தொடர் – 02
அல்லாஹ்வின் அருள் விளையும் இலங்கைத் திரு நாடு “பங்குறோத்” நாடாக மாறுவதற்கான சாத்தியம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதற்கான காரணம் வஹ்ஹாபிஸம் எனும் வழிகேடும், முல்லாக்களின் அநீதியான “பத்வா” தீர்ப்புமேயாகும். இவ்விரண்டும் இந்நாட்டில் இருக்கும் வரை இந் நாடு சிரிக்காது. மகிழாது. சோகமும், மிடுமையுமே தலை விரித்தாடும்.
இந்நிலைக்குக் காரணம் அரசுதான் என்று அரசுக்கு எதிரானவர்கள் சொன்னாலுங்கூட எனது ஆன்மிக கண்ணோட்டத்தில் நான் கண்ட காரணம் மேற்கண்ட இரு காரணங்களுமே பிரதான காரணங்களாகும்.
அல்லாஹ்வின் அருட் பார்வை இந்நாட்டில் விழுவதாயின் முதலில் அவனின் அப்பார்வை விழாமல் தடை கல்லாகவுள்ள மேற்கண்ட இரண்டு பிரதான தடைகளும் நீக்கப்பட வேண்டும்.
இரண்டாவது, இந்நாட்டில் இதுகாலவரை நடந்து வந்த மத அனுஷ்டானங்கள் நடந்தது போலவே நடக்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்களான விகாரைகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாயல்கள் முதலான இடங்களில் பரம்பரை பரம்பரையாக நடந்து வந்த நன்மையான காரியங்கள் யாவும் நடந்தது போலவே நடக்க வேண்டும்.
முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களான பள்ளிவாயல்களில் மட்டுமே தொன்று தொட்டு நடந்து வந்த காரியங்கள் நிறுத்தப்பட்டும், விஷமிகளால் தடைசெய்யப்பட்டுமுள்ளன. ஏனைய மதத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களில் நடந்தவை யாவும் நடந்து கொண்டே இருக்கின்றன. கூடியுள்ளனவே தவிர குறையவில்லை.
ஆகையால் முஸ்லிம்கள் விழித்தெழுந்து தமது பள்ளிவாயல்களில் தொன்று தொட்டு நடந்து வந்து வஹ்ஹாபிஸ வழிகேடு பரவிய பின் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து நன்மையான காரியங்களையும் அனைத்து முஸ்லிம்களும் மீண்டும் உயிர்ப்பிக்க முன்வர வேண்டும்.
முஸ்லிம்களில்தான் வஹ்ஹாபிகள் என்றும், காதியானிகள் என்றும், ஷீஆக்கள் என்றும், “தவ்ஹீத் ஜமாஅத்” என்றும், “தப்லீக் ஜமாஅத்” என்றும், “ஜமாஅதே இஸ்லாமீ” என்றும், ஸுன்னீகள் என்றும், ஸூபீகள் என்றும் பல குழுக்களும், அமைப்புக்களும் உள்ளன. ஏனைய மதத்தவர்களிடம் இவ்வாறான பிரிவுகள் இல்லை. இருந்தாலும் கூட அவர்கள் மத வழிபாடுகளில் கை வைப்பதில்லை.
இவ் அமைப்புக்களில் ஸுன்னீகள், ஸூபீகள் என்ற அமைப்புக்கள் மட்டும்தான் உலகில் வாழும் மார்க்க மேதைகளால் கருத்து வேறுபாடின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்புக்களாகும்.
அதிசயமென்னவெனில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மட்டும்தான் ஸுன்னீகளையும், ஸூபீகளையும் புறந்தள்ளிவிட்டு மற்ற அமைப்புக்களெல்லாம் நேர்வழி பெற்ற அமைப்புக்கள் என்று கூறுகிறது. இவ்வாறு உலமா சபை பகிரங்க அறிக்கை விட்டது நம் நாட்டு மக்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. குறிப்பாக படித்தவர்களுக்கும், மார்க்கத்தோடு தொடர்புள்ளவர்களுக்கும் தெரியாத ஒன்றல்ல.
இவ்வாறான சிக்கல்களும், பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் முஸ்லிம்களுக்கிடையேதான் இருந்து வருகின்றன.
ஏனைய மதத்தவர்களுக்கிடையில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் இருப்பதாக நாம் அறிவில்லை. இருப்பதாக வைத்துக் கொண்டாலும் கூட அதனால் அவர்கள் தாம் தொன்று தொட்டு செய்து வந்த சமய அனுஷ்டானங்களில் ஒன்றையும் விட்டுவிடவில்லை. விடுமாறு எந்த ஓர் அமைப்பும் அவர்களை வற்புறுத்தவுமில்லை.
