثَلْ – “மதல்” என்ற சொல்லின் பன்மைச் சொல் என்று விளங்கி அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறாதீர்கள் என்று சொல்கிறார்கள். இவ்வாறு விளங்கிய இவர்கள் وَللهِ الْمَثَلُ الْأَعْلَى அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு என்ற வசனத்தைக் கருத்திற் கொண்டிருந்தால் أَمْثَالْ என்ற பன்மைச் சொல் مَثَلْ உதாரணம் என்ற பொருளுக்குரிய சொல்லின் பன்மைச் சொல் என்று விளங்கியிருக்கமாட்டார்கள். அவர்கள் “அம்தால்” என்ற பன்மைச் சொல் مَثَلْ – உதாரணம் என்ற சொல்லின் பன்மைச் சொல் என்று விளங்கிக் கொண்டதினால்தான் அல்லாஹ்வுக்கு உதாணரங்கள் கூறாதீர்கள் என்று பொருள் வைத்துக் கொண்டார்கள். இவ்வாறு பொருள் கொள்பவர்கள் وَللهِ الْمَثَلُ الْأَعْلَى அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு என்ற திருக்குர்ஆன் வசனத்தைக் கருத்திற் கொள்ளாமல் அவ்வாறு பொருள் வைத்துக் கொண்டார்கள். இதன் விபரம் என்னவெனில் உதாரணம் என்ற பொருளுக்குரிய مَثَلْ “மதல்” என்ற சொல்லின் பன்மைச் சொல்லும், நிகர் என்ற பொருளுக்குரிய مِثْلْ “மித்ல்” என்ற சொல்லின் பன்மைச் சொல்லும் أَمْثَالْ “அம்தால்” என்றுதான் வரும் என்ற விபரத்தை அறிந்து கொள்ளாததினால் ஏற்பட்ட விபரீதம்தான் அவ்வாறு பொருள் சொல்லக் காரணமாயிற்று. அவர்கள் أمْثَالْ என்ற சொல் مَثَلْ என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகவும் வருமென்பதை அறிந்திருந்தால் அவ்வாறு பொருள் கொண்டிருக்கமாட்டார்கள்.

எனவே, அவ்வாறு தவறாகப் பொருள் கொண்டு فَلَا تَضْرِبُوْا للهِ الْأَمْثَالَ என்ற வசனத்திற்கு அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறாதீர்கள் என்று பொருள் கூறும் மயக்கவாதிகள் أمْثَالْ என்ற பன்மைச் சொல் مَثَلْ என்ற சொல்லுக்கும், مِثْلْ என்ற சொல்லுக்குமான பன்மைச் சொல் என்பதைப் புரிந்து இடத்திற்கேற்றவாறு பொருள் கூற வேண்டும். இவர்கள் துறை தெரியாமல் தோணி தொடுத்து மாட்டிக் கொண்டார்கள்.

எனவே, மயக்கவாதிகள் மேற்கண்ட فَلَا تَضْرِبُوْا للهِ الْأَمْثَالَ என்ற திரு வசனத்தில் வந்துள்ள أَمْثَالْ என்ற பன்மைச் சொல் مِثْلْ நிகர் என்ற பொருளுக்குரிய சொல்லின் பன்மைச் சொல் என்ற உண்மையை விளங்கி குறித்த வசனத்துக்கு அல்லாஹ்வுக்கு நிகர்கள் கூறாதீர்கள் என்று பொருள் கூறவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒன்றை இன்னொன்றுக்கு مِثْلْ நிகர் சொல்வதாயின் ஒன்றிலுள்ள அனைத்து அம்சங்களும் மற்றதிலும் இருக்க வேண்டுமென்றும், ஓர் அம்சம் கூட தவறினால் நிகர் கூற முடியாதென்றும் நிகர் என்பதற்கு தமிழில் வரைவிலக்கணம் – விபரம் கூறியிருந்தேன்.

அறபுக் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களினதும், مَثَلْ என்ற சொல்லுக்கும், مِثْلْ என்ற சொல்லுக்கும், அவ்விரண்டினது பன்மைச் சொல்லுக்கும் வித்தியாசம் தெரியாத உலமாஉகளினதும் நன்மை கருதி தமிழில் எழுதிய விபரத்திற்கான அறபு வசனங்களை இங்கு எழுதுகிறேன்.

اَلْمِثْلُ – بِكَسْرِ الْمِيْمِ وَسُكُوْنِ الْمُثَلَّثَةِ يَسْتَدْعِي الْمُسَاوَاةَ فِى جَمِيْعِ الصِّفَاتِ، كَالسَّوَادَيْنِ وَالْجَوْهَرَيْنِ، وَيَقُوْمُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا مَقَامَ الْآخَرِ مِنْ جَمِيْعِ الْوُجُوْهِ فِى كُلِّ حَالٍ، بِخِلَافِ الْمَثَلِ بِفَتْحَتَيْنِ، فَإِنَّهُ لَا يُشْتَرَطُ فِيْهِ الْمُسَاوَاةُ مِنْ كُلِّ وَجْهٍ، وِإِنَّمَا يُسْتَعْمَلُ فِيْمَا يُشَارِكُهُ بِأَدْنَى وَصْفٍ،
(اليواقيت، ج 1، ص 108، للإمام عبد الوهّاب الشّعراني)

நான் அறபியில் மேலே எழுதியுள்ள வரிகளை நிகருக்கும், உதாரணத்திற்கும் வித்தியாசம் புரியாத அறபுக் கல்லூரி மாணவர்கள் தமது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இதேபோல் தெளிவில்லாத உலமாஉகள் தெளிவு பெற்ற உலமாஉகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும். எவராவது இது தொடர்பான விளக்கத்தை என் மூலம் அறிந்து கொள்ள விரும்பினால் அவர் கற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு மட்டும் என்னிடம் வந்து கற்றுக் கொள்ளலாம். “பத்வா” வழங்கியவர்களும், தலைவர் அவர்களும் வந்தார்களாயின் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து கற்றுக் கொடுக்கப்படும். எவர் வருவதாயினும் சந்திப்புக்கான நேர காலத்தை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொள்ள வேண்டும். தாகமுள்ளவர்களுக்கு பானமும், பழ ரசமும் கொடுக்கப்படும். பசியுள்ளவர்களுக்கு நாட்டுக் கோழி புரியாணி வழங்கப்படும்.

(அல்லாஹ்வுக்கு நிகரில்லாமற் போனதேன்?)

தொடரும்..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments