Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்முஹ்யித்தீன் இப்னு அறபீ பற்றி முஹ்யித்தீன் அந்நவவீ றஹிமஹுல்லாஹ்!

முஹ்யித்தீன் இப்னு அறபீ பற்றி முஹ்யித்தீன் அந்நவவீ றஹிமஹுல்லாஹ்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றி புகஹாஉகள் மேதை இமாம் முஹ்யித்தீன் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் வழங்கிய பதில்.

سُئل الإمام الفقيه محي الدين النّووي عن الشّيخ محي الدين ابن عربي رحمه الله، قال: تلك أمّة قد خلت، ولكنّ الّذي عندنا أنّه يحرم على كلّ عاقل أن يسيئَ الظّنّ بأحدٍ من أولياء الله تعالى عزّ وجلّ، ويجب عليه أن يؤوِّلَ أقوالهم ما دام لمْ يَلْحَقْ بدرجتهم، ولا يعجز عن ذلك إلّا قليلُ التوفيق، قال فى شرح المُهذّب، ثمّ إذا أُوّل فليُؤوِّلْ كلامَهم إلى سبعين وجها، ولا نقبلُ عنه تأويلا واحدا، ما ذاك إلّا تَعَنُّتٌ،
(اليواقيت، ج 1، ص 8. للشيخ عبد الوهّاب الشعراني،)

சட்டக்கலை மேதை முஹ்யித்தீன் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஸூபிஸ மேதை முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றிக் கேட்கப்பட்ட போது அவர்கள் வழங்கிய பதில் பின்வருமாறு.

(அது தோன்றி வாழ்ந்து மறைந்த ஒரு சமுகம். எங்களின் தீர்வு என்னவெனில், வலீமாரில் கெட்ட எண்ணம் கொள்வது புத்தியுள்ளவன் மீது “ஹறாம்” ஆகும் – தண்டனைக்குரிய குற்றமாகும். அந்த வலீமாரின் தராதரத்தை அடையாதவன் அவர்களின் சொற்களுக்கும், செயல்களுக்கும் வலிந்துரை கொள்வது அவன் மீது அவசியமாகும். அவன் அவர்களின் சொற்களுக்கும், செயல்களுக்கும் வலிந்துரை கொண்டாலும் கூட எழுபது வகையான வலிந்துரையாவது கொள்ள வேண்டும். ஒரேயொரு வலிந்துரை கொள்வதை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். ஒரேயொரு வலிந்துரை மட்டும் கூறிவிட்டு இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதம் செய்தல் மனமுரண்டேயன்றி வேறொன்றுமில்லை)
அல்யவாகீத், பாகம் 01, ஆசிரியர்: ஷஃறானீ

இப்னு அறபீ போன்றோரின் ஆன்மிக இடத்தை அடையாதோர் அந்த மகான்களின் கருத்தைப் புரிந்து கொள்ளமாட்டார்கள். தமக்குப் புரியவில்லை என்பதால் அவர்களின் கருத்துப் பிழையென்று முடிவு செய்தல் கூடாது.

அவர்களுடைய பேச்சின் வெளிரங்கம் புத்தி குறைந்தவனுக்கும், படிப்பறிவு இல்லாதவனுக்கும் பிழையென்று தோன்றினால் அவன் உடனே பிழையென்று முடிவு செய்யாமல் அதற்கு வலிந்துரை செய்தேனும் அதைச் சரியாக்க வழி தேடவேண்டும். ஒரு வலிந்துரையில் அதைச் சரியாக்க முடியாது போனால் இன்னொரு வலிந்துரை கொடுத்துப் பார்க்க வேண்டும். அதுவும் சரியாக அமையவில்லையானால் இன்னொரு வலிந்துரை கொடுத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு எழுபது வலிந்துரை கொடுத்தேனும் அந்தப் பேச்சை சரி செய்வதற்கும், பேசியவரை தவறிலிருந்து காப்பாற்றுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். எழுபது வலிந்துரை கொடுத்தும் சரி செய்ய முடியாது போனால் மட்டுமே அந்தப் பேச்சு பிழையென்றும், பேசியவர் பிழை செய்தார் என்றும் முடிவு செய்தல் வேண்டும்.

இக்கருத்து இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்தாகும். இது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய கருத்தாகும்.

ஏனெனில் சட்டத்துறையில் இமாம் நவவீ அவர்களின் கருத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பது சட்ட மேதைகளின் ஏகோபித்த முடிவாகும்.

எல்லா விடயத்திற்கும் இமாம் நவவீயின் கருத்தை தேடியலையும் முல்லா மகான்கள் இவ்விடயத்தில் மட்டும் இமாம் நவவீ அவர்களின் கருத்தைப் புறக்கணிப்பது அவர்களின் மனமுரண்டேயன்றி வேறொன்றுமில்லை.

