Home எழுத்தாக்கங்கள் இறைவனுக்கு நிகராக எவருமில்லை, எதுவுமில்லை!

இறைவனுக்கு நிகராக எவருமில்லை, எதுவுமில்லை!

0
308

தொடர்: 03

கடந்த தொடரில் அல்லாஹ்வுக்கு நிகர் இல்லையென்றும், உதாரணம் உண்டென்றும், அவற்றுக்கான ஆதாரங்களோடு எழுதியிருந்தேன். நஸீப் உள்ளோர் பெற்றுத் தெளிவு கண்டிருப்பார்கள்.

எனினும் அது தொடர்பான இன்னும் சில குறிப்புக்களை எழுதத் தவறியதால் அது பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.

“மித்ல்” مِثْلْ நிகர் சொல்வதற்கு இரண்டு வஸ்த்துக்கள் அவசியமென்றும், அவ்விரண்டும் உருவம், அமைப்பு, நிறம், தன்மை எடை முதலான அனைத்து அம்சங்களிலும் அணு அளவும் வித்தியாசமின்றி ஒன்று போல் இருக்க வேண்டுமென்றும், இவ்வாறிருந்தால் மட்டுமே நிகர் என்று சொல்ல முடியுமென்றும் எழுதியிருக்கிறேன்.

உதாரணம் என்பது நிகர் போன்றல்ல. ஒன்றுக்கு இன்னொன்றை உதாரணம் சொல்வதாயின் நிகர் சொல்வதற்கு கூறப்பட்ட நிபந்தனைகளில் ஏதோ ஓர் அம்சத்தில் ஒன்று மற்றது போலிருந்தால் போதும். உதாரணம் சொல்ல முடியும்.

உதாரணமாக

مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ

அவனுடைய – அல்லாஹ்வுடைய பிரகாசத்திற்கு உதாரணம்: அதில் விளக்கு இருக்கும் ஒரு மாடம் போன்றதாகும். (திருக்குர்ஆன் 24-35 )

இவ்வசனத்தில் அல்லாஹ்வின் பிரகாசத்திற்கு உதாரணம் விளக்குள்ள ஒரு மாடம் போன்று என்று அல்லாஹ்வின் பிரகாசத்திற்கு ஓர் உதாரணம் சொல்லப்பட்டுள்ளது. அவ் உதாரணத்திற்கு مَثَلْ – “மதல்” என்ற சொல்லையே அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். مِثْلْ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ

உலக வாழ்வுக்கு உதாரணம் வானத்திலிருந்து நாம் இறக்கி வைத்த மழை போன்றதாகும். (திருக்குர்ஆன் 10-24)

மேற்கண்ட இரண்டு திரு வசனங்களிலும், உதாரணம் என்ற பொருளுக்கு مَثَلْ – “மதல்” என்ற சொல்லையே அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். مِثْلْ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

عَبْدُ اللهِ كَأَسَدٍ

அப்துல்லாஹ் சிங்கம் போன்றவன் என்ற வசனமும், عَبْدُ الْجَبَّارْ كَثَعْلَبٍ அப்துல் ஜப்பார் நரி போன்றவன் என்ற வசனமும் مَثَلْ உதாரணங்களேயன்றி நிகரல்ல. ஏனெனில் அப்துல்லாஹ் சிங்கம் போன்றவன் என்ற வசனத்தையும், அப்துல் ஜப்பார் நரி போன்றவன் என்ற வசனத்தையும் நிகரில் சேர்ப்பது பிழையானதாகும். அப்துல்லாஹ்வும் சிங்கமும், அப்துல் ஜப்பாரும் நரியும் அனைத்து அம்சங்களிலும் ஒன்று போன்றவர்களல்ல.

இவ்விரு உதாரணங்களிலும் مَثَلْ என்ற சொல் வரவில்லை என்று எவரும் தடுமாறிவிட வேண்டாம். அதற்குப் பதிலாக “காப்” என்ற எழுத்து வந்துள்ளது. இதற்கு مَثَلْ உடைய பொருள் உண்டு. இவ்விரு வசனங்களையும் عَبْدُ اللهِ مَثَلُ أَسَدٍ என்றும், عَبْدُ الْجَبَّارْ مَثَلُ ثَعْلَبٍ என்றும் சொல்லலாம்.

மேற்கண்ட விளக்கங்கள் மூலம், அல்லாஹ்வுக்கு நிகராக எதுவுமில்லை, எவருமில்லையாதலால் அல்லாஹ் நிகரவற்றவனானான்.

அல்லாஹ்வுக்கு ஏன் நிகரில்லை?

அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்பதை நிறுவுவதற்காக திருக்குர்ஆன் வசனங்களில் இரண்டு வசனங்களை எழுதினேன். குறித்த இரு வசனங்களும் இறைவனுக்கு நிகரில்லை என்று மட்டும் கூறுகின்றனவே தவிர அதற்கான காரணத்தை அவ் வசனங்கள் கூறவில்லை.

அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்ற உண்மைத் தத்துவத்தை பல வழிகளில் நிறுவ முடியும். அவற்றில் ஒரு வழி “லா இலாஹ இல்லல்லாஹ்” அல்லாஹ் அல்லாத எதுவுமில்லை என்ற திருக்கலிமா தருகின்ற “ஹமவோஸ்த்” எல்லாம் அவனே என்ற தத்துவமாகும். இதுவே “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் எனப்படும்.

அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்று சொல்வதை விட அல்லாஹ்வுக்கு நிகர் உண்டு என்று சொல்லுதல் அசாத்தியமானதாகும். அல்லாஹ்வுக்கு நிகர் இருப்பது مُحَالْ அசாத்தியமானதாகும். ஒருவன் இத்தத்துவத்தை – அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்ற தத்துவத்தை விளங்குவதாயின் “வஹ்ததுல் வுஜூத்” உள்ளமை ஒன்றேயன்றி அது இரண்டுமில்லை, பலதுமில்லை என்ற தத்துவத்தை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இதை விளங்கிக் கொள்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இவ் உண்மையை விளங்கிக் கொள்வது கடினமானதல்ல. ஆயினுமதை கடினமானதாக ஆக்கி வைத்தவர்கள் அரை குறை ஆலிம்களேயாவர். அரை குறைகள் என்று நான் குறிப்பிடுவது பட்டங்கள் பல பெற்றும் பட்ட மரம் போன்ற பயனற்றவர்களையே குறிக்கும்.

“வஹ்ததுல் வுஜூத்”

இக்கோட்பாட்டை அறிந்து கொள்வதன் மூலம் மூடப்பட்டுள்ள பல வாயல்கள் திறக்கப்படும்.

“வஹ்தத்” என்றால் ஒன்று என்று பொருள். “வுஜூத்” என்றால் உள்ளமை என்று பொருள். உள்ளமை என்ற ஒரு வஸ்த்து உள்ளதாக இருப்பதைக் குறிக்கும்.

“வுஜூத்” என்ற சொல்லுக்கு உள்ளமை என்று தொன்று தொட்டு பொருள் சொல்லப்பட்டு வந்தாலும் அதன் எதிர் மறை இன்மை என்பதாகும். அதாவது இல்லாமை என்பதாகும்.

எனவே, உள்ளமை என்பது நிச்சயமாக இருக்கின்ற ஒன்றையே குறிக்கும். இது அல்லாஹ்வின் “வாஜிப்” ஆன “ஸிபத்” தன்மைகளில் ஒன்றாகும்.

அல்லாஹ்வில் அவசியம் இருக்க வேண்டிய தன்மைகளில் “வுஜூத்” உள்ளமை என்பது பிரதானமானதாகும்.