முஸ்லிம்களுக்கிடையில்தான் பல அமைப்புக்கள் பல பெயர்களில் ஊடுருவி தொன்று தொட்டு முஸ்லிம்கள் செய்து வந்த – அனுஷ்டித்து வந்த மார்க்க அனுஷ்டானங்களில் அதிகமானவற்றை “ஷிர்க்” என்றும், “பித்அத்” என்றும், “குப்ர்” என்றும் கூறி நிறுத்தியுள்ளார்கள். இவர்கள் தம்மை “முஜத்திதூன்” என்று கனவு காண்கிறார்கள் போலும். இவர்கள் முதலில் “பீஷாப்”| முடித்து சரியாக துப்பரவு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.
இத்தகைய புதிய மார்க்கத்தை கொண்டு வந்தவர்கள் ஸுன்னீகளும், ஸூபீகளுமல்லாத ஏனைய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களேயாவர். இவ் அமைப்புக்களை உள்வாங்கி ஒரே பெயரில் சொல்வதாயின் வஹ்ஹாபிகள் என்றே சொல்ல வேண்டும்.
இவ் அமைப்புக்கள் யாவும் பெயர்களில் வேறுபட்டவையாக இருந்தாலும் கூட கொள்கையில் ஒன்றுபட்டவர்களேயாவர். அனைவரும் வஹ்ஹாபிஸக் கொள்கையுள்ளவர்கள்தான்.
பொதுவாக வஹ்ஹாபிஸம் நமது நாட்டுக்கு வந்த பிறகுதான் முன்னோர்கள் செய்து வந்த நற்காரியங்களில் 90 வீதமானவை நிறுத்தப்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் குறிப்பாக காத்தான்குடியில் பாங்கு சொல்லுமுன் “ஸலவாத்” சொல்லப்படாத பள்ளிவாயல் ஒன்று கூட இருக்கவில்லை. இதற்கு இவ்வூர் மக்களும், இலங்கை வாழ் அனைத்து மக்களும் சாட்சியாளர்களாவர்.
வஹ்ஹாபீகள் தலை நீட்டிய பின் பொதுவாக இலங்கையிலும், குறிப்பாக காத்தான்குடியிலும் 75 வீதத்திற்கும் அதிகமான பள்ளிவாயல்களில் பாங்கு சொல்லுமுன் “ஸலவாத்” சொல்லும் வழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதிசயமென்னவெனில் பாங்கு சொல்லுமுன் “ஸலவாத்” சொல்லி பாங்கு சொல்லப்பட்டு வந்த காலத்தில் உயிரோடிருந்த உலமாஉகளிற் பலர் மரணித்திருந்தாலும் கூட சிலர் இன்று வரை உயிரோடுதான் உள்ளார்கள். இவர்களில் “ஷரீஆ” சட்டக்கலையில் இமாம்கள் போன்ற ஒரு சிலரும் உள்ளார்கள். இவர்கள் வஹ்ஹாபிஸத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருப்பது விந்தையாகவும், வேதனையாகவும் உள்ளது.
இவர்களின் பெயர்ப் பட்டியலை எழுதி இவர்களைப் பலிக்கிடாய்களாக்க நான் விரும்பவில்லை. ஆயினும் இவர்கள் மறுமையில் கேள்விக்குட்படுத்தப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இவர்கள் அல்லாஹ்வுக்கு என்ன பதில் சொல்வார்களோ! பதில் சொல்லித்தானாக வேண்டுமேயன்றி உலமா சபைத் தலைவர் நீதிவான்களை வட்டிலப்பத்தால் சமாளிக்க நினைத்தது போல் இவர்கள் அல்லாஹ்வை வட்டிலப்பத்தால் சமாளிக்க முடியாது.
நமதூர் ஸுன்னீ உலமாஉகள் ஏன் இவ்வாறு பயந்து வாழ்கிறார்களோ?! நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் தோழர்களும் இவர்கள் போல் பயந்து நடுங்கியிருந்தால் இஸ்லாம் இந்த அளவு உலகமெல்லாம் பரவியிருக்க முடியுமா? நபீ பெருமானார் அவர்களின் காலத்தில் இவர்கள் பிறந்திருந்தாலும் இவ்வாறுதான் இருந்திருப்பார்கள் போலும். அல்லாஹ் தனது மார்க்கத்தை காப்பாற்றிவிட்டான்.
நான் எழுதும் எந்தக் கட்டுரையாயினும், சிறிய பெரிய நூல்களாயினும் உலமாஉகள் அல்லது முல்லாக்கள் என்று நான் குறிப்பிடுவது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர், மற்றும் “பத்வா” குழுவினர்களை மட்டும் குறிக்குமேயன்றி பொதுவாக எல்லா உலமாஉகளையும் குறிக்காது. ஏனெனில் அவர்கள் வாய் திறந்தால் பட்டினிதான். ஆட்சி அவர்களின் கையிலிருப்பதால் அஞ்சுகிறார்கள். அல்லாஹ் “றஸ்ஸாக்” உணவளிப்பவன் என்ற பாடத்தை மீண்டுமொரு முறை இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
பரவலாக இலங்கையிலுள்ள உலமாஉகளிற் பலர் என்னைச் சந்திக்கிறார்கள். என்னுடன் பேசிக் கொண்டுமிருக்கின்றார்கள். என்னுடன் தங்கியுமிருக்கின்றார்கள். தமது சந்தேகங்களைக் கேட்டுமிருக்கின்றார்கள். நான் என்னால் முடியுமான அளவு விளக்கங்களைக் கூறியுமுள்ளேன். சிலர் என்னிடம் “பைஅத்” ஞான தீட்சையும் செய்து கொண்டு செல்கிறார்கள்.
இவர்கள் இவ்வாறு இரகசியமாக செய்வது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதான ஆட்சியாளர்களுக்கு பயந்தேயாகும். அவர்களுக்கு தெரிந்தால் உடனே “விசா” கென்சலாகிவிடும்.
காத்தான்குடியிலும் இவ்வாறுதான் இருந்தது. மௌலவீமார்களிலோ, பொது மக்களிலோ யாராவதொருவர் என்னிடம் வந்து போனால் போதும். அவர் சம்மேளனம் அல்லது உலமா சபை செல்ல வேண்டும். அங்குள்ள நீதிவான்கள் விசாரித்து எச்சரித்து அனுப்புவார்கள். இது நடைமுறையில் இருந்து வந்த ஒன்றுதான். எனினும் கொஞ்சக் காலமாக சத்தமொன்றுமில்லை. காரணம் என்னவோ? நடவடிக்கைகள் மிகவும் இரகசியமாக நடக்கின்றன போலும்.
“பத்வா” வழங்கிய முல்லாக்களான நீதிவான்கள் தமக்கு என்மீதிருந்த ஆத்திரத்தை “பத்வா” மூலம் தீர்த்துக் கொண்டாலும் தொடர்ந்து எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் தொல்லை தருவது நீதிக்கும், மனச் சாட்சிக்கும் முரணானதாகும்.
ரிஸ்வீ அவர்களே!
வெசக் தினம் நீங்களும், இன்னும் சிலரும் பௌத மக்களின் வணக்கத்தலத்துக்குச் சென்று வெசக் விளக்கு கையிலேந்தி பக்திப் பரவசத்துடன் நின்றீர்களே! இதற்கு “பத்வா” என்ன? இது தொடர்பாக கேள்வி கேட்டு எத்தனையோ கடிதங்கள் அனுப்பி வைத்தேன். அவற்றில் ஒன்றுக்காவது நீங்கள் பதில் அனுப்பினீர்களா? இல்லை. ஏன் அனுப்பவில்லை? இது நியாயமா? பொது மக்களே! இவ்வாறு செய்த ரிஸ்வீ யார்? கடிதம் அனுப்பி கேள்வி கேட்டால் பதில் இல்லை. எனது கடிதமென்று அறிந்தால் முகவரி பிழையென்று குறிப்பிட்டு அதைத் திருப்பி அனுப்புகிறீர்கள். கடிதத்தை பாரமெடுக்கவும் உங்களால் முடியவில்லை. உங்களின் விளக்கேற்றிய செயல் சரியா? பிழையா? என்று சொல்லவும் உங்களால் முடியவில்லை. இதே வேலையை நான் செய்திருந்தால் அல்லது வேறு யாரோ செய்திருந்தால் ஒரு நாளில் “முர்தத்” என்று “பத்வா” பறந்து வந்திருக்கும். நீங்கள் செய்தால் மௌனம்! நீங்கள்தானா நீதிவான்கள்? “பத்வா” வழங்கும் முப்தீகள்? உங்களை உலமாஉகள் என்று சொன்ன நாவே முதலில் நரகம் சென்று விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
தலையில்லாத் தலைவர் அவர்களே!
நான் பேசிய விடயம் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம். நீங்கள் “பத்வா” வழங்கியது “ஹுலூல் – இத்திஹாத்” என்ற வழிகேடான கொள்கைக்கு. இவ்விரண்டுக்குமுள்ள வித்தியாசம் தெரியாமல் நான் பேசியது “ஹுலூல் – இத்திஹாத்” என்று தவறாக விளங்கி “பத்வா” வழங்கிவிட்டு அதிலும் சூட்சி செய்துள்ளீர்கள். உங்களின் அறபு பத்வாவில் எந்த ஓர் இடத்திலும் எனது பெயர் கூறப்படவில்லை. ஆனால் அதன் மொழியாக்கத்தில் எனது பெயரை கூறியிருக்கிறீர்கள். இது நியாயமா? இதை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இவ்வாறு நீங்கள் செய்தது ஏனென்று மக்களுக்குத் தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? பொது மக்களையும், என்னையும் மடையர்கள் என்று நினைத்து இப்படியொரு சதி எனக்குச் செய்துள்ளீர்கள். இது பின்னால் வரும் உதாரணம் போன்றதாகும்.