இந்த முல்லாக்கள் எழுபது வலிந்துரை மட்டுமன்றி எழுபதாயிரம் வலிந்துரை கொடுத்தேனும் என்னை “முர்தத்” ஆக்குவதற்காகவே சட்டம் தேடி அலைகிறார்கள். இவர்களின் மனத்தூய்மை அறிவுள்ளவர்களுக்கு புரியாமற் போகாது. வாய் திறக்கத்தான் அவர்களால் முடியாது.

எல்லாம் அவனின் வெளிப்பாடு என்பதை ஏற்றுக் கொள்ளும் இவர்கள் எல்லாம் அவனே என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் மூலம் இவர்கள் ஸூபிஸ தத்துவத்தில் “சீறோ” வாகவே உள்ளனர் என்பது குன்றின் மேல் தீபம் போல் தெரிகிறது. இந்த முல்லாக்கள் ளாஹிர், ளுஹூர், மள்ஹர் எனும் விபரங்களை கசடறக் கற்ற ஒருவரிடம் கற்றுக் கொள்ளல் அவர்கள் மீது “பர்ழ்ஐன்” கட்டாயக்கடமையாகும்.

ஒரு வசனத்திற்கு நேரடிப் பொருள் கொள்வதால் அது “ஷரீஆ”வுக்கு முரணாயிருந்தால் மட்டும்தான் அதற்கு 70 வலிந்துரை கொடுத்தேனும் அதைச் சரி செய்ய வேண்டும். ஒரு வசனத்தின் நேரடிப் பொருள் எந்த ஒரு முரண்பாட்டையும் ஏற்படுத்தவில்லையாயின் அங்கு வலிந்துரை தேவையே இல்லை.

உதாரணமாக இறைஞானி அபூ யஸீத் பிஸ்தாமீ அவர்கள் ஒரு சமயம் خُضْتُ بَحْرًا وَقَفَ الْأَنْبِيَاءُ بِسَاحِلِهِ நான் ஞானம் எனும் கடலில் மூழ்கிவிட்டேன். நபீமார் கரையில் நின்று கொண்டார்கள் என்று கூறினார்கள்.

அபூ யஸீத் பிஸ்தாமீ அவர்கள் ஓர் இறைஞானி. “ஷரீஆ”வின் சட்டம் தெரியாதவரல்ல. அதற்கு முரணாகப் பேசமாட்டார்கள். எனினும் அவர்களின் இப்பேச்சு “ஷரீஆ”வுக்கு முரணானது போல் தோற்றுகிறது. அதாவது தான் ஞானக்கடலில் மூழ்கிவிட்டதாகவும், நபீமார் என்போர் மூழ்க முடியாமல் கரையில் நின்றார்கள் என்ற கருத்தை பேச்சின் வெளிநடை காட்டுகிறது.

இது “ஷரீஆ”வுக்கு முரணானதேயாகும். ஏனெனில் நபீமாரை விட வலீமார் தரத்தில் குறைந்தவர்கள் என்று நம்புவதே “ஷரீஆ”வாகும்.

எனவே, அபூயஸீத் அவர்களின் பேச்சின் வெளியமைப்பு கொண்டு மட்டும் அவர்களின் பேச்சுக்காக அவர்களுக்கு “முர்தத்” என்றும், அவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் “பத்வா” வழங்கிவிடாமல் அவர் உயிருடனிருந்தால் அவரின் பேச்சுக்கு அவரிடமே விளக்கம் கேட்டு அவரின் கருத்துக்கேற்றவாறு “பத்வா” கொடுக்கலாம்.

அவர் உயிருடன் இல்லையானால் அவரின் பேச்சு “குப்ர்” “ஷிர்க்” என்று முடிவு செய்யாமல் பல்கலைத் திறமை பெற்றவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

அவரின் பேச்சு “ஷரீஆ”வுக்கு முரணானதல்லவென்பதற்கு 70 வலிந்துரையேனும் கொண்டு அவரின் பேச்சு சரியானதென்றும், அவர் முஸ்லிம்தான் காபிரல்லவென்றும் முடிவு செய்தல் வேண்டும்.

இறைஞானி அபூ யஸீத் மேற்கண்டவாறு சொன்ன போது அன்று வாழ்ந்த உலமாஉகள் ஒன்று சேர்ந்து அவரின் பேச்சு சரியென்றும், அவர் “காபிர்” அல்லவென்றும் முடிவு செய்தார்கள்.

அவர்கள் அவரின் பேச்சுக்கு கொடுத்த வலிந்துரை என்னவெனில் நபீமாரும், அபூ யஸீத் அவர்களும் சேர்ந்துதான் ஆரம்பத்தில் இறைஞானக் கடலில் இறங்கினார்கள் என்றும், அக்கடலில் அனைவரும் முங்கிக் குளித்துவிட்டு நபீமார் தமது “நுபுவ்வத்” எனும் பதவி மூலம் – அந்த வல்லமை கொண்டு கரை சேர்ந்து விட்டார்களென்றும், அபூ யஸீத் மட்டும் கரைசேர சக்தியற்ற நிலையில் நடுக்கடலில் தத்தளிக்கின்றார் என்பதாகும். இவ்வாறு வலிந்துரை கொண்டு அவரின் பேச்சை சரிகண்டதுடன் அவரையும் “குப்ர்” என்ற இருளிலிருந்து பாதுகாத்துமுள்ளார்கள்.

இதுவே “தக்வா” உள்ள உலமாஉகளின் பண்பாகும். அறிவுடைமையாகும்.

உலகில் வாழும் ஸுன்னத் வல் ஜமாஅத் மக்கள் அனைவரும் “அகீதா” கொள்கையில் பின்பற்றுகின்ற இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு முஸ்லிமை காபிர், முர்தத் என்று மதம் மாற்றி வைத்தல் தொடர்பாக கடுமையாக எச்சரித்துள்ளார்கள் என்ற செய்தி கூட இந்த முல்லா மகான்களுக்கு தெரியாமற் போனதையிட்டு நான் “கஹ்கஹா” சிரிப்பு சிரிக்கிறேன். அதோடு வேதனையும் அடைகிறேன்.

نقل الشّيخ أبو طاهر القزويني رحمه الله فى كتابه سراج العقول عن أحمد بن زاهر السَّرخسـي اَجَلِّ أصحابِ الشّيخ أبى الحسن الأشعريّ رحمه الله قال (لمّا حضـرتِ الشّيخَ أبا الحسن الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لي اِجمعْ أصحابي، فجمعتُهم، فقال لنا ، اِشْهدُوا أنِّيْ لا أقولُ بِتَكْفِيْرِ أحدٍ من أهلِ القِبلة، لِأَنِّيْ رأيتُهم كلَّهم يشيرون إلى معبودٍ واحد، والإسلام يشملُهم ويعمُّهم، (اليواقيت، ج أوّل، ص 21 )

அஷ் ஷெய்கு அபூ தாஹிர் அல்கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஸிறாஜுல் உகூல்” எனும் நூலில் பின்வரும் செய்தியை எழுதியுள்ளார்கள். இந்தச் செய்தியை “அகீதா”வின் இமாமாகிய அபுல் ஹஸன் அல்அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மிகப் பிரசித்தி பெற்ற மாணவர் அஹ்மத் இப்னு சாஹிர் அஸ்ஸர்கஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

அபுல் ஹஸன் அல்அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பக்தாத் நகரிலுள்ள எனது வீட்டுக்கு வந்தார்கள். அவ்வேளை அவர்களுக்கு மரண வருத்தம் ஏற்பட்டது.

அப்போதவர்கள் என்னிடம் இங்குள்ள நமது தோழர்களை ஒன்று கூட்டித் தாருங்கள் என்று சொன்னார்கள். நான் ஒன்று சேர்த்துக் கொடுத்தேன்.

இமாம் அவர்கள் வந்தவர்களிடம் (முஸ்லிம்களில் எவரையும் நான் “காபிர்” ஆக்கவில்லை என்பதற்கு நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் அனைவரும் வணங்கப்படுபவன் ஒருவன் என்றுதான் சொல்கிறார்கள். முஸ்லிம் என்ற பெயர் அவர்கள் அனைவரையும் உள்வாங்கிக் கொள்ளும்) என்று கூறினார்கள்.

இந்தச் செய்தியை தனது நூலில் எழுதிய அபூ தாஹிர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாம் அவர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் என்று சொல்கிறார்களே என்று வியந்து எழுதியுள்ளார்கள்.
ஆதாரம்: அலயவாகீத், பாகம் 01, பக்கம் 21.

மேற்கண்ட விபரங்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் ஒருவனின் பேச்சு, அல்லது செயல் மத மாற்றத்திற்கு சாத்தியமானது போலிருந்தாலும் அதை வைத்துக் கொண்டு அவனை “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ சொல்வது பெரும்பாவமாகும். அவ்வாறு ஒருவன் சொன்னால் சொன்னவன் “காபிர்”, “முர்தத்” ஆகிவிட்டான் என்பதே இஸ்லாமிய “ஷரீஆ” சட்டமாகும். இது தொடர்பாக பல நபீ மொழிகள் எச்சரிக்கின்றன.

யாராவதொருவன் “குப்ர்” என்று சொல்வதற்கு சாத்தியமான ஒரு பேச்சை பேசினால், அல்லது ஒரு செயலை செய்தால் அவனை நேரில் விசாரிப்பது “பர்ழ்ஐன்” கட்டாயக் கடமையாகும். ஒரு தரமேனும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்னை விசாரிக்காமல் “பத்வா” வழங்கியிருப்பது செல்லுபடியற்றதும், அநீதியுமாகும்.

(முற்றும்.)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments