Home எழுத்தாக்கங்கள் இறைவனுக்கு நிகராக எவருமில்லை, எதுவுமில்லை!

இறைவனுக்கு நிகராக எவருமில்லை, எதுவுமில்லை!

0
308

தொடர்: 05

அல்லாஹ்வுக்கு நிகராக எதுவுமில்லை என்றும், எவருமில்லை என்றும் நம்ப வேண்டும். யாராவது இதற்கு முரணாக – மாறாக நம்புவானாயின் அவனின் “ஈமான்” நம்பிக்கை நிறைவேறாது. அதோடு அவனின் நம்பிக்கை திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும் முரணானதாகிவிடும்.

அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும், நபீ மொழிகளும் ஆதாரங்களாக உள்ளன. இவை ஆதாரங்களாக இருக்கும் நிலையில் வேறு ஆதாரங்கள் தேவையில்லை.

திரு வசனங்களும், நபீ மொழிகளும் நிகரில்லை என்பதற்கு ஆதாரங்களாக இருந்தாலும் கூட அவை அவனுக்கு நிகரில்லை என்பதற்கான காரணத்தைக் கூறவில்லை.

அல்லாஹ்வுக்கு நிகர் உண்டு என்று ஒருவன் சொல்வானாயின் அவனின் கூற்றை மறுத்து இறைமறை வசனங்களையும், நபீ மொழிகளையும் நாம் கூறினாலும் கூட நிகரில்லை என்பதற்கான காரணத்தை – அவனின் “அக்ல்” புத்தி ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் விளக்கம் கூறினால் மட்டும்தான் “அவனுக்கு நிகரில்லை” என்று நாம் கூறுவதை அவன் ஏற்றுக் கொள்வான்.

இதற்கு ஒரு வழி மட்டுமன்றி பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒரு வழி “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை தருகின்ற வழியாகும் என்று ஏற்கனவே கூறி, அந்த வழியை விளக்கி வைப்பதற்காக ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய தத்துவம் ஒன்றை எழுதினேன். சென்ற தொடரை வாசித்தவர்கள் தெளிவு பெற்றிருப்பர்.

அவர்கள் என்ன சொன்னார்கள்? إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ படைப்பு என்பது “கயால்” என்றார்கள். அதாவது கண் பார்வைக்குத் தெரியும். ஆயினுமது கண்ணுக்குத் தெரிந்த பொருளாக இருக்காது என்று கூறிய அவர்கள் அடுத்த வரியில் وَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةِ அது – அந்த படைப்பு எதார்த்தத்தில் அல்லாஹ்வாகவே உள்ளது என்று கூறினார்கள்.

இப்னு அறபீ அவர்களின் கூற்றிலிருந்து அல்லாஹ்தான் படைப்பாக வெளியாகியுள்ளான். ஆகையால் – அவனே படைப்பாக வெளியாகி உள்ளதால் அவன்தான் உள்ளானேயன்றி படைப்பு இல்லை என்ற உண்மை தெளிவாகிறது. எங்குமாய், எல்லாமாய் அவனே உள்ளான் என்றால் படைப்பு இருப்பது எங்கே? எப்படி? என்ற கேள்விக்கு விடை சொல்ல முடியாமற் போய்விடும். எல்லாம் அவனாயிருந்தால் படைப்பு இருப்பது எங்கே? இவ்விடத்தில் சற்று நேரம் நின்று இது தொடர்பாக ஸெய்யிதுனா அபுல் ஹஸன் ஷாதுலீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய தத்துவத்தை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

قال القطب الأكبر أبو الحسن علي الشّاذلي قُدِّس سرّه: قد مَحَقَ الحقُّ تعالى جميعَ الأغيار بقوله هو الأوّل والآخر والظاهر والباطن، فقيل له فأين الخلقُ؟ فقال موجودون، ولكن حكمهم مع الحقِّ تعالى كَالْأَنَابِيْبِ الّتي فى كوّة الشمس، تراها صاعدةً هابطةً فإذا قَبَضْتَ عليها لا تراها، فهي موجودة فى الشّهود مفقودةٌ فى الوجود، ‎(اليواقيت والجواهر، الجزء الأول، ص65)

அல்லாஹ் தனது முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்ற தனது சொல்லைக் கொண்டு அல்லாஹ்வுக்கு வேறானவை எதுவுமில்லை என்று அவற்றை அழித்துவிட்டான் என்று சொன்னார்கள். அப்போது படைப்பு எங்கே? அது இல்லையா? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் படைப்புகள் உள்ளன. ஆயினுமவை பார்வையில் மட்டுமே உள்ளன. எதார்த்தத்தில் அவை இல்லை. அவற்றுக்கு “வுஜூத்” உள்ளமை இல்லை. அவை எதுபோலென்றால் ஒரு வீட்டின் கூரையிலுள்ள ஓட்டை வழியாக சூரிய வெளிச்சம் ஒரு “பைப்” பட்டை போல் வீட்டினுள் வரும் போது அவ்வெளிச்சத்தில் ஏறுவது போன்றும், இறங்குவது போன்றும் கண்ணுக்குத் தெரிகின்ற தூசி போன்றவையாகும். அது ஏறுவது போன்றும், இறங்குவது போன்றும் கண்ணால் காண்பாய். ஆயினும் அதை நீ கையால் பொத்தினால் அதைக் காணமாட்டாய் என்று கூறினார்கள். இவ்வாறுதான் படைப்பு. அதைக் கண்ணால் காண முடியும். அவற்றைப் பிடிக்க முடியாது. அவற்றுக்கு “வுஜூத்” உள்ளமை இல்லை என்று கூறினார்கள்.

இதன் மூலம் படைப்பு பார்வையில் உள்ளதேயன்றி எதார்த்தத்தில் அதற்கு உள்ளமை இல்லை. படைப்பாக கண் பார்வைக்கு தோற்றுவது அல்லாஹ்வின் உள்ளமையேயாகும்.

அல்லாஹ்தான் படைப்பாக “தஜல்லீ” வெளியாகியுள்ளானாகையால் அவன் மட்டுமே உள்ளான் என்று நம்பும் போது அவனுக்கு நிகர் உண்டு என்று எவ்வாறு சொல்ல முடியும்? அவனேதான் எல்லாமாயுமிருக்கும் நிலையில் அவனுக்கு நிகர் கூற எது இருக்கிறது? நிகர் சொல்வதற்கு குறைந்தது இரண்டு வஸ்த்துக்களாவது இருக்க வேண்டுமல்லவா?

எனவே, அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களையும், நபீ மொழிகளையும் ஆதாரங்களாக கூறினாலும்கூட இதை மறுப்பவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் اَلدَّلَائِلُ الْعَقْلِيَّةُ யுக்திப் பிரமாணங்கள் மூலம் இதை நிறுவுவதற்கு “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை விளக்கம் ஒன்றே எதிரி மறுப்புக் கூற முடியாத நிலைக்கு அவனைத் தள்ளிவிடும்.

அவனிடம், படைப்பு என்பதே இல்லையென்றும், படைப்பாக தோற்றுவது அல்லாஹ்தான் என்றும் நிறுவினால் அவனுக்கு நிகர் சொல்ல எந்த ஒரு வஸ்த்தும் இல்லையென்றாகிவிடும். இல்லாமற் போய்விடும்.

அல்லாஹ்வுக்கு நிகரில்லை என்று நிறுவுவதற்கு இன்னுமொரு ஆதாரம் தருகிறேன். இதன் மூலமும் அவனுக்கு நிகரில்லை என்று நிறுவமுடியும்.

أَلَا إِنَّهُمْ فِي مِرْيَةٍ مِنْ لِقَاءِ رَبِّهِمْ أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيطٌ
அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் – காபிர்கள் அவர்களின் இரட்சகனான அல்லாஹ்வை சந்திப்பதில் – காண்பதில் சந்தேகமுள்ளவர்களாக உள்ளனர். அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அவன் – அல்லாஹ் அனைத்து வஸ்த்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான். (திருக்குர்ஆன் 41-54)

கேள்வி பதில் போல் அமைந்துள்ள இத்திரு வசனம் அல்லாஹ்தான் படைப்புக்களாக வெளியாகியுள்ளான், அவன் மட்டுமே உள்ளான், படைப்பு இல்லை என்ற சுருக்கத்தை தருகிறது. சிந்தனையாளர்களுக்கு இத்திரு வசனம் பெரும் விருந்தாக அமைந்துள்ளது. நன்றாகச் சிந்திப்பார்களாயின் சத்தியத்தைச் சந்தித்துக் கொள்வார்கள்.

காபிர்கள் தமது இரட்சகனான அல்லாஹ்வை சந்திக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளவர்களாக உள்ளனர் என்று கூறிய அல்லாஹ் இதன் பின்னால் அவனைச் சந்திக்க முடியும் என்றோ, முடியாதென்றோ கூறாமல் أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيْطٌ அவன் சகல வஸ்த்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான் என்று மட்டும் கூறியுள்ளான்.

இது அல்லாஹ்வைச் சந்திக்க, காண முடியுமென்பதற்கான ஆதாரமாகுமா? என்று நாம் ஆய்வு செய்து பார்ப்போம்.
أَلَا إِنَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيْطٌ
“அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் சகல வஸ்த்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான்” இவ்வாறு அல்லாஹ் கூறிய பதிலில் அவனைக் காண முடியும் என்பதற்கான விடை உண்டு. இதை அறிந்து கொள்வதற்குப் பின்வரும் விளக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

“அல் இஹாதத்” اَلْإِحَاطَةُ என்றால் சூழ்தல் என்று பொருள் வரும். சூழ்தலில் இரண்டு வகையுண்டு. ஒன்று ஒரு கடிதத்தை “என்விலோப்” கடிதக் கவர் – உறை சூழ்ந்திருப்பது போன்று. ஒரு கடிதத்தை கடித உறைக்குள் வைத்தால் அந்தக் கடிதத்தை அந்த உறை சூழ்ந்துள்ளதென்று சொல்ல முடியும்.

சூழ்தலில் இரண்டாம் வகை கடித உறையை தாள் – பேப்பர் சூழ்ந்திருப்பது போன்று. இது இரண்டாம் வகை சூழ்தலாகும்.

இவ்விரு வகைகளிலும் அல்லாஹ் அனைத்து வஸ்த்துக்களையும் சூழ்ந்திருப்பது கடித உறையை தாள் – பேப்பர் சூழ்ந்திருப்பது போன்றதென்றே விளங்கிக் கொள்ள வேண்டும். கடிதத்தை அந்த உறை சூழ்ந்திருப்பது போன்றதென்று விளங்கலாகாது.

இவ்விரு வகைச் சூழ்தல்களிலும் கடித உறையை தாள் சூழ்ந்திருப்பது போல்தான் அல்லாஹ் படைப்புக்களை சூழ்ந்துள்ளான் என்று விளங்குதல் மட்டுமே இரண்டுக்கு இடமில்லாத சரியான விளக்கமாகும். கடிதத்தை கடித உறை சூழ்ந்திருப்பது போன்றுதான் அல்லாஹ் படைப்புக்களைச் சூழ்ந்துள்ளான் என்று விளங்குதல் இரண்டுக்கு இடமுள்ள பிழையான விளக்கமாகும்.

கடிதத்தை கடித உறை சூழ்தல் என்ற உதாரணத்தில் இரண்டு வஸ்த்துக்கள் உள்ளன. ஒன்று கடித உறை. மற்றது கடிதம். இது துவிதத்தை காட்டுகிறது. இரண்டென்பது துவிதம். இது இஸ்லாமில் இல்லை.

கடித உறையை “தாள்” சூழ்தல் என்ற உதாரணத்தில் ஒரேயொரு வஸ்த்து மட்டுமே உள்ளது. அது தாள் மட்டுமே. கடித உறையல்ல. இவ்வுதாரணத்தில் இரண்டுக்கு இடமில்லை. இது அத்வைதத்தை – இரண்டில்லை என்பதைக் காட்டுகிறது.

இஸ்லாமிய கொள்கையின் ஆணிவேர் அத்வைதமேயன்றி துவிதமல்ல. உலமாஉகளிற் சிலர் “ஷிர்க்”கை ஈமானாகவும், ஈமானை “ஷிர்க்” ஆகவும் புரட்டிவிட்டார்கள்.

துவிதம் எப்போதும் இரண்டையே காட்டும். அத்வைதம் எப்போதும் ஒன்றையே காட்டும். அல்லாஹ்வின் “வுஜூத்” எனும் உள்ளமை ஒன்றேயன்றி அது இரண்டுமல்ல. பலதுமல்ல.

அல்லாஹ் சிருட்டிகளை – படைப்புக்களை கடிதத்தை கடித உறை சூழ்ந்துள்ளதுபோல் சூழ்ந்துள்ளான் என்று விளங்கினால் அல்லாஹ்வுக்கு “வுஜூத்” உள்ளமை இருப்பது போல் சிருட்டிக்கும் அதே உள்ளமை உண்டு என்ற கருத்து நிச்சயமாக வந்துவிடும். இது இணையன்றி வேறென்ன?

காபிர்களின் கொள்கை துவிதக் கொள்கையேயன்றி அத்வைதக் கொள்கையல்ல. அவர்களின் கொள்கையில் எப்போதும் துவிதம் தொனித்துக் கொண்டே இருக்கும். அவர்களின் கொள்கை “ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகெட்ட கொள்கையாகும். இக்கொள்கை பிழையென்று நான் பேசத் தொடங்கிய காலத்திலிருந்தே பேசி வருகிறேன். இது பிழையான கொள்கையென்றே எச்சரித்தும் வருகிறேன். எந்த ஒரு சபையிலும், கூட்டத்திலும், சந்தர்ப்பத்திலும் இக்கொள்கை சரியென்று நான் பேசியதுமில்லை. நான் அது சரியென்று பேசியதாக எவராலும் ஆதாரத்தோடு நிறுவவும் முடியாது.

நான் 1979ம் ஆண்டுக்கு முன்னிருந்தே “ஹுலூல் – இத்தஹாத்” கொள்கை பிழையென்று பேசி வருகிறேன். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், எனது கருத்தைச் சரிகண்டவர்களுக்கும் “முர்தத்” என்று கண்ணில்லாத தீர்ப்பு வழங்கியது 1979ம் ஆண்டுதான்.

“பத்வா” வழங்கிய முல்லாக்கள் எனது பேச்சை நேரில் கேட்டு “பத்வா” வழங்கவில்லை. நான் பேசிய பேச்சுக்கள் அடங்கிய கெஸட் பீஸ்களை கேட்டுத்தான் “பத்வா” வழங்கினார்கள். கேட்டவர்கள் கூட ஒழுங்காக கேட்கவில்லை. முழுப் பேச்சையும் கேட்பதற்கு நீண்ட நேரம் சுமார் மூன்று மணி நேரங்கள் தேவையாகும் என்ற காரணத்தால் கட்டம், கட்டமாகவே கேட்டுள்ளார்கள். அதிசயமென்னவெனில் “பத்வா” வழங்கிய “முப்தீ” அவர்களும், முல்லாக்களிற் சிலரும் மருதானை ஸாஹிறா கல்லூரி மண்டபத்தில் அங்கிருந்த பங்குகளை அடுக்கி அதன் மீது பிறருக்கு அவர்களின் குறட்டை கேட்குமளவு உறங்கியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வுகளை நேரில் பார்த்தும், கேட்டும் கொண்டிருந்த ஒருவர் இன்றுவரை உயிரோடுதான் உள்ளார். அவர் ஓர் உண்மையாளர். கௌரவமிக்கவர், கௌரவமான குடும்பத்தில் பிறந்து கௌரவமான குடும்பத்தில் திருமணமும் செய்து கௌரவமாக வாழ்பவர். இந்த விவகாரம் நீதிக்கு முன் நிறுத்தப்படும் காலம் வந்தால் அவர் நடந்த நிகழ்வை நீதிமன்று வந்தேனும் சொல்வதற்குத் தயாராக உள்ளார். அந்நேரம் நான் சொல்வது உண்மை என்பது தெளிவாகும்.

1979ம் ஆண்டு மீலாத் விழாவில் நான் பேசிய கருத்துக்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானக் கருத்துக்களாகும். “ஹுலூல் – இத்திஹாத்” கருத்துக்கள் அல்ல. முல்லாக்கள் வழங்கிய “முர்தத் பத்வா” “ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகெட்ட கொள்கையை எதிர்த்து வழங்கிய “பத்வா” ஆகும். அந்த “பத்வா”வில் “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்பதற்கு ஓர் ஆதாரம் கூட கூறப்படவில்லை.

இன்ஷா அல்லாஹ்! ஒரு நீதிமன்றில் இந்த முல்லாக்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தெட்டத் தெளிவாகவும், பகிரங்கமாகவும் எழுதப்பட்ட நூல்களை மதிப்பிற்குரிய முப்திகளிடமும், அவர்களின் தலைவரிடமும் கொடுத்து வாசித்து நீதிவான் முன்னிலையில் விளக்கம் சொல்ல வைக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறேன்.

தொடரும்…

NO COMMENTS