தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இந் நாட்டிலும், வெளி நாட்டிலுமுள்ள பல மில்லியன் ஸூபீ முஸ்லிம்களை “முர்தத்” என்று மதம் மாற்றி அவர்களைக் கொன்றொழிக்க வேண்டுமென்று “பத்வா” வழங்கிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு எதிராக மறுமையில் அல்லாஹ்வின் நீதி மன்றில் நான் ஒரு வழக்கு தாக்கல் செய்வேன். இது சத்தியம்!
“தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானம் பேசிய எனக்கும், அதே ஞானத்தை ஏற்றுக் கொண்டு “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வழியிலும், “தரீகா” அடிப்படையிலும், அபுல் ஹஸன் அல்அஷ்அரீ அவர்களின் கொள்கை வழியிலும் வாழ்கின்ற பல மில்லியன் மக்களை மதம் மாற்றிவிட்டு “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று அவர்களுக்கு பட்டமும் வழங்கி “பத்வா” கொடுத்துவிட்டு அவர்களில் இலங்கையில் வாழும் மக்களுக்கு அட்டூழியமும், அநீதியும் செய்து கொண்டிருக்கின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவற்ற, கண் கெட்ட நடிவடிக்கைக்கு யாரிடம் நீதி கேட்பது? இந்த நயவஞ்சகர்களின் அநீதிக்கு யாரிடம் நியாயம் கேட்பது?
கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும், கௌரவ பிரதமர் அவர்களுக்கும் உலமா சபையின் அட்டூழியங்கள் தொடர்பாக இதுவரை தகவல் கிடைக்காமல் இருக்கலாம். ஆனாலும் அவர்களும் இதை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காகவே நான் இதை பகிரங்கமாக எழுதுகிறேன்.
இலங்கை அரசு எங்களுக்குரிய உரிமைகளில் எதையும் பறிக்கவுமில்லை, தடை செய்யவுமில்லை. எல்லா வழிகளையும் திறந்தே தந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
ஆயினும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினாலும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, காத்தான்குடி சம்மேளனத்தினாலும் எங்களின் அனைத்து உரிமைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நாட்டையே ஆள்வதற்கு இப்போதே தயாராகிறார் போல் தெரிகிறது உலகாசையற்ற மதிப்புக்குரிய ரிஸ்வீ முப்தீ நாதா அவர்கள்.
ஸூபீ முஸ்லிம்கள் இலங்கையிலுள்ள பள்ளிவாயல்களில் தொழுவதற்கு உலமா சபை தடை விதித்துள்ளது. முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்வதற்கும் தடை விதித்துள்ளது.
காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்களில் எங்களின் நிர்வாகத்தில் இயங்கி வருகின்ற பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல், மன்பஉல் கைறாத் ஜும்ஆப் பள்ளிவாயல், மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யா மூன்றையும் தவிர வேறு எந்த ஒரு பள்ளிவாயலுக்கும் போக முடியாமல் உலமா சபையின் “பத்வா” மூலம் நாங்கள் தடைசெய்யப்பட்டுள்ளோம். நாங்கள் இத்தடையை மீறி உள்ளே சென்றால் உலமா சபையின் தீர்ப்பின் படி நாங்கள் கொலை செய்யப்படுவோம். உலமா சபையின் “பத்வா” இவ்வாறுதான் கூறுகிறது.
ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கே இல்லாத அதிகாரம் இந்தக் குருடர்களின் உலமா சபைக்கு யார் வழங்கியது? கேவலம். ஒரு ஜனாதிபதிக்கே இல்லாத அதிகாரம் வஹ்ஹாபிகளை அங்கத்தவர்களாகக் கொண்ட ஒரு சபைக்கு இருக்கிறதென்றால் இது கௌரவ ஜனாதிபதிக்கே அவமானமாகும். இதை கௌரவ ஜனாதிபதி அவர்களும், கௌரவ பிரதமர் அவர்களும், அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். இத்தடைகளை நீக்கி ஸூபிஸ சமுகம் ஜனநாயக நாட்டில் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வழி செய்ய வேண்டும்.
