தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அன்புச் சகோதரா!
“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவை ஒரு வாழை மரமாக கற்பனை செய்து கொண்டு பின்னால் நான் எழுதப் போவதை நன்றாகக் கவனித்துக் கொள்.
ஒரு வாழை மரத்தில் பல நாட்களாக ஒரு புழு அமர்ந்து அதன் இலையை சாப்பிட்டு வந்தது. ஒரு நாள் அங்கு வந்த வண்டு ஒன்று வாழை இலையில் அமராமல் வாழைப் பூவில் அமர்ந்தது. இதைக் கண்ட அந்தப் புழு வண்டிடம் நீ பூவில் அமர்ந்து என்ன செய்கிறாய்? என்று கேட்டது. அதற்கந்த வண்டு நான் தேன் குடிக்கிறேன் என்று சொன்னது. வண்டின் விடை கேட்டு வியந்த புழு, நான் இலையைச் சாப்பிட்டுக் கொண்டிருக்க நீ தேன் குடிப்பதாகச் சொல்கிறாயே அது எப்படி? அது எங்கனம் சாத்தியமாகும்? ஒரு மரத்தில் இரு சுவைகள் எவ்வாறு கிடைக்கும்? என்று கேட்டது.
அதற்கந்த வண்டு, நீ புழுவாயிருக்கிறாய். நான் வண்டாயிருக்கிறேன். நீ என் போல் வண்டானால்தான் பூவில் அமர்ந்து தேன் குடிக்கலாம், நீ புழுவாயிருக்கும் வரை இலையையே சாப்பிட வேண்டும் என்று கூறியது. அதற்கு அந்தப் புழு நான் உன் போல் வண்டாவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று என்று கேட்டது. அந்த வண்டு நீ என்னுடன் வந்து எனது கண்காணிப்பில் நாற்பது நாட்கள் இருக்க வேண்டுமென்று சொன்னது. புழு அதற்கு சம்மதம் தெரிவித்த போது அந்த வண்டு புழுவைத் தூக்கிச் சென்று தனது கூட்டிலிருந்த ஏனைய புழுக்களுடன் வைத்தது.
அந்த வண்டு தொடர்ந்து நாற்பது நாட்கள் தனது கண்காணிப்பில் அப்புழுவை வைத்திருந்தது. அது அக்கூட்டில் வைக்கப்பட்ட நாள் முதல் அதன் உடலமைப்பு படிப்படியாக மாறிக் கொண்டு வந்தது. அதன் தன்மைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மாறுபட்டே வந்தது.
நாற்பது நாட்கள் முடிந்ததும் அந்தப் புழு உடலமைப்பிலும் – தோற்றத்திலும், தன்மைகளிலும் முழுமையான வண்டாக மாறிவிட்டது.
புழுவாக இருந்த காலத்தில் இலையை சாப்பிட்டு மரத்தில் ஊர்ந்து கொண்டிருந்த அந்தப் புழு நாற்பது நாட்களின் பின் பறக்கும் நிலையை பெற்றது. இலைகளைச் சாப்பிடடு வந்த அந்தப் புழுவுக்கு பூவில் அமர்ந்து தேன் குடிக்கும் இயல்பும், விருப்பமும் ஏற்பட்டன. அது வெளியே வந்து வழமைக்கு மாறாகப் பறந்து சென்று பூக்களில் தேன் குடித்து மகிழ விரும்பியது. எனினும் தாய் வண்டின் அனுமதியை எதிர்பார்த்து இருந்தது.
ஒரு நாள் தாய் வண்டு கூட்டிலிருந்து பறந்து சென்றது. அதைத் தொடர்ந்து வண்டாக மாறிய புழுவும் பறந்து சென்று விண்ணில் பவனி வந்தது.
புழுவாயிருந்த காலத்தில் இலையைச் சாப்பிட்டு வந்த அந்தப் புழு வண்டாக மாறிய பின் பூவில் அமர்ந்து தேன் குடித்தது. அப்போதுதான் வாழை மரத்தில் தேன் குடிக்கலாம் என்ற ஞானம் அதற்கு பிறந்தது. ஒரு மரத்தில் இரு சுவைகள் ருசிக்கலாம் என்ற அறிவும் மலர்ந்தது.
அன்புச் சகோதரா? மேற்கண்ட கதை தருகின்ற தத்துவம் உனக்குப் புரிகிறதா? அல்லது அதை நான் சொல்லிக் காட்டவா? இதோ சொல்கிறேன். சற்றுக் கவனத்தோடு கேள்!
வாழை மரம் என்பது “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக் “கலிமா” என்று விளங்கிக் கொள். அதன் இலை என்பது “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை” என்ற திருக்கலிமாவின் போலிப் பொருள் என்றும், அதைச் சாப்பிடும் புழு என்பது அந்தப் போலிப் பொருளை நம்பி வாழும் போலி முஸ்லிம் என்றும் விளங்கிக் கொள். அதன் பூ என்பது திருக்கலிமாவின் “அல்லாஹ் அல்லாத வேறொன்றுமில்லை” என்ற சரியான பொருளென்றும், அதில் தேன் குடிக்கும் வண்டு என்பது அந்தப் பொருளை ஏற்று அதை நம்பி வாழும் ஒரு ஞானி என்றும் விளங்கிக் கொள்.
“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவின் தாற்பரியமும், அது கூறும் தத்துவமும் தெரியாதவன் வாழை இலையைச் சாப்பிடும் புழு போன்றவனாவான். இவற்றைப் புரிந்தவன் வாழைப் பூவில் தேன் சுவைக்கும் வண்டு போன்றவனாவான்.
இக்காலத்தைப் பொறுத்தவரை திருக்கலிமா எனும் வாழை மரத்தின் இலையை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள்தான் அநேகர். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே தேன் சுவைக்கின்றனர்.
“வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையில் இறைஞானம் கற்றுக் கொள்ளாதவன் புழுப் போன்றவன். அது புழுவாயிருந்த போது பறக்க முடியாததாயும், தேன் குடிக்க முடியாததாயும் இருந்தது போல் இவனும் ஆன்மிகச் சிறகு பெற்று ஆலமெல்லாம் பறக்க முடியாதவனாயும், தேன் குடிக்க இயலாதவனாயும், திருக்கலிமாவில் இறைஞானமென்ற தேனினுமினிய தேன் குடிக்க முடியதவனாயுமே இருப்பான். இலை தின்னும் புழு போன்றவன்தான் திருக்கலிமாவில் இறைஞானப் பேரமுதை அருந்தாமல் அதன் போலிப் பொருளென்ற இலை தின்று அதில் மயங்கி மாய்ந்து போய் கிடப்பவனாவான். தேன் சுவைக்கும் வண்டு போன்றவன்தான் உண்மைப் பொருளில் மயங்கி இறையில் லயித்துப் போன ஞானியாவார்.
அன்புச் சகோதரா! மேலே சொன்ன உதாரணம் உனக்கு விளங்கியிருக்குமென்று நினைக்கிறேன்.
நீண்ட காலமாக வாழையிலையை சாப்பிட்டு வந்த அந்தப் புழுவுக்கு அந்த மரத்தில் தேன் குடிக்க முடியுமென்ற செய்தி தெரியாமலிருந்தது போல் திருக்கலிமாவில் ஞானத் தேன் குடிக்கலாமென்ற செய்தியை அறியாத அதன் போலிக் கருத்தென்ற இலையைச் சாப்பிட்டு தனது காலம் கழித்தவன் வெறும் சக்கையை சாப்பிட்டவனேயன்றி சாறு குடித்தவனல்ல.
இவன் திருக்கலிமாவின் சரியான பொருளறியாமல் ஒரு நாளைக்கு ஒரு கோடித் தரம் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னாற் கூட அதனாலவன் அடையப் பெறும் பயன் ஒன்றுமே இல்லை.
இக்காலத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களில் அநேகர் இந்நிலையில் உள்ளவர்களேயாவர். இவர்கள் வெள்ளிக்கிழமை இரவுகளிலும், றமழான் மாத இரவுகளிலும் குறிப்பாக “லைலதுல் கத்ர்” இரவிலும் பள்ளிவாயல்களின் முகடுகள் இடிந்து விழுமளவு சத்தமிட்டு “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று “திக்ர்” செய்கிறார்கள்.
எனினும் இவர்களில் எவருக்கும் தான் கூறுவது என்ன என்பது கூடப் புரிவதில்லை. திருக்கலிமாவின் கருத்து எதுவாயினும் அதைக் கவனிப்பது அவர்களின் நோக்கமில்லை. எப்படியாவது பன்னிரெண்டு எழுத்துக்களையும், நான்கு சொற்களையும் உள்வாங்கிய “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தை மட்டும் ஆயிரக் கணக்கில் சொன்னாற் போதுமென்றும், அதன் மூலம் சொர்க்கம் சென்று விடலாமென்றும் இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருவன் திருக்கலிமாவின் கருத்தை அறியாமலும், அதன் தாற்பரியத்தைப் புரியாமலும் இருந்தது கொண்டு இராப் பகலாக இடையறாது பல்லாண்டுகள் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதனால் எவ்விதப் பயனும் காணமாட்டார்கள்.
