துறை தெரியாமல் தோணி தொடுத்த “பத்வா” வணிகர்கள் நடுக்கடலில் தவிப்பு!
அரசின் அங்கீகாரத்துடன் “பத்வா”வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!
எமக்குத் தேவை எமது உரிமைகள்தான். சலுகைகள் அல்ல.
இது ஜனநாயக நாடு என்ற பெயரைக் காப்பாற்றுவது அதி உத்தம ஜனாதிபதியின் கையிலேயே உள்ளது.
தொடர் – 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இன, மத, மொழி வேறுபாடின்றி நீதிக்காக குரல் கொடுக்க விரும்புகின்ற அனைவரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முடியும்.
கௌரவத்திற்குரிய “தரீகா”வின் ஷெய்குமார்களே! “தரீகா” வழி செல்லும் ஆன்மிக வாதிகளே! “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகளே!
இன, மத, மொழி வேறுபாடின்றி நீதியும், மனித உரிமையும் நிலை நாட்டப்பட வேண்டுமென்பதற்காக குரல் கொடுக்க விரும்பும் நேர்மையாளர்களே!
உங்கள் அனைவர் மீதும் இறைவனின் அருளும், இறைஞான மகான்களின் ஆசீர்வாதமும் உண்டாவதாக!
اَلْخَلْقُ عِيَالُ اللهِ
“அல் கல்கு இயாலுல்லாஹ்” நானும், நீங்களும், உலகில் வாழும் அனைத்து இன, மத, மொழி மக்களும் ஒரே இறைவனின் ஒரு குடும்பம் என்ற நபீகட்கரசர் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அருள் நிறைந்த, பொது நலன் உள்வாங்கப்பட்ட மேற்கண்ட தத்துவத்தின்படி உலகிலுள்ள அனைத்து “அத்யான்” – சமயங்களைச் சேர்ந்த – (பௌதர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள்) அனைவரும் ஒரே குடும்பத்தவர்களேயாவர்.
இன, மத, மொழி என்பவற்றுக்கு அப்பாலும் அரசியலுக்கு அப்பாலும் நின்று மேற்கண்ட நபீ மொழியை ஆய்வு செய்தால் உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் மனிதர்கள் என்ற கண்ணோட்டத்தில் ஒருவர் மற்றவரின் குடும்பத்தவரேயாவார். உறவினரேயாவார்.
ஏனெனில் எந்த ஒரு மனிதனாயினும் அவன் இறைவனின் வேறுபடாத, அவனை விட்டும் பிரியாத, அவன் தானான வெளிப்பாடு என்பதே அறிவுள்ள ஆய்வாளர்களின் தீர்க்கமான முடிவாகும். ஸூபிஸ தத்துவத்தின் முடிவும் இதுவேதான்.
இந்த முடிவின் படி மனிதர்கள் அனைவருக்கும் தந்தை ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், தாய் ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்களுமேயாவார்கள். இது கால வரை பிறந்தவர்களும், இதன் பிறகு பிறக்கவுள்ளவர்களும் அவ்விருவரின் பிள்ளைகளேயாவர்.
ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் மனைவி ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்களும் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியவர்கள் என்று சிலர் நினைப்பது தவறானதாகும். அவ்விருவரும் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து மனுகுலத்தின் தந்தையும், தாயுமேயாவர்.
இன, மத, மொழிக்கப்பால் நின்று பார்த்தால் இதை எழுதும் எனக்கும், இதை வாசிக்கின்ற உங்களில் ஒவ்வொருவருக்கும் உலகெங்கும் அண்ணன், தம்பி, தங்கை, மாமா, மாமி, சாச்சா, சாச்சி போன்ற உறவினர்கள் உள்ளனர் என்பதை நாம் மறக்கலாகாது.
எனினும் இன, மத, மொழி நெருங்கிய உறவை தூரப்படுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு மனிதனும் ஆணும், பெண்ணும் தாம் வந்த வழிவாறு பற்றி ஆய்வு செய்வார்களாயின் இனத் துவேஷம், மொழித் துவேஷம், மதத் துவேஷம் என்பன அவர்களை விட்டும் தாமாகத் தூரம் போய் விடும்.
