தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இதன் சுருக்கமான கருத்து என்னவெனில் ஓர் எழுத்தை எடுத்து ஆயிரம் விளக்கம் சொல் என்பதாகும்.
இது சாத்தியமானதா? ஆம் என்றால் அதெவ்வாறு? என்பது தொடர்பாக சிறிய ஆய்வொன்றே இக்கட்டுரையாகும். ஒரு திரு வசனத்தை எடுத்து ஆயிரம் விளக்கம் சொல் என்றும், ஒரு நபீ மொழியை எடுத்து ஆயிரம் விளக்கம் சொல் என்றும் சொல்வது அர்த்தமுள்ள ஒன்றுதான். பழமொழி பொய்யல்ல.
ஆயினும் ஓர் எழுத்தை எடுத்து ஆயிரம் விளக்கம் சொல்வதெவ்வாறு என்று சிலர் நினைக்கலாம். அது அசாத்தியமென்றும் சிலர் நினைக்கலாம்.
ஓர் எழுத்தை எடுத்து ஆயிரம் விளக்கமல்ல ஆயிரம் கோடி விளக்கம் சொல்வதற்கும் இறை நேசர்களால் மட்டுமே முடியும். வேறு எந்த ஒரு பண்டிதனாலும், கலாநிதியாலும் முடியாது.
ஏனெனில் அல்லாஹ்வின் “அலீம்”, “ஹகீம்” அறிஞன், தத்துவ ஞானி எனும் திரு நாமங்கள் கொண்டு அவன் ஒருவன் மீது “தஜல்லீ”யானால் அவரில் அத்திரு நாமங்கள் செயற்படுமாயின் அவர் யாவும் அறிந்தவராகவே இருப்பார்.
ஏனெனில் அவர் குறித்த அவ் இரு திரு நாமங்களில் “பனா”வாகியிருக்கும் வரை அவரின் வாயால் எச் சொல் வெளியானாலும், எத் தத்துவம் வெளியானாலும் அது “ஹக்” இறைவனின் பேச்சாகவே இருக்கும். அவரே இல்லையென்றால் வேறு யார் பேசுவான்? பேசுகிறவன்தானே பேசுவான். பேசுகின்றவன் அல்லாஹ்வாகவே இருப்பான்.
“அனல் ஹக்” நானே மெய்ப்பொருள் என்று இறைஞானி “ஹல்லாஜ்” எனும் ஒலிவாங்கி மூலம் வெளியான பேச்சு அல்லாஹ்வின் பேச்சேயன்றி “ஹல்லாஜ்” என்பவரின் பேச்சல்ல. அவரே இல்லையெனில் அவர் பேசுவது எவ்வாறு?
அல்லாஹ் தனது 99 திரு நாமங்களையும் மனிதனிடம் இரவலாக ஒப்படைத்துள்ளான். இதேபோல் அவனின் குத்றத் – சக்தி, இறாதத் – நாட்டம், ஸம்உன் – கேள்வி, பஸறுன் – பார்வை, இல்முன் – அறிவு, கலாம் – பேச்சு, ஹயாத் – உயிர் ஆகிய ஏழு தன்மைகளையும் இரவலாகவே வழங்கியுள்ளான். இவை அவனுக்குச் சொந்தமானவையே தவிர மனிதனுக்குச் சொந்தமானவையல்ல. அவனுக்கு இரவலாக வழங்கப்பட்டவையாகும். அல்லாஹ் இவற்றை இரவலாகத் தந்தவனாவான். ஒன்றை இரவலாகப் பெற்றவன் அதை தந்தவனிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஒப்படைத்துவிட வேண்டும். திருப்பிக் கொடுக்காமலிருக்கும் போது அவனுக்கு இயற்கை மரணம் வந்தால் அவன் கொடுக்காமலேயே அவை அல்லாஹ்வைச் சேர்ந்து விடும். இவ்வாறு மரணித்தால் அல்லாஹ்வை அவை சேர்வது அவன் கொடுத்ததாகாது. கொடுத்தவன் தானாக எடுத்ததாகவே ஆகும்.
எனவே, இயற்கை மரணம் எம்மைத் தீண்டுமுன் ஆன்மிக அடிப்படையில் நாமாக அவன் தந்ததை ஒப்படைத்துவிட்டு நாமும் ஆன்மிக அடிப்படையில் மரணிக்க வேண்டும்.
அன்புச் சகோதரா! அல்லாஹ்வின் நாட்டப்படி இயற்கை மரணம் வந்தால்தானே மரணிக்க முடியும். நாமாக மரணிப்பது எவ்வாறு என்று கேட்க விரும்புகிறாயா?