அருள் பொங்கும் இந்நாட்டவர்கள் அனைவரும் இந் நாட்டின் பிரஜைகள். இந் நாடு ஈன்றெடுத்த மக்கள். இந் நாட்டின் தலைவர் இந் நாட்டு மக்களின் தந்தை போன்றவர். சுமார் 42 ஆண்டுகளாக நாங்கள் – ஸூபிஸ சமுகம் அடிமைகள் போல் நசுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் வாழ்ந்து வருகிறோம். இந்தச் செய்தி முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் அறிந்த பழைய கதைதான். ஆயினுமவர்களில் எவரும் “பத்வா” எனும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காமல் இருந்ததும், இன்றுவரை இருந்து வருவதும் இவர்களின் இலட்சியம் எது என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது. முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்களையும், முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் டொக்டர் பரீத் மீராலெப்பை அவர்களையும் தவிர முஸ்லிம் அரசியல் வாதிகளில் வேறெவரும் எங்களைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ஏன் தெரியுமா? இதில் அவர்களுக்கு வாசியில்லை. இதுவே காரணம்.
ரிஸ்வீ முப்தீ அவர்களே!
ஒரு முஸ்லிமை மதம் மாற்றி வைத்தல் பெரும் பாவங்களில் ஒன்றாயிருப்பது மட்டுமன்றி மதம் மாற்றி வைத்தவர்களையே அச் செயல் காபிராக ஆக்கிவிடவும் கூடும். இதற்கும் சந்தர்ப்பம் உண்டு.
ரிஸ்வி ஸாஹிப் அவர்களே!
உங்களின் “பத்வா” “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்று எழுதப்பட்டதா? அல்லது “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று எழுதப்பட்டதா? “பத்வா” எழுதப்பட்டு அதை வாசித்தபின் வெளியிட்டீர்களா? வாசிக்குமுன் வெளியிட்டீர்களா? அந்த “பத்வா” எழுதியவர் யார்? நன்றாகப் படித்த ஒருவர் அந்த “பத்வா”வை வாசித்தாராயின் எழுதியவர் முகத்திலேயே தூக்கியெறிவார். அவர் என்ன எழுதியுள்ளார்? ஒன்றுமே புரியவில்லையே! போதையில் எழுதினாரா? பொறாமையில் எழுதினாரா?
உங்கள் “பத்வா”வில் கூறப்பட்ட விளக்கத்தையும், ஆதாரங்களையும் கவனித்தால் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்பதற்கான ஆதாரங்களும், விளக்கங்களுமே அதில் உள்ளன. “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதற்கு ஓர் ஆதாரம் கூட அதில் கிடையாது. “பத்வா” எழுதிய அரைவேக்காடு மீண்டும் “மீசான்” எனும் கிதாபிலிருந்து இறுதி வரை படிக்க வேண்டும். குறிப்பாக “தவ்ஹீத்” படிக்க வேண்டும். ஸூபிஸமும் படிக்க வேண்டும். எனது “பஸீறத்” بَصِيْرَة கொண்டு அதைப் பார்த்த வகையில் அல்லாஹ்வின் அருளை விட்டும் மிகத் தூரப்பட்ட ஒருவரே எழுதியுள்ளார் என்பது எனக்கு தெளிவாகிவிட்டது.
உங்களுக்கும், “பத்வா” எழுதிய பச்சோந்திகளுக்கும் இன்னும் “வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்னவென்று விளங்கவில்லை. உங்கள் “பத்வா” مَزْبَلَةٌ குப்பை மேட்டில் எறியப்படவேண்டியதேயாகும்.