இன, மத, மொழி துவேஷங்கள் எங்களின் உள்ளங்களில் வேரூன்றி விடாமல் நாம் அனைவரும் அவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை மனதோடு – மனவாசையோடு போராடி அதை வெல்ல வேண்டும். இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல் உள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன, மத, மொழி போன்ற அம்சங்களைப் பிரதான காரணங்களாகக் கொண்டு மனிதர்களை நோக்காமல் அவர்களை இறைவனின் வேறுபடாத, அவனை விட்டும் பிரியாத, அவன் தானானவையாக மட்டும் நோக்க வேண்டும்.
மனிதர்கள் போல் ஏனைய உயிரினங்களையும் கணித்துச் செயல்பட வேண்டும். அவற்றை வேதனைப் படுத்துவதைப் பெருங்குற்றமாக கருத வேண்டும். எம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறியுள்ள மேற்கண்ட அமுத வாக்கை தினமும் நினைத்துச் செயல்பட வேண்டும்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اِرْحَمُوا مَنْ فِي الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ
பூமியில் உள்ள உயிரினங்களுக்கு இரக்கம் – அன்பு காட்டினால் வானத்திலுள்ளவர்கள் உங்களுக்கு இரக்கம், அன்பு காட்டுவர் என்ற அண்ணலெம் பெருமானின் அமுத வாக்கைப் புரிந்து செயல்பட வேண்டும். வானத்திலுள்ளவர்கள் என்பது “மலக்” ஒளியினால் படைக்கப்பட்ட வானவர்களைக் குறிக்கும்.
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ (صحيح البخاري 3318)
“ஒரு பூனையின் விடயத்தில் ஒரு பெண் நரகம் சென்றாள். அவள் அதைப் பிடித்து கட்டி வைத்தாள் – அடைத்து வைத்தாள். அவள் அதற்கு உணவு கொடுக்கவுமில்லை. அது வெளியே சென்று புழு பூச்சிகளை சாப்பிடுவதற்கு அதை விடவுமில்லை” என்று அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
உயிரினங்களில் பூனை ஒரு அப்பாவி போன்றதாகும். மென்மையானதுமாகும். அது பாம்பு, பூரான், தேள் போன்றதல்ல. எவரையும் வேதனை செய்யும் நோக்கத்தில் எவருக்கும் எதுவும் செய்யாது. அடித்தாலும் செய்யாது, அணைத்தாலும் செய்யாது.
ஆயினும் உயிரினங்களில் மனிதனுக்கு தீங்கு செய்யக் கூடியவற்றை மட்டும் கொல்வதில் குற்றமில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.
خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِى الْحِلِّ وَالْحَرَمِ اَلْحَيَّةُ وَالْغُرَابُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُوْرُ وَالْحِدْأَةُ،
கொடியவை ஐந்தை எவ்விடத்திலும் கொலை செய்யலாம். அவை பாம்பு, காகம், எலி, கடிநாய் – விசர் நாய், பருந்து ஆகியன.
எவ்விடத்திலும் என்று நான் குறிப்பிட்டது திரு மக்கா, நகரின் “ஹறம்” எல்லையையும், திரு மதீனா நகரின் “ஹறம்” எல்லையையும் குறிக்கும். இவ் எல்லைக்குள்ளும் ஐந்தையும் கொல்லலாம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ، كَادَ يَقْتُلُهُ العَطَشُ، إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ، فَنَزَعَتْ مُوقَهَا فَسَقَتْهُ فَغُفِرَ لَهَا بِهِ»
(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது இஸ்றவேலர் சமுகத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைக் கண்டாள். உடனே அவள் தன் காலுறையை கழற்றி அதில் தண்ணீரை எடுத்து அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்கு பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.
ஆதாரம்: புகாரீ, பாடம் 54, இலக்கம் 3467
அறிவிப்பு அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு
இஸ்லாம் எந்த அளவு உயிரினங்களை வேதனை செய்யக் கூடாதென்று சொல்கிறதென்றால் சட்டப்படி அறுத்துச் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணியைக் கூட அத்தகைய இன்னொரு பிராணி பார்த்துக் கொண்டிருக்கும் போது அறுப்பது விரும்பத்தக்கதல்ல என்று கூறுகிறது. இது மட்டுமல்ல. அறுக்குமுன் அப்பிராணிக்கு ஒரு முடல் நீராவது கொடுக்க வேண்டுமென்றும் இஸ்லாம் வழி காட்டுகின்றது. இது மட்டுமல்ல. அறுக்கவுள்ள பிராணியை அறுப்பதற்கு சில நாட்களின் முன் – சுமார் மூன்று நாட்களின் முன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து கைத்தீன் கொடுக்க வேண்டுமென்றும் இஸ்லாம் கூறுகிறது. இது கூட அதன் மாமிசத்தை உண்பவர்கள் மீது இரக்கம் காட்டியே சட்டமாக்கப்பட்டுள்ளது. அதாவது அதை உண்பதால் எந்த ஒரு தாக்கமும் உடலுக்கு ஏற்படாமலிருப்பதற்காகவே அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.
பாம்பு சட்டப்படி கொல்லப்பட வேண்டிய உயிரினமாயினும் பாம்பு இனத்தில் எந்த ஒரு விஷமும் இல்லாதவையும் உள்ளன. அவற்றைக் கொன்று விடாமல் தவிர்ப்பது விரும்பத்தக்கது.
எனினும் பாம்பு இனத்தில் ஒரு வகையுண்டு அதன் சரியான பெயர் எனக்கு கிடைக்கவில்லை. இலங்கை கிழக்கு மாகாணத்தில் எனதூர் மக்களின் வழக்கில் அது “வெள்ளாளம் குட்டி” என்று சொல்லப்படும். இது பெரும்பாலும் சுமார் 1.5 அடிக்கு மேல் வளராது. இது “சில்வர்” வெள்ளி நிறத்தில் இருக்கும். இந்த வகைப் பாம்பு ஒன்று வந்தால் அதைத் தொடர்ந்து ஆறு பாம்புகள் வருமென்று மக்கள் சொல்வர்.
இந்த வகைப் பாம்பு மட்டும் வந்தால் அது புரிந்து கொள்ளும் வகையில் “நீ “ஜின்” இனமாக இருந்தால் போய்விடு” என்று சொல்ல வேண்டும். அது உண்மையில் “ஜின்” இனமாயிருந்தால் போய்விடும். இன்றேல் அதை கொன்று விடலாம். “ஜின்” என்பது தான் விரும்பிய தோற்றம் பெறும் வல்லமையுள்ளதாகும்.
அறுத்துச் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினங்களில் குறிப்பாக கோழி அறுப்பதாயின் மூன்று நாட்கள் கைத்தீன் கொடுத்து வளர்ப்பதுடன் மூன்று நாட்களும் குறைவின்றி உரிய நேரத்தில் அதற்கு உணவு கொடுக்க வேண்டும். இதன் நோக்கம் அதைப் பசியில் விடக் கூடாதென்பதேயாகும்.
உயிரினங்கள் எதுவாயினும் அதற்கு அநீதி செய்யலாகாதென்றும், அவற்றோடு இரக்கமாக இருக்க வேண்டும் என்றும் இஸ்லாம் அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் உயிரினங்களில் மிகச் சிறந்த உயிரினமான மனிதனுக்கு அநீதி செய்வதும், அவனைக் கொலை செய்ய வேண்டுமென்றும், அவன் மதம் மாறியவன் என்றும் “பத்வா” வழங்குவதும் யஹூதி, நஸாறாக்களின் பண்பேயன்றி முஸ்லிம்களின் பண்பல்ல. குறிப்பாக இறையச்சமுள்ளவர்களின் பண்பல்ல.
அகில இலங்கை உலமா சபையைச் சேர்ந்த அனைவரும் எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் அநீதி செய்யவுமில்லை, எங்களை மதம் மாற்றவுமில்லை, எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்று “பத்வா” தீர்ப்பு வழங்கவுமில்லை.
எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் அநீதி செய்தவர்களும், முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்த எம்மை மதம் மாற்றி வைத்தவர்களும், எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்று சொன்னவர்களும், அதற்கான முயற்சி செய்தவர்களும் யாரெனில் உலமா சபையின் தலையில்லாத் தலைவரும், வட்டிலப்பம் கொடுத்து நீதிபதிகளை வசப்படுத்த முயற்சித்தவரும், அன்று சாம்பல் கேட்டு இன்று எரிப்பது “ஹறாம்” என்று சொல்பவருமான சங்கைக்குரிய ரிஸ்வி முப்தீ அவர்களும், அவரின் “பத்வா” குழுவினருமேயாவர். மற்றவர்கள் இவர்களின் அட்டூழியத்தைப் பயந்து கூட்டத்தோடு கோவிந்தா போடுபவர்களேயாவர். இதற்கான ஆதாரம் என்னிடமுள்ளது. தேவையேற்படின் பதிவிடுவேன். அல்லது நீதிவான் முன்னிலையில் வெளிப்படுத்துவேன்.