நீ கேட்குமுன் நானே சொல்லிவிடுகிறேன்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوْتُوْا قَبْلَ أَنْ تَمُوْتُوْا
நீங்கள் மரணிக்கு முன் மரணித்து விடுங்கள்.
இது ஸஹீஹான ஹதீதா? ழயீபான ஹதீதா? என்பதில் “ளாஹிர்” வெளிரங்க உலமாஉகளிடம் கருத்து வேறுபாடு உண்டு. ஆயினும் ஸூபீ மகான்களும், மற்றும் உள்ரங்க அறிவுடையோரும் “ஸஹீஹான ஹதீது” என்று கூறுகின்றார்கள். ஸூபிஸம் பேசுகின்ற ஞான மகான்கள் அனைவரும் கருத்து வேறுபாடின்றி அது “ஸஹீஹ்” என்று ஒரே குரலில் சொல்வதால் அதை நான் நம்புகிறேன்.
“ளாஹிர்” வெளிரங்க உலமாஉகளின் பேச்சை நம்புவதை விட “பாதின்” உள்ரங்க “உறபாஉ” இறைஞானிகளின் பேச்சை ஆயிரம் மடங்கு அதிகமாக நம்பலாம். ஏனெனில் அவர்கள் “இல்ஹாம்”, “கஷ்பு”, “இல்முல்லதுன்னீ” என்று சொல்லப்படுகின்ற “மலகுல் இல்ஹாம்” எனும் மலக்கு மூலம் இறைஞானம் வழங்கப்பட்டவர்களாவர்.
“முஹத்திதீன்” நபீ மொழி மேதைகளில் வெளிரங்கமானவர்கள் இது ழயீப், இது ஸஹீஹ் என்று சொல்வதற்கு பல நூல்களை ஆய்வு செய்தே சொல்ல வேண்டும். ஆயினும் “ஆரிபீன்” இறைஞானிகள் “ஸஹீஹ் – ழயீப்” ஆன ஹதீதுகளைக் கண்டுபிடிக்க கஷ்டப்படவோ, பல நூல்களை ஆராயவோமாட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ் ஒரு விஷேட தன்மையை வழங்கியுள்ளான்.
அதாவது யாராவதொரு பேச்சாளன் பேசும் போது அறபு வசனம் ஒன்றைக் கூறி இது “ஹதீது” என்று சொல்வானாயின் அது உண்மையிலேயே ஹதீதாக இருந்தால் அந்த ஹதீதை அவன் மொழியும் போது அவனின் வாயிலிருந்து ஒளி வெளியாகும். இவ் அடையாளத்தைக் கொண்டு அது ஹதீது என்று வலீமார் அறிந்து கொள்வார்கள். ஆயினும் “ளாஹிர்” வெளிரங்க உலமாஉகளுக்கு இவ்வாறு ஒரு திறமையை அல்லாஹ் வழங்கவில்லை. இதனால் அவர்கள் பல நூல்களை ஆராய்ந்தே அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் اَلْعَارِفُ طَيَّارٌ وَالْعَالِمُ سَيَّارٌ இறைஞானி பறப்பவர், ஆலிம் நடப்பவர்.
ஓர் எழுத்தை எடுத்து ஆயிரம் விளக்கம் கூறுவது வெளிரங்க உலiமாஉகளுக்கு முடியாத ஒன்றேயாகும். ஆயினும் வலீமார்களுக்கு அது கை வந்த கலையே.
وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا
எவருக்கு “ஹிக்மத்” கொடுக்கப்படுகின்றதோ அவர் அதிக நன்மைகள் கொடுக்கப்பட்டவராவார். இதை “லுப்பு” உள்ளவர்களேயன்றி விளங்கிக் கொள்ள மாட்டார்கள். (திருமறை 2-269)
“லுப்பு” உள்ளவர்கள் என்றால் அறிவும், புத்தியும் உள்ளவர்கள் என்றும், உள் உள்ளம் قَلْبُ الْقَلْبِ உள்ளவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
“ஹிக்மத்” என்ற சொல்லுக்கு பொதுவாக ஞானம், தத்துவம் என்று சொல்லிக் கொண்டாலும் அதற்கு ஸூபீ மகான்கள் கூறிய வரைவிலக்கணம் பின்வருமாறு.
هُوَ كُلُّ عِلْمٍ يُبْحَثُ فِيْهِ عَنْ حَقِيْقَةِ كُلِّ شَيْئٍ
ஒவ்வொரு வஸ்த்தின் எதார்த்தம் பற்றி ஆராயப்படும் கலை – அறிவு எதுவோ அதுவே “ஹிக்மத்” எனப்படும். இது இறைஞானிகள் சொன்ன வரைவிலக்கணமாகும்.
அவர்களின் இவ் வரைவிலக்கணத்தை உள்வாங்கிய பாணியில் அறிஞர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
“எப்பொருள் எத்தன்மையுடையதாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு” என்று.
எந்த வஸ்த்தை எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஓர் எதார்த்தம் நிச்சயமாகவே இருக்கும். அது எதுவென்றறிவதே ஞானமாகும். “ஹிக்மத்” ஆகும். இதுவே மெய்யறிவென்றும் சொல்லப்படுகின்றது.
இந்த அறிவு எவருக்கு வழங்கப்படுகின்றதோ அவரே அதிக நன்மை கொடுக்கப்பட்டவராவார். “ஹிக்மத்” எனும் மெய்யறிவு கொடுக்கப்பட்டவரே அதிக நன்மை கொடுக்கப்பட்டவராகிறார். இவ் அறிவுக்கு மட்டுமே இப்படியொரு சிறப்பு இருப்பதாக அறிய முடியகிறது.
இத்தகைய “இல்ம்” வழங்கப்பட்டவர் ஒரு சமுத்திரம் போன்றவராவார். அவர் ஒரு “நுக்தா” புள்ளிக்கே ஆயிரம் விளக்கங்கள் கொடுக்கும் வல்லமையுள்ளவருமாவார். அவரே குர்ஆனாகவும், ஹதீதுகளாகவும் இருப்பார்.
மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹில் காஹிரீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், முஹம்மத் இப்னு அபீ பக்ர் அல் பக்தாதீ அவர்களும் சேர்ந்து இயற்றிய “கஸீதா” தான் “அல் கஸீததுல் வித்ரிய்யா” எனும் நபீ புகழ் மணக்கும் பாடல்களாகும்.
ஸதகதுல்லாஹ் அப்பா அவர்கள் காயல் பட்டணத்தில் அடக்கம் பெற்றுள்ள ஸுலைமான் வலிய்யுல்லாஹ் அவர்களின் மக்களின் ஒரு மகன் ஆவார்கள்.
அவர்கள் “கஸீததுல் வித்ரிய்யா” பாடல்களை எழுதிக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஒரு பாடல் அடியை எழுதும் போது பல சொற்கள் அவர்களின் கண் முன் தோன்றி பெருமானாரின் புகழ் மாலையில் எனக்கு ஒரு இடம் தரமாட்டீர்களா என்று கேட்குமாம். அவர்கள் அவற்றில் தனக்கு விருப்பமான சொல்லுக்கு வாய்ப்பளிப்பார்களாம்.
இதை நான் ஏன் எழுதினேன் என்றால் “விலாயத்” ஒலித்தனம் பெற்ற மகான்கள் கிதாபுகள் – நூல்கள் எழுதும் போது அவர்களுக்குத் தேவையான இடத்தில் தேவையான ஆதாரம் அவர்களின் கண் முன்னால் நின்று உங்கள் நூலில் எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்று சொல்லுமாம்.
“விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்ற மகான்கள் ஓர் எழுத்தை எடுத்து ஓராயிரம் விளக்கம் சொல்லும் ஆற்றல் பெற்றவர்களாவர்.
இமாம்களில் “விலாயத்” என்ற அந்தஸ்த்தை அடைந்தவர்களும் உள்ளனர். அடையாதவர்களும் உள்ளனர். இமாம்கள் எனப்படுகின்ற அனைவரும் வலீமார்கள் என்பது கருத்தல்ல.
பிரசித்தி பெற்ற இமாம்களிற் பலர் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பில் நூல்கள் எழுதவுமில்லை. அது பற்றி பெரிதாகப் பேசவுமில்லை. இதனால் அவர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” தெரியாதென்று முடிவு செய்தல் கூடாது.
உதாரணமாக ஹதீதுக் கலை மேதைகள் போன்றும், “பிக்ஹ்” சட்டக்கலை மேதைகள் போன்றுமாவர். இமாம் புகாரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய “ஸஹீஹுல் புகாரீ” மட்டுமே அவர்கள் எழுதிய நூல்களில் பெரியதும், பிரசித்தி பெற்றதுமாகும். இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக அதைப் புகழ்ந்தோ, இகழ்ந்தோ எழுதியதற்கு எந்த ஓர் ஆதாரமும் எனக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறுதான் ஏனைய பிரசித்தி பெற்ற ஐந்து ஹதீதுக் கலை மேதைகளுமாவர். இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக எழுதவில்லை என்பதால் இவர்கள் அனைவரும் குறித்த ஞானத்தை எதிர்த்தவர்கள் என்று சொல்ல முடியாது.
இவ்வாறுதான் நான்கு மத்ஹபுகளின் தாபகர்களுமாவர். இவ்வாறுதான் சட்டக்கலை மேதைகளான “புகஹாஉ”களுமாவர்.
இவர்களில் எவரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தொடர்பாக இகழ்ந்தோ, புகழ்ந்தோ எந்த ஒரு நூலும் எழுதியதாக நான் அறியவில்லை.
இதனால் இன்னோர் குறித்த ஞானத்திற்கு எதிரானவர்கள் என்று எண்ணுவது அறிவின்மையாகும்.
وَلِكُلِّ فَنٍّ رِجَالٌ
ஒவ்வொரு கலைக்கும் சிலர் இருப்பார்கள். அதாவது எல்லோருக்கும் எல்லாக் கலையும் தெரிந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு.
“இல்முத் தஸவ்வுப்” “ஸூபிஸம்” என்று ஒரு கலை உண்டு. இக்கலையோடு சம்பந்தப்பட்டவர்கள் ஸூபீகள், ஆரிபீன்கள் – இறைஞானிகள் ஆகியோர்களாவர். “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக இந்த மகான்கள் மட்டுமே பேசுவார்கள்.
قَدْ وَرَدَ فِى الْخَبَرِ عَنْ سَيِّدِ الْبَشَرِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: كُلُّ مَا فِى الْكُتُبِ الْمُنَزَّلَةِ فَهُوَ فِى الْقُرْآنِ مَكْنُوْنٌ، وَكُلُّ مَا فِيْهِ فَهُوَ فِى الْفَاتِحَةِ مَضْمُوْنٌ، وَكُلُّ مَا فِيْهَا فَهُوَ فِى الْبَسْمَلَةِ مَشْحُوْنٌ، وَكُلُّ مَا فِى الْبَسْمَلَةِ فَهُوَ فِى الْبَاءِ مَكْنُوْنٌ، وَكُلُّ مَا فِى الْبَاءِ فَهُوَ فِى النُّقْطَةِ الَّتِيْ تَحْتَهَا مَخْزُوْنٌ،
“உலகில் இறக்கி வைக்கப்பட்ட மூன்று வேதங்களில் உள்ளவை யாவும் திருக்குர்ஆன் எனும் நாலாம் வேதத்தில் அடங்கியுள்ளன. திருக்குர்ஆனிலுள்ள யாவும் “ஸூறதுல் பாதிஹா” அத்தியாயத்தில் அடங்கியுள்ளன. அதிலுள்ள யாவும் “பிஸ்மில்லாஹ்” என்ற வசனத்தின் “பே” என்ற எழுத்தில் அடங்கியுள்ளன. அந்த “பே”யில் உள்ள யாவும் அதன் கீழ் உள்ள “நுக்தா” என்ற முழு மாத்திரையில் – புள்ளியில் அடங்கியுள்ளன” இவ்வாறு ஒரு ஹதீது வந்துள்ளது.
இது ஹதீதா? இல்லையா? என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
எனினும் இமாம் நஸபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இது தொடர்பாக தங்களின் السـراج المنير فى الإعانة على معرفة بعض معاني كلامِ ربّنا الخبير எனும் நூலில் விளக்கம் எழுதியுள்ளார்கள். இதேபோல் இமாம் இஸ்மாயீல் ஹக்கீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “றூஹுல் பயான்” எனும் நூலிலும் விளக்கம் எழுதியுள்ளார்கள். இதேபோல் மாதிஹுர் றஸூல், ஷரீஅத் புலி ஸதகதுல்லாஹ் அப்பா றஹிமஹுல்லாஹ் அவர்களின் மூத்த மாணவர் மஹ்மூதுத் தீபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “மனாகிபுல் குத்பில் மஜீத்” எனும் நூலிலும் இது தொடர்பாக எழுதியுள்ளார்கள். விரிவை அஞ்சி அவற்றை எழுதவில்லை.
“பே” என்ற எழுத்தின் கீழ் உள்ள “நுக்தா” புள்ளியானது அனைத்து வேதங்களிலும் கூறப்பட்ட தத்துவங்கள் யாவையும் உள்வாங்கியதாகும் என்ற கருத்தின்படி ஒரு “நுக்தா” புள்ளியை மட்டும் எடுத்து ஆயிரம் கோடி விளக்கங்கள் சொல்ல மகான்களால் முடியும் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
முற்றும்.