தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
பர்தானிய்யத்திலோ ஸுப்ஹானியெத்தெனப்
பகர் பரா மரமதனிலோ
பற்பல விதங் கொண்ட அஃயானியத்திலோ
பரிபூரணந்தன்னிலோ
அரிதான தாத்திலோ அலிபெனுஞ் சுகவாரி
யாவும் நுக்தாவதனிலோ
அஹ்லுல் உலாவான ஆலமலகூத்திலோ
ஆலம் அஸ்பல் தன்னிலோ
குறிகுணாத் தீதவட்டாங்கயோகத்திலோ
கோடானு கோடி மறையாற்
கூறரிய சிவராசயோகத்திலோ வருட்
குறையாப் பெருங்கடலிலோ
நரலை நிகரருளாளனே நீயிருப்பதிந்
நாயினேற் கருள் செய்குவாய்
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு
நாதன் முஹ்யித்தீனே!
———————————–
அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்
ளடக்கி விளையாட வல்லீர்
அகிலமீரேழினையுமாடுங்கறங்கு போ
லாட்டி விளையாட வல்லீர்
மண்டலத் தண்டரையழைத்தரு கிருத்தியே
வைத்து விளையாட வல்லீர்
மண்ணகமும், விண்ணகமுமணுவைத்துளைத்ததின்
மாட்டி விளையாட வல்லீர்
கண்டித்த கடுகிலெழுகடலைப் புகட்டிக்
கலக்கி விளையாட வல்லீர்
கருதரிய சித்தலாம் வல்ல நீரடிமையென்
கண்முன் வருசித்தில்லையோ
நண்டளந்திடு நாழியாவனோ தேவரீர்
நல்லடிக்களாக்கியும்
நற்குணங் குடி கொண்ட பாதுஷாவான குரு
நாதன் முஹ்யித்தீனே!
—–
ஐயோ வெனைப் போலுமாபெரும் பாவியிவ்
வகிலத்தி லெங்குமிலையே
அநியாய மனியாய மென்பெரும் பாதகம்
யார் பால் எடுத்தோதுவேன்
மையான கண்ணியர் வலைக்குள்ளகப்பட்ட
மாபாவி நீ பாவியான்
மஹ்பூபு ஸுப்ஹானியான வுமை நாடாத
மடமை குடி கொண்ட பாவி
பொய்யான வாழ்வதனை மெய்யாக நம்பியுன்
பொன்னடி மறந்த பாவி
பொல்லார்கள் நேசமேயல்லாது நல்லோர்
புறக்கணித்திட்ட பாவி
நையுமோர் பொய்யுலகனாகியேயுமதடிமை
நாயினுங்கடையாவனோ
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு
நாதன் முஹ்யித்தீனே!
குணங்குடியில் பிறந்து சென்னை ராயபுரத்தில் அடக்கம் பெற்று வாழ்கின்ற அதி சங்கைக்குரிய அல் ஆலிமுல் பாழில் அப்துல் காதிர் ஞானப் புலவர், ஞான மகான், ஆஷிகே முஹ்யித்தீன் அப்துல் காதிர் றஹிமஹுல்லாஹ் அவர்களின் மேற்கண்ட பாடல்கள் அவர்களின் பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பாடல்களாகும்.
மேற்கண்ட அவர்களின் பாடல்களில் முதலாம் பாடலில் இறைவனைப் புகழ்கிறார்கள். இரண்டாம் பாடலில் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் எனும் தனது ஞானகுருவை விழித்து அவர்களின் வல்லமையை இயம்புகிறார்கள். மூன்றாவது பாடலில் தன்னை இழிவு படுத்திப் பாடியுள்ளார்கள்.
நான் சிறுவனாயிருந்த காலத்திலிருந்தே குணங்குடி மஸ்தான் அவர்கள் மீது எனக்கு ஒருவகை “மஹப்பத்” அன்பு இருந்து வந்தது. சுமார் 70 வருடங்களுக்கு முன் அதாவது 1953ம் ஆண்டளவில் மஸ்தான் அவர்களின் பாடல் புத்தகமொன்று எனது தந்தையின் அலுமாரியில் இருந்து எடுத்து அதை தினமும் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் நான் பாடிக் கொண்டிருந்த சமயம் என் தந்தை என் தாயை அழைத்து மஸ்தான் ஸாஹிபுவின் பாடல் கேட்கிறதே! யார் பாடுகிறார்? என்று கேட்டபோது உங்கள் மகன்தான் பாடுகிறான் என்றார்கள் என் தாய். தந்தை ஒன்றுமே சொல்லவில்லை. தந்தையின் மௌனம் எனக்கு அனுமதி வழங்கியது போலிருந்தது. அன்று முதல் மஸ்தான் அவர்களின் பாடல்களைப் பாடுவதை நான் வழக்கமாக்கிக் கொண்டேன்.
நான் சிறுவனாயிருந்த காலத்தில் மஸ்தான் ஸாஹிபு அவர்களின் பாடல் புத்தகத்தை வயோதிபர்கள் மட்டுமே வாசிப்பார்கள். பாடுவார்கள். அப்பாடல் நூலை இளைஞர்கள் பார்க்காமல் முதியவர்கள் அவர்களைத் தடை செய்வார்கள். தொடர்ந்து அவர்களின் நூலை – பாடலைப் பாடி வருபவர்கள் உலகைத் துறந்து துறவியாகிவிடுவார்கள் என்ற ஓர் அபிப்பிராயம் அக்காலத்தில் இருந்து வந்தது.
மஸ்தான் அப்பா அவர்கள் மேற்கண்ட அவர்களின் இரண்டாவது பாடலில் குத்பு நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ நாயகம் அவர்களின் வல்லமைகள் பற்றிக் கூறியுள்ளார்கள். அவர்கள் எவ்வாறு சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்போம்.
அண்ட கோடிகள் அனைத்தையும் அதாவது சகல படைப்புக்களையும் பந்துபோல் தங்களின் கைக்குள்ளடக்கி விளையாடும் சக்தியுள்ளவர்கள் என்று அவர்களைப் புகழ்கிறார்கள். இவ்வாறு புகழ்வதற்குத் தகுதியுள்ளவன் அல்லாஹ் மட்டுமேயாவான். வேறு எவராலும் அவ்வாறு செய்ய முடியாது. அல்லாஹ்வினால் மட்டும் செய்யக் கூடிய ஒரு விடயத்தை அவனின் படைப்புடன் சேர்த்துச் சொல்வது விசுவாசத்திற்கு முரணானதுமாகும். அது மட்டுமல்ல. இவ்வாறு சொல்வது கொள்கை அடிப்படையில் முற்றிலும் பிழையானதாகும். ஏனெனில் அல்லாஹ் தவிர வேறு எவராலும் சர்வ சிருட்டிகளையும் பந்து போல் கைக்குள்ளடக்க முடியாது. இப்படியொரு சக்தி மனிதனுக்கு உண்டு என்று சொல்வது “ரித்தத்” மத மாற்றத்தை ஏற்படுத்தும் சொல்லாகும். மஸ்தான் அவர்கள் குத்பு நாயகமவர்களை அவ்வாறு புகழவில்லை என்றாலும் கூட குத்பு நாயகம் அவர்கள் தன்னைப் பற்றிச் சொல்வதைக் கவனியுங்கள்.
بِلَادُ اللهِ مُلْكِيْ تَحْتَ حُكْمِيْ – وَوَقْتِيْ قَبْلَ قَبْلِيْ قَدْ صَفَا لِيْ
அல்லாஹ்வின் தேசங்கள் எனது சொத்தாகும். அவை எனது ஆட்சியின் கீழ் உள்ளன. எனது நேரம் நான் தோன்றுவதற்கு முன்னேயே எனக்குத் தெளிவாகிவிட்டது.