அன்புச் சகோதரா!
எந்த மதத்ததைச் சேர்ந்தவனாயினும் அவன் திருக்கலிமா தருகின்ற கருத்தை உணராமலும், அதை நம்பாமலும் இருந்து கொண்டு ஆயிரம் தரமென்ன ஓர் இலட்சம் தரம் அதை மொழிந்தாற் கூட அவன் “முஃமின்” விசுவாசியாகிவிடமாட்டான். இவ் உணமை உனக்குத் தெரிந்திருக்குமென்று நான் நினைக்கிறேன்.
வாழைப் பூவில் தேன் சுவைத்த வண்டு வாழையிலையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த புழுவைத் தூக்கிச் சென்று தனது கூட்டில் வைத்துவிட்டு நாற்பது நாட்கள் அதைக் கண்காணித்து வந்ததென்று நான் சொன்னேனல்லவா? அது பற்றிச் சிந்தனை செய்து பார்.
இவ்வுதாரணம் ஞானகுரு – “ஷெய்கு” ஒருவர் ஒருவனைத் தனது கண்காணிப்பில் வைத்து பக்குவப்படுத்துவதற்கான உதாரணமாகும்.
அந்த வண்டு தனது கூட்டில் புழுவை வைத்துவிட்டு அது செய்த வேலை என்னவெனில் அடிக்கடி அதைப் பார்த்து வந்ததும், அதன் தலைப் பக்கம் நின்று அதை வட்டமிட்டதும், அதன் மீது தனது சுவாசத்தைப் படச் செய்ததுமேயாகும். இவை தவிற வேறெந்த வேலையும் அந்த வண்டு செய்யவில்லை.
ஞான குரு என்பவரும் இவ்வண்டு போன்றவர்தான். அவர், இறைஞானமின்றியும், திருக்கலிமாவின் பொருள் தெரியாமலும் அதன் இலையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவனைத் தன்னைப் போல் தேன் குடிக்கும் நிலைக்கு ஆளாக்கி எடுப்பதற்காக அவனைத் தனது “தைக்கா” அல்லது “சாவியா” போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று தனது கண்கானிப்பில் அவனை வைத்திருந்து அறிவு மூலமும், அமலின் மூலமும் அவனுக்குப் பயிற்சி வழங்கி அவனைப் பக்குவப்படுத்தி இறுதியில் அவனுக்கு “பைஅத்” எனும் ஞான தீட்சையும் வழங்கி அவனையும் தன்னைப் போல் திருக்கலிமா எனும் வாழை மரத்தில் தேன் குடிக்க வைப்பார்.
ஞான குரு செய்த வேலையையே வண்டும் செய்கிறது. ஞான குரு ஒருவரால் பயிற்றுவிக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட ஒருவன் மட்டும்தான் திருக்கலிமாவின் உண்மையான, அதற்குரிய பொருளை அறிந்து தெவிட்டாத பேரின்பம் பெறுவான்.
“ஷரீஆ” வழியில் நடப்பவனுக்கே “தரீகா” அவசியமாகும். “ஷரீஆ” வழி நடக்காமல் ஞான வழி நடந்து உயர் பதவி பெற நினைப்பது அறியாமையென்றே நான் சொல்வேன்.
“ஷரீஆ” வழியிலும், “தரீகா” வழியிலும் நடந்து அல்லாஹ்வின் திருவருளைப் பெற விரும்பும் ஒருவன் இரு வழிகளையும் இரு விழிகளாகக் கருதிச் செயலாற்ற வேண்டும்.
“திருக்கலிமா” எனும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வாழை மரத்தின் இலையில் அமராமல் அதன் பூவில் அமர்ந்து தேன் குடிக்கும் பக்குவ நிலைக்கான அத்திவாரமே “ஷரீஆ” ஆகும்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞான விளக்கத்தைப் புறக்கனித்து, அது “குப்ர்” – “ஷிர்க்” என்று கூறுபவர்கள் எது சரி? எது பிழை? என்பதை சுருதிப் பிரமாணங்கள் மூலமோ, யுக்திப் பிரமாணங்கள் மூலமோ அறியாதவர்களேயாவர். ஆயினும் அவர்கள் சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாயிற செம்மறியாடுகள் போல் பெருன்மையைப் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் குறித்த கொள்கை பிழை என்று இரு மனதோடு நம்பி வாழ்கிறார்கள்.
