Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கருவில்லாக் கரு 'அல்லாஹ்' எனும் மெய்ப் பொருளேயாகும்!

கருவில்லாக் கரு ‘அல்லாஹ்’ எனும் மெய்ப் பொருளேயாகும்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

படைப்புக்களில் எதுவாயினும் அதற்கு கரு வேண்டும். அக்கருதான் “அல்லாஹ்”வின் “வுஜூத்” எனும் உள்ளமையாகும். இது “தாத்” என்றும் அழைக்கப்படும்.

படைப்புக்களில் எதுவும் கருவின்றித் தோன்றியதல்ல. கருவின்றியுள்ள ஒன்றே ஒன்று அல்லாஹ் எனும் மெய்ப் பொருள் மட்டுமேயாகும். அதுவே “வுஜூத்” என்றும், “தாத்” என்றும் அழைக்கப்படுகின்றது.


اَلْوُجُوْدُ لَا يَنْعَدِمُ وَالْعَدَمُ لَا يُوْجَدُ
உள்ளது – உள்ளமை என்பது இல்லாமற் பேகாது. “அதம்” இல்லாமை என்பது உண்டாகவுமாட்டாது. இது ஸூபீ மகான்களின் அடிப்படைத் தத்துவமாகும். ஸூபிஸ தத்துவத்தில் தெளிவு கண்ட எவரும் இதை மறுக்கமாட்டார்கள். தெளிவற்றவர்கள் தமது அறியாமையாலும், ஆய்வுத் திறமையின்மையாலும் இதை மறுப்பார்கள்.

அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை என்பது – “தாத்” என்பது எந்த வகையிலும் சிருட்டியுமல்ல. சிருட்டி போன்றதுமல்ல. அது எதுபோன்றதுமல்ல. لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ அவன் போல் எதுவுமில்லை என்ற திருவசனம் இதையே குறிக்கிறது. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ “அவன் போல் எதுவுமில்லை” என்ற வசனமும் இதையே குறிக்கிறது.

அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை என்பது அல்லது “தாத்” என்பது சிருட்டி அல்ல. அது எவனாலும் படைக்கப்பட்டதுமல்ல. அவனுக்கு அந்த “தாத்” சுயமானதேயன்றி இன்னொருவனால் அவனுக்கு வழங்கப்பட்டதுமல்ல. அதற்கு உருவமில்லை. எடையில்லை, நிறமில்லை, அழிவு இல்லை, மாறுபடுதலுமில்லை. பொதுவாகச் சொல்வதாயின் அதற்கு எந்தவொரு கட்டுப்பாடுமில்லை. அதை எவராலும் சூழ்ந்தறியவும் முடியாது. அது படைப்பின் எத்தன்மையும் இல்லாததாகும்.

இவ்வாறு சொல்வதெல்லாம் அந்த “தாத்”தின் “தன்ஸீஹ்” என்ற நிலை கருதியேயாகும். அந்த “தாத்”திற்கு இன்னுமொரு நிலையுண்டு. அது “தஷ்பீஹ்” நிலையென்று ஸூபிஸக் கலையில் சொல்லப்படும்.

இவ்விரு நிலைகள் பற்றியும் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
فَإِنْ قُلْتَ بِالتَّنْزِيْهِ كُنْتَ مُقَيِّدًا – وَإِنْ قُلْتَ بِالتَّشْبِيْهِ كُنْتَ مُحَدِّدًا
وَإِنْ قُلْتَ بِالْأَمْرَيْنِ كُنْتَ مُسَدِّدًا – وَكُنْتَ إِمَامًا فِى الْمَعَارِفِ سَيِّدًا
மேலே சொன்ன பாடலில் இப்னு அறபீ அவர்கள் அல்லாஹ்வின் இரு நிலைகள் பற்றியும் கூறி அந்நிலைகள் இரண்டையும் நம்பினவன் மட்டுமே “முஃமின்” விசுவாசி என்றும், அவ்விரண்டில் ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் நம்பினவன் விசுவாசியல்ல என்றும் திட்டமாகக் கூறியுள்ளார்கள்.