“பத்வா” வழங்கிய முல்லாக்கள் முழு முட்டாள்களேயாவர். இவர்கள் எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று வழங்கிய “பத்வா” எங்களுக்கு மட்டும் வழங்கிய “பத்வா” அல்ல. உலகில் தோன்றி மறைந்த நபீமார், வலீமார் அனைவருக்கும் வழங்கிய “பத்வா” ஆகும். எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்தையும் படைத்த அல்லாஹ்வுக்கு வழங்கிய “பத்வா” ஆகும். ஒருவர் இருவரை மட்டுமல்ல உள் நாட்டிலும், வெளிநாட்டிலுமுள்ள பல இலட்சம் மக்களை காபிர்களாக்கி “பத்வா” கொடுத்தது மட்டுமன்றி எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்றும் எழுத்தில் தீர்ப்புக் கூறி கொலை வெறியர்களையும், அடியாட்களையும் கொலைக்குத் தூண்டியவர்களுமாவர். இவர்கள்தான் உலமாஉகள், மார்க்கம் காக்க வந்த மகான்கள். ஸுப்ஹானல்லாஹ்!
நாய், பூனை உள்ளிட்ட உயிர்களைக் கூட வேதனை செய்யக் கூடாதென்று இஸ்லாம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அரசின் அனுமதியின்றியும், “பத்வா” வழங்குவதற்கான நடைமுறை பேணப்படாமலும், குற்றவாளியென்று சொல்லப்பட்ட என்னை விசாரிக்காமலும், என்னிடம் விளக்கம் கேட்காமலும் “பத்வா” வழங்கியது இஸ்லாமிய “ஷரீஆ” சட்டத்திற்கே முரணானதாகும்.
நானும், எனது கருத்தைச் சரி கண்டவர்களும் மதம் மாறியவர்கள் என்று எந்த ஓர் ஆதாரமுமின்றி இவர்கள் வழங்கிய “பத்வா” தீர்ப்பு எனக்கு மட்டுமன்றி இந் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிமல்லாத பௌதர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள், ஸூபீ முஸ்லிம்கள் அனைவருக்கும் உயிருக்கான மறைமுகமான ஓர் அச்சுறுத்தலேயாகும். எனது இக்கூற்றை இலங்கை வாழ் பௌதர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள், ஸூபீ முஸ்லிம்கள் உதாசீனம் செய்யாதிருப்பது அவர்களுக்கு சிறந்ததாகும். இதை இந் நாட்டின் ஆட்சியாளர்கள் கவனத்திற் கொள்ளவில்லையானால் இந்நாடு பாரிய பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரிடுமென்பது எனது யூகம்.
நான் மதம் மாறவுமில்லை, எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மதம் மாறவுமில்லை. ஆயினும் நாங்கள் வஹ்ஹாபிகளின் பின்னணியில் மதம் மாற்றப்பட்டுள்ளோம். உலமா சபையை சேர்ந்தவர்கள் மட்டும்தான் இஸ்லாம் மார்க்கத்தை சரியாக விளங்கியவர்கள் என்றும், ஏனைய மௌலவீமார்கள் ஒன்றும் தெரியாத முழு முட்டாள்கள் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
யார் சொல்வது சரி? யார் சொல்வது பிழை? என்று அரசும், பொது மக்களும் அறிந்து கொள்ள விரும்பினால் நானும், “பத்வா” வழங்கிய மனக்கண் குருடர்களும் விவாதிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆயினும் அதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் நடுவர்களின்றி விவாதமில்லை. நடுவர்கள் உலமாஉகளாகவே இருக்க வேண்டும். உலமாஉகளோ பல்வேறு கொள்கையுள்ளவர்களாக இருக்கும் நிலையில் இவர்களிடமிருந்து நியாயமான தீர்ப்பை எதிர் பாரக்க முடியாது. இவர்களை நீதிவான்களாக – நடுவர்களாக நியமிக்கவும் முடியாது.