உண்மை என்று சொல்வதற்குப் பதிலாக சிலர் உள்ளமை என்ற சொல்லை பயன்படுத்துவதுண்டு. நான் கூறும் உள்ளமை அந்த உள்ளமை அல்ல. அந்த உள்ளமையின் எதிர்மறை “பொய்” என்று வரும். நான் கூறிவரும் உள்ளமை “ஒன்று உள்ளதாக இருப்பதைக் குறிக்கும் உள்ளமையாகும்” இதன் எதிர் மறை பொய் என்று வராது. இன்மை அல்லது இல்லாமை என்றுதான் வரும். இது அறபியில் عَدَمٌ இன்மை என்று சொல்லப்படும். இல்லாமை என்றால் இல்லாதது என்று பொருள். இந்த “வுஜூத்” உள்ளமைதான் “தாத்” என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இதுவே ஸூபீகளில் அதிகமானவர்களின் கருத்து. இதற்கு மாறாகச் சொல்வோரும் சிலருளர்.

“வுஜூத்” உள்ளமை என்பது அல்லாஹ்வில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று. உள்ளமை இல்லையென்றால் அல்லாஹ்வே இல்லையென்று சொன்ன மாதிரி ஆகிவிடும்.

எத்தன்மை அல்லாஹ்வில் இருப்பதவசியமோ அத்தன்மை படைப்பில் இருப்பது கூடாது. இருக்கவும் முடியாது. அதாவது படைப்பில் “வுஜூத்” உள்ளமை இருக்க கூடாது. அவ்வாறாயின் அதன் விளக்கம் படைப்பு என்பதே இல்லை, அதற்கு “வுஜூத்” எனும் உள்ளமையும் கிடையாதென்று முடிவு செய்ய வேண்டும்.

ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் பல நூல்களில் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.

إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ – فَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةْ
كُلُّ مَنْ يَعْرِفُ هَذَا – حَازَ أَسْرَارَ الطَّرِيْقَةْ

(“அல்கவ்ன்” என்ற சொல் படைப்புக்கள் யாவையும் உள் வாங்கும் ஒரு சொல்லாகும். இதன்படி படைப்புக்கள் எல்லாமே “கயால்” என்று கூறுகின்றார்கள். அவ்வாறு கூறிய அவர்கள் படைப்பு என்பது எதார்த்தத்தில் மெய்ப் பொருளான அல்லாஹ்வாகவே உள்ளது. இந்த விஷயத்தை அறிந்த அனைவரும் “தரீகா”வின் இரகசியங்களைப் பெற்றுக் கொண்டவராவார்) என்று கூறியுள்ளார்கள்.

அவர்களின் கருத்து என்னவெனில் படைப்பு எதுவாயினும் அது யானை போன்ற பெரியதாயினும், சிற்றெறும்பு போன்ற சிறியதாயினும் பொதுவாக படைப்பு என்பது “கயால்” என்று கூறுகின்றார்கள்.

“கயால்” என்ற அறபுச் சொல்லின் நேரடிப் பொருள் என்னவென்று நான் கூறாமல் அதற்குரிய வரைவிலக்கணத்தை எழுதுகிறேன். அவ்வரைவிலக்கணத்தைக் கருத்திற் கொண்டு “கயால்” என்பதற்கான சரியான தமிழ்ச் சொல்லை வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

“கயால்” என்ற சொல்லுக்கு “ஸூபீ” மகான்கள் கூறியுள்ள வரைவிலக்கணத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

اَلْخَيَالُ كُلُّ مَا يُرَى وَلَا يُوْجَدُ فِى الْخَارِجِ بِالذَّاتِ

கண் பார்வைக்கு தெரியும். ஆயினும் தெரிந்த பொருளாக அது எதார்த்தத்தில் இருக்காது. கானல் நீர் போன்று. இது அறபியில் سَرَابْ – “ஸறாப்” என்று சொல்லப்படும். கானல் நீர் போல் தோற்றும். இதனால் அதற்கு “கானல் நீர்” என்று பெயர் வரலாயிற்று. இதுவே “கயால்” என்று சொல்லப்படுகின்றது.

கானல் நீரை நமது நாட்டில் பார்ப்பதாயின் மன்னார், யாழ்ப்பானம், அனுராதபுரம் போன்ற கடுமையான வெயில் உள்ள பிரதேசங்களில் பாலைவனம் போன்ற வெட்ட வெளியான இடங்களில் நீர் ஓடுவது போலும், அலை அடிப்பது போலும் கண் பார்வைக்குத் தெரியும். ஆயினும் எதார்த்தத்தில் தெரிந்த பொருள் அங்கே இருக்காது. எதார்த்தத்தில் இல்லாத ஒன்று கண் பார்வைக்கு இருப்பது போல் தெரியக் கூடியது அறபு மொழியில் “கயால்” எனப்படும். இச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லை தேடிக் கொண்டிருக்கிறேன்.

சிலர் “கயால்” என்ற சொல்லுக்கு “மாயை” என்று பொருள் கூறுகின்றார்கள். மாயை என்றால் உண்மையில் இல்லாமல், இருப்பது போலத் தோற்றம் மட்டும் அளிப்பதாகும். கானல் நீர் போன்று. இதற்கு இன்னும் சிலர் பிரமை என்றும் சொல்வர்.

இதே கருத்தில் ஒரு கவிஞன் உலகே மாயம், வாழ்வே மாயம், வாழ்வில் நாம் காணும் அகமே மாயம் என்று கூறியுள்ளான். இன்னும் சிலர் இச் சொல்லுக்கு பேதமை என்றும் சொல்வர். இது “வஹ்ம்” وَهْمْ என்ற சொல்லின் தமிழாக்கம் என்பதே பொருத்தம். “கயால்” என்ற சொல்லின் தமிழாக்கம் என்று சொல்ல முடியாது. எனினும் “மாயை” என்ற தமிழ்ச் சொல் “கயால்” என்ற அறபுச் சொல்லுக்கு பொருந்துமென்று நான் விளங்குகிறேன்.

இதன்படி ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்கள் படைப்பை “கயால்” மாயை என்று சொல்வது எதார்த்தத்திற்கு பொருத்தமாயிருக்குமென்று நான் கருதுகிறேன்.

உலகில் எந்தவொரு படைப்பை எடுத்துக் கொண்டாலும் அது உண்மையில் இல்லாமல் இருப்பது போல் தோற்றமளிக்கின்றதென்று தான் சொல்ல வேண்டும்.

இப்னு அறபீ அவர்களின் கருத்து என்னவெனில் படைப்பு என்பது மாயையாகும். அதாவது அப்படி ஒன்றில்லை. அவ்வாறு தோற்றுவது இறைவன்தான் என்று கூறுகின்றார்கள். وَهُوَ حَقٌّ فَى الْحَقِيْقَةِ என்ற அவர்களின் வசனம் இதே கருத்தையே தருகின்றது.

பின்வரும் திருமறை வசனம் இதே கருத்தை இன்னொரு பாணியில் கூறுவது அறிஞர்களுக்கு மறையாது.

وَغَرَّتْكُمُ الْحَيَاةُ الدُّنْيَا

இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றிவட்டது. (திருமறை 45-35)

உலக வாழ்க்கை மனிதனை எவ்வாறு ஏமாற்றுகிறதென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏமாற்றுதல் என்பது ஒரு பொருளை அதே பொருளாக காட்டாமல் வேறொரு பொருளாகக் காட்டுதலாகும். படைப்பாக இருப்பது இறைவன்தான். ஆயினும் படைப்பு தன்னை இறைவனாகக் காட்ட வேண்டும். அது தன்னை அவ்வாறு காட்டாமல் படைப்பாக காட்டுவது ஏமாற்றுதலாகும். இது குறித்தே உலக வாழ்வு உங்களை ஏமாற்றிவிட்டதென்று இறைவன் சொன்னான் போலும்.

தொடரும்.

NO COMMENTS