உலமா சபை வெளியிட்ட எனக்கு எதிரான “பத்வா” புத்தகத்தில் “பத்வா” வழங்கிய “முப்தீ”கள் இப்னு அறபீ அவர்களைச் சரிகண்டு எழுதியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டும். அவர்களைச் சரி கண்டவர்கள் அவர்கள் சொன்ன தத்துவத்தையும் சரி காண வேண்டும். அவர்களைச் சரி கண்டு அவர்களின் தத்துவங்களைச் சரி காணாதாவன் அவர்களைச் சரிகண்டவனாகமாட்டான். இவ் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அவர்களின் தத்துவத்தைச் சரி கண்டு தன்ஸீஹ், தஷ்பீஹ் நிலைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதேபோல் தற்கலையில் சமாதி கொண்டுள்ள ஞானமேதை பீர் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அவர்களும் “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” பற்றி சொல்லியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.

கண்டதும், கேட்டதுமல்ல – அங்கு
கருதி முடிந்த தலங்களுமல்ல
அண்டமும், பிண்டமும் அல்ல
அகார வுகார சிகாரமுமல்ல
மண்டலம் மூன்றதுமல்ல
மறைவாக நின்றாடும் வாசியுமல்ல
அன்றாதி எங்கும் நிறைந்து – என்னை
ஆளும் றஹுமானைக் கண்டு கொண்டேனே!

கண்டதும், கேட்டதும்தானே – அங்கு
கருதி முடிந்த தலங்களும்தானே
அண்டமும், பிண்டமும்தானே
அகார வுகார சிகாரமும்தானே
மண்டலம் மூன்றதும்தானே
மறைவாக நின்றாடும் வாசியும்தானே
அன்றாதி எங்கும் நிறைந்து – என்னை
ஆளும் றஹுமானைக் கண்டு கொண்டேனே!

முதற்பாடல் “தன்ஸீஹ்” நிலையையும், இரண்டாம் பாடல் “தஷ்பீஹ்” நிலையையும் காட்டுகிறது.

மேற்கண்ட ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, தற்கலை பீர் முஹம்மத் வலிய்யுல்லாஹ் றஹிமஹுமல்லாஹ் இருவரினதும் “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” தொடர்பான பாடல்கள் அல்லாஹ்வின் “தாத்”திற்குரிய இரு நிலைகளையும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.

குறித்த இவ்விரு நிலைகள் தொடர்பாக இவ்விருவர் மட்டும் கூறவில்லை. ஸூபீ மகான்களால் எழுதப்பட்ட அனைத்து நூல்களிலும் இந்த விபரங்களைக் காண முடியும். இவ்விரு நிலைகள் பற்றியும் அறியாத எவரும் ஸூபிஸ ஞானம் தெரிந்தவராக இருக்க முடியாது. ஏனெனில் ஸூபிஸ ஞானக் கலையில் இவ் இரு அம்சங்களும் மிகப் பிரதானமானவையாகும்.

இவ்விரு நிலைகள் குறித்து ஸெய்யித் அஹ்மத் மௌலானா (தோணா மௌலானா) அவர்கள் தங்களின் “மஃஷூக் மாலை” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

இருக்கு முதலெல்லாம் கொடுத்திட்டாலும்
இரவு பகலெலாம் வணங்கிட்டாலும்
வருட முழு நோன்பு நோற்றிட்டாலும்
வரிசை ஹஜ்ஜதை செய்திட்டாலும்
ஹறத்தில் கிதாபெல்லாம் ஓதிட்டாலும்
அநேக நன்மைகள் செய்திட்டாலும்
கருத்தில் இது ரெண்டை அறியாதவர்
கடைசி நரகிற்கிரையாவரே!
இப்பாடலில் இது ரெண்டை – இவ்விரண்டையும் என்பது தன்ஸீஹ் நிலையையும், தஷ்பீஹ் நிலையையும் குறிக்கும்.

“ஷரீஆ”வின் உலமாஉகளிற் பலருக்கு இவ் இரு அம்சங்களும் தெரியாது. அவர்கள் கற்றுக் கொள்ளாததற்கு அவர்களுக்கு இந்த அறிவில் நற்பாக்கியம் இல்லாமற் போனதே காரணம் எனலாம்.

ரிஸ்வீ முப்தீ அவர்களே!

நீங்களும், உங்களின் கூலியாட்களான “ஷெய்கைன்” இருவரும், உங்களின் “பத்வா” குழு உறுப்பினர்களும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை இது காலவரை விளங்காமலிருப்பது ஒரு வகையில் எனக்கு வியப்பாகவும், இன்னொரு வகையில் சிரிப்பாகவும் உள்ளது. அவசியம் விளங்க வேண்டிய விஷயத்தை விளங்காமல் இருக்கிறீர்கள்.

உங்கள் அனைவருக்கும் குறித்த ஞானத்தை பாலர் வகுப்பிலிருந்து பட்டதாரி வகுப்பு வரை கற்றுத் தர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்களும் விரும்பினால் கூறுங்கள். பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம்.

நான் இவ்வாறு கர்வத்தினாலும், பெருமையினாலும் எழுதுகின்றேன் என்று நினைத்துவிடாதீர்கள். لَسْتُ مِثْلَكُمْ , لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ எனக்கும் பெருமைக்கும் வெகுதூரம். நீங்கள் மிகத் தொலைவில் நின்று என்னைப் பார்ப்பதால் உங்களின் பார்வையில்தான் நோயுண்டு. “இனாயத்” எனும் சுறுமா கொண்டு உங்களின் கண்களுக்கு சுறுமா இட்டுக் கொள்ளுங்கள்.

உங்களின் “பத்வா”வில் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்களைச் சரி கண்டுள்ளீர்கள். ஆனால் அவர்கள் தங்களின் எல்லா நூல்களிலும் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பான விளக்கங்களை அப்பட்டமாக, தெளிவினும் தெளிவாக எழுதியுள்ளார்கள். “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” பற்றி தெளிவாகக் கூறியுள்ளார்கள். அவர்களைச் சரி காண்கிறீர்கள். அவர்களின் கருத்தை ஏற்க மறுக்கிறீர்கள். இது உங்களின் அறியாமையா? அல்லது உங்களின் “அக்ல்” புத்தியில் தடுமாற்றமுண்டா? அல்லது உங்களின் மன முரண்டா?

உங்களின் “பத்வா”வில் “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலைச் சரிகண்டுள்ளீர்கள். உங்கள் வாதத்திற்கு அதிலிருந்து ஆதாரம் கூட எடுத்துள்ளீர்கள். ஆயினும் அதன் ஆசிரியர் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை எவரும் சொல்லாத அளவு தெளிவினும் தெளிவாக எழுதியுள்ள “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுக்கின்றீர்கள். அது “குப்ர்” என்றும், “ஷிர்க்” என்றும் கூறுகின்றீர்கள். அதைப் பேசியவர்களுக்கும், அதைச் சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்குகின்றீர்கள். அவர்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் எழுத்து மூலம் கூறுகின்றீர்கள். உங்களின் நடவடிக்கை மூலம் நீங்கள் மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள், அல்லது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று நான் நினைக்கிறேன். அவ்வாறிருந்தால் தரமான வைத்தியரை அணுகி ஆலோசனை கேளுங்கள். உங்கள் மூளையில் ஏதோ குறைபாடு உண்டு என்பதைப் பொது மகக்ளும் விளங்கிக் கொள்வதற்காக பின்வரும் விடயத்தை ஆதாரமாக முன் வைக்கிறேன்.