عَلَيْكُمْ بِالسَّوَادِ الْأَعْظَمِ، عَلَيْكُمْ بِالْجَمَاعَةِ
பெரும்பான்மையை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற நபீ மொழிகளை தவறாகப் புரிந்து அவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு தத்துவம் பேசுகிறார்கள்.
இந்த அடிப்படையில் ஒரு கூட்டம் வஹ்ஹாபிஸத்தைப் பின்பற்றுகின்றது. அதுவே இன்று உலகில் பெருங் கூட்டம் என்று சொல்கிறது. இன்னொரு கூட்டம் தப்லீக் அமைப்பைப் பின்பற்றுகின்றது. அதுவே இன்று உலகில் பெருங் கூட்டமென்று சொல்கிறது. இன்னொரு கூட்டம் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைப் பின்பற்றுகின்றது. அதுவே உலகில் பெருங் கூட்டமென்று அது சொல்கிறது. இவ்வாறு ஒவ்வொரு கூட்டமும் தமது கொள்கையுள்ளவர்களே அதிகமாக உள்ளனர். பெருங் கூட்டத்தைப் பின்பற்றுமாறுதான் பெருமானாரும் கூறியுள்ளார்கள் என்று தமது வாதத்தை நிறுவுகிறார்கள்.
இவர்கள் பெருமானாரின் மேற்கண்ட ஹதீதை தவறாகப் புரிந்து கொண்டவர்களாவர்.
பெருமானாரின் அருள் மொழிப் பிரகாரம் இன்று உலகிலுள்ள மக்களை முஸ்லிம், காபிர் என்ற அடிப்படையில் நோக்கினால் காபிர்கள் தான் அதிகமாக உள்ளனர். பெருமானாரின் அருள் மொழியை இக்கூட்டங்கள் விளங்கிக் கொண்ட படி முஸ்லிம்களும் காபிர்களாக வேண்டும். இவ்வடிப்படையிலன்றி கிறித்துவர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் பார்த்தாலும் கூட கிறித்துவர்களே இன்று வாழ்பவர்களில் அதிகமானவர்களாக உள்ளனர். இதனால் முஸ்லிம்கள் கிறித்துவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.
வஹ்ஹாபிகள்தான் இன்று உலகில் வாழ்பவர்களில் அதிகமானவர்களாயிருப்பதால் அவர்களுடன்தான் ஏனைய முஸ்லிம்களும் சேர வேண்டுமென்று வாதிடுவோர் பெருமானாரின் பொன் மொழியை தவறாகப் புரிந்து கொண்டு தமது கொள்கைக் காரர்களே அதிகமாக உள்ளனர் என்று கூறுகின்றார்கள். இவர்களின் இவ்வாதம் பிழையானதாகும். இவர்கள் நபீ மொழியை தவறாகப் புரிந்து கொண்டார்கள்.
பெருங்கூட்டத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற நபீ மொழியின் கருத்து யாதெனில் பெருங்கூட்டமென்பது சனத் தொகையைக் கொண்டு கணிக்கப்படுவது பிழை. சத்தியத்தைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும். சத்தியத்தில் ஒருவர் மட்டும் இருந்தாலும் அவர்தான் பெருங்கூட்டமாக கணிக்கப்படுவார்.
நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பற்றி திருக்குர்ஆனில் கூறிய அல்லாஹ்
إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً
நிச்சயமாக இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஓர் “உம்மத்” சமுகம் என்று குறிப்பிட்டுள்ளான். தனி நபர் ஒருவரை சமுகம் என்று குறிப்பிட முடியாது. பெருங்கூட்டத்தையே சமுகம் என்று சொல்ல வேண்டும். எனவே, இத்திருவசனத்தின் படி பெருங்கூட்டம் என்பது சத்தியத்தில் இருப்பவர்களைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.
இந்த அடிப்படையில் இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் அதிகமானவர்கள் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளேயாவர். எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், நமது நாடான இலங்கையை எடுத்துக் கொண்டாலும் ஸுன்னீகளே பெருங்கூட்டமாக உள்ளனர். யாராவதொருவன் பெருமானாரின் ஹதீதின் படி ஒரு கூட்டத்தைப் பின்பற்றுவதாயின் அவன் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கைவாதிகளுடனயே சேர வேண்டும் என்ற உண்மை தெளிவாகும்.
எனவே உலகில் நாங்களே பெருங் கூட்டமென்று சொல்லும் வஹ்ஹாபிகளும், தப்லீக் வாதிகளும் கிறித்துவர்களுடன் சேர வேண்டும். அல்லது ஸுன்னீகளுடன் சேர்ந்து தேன் குடிக்க வேண்டும்.
முற்றும்.