குறித்த “பத்வா”வில் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று எழுதியுள்ளீர்கள். இது எழுத வேண்டியதேயாகும். நானும் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்றே சொல்லி வருகின்றேன். நீங்கள் அதுவே (ஹுலூல் – இத்திஹாத்) பிழையென்று எழுதியிருந்தால் “பத்வா”வில் என் பெயரை ஏன் குறிப்பிட்டீர்கள்? நான் பேசியது “ஹுலூல் இத்திஹாத்” என்று நீங்களாக கற்பனை செய்து கொண்டீர்களா?
நீங்கள் எழுதிய அறபு “பத்வா”வில் என் பெயர் கூறப்படாதிருக்கும் நிலையில் அதன் தமிழாக்கத்தில் என் பெயர் வந்ததெவ்வாறு? காத்தான்குடி முல்லாக்கள்தான் என் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் உண்மையைக் கூறுங்கள். அவர்களுக்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
“பத்வா” எழுதிய அந்தகன் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தில் ஓர் எழுத்தைக் கூடப் புரிந்து கொள்ளாத ஓர் “அஹ்மக்” أحمق ஆகவே இருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவரை எங்களிடம் தாருங்கள். அவரிடம் இமாம்களாலும், இறைஞான மகான்களாலும் எழுதப்பட்ட நூல்களைக் கொடுத்து விளக்கம் கேட்போம். அவர் இரும்பனாயினும் மண்ணுக்கு இரையாகவே வேண்டும்.
நான் “பத்வா” கொடுக்கவுமில்லை. “பத்வா” வழங்கத் தீர்மானித்த கூட்டத்தில் இருக்கவுமில்லை என்று நீங்கள் சொல்வதாக நான் அறிந்தேன். அது உண்மையாகவுமிருக்கலாம். பொய்யாகவுமிருக்கலாம். எவ்வாறிருந்தாலும் “பத்வா”வை இன்று அமுல் செய்து கொண்டிருப்பது நீங்கள்தான். நீங்கள் காத்தான்குடி வந்த போது உலமா சபை வழங்கிய “பத்வா”வை வாபஸ் பெற்றதற்கு வரலாறே கிடையாது என்று சொன்னதும் நீங்கள்தான்.
நீங்கள் என்ன சொல்கிறீர்களென்று உங்களுக்கே புரியாமல் சொல்கிறீர்கள். ஜனாசாக்கள் எரிக்கப்பட்ட நேரம் சாம்பலையாவது தாருங்கள் என்று கேட்டீர்கள். இப்போது ஜனாசாவை எரிப்பது “ஹறாம்” என்று சொல்கிறீர்கள். சாம்பலைக் கேட்ட நேரம் எரிக்காமல் சாம்பல் எடுக்கமுடியாதென்ற அறிவு கூட உங்களுக்கு இருக்கவில்லையா? இது உங்களின் தடுமாற்றம். விசாரணை நடத்திய நீதிவான்களுக்கு அன்பளிப்புச் செய்யக் கூடாதென்பதும், அவர்கள் அதை ஏற்கமாட்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாமற் போயிற்றே. இதுவும் ஒரு தடுமாற்றம்தான். இனி எல்லாமே தடுமாற்றம்தான்.
நாளுக்கு நாள் தடுமாற்றம் அதிகமாவதால் தரமான ஒரு வைத்தியரை இப்போதே சந்தித்துக் கொள்ளுங்கள். நோய் முத்தினால் நீங்கள் مُكَلَّفْ ஏவல், விலக்கலுக்கு அப்பாற்பட்டவராகிவிடுவீர்கள்.
முப்தீ ஹஸ்றத் அவர்களே!
உங்களுக்குத் தொடர்ந்து பல அவமானங்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று வட்டிலப்பம், மற்றது சாம்பல். இன்னொன்று வெசக் விளக்கேந்தியது. இவற்றோடு அவமானம் முடிந்து போகவில்லை. இன்னும் பல அவமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உங்களின் நிழல் உங்களைத் தொடர்வது போல் தொடருமென்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இதற்கெல்லாம் பிரதான காரணம் அல்லாஹ்வும், றசூல்மாரும், வலீமாரும், பொதுவாக 124,000 நபீமார்களும் சொன்ன “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை “குப்ர்” என்றும், “ஷிர்க்” என்றும் நீங்கள் “பத்வா” வழங்கியதேயாகும்.
நீங்கள் “பத்வா” வழங்கி எங்களை மதம் மாற்றிவிட்டு நாங்கள் மதம் மாறிவிட்டோம் என்று சொல்லித்திரிவது உங்களின் பொய்களில் ஒன்றென்று நாட்டு மக்களே பேசிக் கொள்கிறார்கள். இதன் பிறகாவது நீங்கள் உண்மை பேசுங்கள்.
ரிஸ்வீ முப்தீ அவர்களே!
உங்களின் பெற்றோர் உங்களை “ஹலால்” ஆன முறையில் வளர்த்து, மார்க்கத்தைப் போதிக்கும் ஒரு அறிஞனை உருவாக்கி அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டுமென்ற நன்னோக்கில் உங்களை மௌலவீயாக ஆக்கியிருக்கும் நிலையில் உங்களை யாரோ ஒரு கொடியவன் “முர்தத்” என்று சொன்னால் உங்களுக்கும், உங்கள் பெற்றோருக்கும் அவன் மீது எவ்வளவு கோபம் வருமென்றும், ஆத்திரம் வருமென்றும் ஒரு கனம் சிந்தனை செய்து பாருங்கள். அவனை நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களின் பெற்றோர் என்ன செய்வார்கள்? துண்டு துண்டாக அவனை வெட்டி அரிந்து சந்தியில் போடுவார்களா? இல்லையா?
இவ்வாறுதான் உங்கள் கண் கெட்ட “பத்வா” மூலம் நீங்கள் மதம் மாற்றிய ஒவ்வொரு முஸ்லிமின் நிலையும், அவர்களின் பெற்றோர், உறவினர்களின் நிலையும் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். உங்களின் அட்டூழியத்தையும், அட்டகாசத்தையும் நாங்கள் பொறுத்துக் கொண்டிருப்பது நாங்கள் ஸூபிஸ வழி நடப்பவர்கள் என்ற ஒரேயொரு காரணத்திற்காகவேயாகும்.
ரிஸ்வீ முப்தீ அவர்களே!
நீங்களும், உங்களின் “பத்வா” குழுவும் எங்களை மதம் மாற்றிவிட்டு நீங்கள் செய்து வருகின்ற அநீதிக்கும், அட்டூழியத்திற்கும் நாங்கள் பதிலடி தருவதாயின் எப்போதே தந்திருப்போம். பொறுமை செய்கிறோம். ஸூபீகள் அநீதி செய்யமாட்டார்கள்.
எனவே, நீங்கள் இம்மாத முடிவிற்குள் “பத்வா”வை வாபஸ் பெற்று நல்லிணக்கத்திற்கு வரவேண்டும். இன்றேல் அதையடுத்து வருகின்ற எமது நடவடிக்கைகள் சட்ட ரீதியாகவும், சாத்வீக ரீதியாகவுமே இருக்கும்.
முதலில் அகில இலங்கை மட்டத்தில் மா பெரும் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தி அரசிடம் நியாயம் கேட்போம். வெற்றி பெறுவோம். அரசு உங்களுக்கான நடவடிக்கை எடுக்கும்.
எங்களின் இறுதித் துரும்பு உங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து நீதி மன்றில் நியாயம் கேட்பதேயாகும். நாங்கள் எது செய்தாலும், என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது சாத்வீக, ஆத்மீக வழியிலேயே அமையும்.
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ
நிச்சயமாக உங்கள் இறைவனின் பிடி மிகக் கடுமையானதாகும்.
நாங்கள் – ஸூபிஸ சமுகம் இந்நாட்டின் பரம்பரை முஸ்லிம் பிரஜைகளே!
முற்றும்.