நீங்கள் ஏற்றுக் கொண்ட, உங்களின் வாதமொன்றுக்கு ஆதாரமாக நீங்கள் எடுத்த அதே ஆசிரியர் எழுதிய, அதே நூலிலிருந்து ஆதாரம் தருகிறேன். உங்களுக்காக அல்ல. நீங்கள் யாரென்றும், எந்த மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்கள் என்றும் பொது மக்கள் விளங்கிக் கொள்வதற்காக.
قال الشّيخ محمد بن فضل الله فى كتابه ‘التحفة المرسلة ‘ فى الصحفة الثامنة والستّين ، واعلموا أنّ جميعَ الموجوداتِ من حيث الوجود عينُ الحقِّ سبحانه وتعالى، ولكنَّها من حيثُ التعيُّنِ غيرُ الحقِّ سبحانه وتعالى، والغيريَّةُ إعتباريَّةٌ، وأمّا من حيثُ الحقيقةِ فالكلُّ هو الحقُّ سبحانه وتعالى، ومِثَالُه الحَبَابُ والمَوْجُ والثَّلْجُ، فإنَّ كُلَّهُنَّ من حيثُ الحقيقةِ عينُ الماءِ، ومن حيث التعيُّنِ غيرُ الماءِ،

وكذلك السَّرابُ (وهذا معطوفٌ على الحبابُ) فإنَّهُ من حيثُ الحقيقةِ عينُ الهواءِ، ومن حيث التعيُّنِ غيرُ الهواءِ، ولأنّ السّرابَ فى الحقيقة هواءٌ ظَهَرَ بصورةِ الماءِ،
அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூல் 68ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(அறிந்து கொள்ளுங்கள். அனைத்துப் படைப்புக்களும் “வுஜூத்” உள்ளமையின் அடிப்படையில் அல்லாஹ் தானானவையேயாகும். ஆயினும் குறிப்பு என்ற அடிப்படையில் அல்லாஹ்வுக்கு வேறானவையாகும். வேறு என்று சொல்வது கூட ஒன்றை – ஒரு படைப்பை இன்னொரு படைப்போடு கவனிப்பது கொண்டேதான்.

இத் தத்துவத்திற்கு குமிழி, அலை, ஐஸ்கட்டி போன்றவற்றை உதாரணங்களாகக் கொள்ளலாம். இம் மூன்றும் இவற்றின் எதார்த்தத்தைக் கவனிப்பது கொண்டு தண்ணீர் தானானவையாகும். அதாவது இவை தண்ணீராயினும் இவற்றைத் தனித்தனியாகவும், ஒன்றை மற்றதோடு கவனிப்பது கொண்டும் இவற்றில் ஒன்று மற்றவைகளுக்கு வேறானவையுமாகும். “ஸறாப்” எனும் கானல் நீரும் மேற்கண்ட மூன்று வஸ்த்துக்கள் போன்றவையேயாகும். எனினும் கானல் நீர் என்பது எதார்த்தத்தில் ஆகாயம் தானானதாகும். குறிப்பு என்ற வகையில் மட்டும் ஆகாயத்திற்கு வேறானதாகும். எதார்த்தத்தில் கானல் நீர் என்பது தண்ணீரின் உருவத்தில் வெளியான ஆகாயமேதான்)

மேற்கண்ட அறபு வசனங்களின் சுருக்கமான மொழியாக்கம் முடிந்தது.