நீங்கள் அமெரிக்கா சென்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கிருந்து இலங்கையிலுள்ள உங்களின் நண்பர் ஒருவருக்கு وَصَلْتُ إِلَى أَمْرِيْكَا நான் அமெரிக்கா வந்துவிட்டேன் என்று கடிதம் எழுதினீர்கள். அவர் அந்த வசனத்தை “திருடுவதற்காக நான் அமெரிக்கா வந்தேன்” என்று மொழியாக்கம் செய்து நாடெல்லாம் பரப்பினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவ்வாறு செய்தவனை சிறையில் தள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா? இல்லையா? ஏன் இவ்வாறு பொய்யும், புரட்டும் செய்கிறீர்கள்.
உங்களுக்கும், உங்களின் கண் கெட்ட முப்தீகளுக்கும் எவ்வளவுதான் உபதேசம் செய்தாலும் உங்களுக்கும் ஏறாது, அவர்களுக்கும் ஏறாது. ஏனெனில்
خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِكُمْ وَعَلَى سَمْعِكُمْ وَعَلَى أَبْصَارِكُمْ غِشَاوَةٌ
உங்களினது கல்புகள் – உள்ளங்கள் மீதும், உங்களின் கேள்விகள் – செவிப்புலன்கள் மீதும் அல்லாஹ் “சீல்” முத்திரை குத்திவிட்டான். இன்னும் உங்களின் பார்வைகள் மீதும் திரை போட்டுவிட்டான். இந்நிலையில் உங்களுக்கும், அவர்களுக்கும் உபதேசம் எவ்வாறு பயன் தரப் போகிறது?
நீங்கள் காத்தான்குடியிலிருந்து இந்தப் பிரச்சினையை அள்ளிக் கொண்டு வந்த பொறாமைக் காரர்களுக்கும், வஹ்ஹாபீகளுக்கும் அடிமைகாளகி அவசர அவசரமாக “பத்வா” வழங்கி ஏப்பம் விட்டிருக்கிறீர்கள்.
ரிஸ்வீ ஸாஹிப் அவர்களே!
நான் உங்களுடன் விவாதிக்க நீங்கள் தகுதியற்றவர். ஏனெனில் உங்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” என்றாலே என்னவென்று தெரியாமலிருக்கும் நிலையில் நான் உங்களுடன் எவ்வாறு விவாதிக்க முடியும்? ஆகையால் விவாதத்தை விடுவோம்.
நீங்கள் “பத்வா”வில் எழுதியுள்ளபடி நீங்கள் ஏற்றுக் கொண்ட இமாம்களால் எழுதப்பட்ட கிதாபுகளிலேயே “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் எழுதப்பட்ட பக்கங்களை எடுத்து நான் தருகிறேன். நீங்களும், உங்களின் முப்தீகளும் சேர்ந்து அந்தப் பக்கங்களை பகிரங்கமாக மக்கள் மத்தியில் வாசித்து விளக்கம் சொல்லுங்கள். எல்லாம் அவனே என்று சொல்வது தவிர வேறு வழியே உங்களுக்கு இருக்காது. இதைப் பொது மக்களும் புரிந்து கொள்வார்கள்.
சுமார் 10 ஆயிரம் மக்கள் கூடுவதற்கு வசதியான ஓர் இடத்தில் மக்களைக் கூட்டுவோம். உலமாஉகளையும் ஒன்று கூட்டுவோம். நீங்கள் ஏற்றுக் கொண்ட இமாம்களால் எழுதப்பட்ட நூல்களை எடுத்து அவற்றில் சில பக்கங்களை நான் குறிப்பிடுகிறேன். அவற்றை நீங்களே வாசித்து பொது மக்கள் மத்தியில் விளக்கம் சொல்லுங்கள். “எல்லாம் அவனே” என்று நீங்களே சொல்வீர்கள். பொது மக்கள் யார் புரட்டல் காரன் என்பதையும், பொய்யன் என்பதையும், “முர்தத்” என்பதையும் புரிந்து கொள்வார்கள். உங்களுக்கு விருப்பமா? தொடர்பு கொள்ளுங்கள். இன்றேல் “பத்வா”வை வாபஸ் பெற்று நாட்டு மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ விடுங்கள்.
முற்றும்.