உலமாஉகளின் நிலை தழும்பிக் கொண்டிருக்கின்றது. அவர்களிற் சிலர் “தப்லீக் ஜமாஅத்”தைச் சேர்ந்தவர்களாவர். இன்னும் சிலர் வஹ்ஹாபீகளாவர். வேறு சிலர் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களாவர். இன்னும் சிலர் இந்த ஞானத்தை எதிர்ப்பவர்களாவர். இன்னும் பலர் ஸூபிஸம் தெரியாதவர்களாவர். இவ்வாறு பொது மக்களிலும், உலமாஉகளிலும் பல்வேறு கொள்கையுள்ளவர்கள் இருப்பதால் இவர்களை நடுவர்களாக நியமிக்க முடியாது. நியமித்தாற் கூட நடுவர்களுக்கிடையிலேயே கருத்து மோதல் நிச்சயமாக நடக்கும்.
كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
ஒவ்வொரு கூட்டமும் தமது கொள்கையே சரியென்று நம்புகிறார்கள். அவர்களிடமிருந்து சத்தியத்தை எதிர் பார்க்க முடியாது.
எனவே, மேற்கண்ட காரணங்களால் விவாதம் மூலம் ஒரு தீர்க்கமான முடிவு காண முடியாதென்பது நிச்சயம்.
உலமா சபையின் “பத்வா” குழுவுடனோ, அல்லது வேறு எவருடனோ “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக விவாதித்து சரி பிழை காண்பதானது மார்க்கத்திற்கு முரணானதாகும். ஸூபீ மகான்கள் மார்க்க விடயம் தொடர்பாக விவாதித்து சரி பிழை காண்பதை அறவே விரும்பவில்லை. அது பிழையென்றே சொல்கிறார்கள். விபரம் தேவையானோர் பின்வரும் நூலை வாசிக்கவும்.
اَلْمِيْزَانُ الْخَضْرِيَّةْ
பக்கம் 48, ஆசிரியர்: இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ்.
விவாதத்தின் நிபந்தனைகளில் மிகப் பிரதான நிபந்தனை என்னவெனில் வாதி, பிரதி வாதி இருவரும் விவாதிக்கப்படும் கருப்பொருள் பற்றிய முழு விபரமும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். ஒருவர் தெரிந்தவராயும், மற்றவர் தெரியாதவராயும் இருந்தால் விவாதிக்க முடியாது. நேரம்தான் வீணாகும்.
நான் அல்லாஹ்வின் அருளாலும், வலீமாரின் வழி காட்டலாலும் “வஹ்ததுல் வுஜூத்”, ஸூபிஸம் தொடர்பான முழு விபரங்களையும் என்னால் முடிந்தவரை அறிந்திருக்கிறேன். இது அல்லாஹ் எனக்குச் செய்த பேரருளாகும்.
وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ
எவருக்கு “ஹிக்மத்” வழங்கப்பட்டதோ அவர் அதிக நன்மை வழங்கப்பட்டவராவார். “லுப்பு” உள்ளவர்களே தவிர இதை விளங்கிக் கொள்ளமாட்டார்கள். (திருக்குர்ஆன்: 2-269)
“லுப்பு” என்றால் உள்மனம் எனலாம். இது قَلْبُ الْقَلْبِ என்றும் சொல்லப்படும்.
“ஹிக்மத்” என்ற சொல்லுக்கு ஸூபீ மகான்கள் கூறும் கருத்தும், அவர்கள் கூறும் வரைவிலக்கணமும் பின்வருமாறு.
عِلْمٌ يُبْحَثُ فِيْهِ عَنْ حَقِيْقَةِ كُلِّ شَيْءٍ
“ஹிக்மத்” என்றால், ஒவ்வொரு வஸ்த்துவின் எதார்த்தம் எக்கலையில் ஆராயப்படுகிறதோ அக்கலை “ஹிக்மத்” என்ற பெயரால் அழைக்கப்படும். அதுவே “ஸூபிஸம்” எனும் “தஸவ்வுப்” கலையாகும்.
“ஹிக்மத்” என்ற இச் சொல்லுக்கு “தந்திரம்” என்று பொருள் கொள்வது நூறு வீதம் பிழையானதாகும். தந்திரம் என்பது இறை வழி நடக்கும் ஒருவனிடம் அறவே இருக்க முடியாத பண்பாகும். இது இகழப்பட்டதாகும். அல்லாஹ் மேற்கண்ட திரு வசனத்தின் மூலம் இதைப் பாராட்டவில்லை. ஒருவன் தனது எதார்த்தமென்னவென்றும், அதேபோல் ஒவ்வொரு வஸ்த்தின் எதார்த்தமும் எதுவென்றும் ஆராய்ந்தறிதலே “ஹிக்மத்” எனப்படும். பின்வரும் நபீ மொழியும் இதே கருத்தையே வலியுறுத்துகிறது.
اَلْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ، أَخَذَهَا حَيْثُ وَجَدَهَا،
“ஹிக்மத்” என்பது “முஃமின்” விசுவாசியின் தவறிப் போன – காணாமற் போன பொருளாகும். அவன் அதை எங்கு கண்டாலும் எடுத்துக் கொள்வான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். இந்த நபீ மொழியும் ஸூபிஸ ஞானத்தையே சுட்டிக் காட்டுகின்றது.
أَفْضَلُ الْعُلُوْمِ عِلْمُ اللهِ
அறிவுகளிற் சிறந்தது அல்லாஹ் பற்றிய அறிவு என்பது வலீமார், இமாம்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறிய முடிவாகும்.
நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் அல்லாஹ்வின் திரு வசனங்கள் மூலமும், நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பொன் மொழிகள் மூலமும், “அக்தாப்”கள், “அவ்லியாஉ”கள் ஆகியோர்களின் “அக்வால்” அமுத வாக்குகளின் மூலமும் நிரூபிக்கப்பட்ட, விலை மதிக்க முடியாத தத்துவமாகும்.
இன்று உலகிலுள்ள 300க்கும் மேற்பட்ட தரீகாக்களும், நமது இலங்கை நாட்டைப் பொறுத்த வரை அமுலில் – நடைமுறையில் இருந்து வருகின்ற காதிரிய்யா, ஷாதுலிய்யா, ரிபாஇய்யா, நக்ஷபந்திய்யா, ஸுஹ்றவர்திய்யா, சிஷ்திய்யா, அறூஸிய்யா முதலான தரீகாக்களும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை கருவாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. குறித்த “தரீகா”க்களின் நடைமுறையில் இருக்கின்ற “றாதிபு”கள், “அவ்றாது”கள், “திக்ர்”கள், பாடல்கள், வளீபா, யாகூதிய்யா என்பனவும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கின்றன. தரீகாக்களின் தாபகர்களான “மஷாயிகு”மார்கள், மற்றும் நாதாக்களும் பெரும் பெரும் ஞான மகான்களாகவே உள்ளனர்.
“தரீகா”க்கள் வழி கேடு என்றால் தரீகாக்களை அமைத்தவர்களும் வழிகேடர்களேயாவர். இவ்வாறு சிந்தித்தால் முன்னோர்களில் பல இலட்சக் கணக்கானோரை வழி கேடர்கள் என்று சொல்ல வேண்டியும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசிய, எழுதிய பல இலட்சக்கணக்கான மகான்களை வழி கேடர்கள் என்றும் சொல்ல நேரிடும். மஆதல்லாஹ்!
இது மட்டுமல்ல “வஹ்ததுல் வுஜூத்” கருத்தை திருக்குர்ஆன் மூலம் நமக்குத் தந்த அல்லாஹ்வையும், ஹதீதுகள் மூலம் எமக்குத் தந்த எம் பெருமானாரையும், அதேபோல் அதை எமக்குத் தந்த வலீமார்களையும் தூக்கியெறிய வேண்டிய நிலையும் ஏற்படும். மஆதல்லாஹ்! இவ்வாறான எண்ணங்களே வந்துவிடாமல் அல்லாஹ் பாது காப்பானாக!
ரிஸ்வி முப்தீ அவர்களே!
நீங்களும், உங்களின் “பத்வா” குழுவினர்களும் அல்லாஹ்வின் அடியானான என்னையும், எனது கருத்தை ஏற்றுக் கொண்ட இந் நாட்டையும், வெளி நாடுகளையும் சேர்ந்த பல இலட்சம் அல்லாஹ்வின் அடியார்களையும், உண்மையான “முஃமின்” விசுவாசிகளான ஸூபிஸ வாதிகளையும் “காபிர்”கள் – “முர்தத்”துகள் என்று “பத்வா” வழங்கிவிட்டீர்கள். இது உங்களின் அறியாமையாகும். அல்லது உங்களின் மனமுரண்டாகும்.
