“பத்வா” வழங்கிய முல்லாக்கள் தவறு செய்துவிட்டு இப்போது அதை மூடி மறைக்க, அல்லது அது சரியென்று நிறுவ நாயோட்டம் ஓடுகிறார்கள். இவர்கள் “பத்வா” வழங்கிய வேளை இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் என்னவென்று அறிந்திருக்கவில்லை. ஆயினும் ஹுலூல் – இத்திஹாத் பற்றி அறிந்துதான் இருந்தார்கள். இதனால் நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் “ஹுலூல் – இத்திஹாத்” என்று விளங்கி “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்றும், “குப்ர்” என்றும் “பத்வா” வழங்கிவிட்டார்கள். ஆனால் இப்போது அது வேறு, இது வேறு என்பது அவர்களுக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது போல் தமது கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் இருந்ததால் முயல்களுக்கெல்லாம் மூன்று கால்கள்தான் என்று வாதிடுகிறார்கள்.
இவர்கள் வழங்கிய அறபு “பத்வா” 32 பக்கங்களில் எந்த ஓர் இடத்திலும் “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல் கூறப்படவே இல்லை. ஆனால் பல இடங்களில் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற சொல் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் வஹ்ததுல் வுஜூத் ஞானத்தை “ஹுலூல் – இத்திஹாத்” என்று தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்று தெளிவாக விளங்குகின்றது.
ஒருவர் வஹ்ஹாபிஸத்தை எதிர்த்து ஒரு “பத்வா” வழங்கினால் அல்லது ஓரு புத்தகம் எழுதினால் அதில் பல இடங்களில் வஹ்ஹாபிஸம் என்ற சொல்லை எழுதுவது வழக்கம். இவர்கள் “ஹுலூல் – இத்திஹாத்” என்று “பத்வா” வழங்கியதினால்தான் அச்சொல்லை மட்டும் பல இடங்களில் எழுதியுள்ளார்களேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல்லை ஓர் இடத்தில் கூட எழுதவில்லை. பொது மக்களாகிய நீங்களும், நான் கூறும் ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல் உலமாஉகளின் “பத்வா”வை நம்பியிருக்கும் உலமாஉகளும் அவர்களின் அறபு “பத்வா”வை எடுத்துப் பாருங்கள். உண்மை வெளியாகும்.
அன்புப் பொது மக்களே! விஷயம் விளங்காத, அவர்களின் “பத்வா”வை நம்பியுள்ள உலமாஉகளே! நீங்கள் அனைவரும் உலமா சபையின் பிழையான “பத்வா”வை சரியானதென்று நம்பி என்னையும், நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தையும் ஏசுகிறீர்கள். அவர்களின் “பத்வா”வில் கூறப்பட்டிருப்பது போல் என்னைக் கொலை செய்யவும் உங்களில் சிலர் நினைக்கிறார்கள். அல்லாஹ் உங்களைக் காப்பாற்ற வேண்டும். நான் கூறும் வஹ்ததுல் வுஜூத் சத்தியக் கொள்கையாகும். அல்லாஹ் அருள் மறையில் சொன்னதாகும். அண்ணலெம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறியதாகும். உலகில் தோன்றிய அவ்லியாஉகள் அனைவரும், மற்றும் தரீகாக்களின் தாபகர்களான குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, ஸுல்தானுல் ஆரிபீன் அஹ்மத் கபீர் அர் றிபாஈ, கரீப் நவாஸ் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ, அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, அஷ்ஷெய்கு அப்துல் கரீம் ஜீலீ, அஷ்ஷெய்கு ஹாரிதுல் முஹாஸபீ, அஷ்ஷெய்கு இஸ்மாயீல் ஹக்கீ, அஷ்ஷெய்கு அபுல் ஹஸன் அஷ்ஷாதுலீ, அவர்களின் கலீபா அபுல் அப்பாஸ் அல்முர்ஸீ, அவர்களின் கலீபா அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ, அஷ்ஷெய்கு ஷுஐப் அபூ மத்யன் அல்மக்ரிபீ மற்றும் ஆரிபீன்கள் (றழியல்லாஹு அன்ஹும்) கூறியதுமாகும்.
இவர்கள் எந்த நூலில், எவ்வாறு சொல்லியுள்ளார்கள் என்று விபரமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நான் “வஹ்ததுல் வுஜூத்” சரியான கொள்கையென்று இரண்டாயிரம் பக்கத்தில் “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற பெயரில் ஒரு நூலும் எழுதி தற்போது அதை சரி பிழை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் இன்னும் சில மாதங்களில் அச்சிட்டு இலவசமாக வினியோகிப்பேன். அது வெளி வந்தால் உலமாஉகள் உள்ளிட்ட இதய சுத்தியுள்ள அறிஞர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். சிலரின் திரை மறைவில் நின்று அசத்தியத்தை சத்தியமாக்க முயற்சிக்கும் முப்தீகள் அப்போது பொது மக்களால் கரி பூசப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ரிஸ்வீ முப்தீ அவர்களே! பத்வா குழுவினரே! இவர்களின் தவறை மறைக்க துணை போகின்றவர்களே! வட்டிலப்ப பார்சலை சுமந்து சென்று இலஞ்சத்துக்கு துணை போனவர்களே!
உங்களின் கல்புகளில் அல்லாஹ்வின் அச்சமில்லையா? நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஆதவனை உள்ளங்கையால் மறைக்க முயற்சிக்கும் அறிவிலிகளே! நீங்கள் அனைவரும் பெரும் அநீதியாளர்களே ஆவீர்கள்.
அல்லாஹ்வும், அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தின் மூலவர்களாயிருக்கும் நிலையிலும், மேற்கண்ட இமாம்கள், வலீமார், இறைஞானிகள் அதன் விரிவுரையாளர்களாயும் இருக்கும் நிலையில் ஏன் இவ்வாறு பொய் சொல்கிறீர்கள்? உருட்டுப் புரட்டுச் செய்கிறீர்கள்? நீங்கள் எதில் விளையாடினாலும் எமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் சத்திய இஸ்லாம் கூறும் தத்துவத்தைப் பொய்யாக்குகிறீர்களே இதை எம்மால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
நான் உங்களைப் பல தரம் அழைத்தேன். இப்போதும் அழைக்கிறேன். மேற்கண்ட மகான்கள் எழுதிய கிதாபுகளில் “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக் கூறப்பட்டிருப்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன். நான் உங்களைப் பயம் காட்டுவதற்காகக் கூறவில்லை. நீங்கள் வாருங்கள். என்னிடமுள்ள நூல்களை உங்களிடமே தந்து நீங்களே பொது மக்களுக்கு விளங்கப்படுத்துமாறு சொல்வேன். அதோடு நானும் சில கேள்விகள் கேட்பேன். அதற்கும் நீங்கள் பதில் கூற வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன். மீண்டும் அழைக்கிறேன். நான் இந்த ஞானத்தில் அல்லாஹ்வின் அருளால் மிகத் தெளிவாக இருக்கிறேன். உங்களுக்கும் கற்றத் தந்து நான் மனம் நிறைவு பெற கொள்ளை ஆசையுடன் உள்ளேன்.
நீங்கள் பிழையை மறைக்க இராப் பகலாக ஓடித்திரிய வேண்டாம். அலையவும் வேண்டாம். பணம் செலவிடவும் வேண்டாம். உங்களில் விளக்கம் குறைந்தவர்களும், மனத்தூய்மையற்றவர்களும் வராமல் திறமையுள்ளவர்களும், மனத் தூய்மையுள்ளவர்களும் வாருங்கள்.
ஒரு மாத காலத்திற்கு முன் என்னிடம் சந்திப்புக்கான நேர காலத்தைப் பெற்றுக் கொண்டு வாருங்கள். திருக்குர்ஆன் கூறும் பகிரங்க சத்தியமொன்றை நீங்கள் பொய்யாக்குவதை என்னால் பொறுக்க முடியாதுள்ளது. நீங்கள் என்னிடம் வந்து இந்த அறிவைக் கற்றுக் கொள்வது இந்த உலகமும், இதிலுள்ளவையும் எனக்குச் சொந்தமாவதை விட அதிகம் சிறந்ததாக நான் கருதுகிறேன்.
உங்களின் சில சூட்சிகளையும், சதிகளையும் எழுதி முடிக்கிறேன்.
நீங்கள் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை “குப்ர்” என்று “பத்வா” கொடுத்துவிட்டு “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனக்கு அதைச் சுமத்தியது ஒன்று.
உங்களின் அறபு பத்வாவில் எனது பெயர் எந்த ஓர் இடத்திலும் கூறப்படாதிருக்கும் நிலையில் தமிழ்ப் பகுதியில் மட்டும் என் பெயரை எழுதியது மற்றொன்று.