نَظَرْتُ إِلَى بِلَادِ اللهِ طُرًّا (جَمْعًا) – كَخَرْدَلَةٍ عَلَى حُكْمِ اتِّصَالِيْ
நான் இறைவனுடன் ஒன்றித்த தீர்ப்பின் படி சகல ஊர்களையும், தேசங்களையும் ஒரு கடுகைப் பார்ப்பது போல் பார்க்கிறேன்.
மேற்கண்டவாறு குத்பு நாயகம் சொல்லியுள்ளார்கள். இவ்வாறு அல்லாஹ்வால் மட்டுமே சொல்ல முடியும். ஏனெனில் இவ்வாறு செய்யும் சக்தி அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.
அல்லாஹ்வால் மட்டும் செய்யக் கூடிய வேலைகளை என்னால் செய்ய முடியும் என்று ஒருவர் சொன்னால் அவர் யார்? இதற்கு எவ்வாறு “பத்வா” கொடுக்க வேண்டும்?
இவ்வாறு சொன்னதை மற்றவர்கள் பாடுகிறார்களே இவர்களுக்கு எவ்வாறு “பத்வா” கொடுக்க வேண்டும்? எல்லாம் அல்லாஹ் என்று சொன்னவனும், அவ்வாறு நம்பினவர்களும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றால் மேற்கண்டவாறு சொன்ன குத்பு நாயகம் அவர்களும், அவர்களின் “தரீகா” வழி நடப்பவர்களும் யார்?
மஸ்தான் அப்பா மேற்கண்டவாறு சொல்லிவிட்டு அதையடுத்து என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.
அகிலமீரேழினையும் ஆடுங்கறங்கு போல் ஆட்டி விளையாட வல்லீர் என்று புகழ்கிறார்கள்.
ஈரேழு – பதினாலு உலகங்களையும் ஆடும் விசிறி போல் ஆட்டி விளையாடும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அவ் ஆற்றல் தனக்கு இருப்பதாக அல்லது இன்னொருவருக்கு இருப்பதாக ஒருவன் சொன்னால் அவனுக்கு எவ்வாறு “பத்வா” வழங்க வேண்டும்? அவன் சொன்னதைச் சரிகண்டவர்களுக்கும் எவ்வாறு “பத்வா” வழங்க வேண்டும்?
இதையடுத்து மஸ்தான் அப்பா என்ன சொன்னார்கள் என்பதை கவனிப்போம்.
மண்டலங்கள் அனைத்தையும் அழைத்து அவற்றுடன் விளையாடும் ஆற்றல் கொண்டவர்கள் என்று குத்பு நாயகம் அவர்களை மஸ்தான் வர்ணிக்கின்றார்கள்.
மண்டலங்களை அழைத்து அவற்றுடன் விளையாடும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. வேறு எவருக்கும் இது சாத்தியமானதன்று. இந்நிலை, இவ் ஆற்றல் குத்பு நாயகமவர்களுக்கு உண்டு என்று சொன்னவன் யார்? அவனுக்கு என்ன “பத்வா”?
மண்ணகம், விண்ணகம் இரண்டையும் ஓர் அணுவைத்துளைத்து அதனுள் செலுத்தி விளையாடும் வல்லமையுண்டு என்று மஸ்தான் குத்பு நாயகமவர்களை வர்ணிக்கின்றார்கள். இது அல்லாஹ்வால் மட்டுமே முடியும். அல்லாஹ்வால் மட்டும் முடியுமான ஒன்று ஒரு படைப்பாலும் முடிந்ததே என்று சொன்னவனுக்கு எவ்வாறு “பத்வா” வழங்க வேண்டும்?