யாரோ “பத்வா” வழங்க எங்கள் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்களை நீங்கள் சாடுகிறீர்கள் என்று உங்களின் வருவாயில் வாழும் இரு “ஷெய்கைன்” என்னிடம் கேட்கிறார்கள். இவர்கள் இருவரும் “ஷரீஆ”வும், “தரீகா”வும் தெரியாத நயவஞ்சகர்கள். வஹ்ஹாபிகள். குண்டு வைத்து பிற மதத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களை தகர்த்த கொடூர வஹ்ஹாபிகளின் தோழர்கள். இவர்களை நான் கணக்கெடுக்கவில்லை. இவர்கள் செருப்புச் சரி செய்யும் செம்மானை விடக் கீழ்த்தரமானவர்கள்.
ரிஸ்வீ முப்தீ அவர்களே!
நீங்களும், உங்களின் “பத்வா” குழுவினரும் உலகில் வாழும் பல இலட்சம் “முஃமின்”களை மதம் மாற்றிவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழ நினைக்கிறீர்கள். அல்லாஹ் “அஹ்கமுல் ஹாகிமீன்” ஆவான். அவன் உங்கள் அனைவரையும் விடமாட்டான். நீங்கள் அனைவரும் நீங்கள் செய்த பாவத்திற்கான – அட்டூழியத்துக்கான அல்லாஹ்வின் தண்டனையை அனுபவிக்காமல் மரணிக்கமாட்டீர்கள். உங்களுக்கு ஏற்படவுள்ள அல்லாஹ்வின் தண்டனையை இந்நாட்டு மக்கள் கண்டு வாயிலும், தலையிலும் கை வைத்து வியக்கத்தான் போகிறார்கள்.
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ
அல்லாஹ்வின் பிடி கடுமையானதென்பதை உணர்ந்து கொள்ளுங்கள். (திருமறை 85-12)
நீங்கள் ஸூபிஸ சமுகத்திற்குச் செய்த அநீதிகளையும், அட்டூழியங்களையும் அரசின் கீழ் மட்டத்திலுள்ளவர்களுக்கும், மேல் மட்டத்திலுள்ளவர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக இந் நாட்டின் தலைவர் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும் அறிவிதுள்ளேன். இது தொடர்பாக அரச நீதியையும், அரசர்களின் அரசனான அல்லாஹ்வின் நீதியையும் எதிர் பார்த்து அதை நம்பினவனாக வாழ்கிறேன். அல்லாஹ் என்னையும், எனது ஆதரவாளர்களையும் ஸூபிஸ சமுகத்தையும் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
இறுதி முயற்சியாக “பத்வா”வுக்கு எதிராக அகில இலங்கை ரீதியில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்த நாடியுள்ளேன். அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வந்தால் அரச அனுமதியுடன் அமைதியான சாத்வீக ஆர்ப்பாட்டம் நடத்தி அரசிடம் நீதி கேட்க நாடியுள்ளேன். அப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் இலங்கை வாழ் ஸூபிஸத்தின் ஆதரவாளர்களும், தரீகாவாதிகளும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளும், அவ்லியாஉகளின் ஆதரவாளர்களும், எனது சிஷ்யர்கள், சிஷ்யைகளும் சத்தியத்தை நிலை நாட்ட முன் வருவார்கள் என்று நம்புகிறேன். அதற்காக அவர்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.
நாய், பூனை, மற்றும் உயிரினங்களையே வேதனை செய்வது தண்டனைக்குரிய பெரும் பாவமென்று இஸ்லாம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வையும், நபீமார்களையும், அவ்லியாஉகளையும் நம்பி அவர்கள் காட்டிய ஸூபிஸ வழி செல்லும் உண்மை முஸ்லிம்களை சுமார் 42 ஆண்டுகளாக உயிரினங்களில் மேலான மனுகுலத்தை நசுக்கி வேதனை செய்து வருகின்ற உலமா சபையின் தலைவரும், “பத்வா” வழங்கிய குருடர்களும் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
எமக்குத் தேவை நீதிதான். சலுகையல்ல. நாங்கள் அனைத்து உரிமைகளும் பெற்று நிம்மதியாக வாழ வழி செய்வது ஜனநாயக நாட்டின் தலைவர் அவர்களின் கடமையாகும்.
தொடரும்….