சுருக்கமான சாரம்:

சிறிய படைப்பு முதல் பெரிய படைப்பு வரையான அனைத்துப் படைப்புக்களும் “வுஜூத்” எனும் உள்ளமையின் அடிப்படையில் உள்ளமையைக் கவனித்து அந்த உள்ளமை தானாவையேயாகும். அதற்கு வேறானவையல்ல. அதாவது படைப்பு அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை தானானதேயாம். இதைவிடச் சுருக்கமாகச் சொல்வதாயின் “படைப்பு அல்லாஹ் தானானதே” என்றுதான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு தத்துவம் சொன்ன அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்கள் இத் தத்துவத்தை உறுதி செய்யும் வகையில் நான்கு உதாரணங்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் மூன்று உதாரணங்கள் தொடராகவும், ஒன்று வேறாகவும் கூறியுள்ளார்கள்.

தொடரான மூன்று உதாரணங்களாவன நீரும் குமிழியும், நீரும் அலையும், நீரும் ஐஸ்கட்டியுமாகும்.

குமிழி என்பது நீரேயன்றி அதற்கு வேறான ஒன்றல்ல. இதேபோல் அலை என்பதும் நீரேயன்றி அதற்கு வேறானதல்ல. இன்னுமிதேபோல் ஐஸ்கட்டி என்பதும் நீரேயன்றி அதற்கு வேறான ஒன்றல்ல.

இன்னுமொரு பாணியில் சொல்வதாயின் குமிழி நீரின் வெளிப்பாடு என்றும், அலை நீரின் வெளிப்பாடு என்றும், ஐஸ் கட்டி நீரின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.

இன்னுமிதை விட உறுதியாகச் சொல்ல வேண்டுமாயின் குமிழி நீரேதான், அலை நீரேதான், ஐஸ் கட்டி நீரோதன் என்றும் சொல்லலாம்.

இவ் உதாரணங்கள் போல் படைப்பு என்பது அல்லாஹ்வின் உள்ளமையேயன்றி அதற்கு வேறானதல்ல என்றும் படைப்பு என்பது அல்லாஹ்வின் உள்ளமையின் வெளிப்பாடு என்றும், படைப்பு அல்லாஹ்வின் உள்ளமைதான் (அல்லாஹ்தான்) என்றும் சொல்லலாம்.

இம்மூன்று வகையில் எந்த வகையில் சொல்வதும் சரிதான். ஆயினும் மூன்றாம் வகையில் சொல்வது எதார்த்தத்தில் சர்ச்சைக்கு இடமில்லாததாயிருந்தாலும் அது சிலரால் சர்ச்சைக்குரியதாயிற்று. இல்லை சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்டுவிட்டது.

இங்கு சர்சசையுமில்லை, சந்தேகமுமில்லை. பொதுவாக எதார்த்தம் என்பது தெளிவாகுமுன் அது சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். ஐஸ்கட்டி நீரேதான் என்று சொல்வது போல் படைப்பு அல்லாஹ்தான் என்று சொல்வதில் என்ன தவறு? ஏன் அவ்வாறு சொல்லக் கூடாதென்று கேட்டால் அல்லாஹ்வையும், படைப்பையும் எவ்வாறு ஒன்றாக்க முடியும்? என்று பதில் சொல்ல வேண்டியவர்கள் எம்மிடம் கேட்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் அத்திவாரம் புரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

அல்லாஹ்வின் உள்ளமைதான் படைப்பு என்பது ஒன்றாக்கலைக் குறிக்காது. ஒன்றாக்கலுக்கு குறைந்தது இரு பொருட்களாவது அவசியம். ஒரேயொரு பொருளை வைத்துக் கொண்டு ஒன்றாக்கல் செய்ய முடியாது. ஒன்றாக்கலுக்கு ஸூபிஸ ஞானத்தில் இடமே இல்லை.

நீர் குமிழியாதல், நீர் அலையாதல், நீர் ஐஸ்கட்டியாதல் என்ற உதாரணங்களில் பெயரளவில்தான் இரு பெயர்கள் சொல்லப்படுகின்றனவேயன்றி இருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அது நீர் மட்டுமேயாகும். ஒரேயொரு பொருள் மட்டும் கலப்பதென்பது எவ்வாறு சாத்தியமாகும்?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments