தொடர்: 04
எதார்த்தத்தில் அல்லாஹ்வுக்கு நிகரில்லை. நிகர் என்பது ஒருவனின் உள்ளத்தில் ஏற்படுகின்ற பேதமையாகும்.
எதார்த்தத்தில் அல்லாஹ்வுக்கு நிகருமில்லை, “ஷிர்க்” இணையுமில்லை.
எதார்த்தத்தில் அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்பதற்கான பிரதான காரணம் “உள்ளது ஒன்று மற்றது அன்று” எனும் தத்துவமேயாகும். நிகருக்கும் இரண்டு வேண்டும். “ஷிர்க்” இணைக்கும் இரண்டு வேண்டும். ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு எங்கனம் நிகர் பேசுவது? எங்கனம் “ஷிர்க்” வைப்பது? இது அசாத்தியம். நிகர் சொல்வதற்கும், “ஷிர்க்” இணை வைப்பதற்கும் இரண்டு வஸ்த்துக்கள் அவசியமாகும்.
படைப்பு எதுவாயினும் அது அல்லாஹ்வால் படைக்கப்பட்டதேயாகும். வேறு எவராலும் படைக்கப்பட்டதல்ல. அல்லாஹ் எவனாலும் படைக்கப்பட்டவனல்ல. அவன் தனக்கு தானானவன். இவ் அடிப்படையில் எந்த ஒரு படைப்பாயினும் அது எவனாலும் படைக்கப்பட்டதல்ல என்றும், அது அல்லாஹ் போல் தனக்குத் தானானதென்றும் நம்பினால் அவன் தனது எண்ணத்தில் – நம்பிக்கையில் அல்லாஹ்வுக்கு நிகர் கற்பித்தவனாகிவிடுவான். அவன் “முஷ்ரிக்” இணை வைத்தவனேயன்றி “முஃமின்” விசுவாசியல்ல.
எவன் அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்று சொன்னானோ, அல்லது நம்பினானோ அவன் நிச்சயமாக தானறியாமலேயே “முஷ்ரிக்” இணை வைத்தவனாகிவிட்டான்.
ஏனெனில் இவ்வாறு சொன்னவன் அல்லது நம்பினவன் படைப்பு அல்லாஹ் போல் தனக்குத் தானானதென்று நம்புகிறான். இந்த நம்பிக்கை “ஷிர்க்” ஆன நம்பிக்கையாகும்.
ஏனெனில் அல்லாஹ் قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு உண்டாகித் தன்னைக் கொண்டே நிலை பெற்றவனாவான். படைப்பு என்பது அவனுக்கு மாறானதாகும். அது அல்லாஹ்வைக் கொண்டு உண்டாகி அவனைக் கொண்டே நிற்பதாகும். இதுவே இஸ்லாமிய “அகீதா” கொள்கையாகும். படைப்பு வேறு, படைத்தவன் வேறு என்று சொன்னவன் قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு உண்டாகி தன்னைக் கொண்டு நிலை பெற்றவன் என்ற அல்லாஹ்வுக்குரிய “ஸிபத்” தன்மையை படைப்புக்கு கொடுக்கிறான். இந்த வகையில் இவன் சந்தேகமின்றி இணை வைத்தவனே ஆவான்.
இதுவே இஸ்லாமிய “அகீதா” தருகின்ற தத்துவமாகும். இதுவே ஸூபிஸம் தருகின்ற தத்துவமுமாகும்.
இந்த விபரம் தெரியாமல் படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்று சொல்பவர்களும், நம்பினவர்களுமே உலக முஸ்லிம்களில் அநேகமானவர்கள் உள்ளனர்.
இந்த விபரங்களோடு உலகில் வாழ்கின்ற முஸ்லிம்களின் நம்பிக்கையை ஆய்வு செய்தால் உலகிலேயே உண்மை முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். இந்த அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களை நோக்கினால் உண்மை முஸ்லிம்கள் ஓர் இலட்சம் பேர் கூட இருக்கமாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
விபரம் தெரியாமல் இவ்வாறு நம்பி வாழும் முஸ்லிம்கள் இன்னும் குறைந்து போவார்கள் என்பதற்கு பின்வரும் நபீ மொழிகள் ஆதாரமாக உள்ளன. “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானம் வஹ்ஹாபிகளால் மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வருவதால் இன்னும் சில காலத்தில் ஸூபிஸ ஞானம் கற்ற ஒருவரைக் கூட காண்பது அபூர்வமாகி விடும்.
ஹதீதுகள் – நபீ மொழிகள்:
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ يُوشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى مِنَ الْإِسْلَامِ إِلَّا اسْمُهُ، وَلَا يَبْقَى مِنَ الْقُرْآنِ إِلَّا رَسْمُهُ،
மனிதர்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தில் இஸ்லாமியர்களின் வாழ்வில் இஸ்லாம் இருக்காது. பெயரில்தான் இஸ்லாம் இருக்கும். அவர்களின் வாழ்வில் திருக்குர்ஆன் இருக்காது. அச்சிடப்பட்ட குர்ஆன் பிரதிகளில் மட்டும் எழுத்துக்கள் இருக்கும் என்று எம்பிரான் அஹ்மத் எங்கள் கோமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஷுஃபுல் ஈமான் 1763)
எம்பெருமானார் கணித்துச் சொன்ன காலம் வருமென்று சொல்வதை விட வந்துவிட்டதென்று சொல்வதே பொருத்தமானதாகும். ஏனெனில் இன்று முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவுமில்லை. உலமாஉகள் உலமாஉகளாகவும் இல்லை.
இன்று உலகில் 300 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டால் அவர்களில் நூறு கோடி முஸ்லிம்களாவது ஸூபிஸ ஞானம் தெரிந்தவர்கள் இருப்பார்கள் என்பது சந்தேகமே! இலங்கை நாட்டில் இருபது இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அவர்களில் ஓர் இலட்சம் பேர்களாவது ஸூபிஸ ஞானம் தெரிந்தவர்கள் இருப்பார்கள் என்பதும் சந்தேகமே! ஆயினும் பெயரளவில் உலகில் 300 கோடி முஸ்லிம்கள் இருக்கலாம். அதேபோல் இலங்கையில் 20 இலட்சம் முஸ்லிம்கள் பெயரளவில் இருக்கலாம். இவ்வாறு முஸ்லிம்கள் பெயரளவில் இருக்கும் காலம் வருமென்று சொன்னது இக்காலத்திற்குப் பொருத்தமானதாகவே உள்ளது. அது இக்காலமல்ல இனி வரும் காலம்தான் என்று ஒருவர் சொன்னால் அக்காலம் இக்காலத்தை விட மோஷமானதாகவே இருக்கும். இன்று தந்திரமாக வஹ்ஹாபிஸத்திற்கு அழைப்போர் அக்காலத்தில் பலாத்காரமாக அழைப்பர். அல்லது ஸக்றான் போல் தீயில் விழுவர்.
قَالَ رسول الله صلّى الله عليه وسلّم : لا تَقُومُ السَّاعَةُ حَتَّى لا يَبْقَى فِي الأَرْضِ أَحَدٌ يَقُولُ: اللَّهْ. اللَّهْ.
அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லக் கூடிய ஒருவர் கூட பூமியில் இல்லாத போதுதான் உலகம் அழியும் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள். (ஆதாரம்: முஸனதுல் பஸ்ஸார்)
அல்லாஹ் என்று சொல்லக் கூடிய ஒருவர் கூட பூமியில் இல்லாமற் போகும் போதுதான் உலகம் அழியும் என்று சொன்ன தகவல் மிக ஆழமாக ஆராய வேண்டிய ஒன்றாகும்.
இதன் கருத்து என்னவெனில் ஒரு காலம் வரும். அக்காலத்தில் அல்லாஹ்வை அறிந்து அவன் பெயரை மொழிபவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். இவ்வாறு குறைந்து குறைந்து உலகில் ஒருவர் மட்டும் உரிய முறையில் அல்லாஹ் என்று சொல்பவர் இருப்பார். அவர் இருக்கும் காலத்திலேயே அல்லாஹ் என்று சொல்பவர்கள் பல்லாயிரம் பேர் இருக்கலாம். ஆயினுமவர்கள் அல்லாஹ்வை அறியாமல் நாவால் மட்டும் சொல்லிக் கொண்டிருப்பவர்களாவர். இவர்களை இஸ்லாம் கணக்கெடுக்காது. அவனை அறிந்து சொல்லும் முறையோடு சொல்பவர் ஒருவர் மட்டுமே இருப்பார். அவர் இருக்கும் வரை மறுமை ஏற்படமாட்டாது. அந்த ஒருவரும் மரணித்த பிறகுதான் உலகம் அழியும்.
அந்த ஒருவர் இருக்கும் காலத்திலேயே பல கோடி முஸ்லிம்கள் உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் பெயரளவில் முஸ்லிம்களாயிருப்பார்களேயன்றி அல்லாஹ்வை அறிந்தவர்களாக இருக்கமாட்டார்கள்.
ஒரு மனிதனை அல்லாஹ் படைத்ததற்கான அவனின் இலட்சியம் அவன் தன்னைப் படைத்தவனை அறிந்து அவனை அடைந்து கொள்ள வேண்டுமென்பதேயாகும். இன்று மனிதன் அல்லாஹ்வின் இந்த இலட்சியத்தை மறந்து அவனை நினைத்துக் கூடப் பார்க்காத நன்றி கெட்டவனாகிவிட்டான். ஒரு நாளில் மனிதன் சுவாசிக்கும் 21,600 சுவாசங்களையும் பயனுள்ள சுவாசங்களாக – அல்லாஹ்வின் நினைவோடு கலந்த சுவாசங்களாக அவன் மாற்றவில்லையானால் அவன் தண்டிக்கப்பட வேண்டியவனேயாவான்.
ஒரு மனிதன் தனது 21600 சுவாசங்களில் ஒரு சுவாசம் கூட வீணாகாமல் அல்லாஹ்வின் நினைவில் கழிப்பதற்கு வழியுண்டு. அவ்வழி ஸூபிஸ வழியிலேயே உள்ளது. ஸூபிஸம் கற்றவன் பாக்கியவான்தான்.
“உலமாஉள்ளாஹிர்” வெளி நீச்சலடிக்கும் உலமாஉகள் என்போர் பொது மக்களுக்கு வெளி நீச்சலையே கற்றுக் கொடுப்பார்கள். உள் நீச்சல் சொல்லிக் கொடுக்க அவர்களுக்கு அது தெரியாது. ஒரு மனிதனுக்கு “ஷரீஅத்” என்ற வெளி நீச்சலும், “ஹகீகத்” என்ற உள் நீச்சலும் அவசியமேயாகும். “ஷரீஆ”வின் வழி பேணுவது எவ்வாறு அவசியமோ “ஹகீகா” வழி பேணுவதும் அவ்வாறு அவசியமேயாகும்.
ஆயினும் வஹ்ஹாபிஸ வழிகேடு தலை தூக்கி நிற்கும் இக்கால கட்டத்தில் ஸூபிஸ ஞானம் கற்று அதன் வழியில் பயணிப்பது கடினமாயினும் எண்சாண் உடம்புள்ள இன்ஸான் எண்சாண் பனங்கள் இறக்கி வயிறு நிரம்பக் குடித்து அந்த போதையில் இறைவனுடன் கொஞ்சும் மொழி பேசி மகிழ்வதும், அவனில் “பனா” அழிந்து அனைத்தையும் மறந்து பேரின்பம் பருகுவதும் அவசியமாகும்.
அல்லாஹ்வுக்கு நிகரில்லாமற் போனதற்கான காரணத்தை அறிவதாயின் “வஹ்ததுல் வுஜூத்” எனும் ஸூபிஸ ஞானம் கற்க வேண்டுமென்று கூறிய நான் தொடர்ந்து அது பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் எழுதுவேன். “பத்வா” வழங்கிய முல்லாக்கள் தமது தவறையுணர்ந்து அதை வாபஸ் பெறும் வரை என் பேனா எழுதிக் கொண்டே இருக்கும்.
தொடரும்…