சிறிய கடுகு ஒன்றில் ஏழு கடல்களையும் செலுத்தி அதைக் கலக்கி விளையாடும் சக்தி அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. இத்தன்மை படைப்புக்கு உண்டு என்று சொன்னவன் யார்? அவனுக்கு எவ்வாறு “பத்வா” வழங்கலாம்?
எல்லா சித்தும் செய்வதற்கு சக்தி பெற்ற குத்பே முஹ்யித்தீனே என் கண்முன் காட்சி தாருங்களேன். வருவீர்களா?
நண்டளக்கும் நேரமாகிவிடுமோ இப்பாக்கியம் நான் பெறுவதற்கு? எவராலும் நண்டை அளந்து கொண்டே இருக்கலாம். அதை அளந்து முடிக்க இயலாது. என்னை நல்லடிக்களாக்கி அருள்புரியுங்கள் முஹ்யித்தீனே! என்று பாடலை முடித்துள்ளார் மஸ்தான் அவர்கள்.
மஸ்தான் சொல்வது சரிதான். அதில் பிழையொன்றுமில்லை என்று “பத்வா” வியாபாரிகள் கூறுவார்களாயின் அவர்களின் கூற்றுப்படி எல்லா வல்லமையும் எல்லாருக்குமுண்டு என்று முடிவு செய்து இதற்கு மாறாக சட்டம் சொல்லும் நூல்களையெல்லாம் ஒன்று சேர்த்து “பத்வா” வியாபாரிகள் பார்க்க எரித்துச் சாம்பலாக்குவோம்.
இல்லை. அல்லாஹ்வால் மட்டும் செய்யக் கூடியதை வேறு எவராலும் செய்ய முடியாதென்றும், அவ்வாறு சொன்னவனும், நம்பினவனும் “காபிர்”கள் என்று “பத்வா” வழங்குவார்களாயின் குத்பு நாயகத்தை அவ்வாறு வர்ணித்த மஸ்தானும், அவர் சொன்னதை நம்பி அவ்வாறு குத்பு நாயகமவர்களை அறபு மொழியிலோ, வேறெந்த மொழியிலோ சொன்னோர் அனைவரும் “காபிர்”கள் என்று முடிவு செய்வோம்.
குத்பு நாயகமவர்களின் காதிரிய்யா தரீகாவைச் சேர்ந்த அனைவரும் “காபிர்”கள் என்று அவர்களே பகிரங்கமாக “பத்வா” வழங்கட்டும்.
குத்பு நாயகம் மட்டும் மேற்கண்ட வல்லமை பெற்றவர்கள் என்று “தரீகா”வாதிகள் நம்பவில்லை. அனைத்து “தரீகா”வின் ஷெய்குமார், தாபகர்கள் அனைவரும் அவ்வாறு வல்லமை பெற்றவர்கள் என்றே கூறுகிறார்கள். நம்புகிறார்கள்.
எனவே, “தரீகா”காரர்கள் அனைவரும் முர்தத்துகள் தான் என்று அவர்கள் ஒரு “பத்வா” கொடுத்துவிட்டார்களாயின் இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை குறைந்துவிடும். நம் நாட்டில் முஸ்லிம்களின் சனத் தொகையை குறைப்பதற்கு முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்யலாகாதென்று அரசு சட்டம் கொண்டு வரத் தேவையில்லை. ஒரு “பத்வா’வின் மூலமே முஸ்லிம்களின் சனத் தொகையை குறைத்துவிடலாம்.
இதேபோல் அறவே தொழாதவர்களையெல்லாம் கொலை செய்ய வேண்டுமென்ற இஸ்லாமிய சட்டத்தை கருத்திற் கொண்டு “பத்வா” வியாபாரிகள் அவ்வாறு ஒரு “பத்வா” வழங்கினால் எந்த ஒரு சிரமுமின்றியும், செலவின்றியும் முஸ்லிம்களின் சனத்தொகையை குறைத்தும் விடலாம். யஹூதிகளின் திட்டமும் இதுவேதான்.
முற்றும்