Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள முல்லாக்கள் பூசிக் கொண்ட சாயம் ஸூபிஸம்!அது முகத்தைச் சுட்டெரிக்கும் என்பதை காலம்தான்...

இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள முல்லாக்கள் பூசிக் கொண்ட சாயம் ஸூபிஸம்!
அது முகத்தைச் சுட்டெரிக்கும் என்பதை காலம்தான் உணர்த்தும்!

தொடர் 02

தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ

“எல்லாம் அவனே” எனும் வழிகெட்டச் சிந்தனைக்கும் தூய சூபிஸ சிந்தனைகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். வரலாறு நெடுகிலும் இலங்கை வாழ் முஸ்லிம்களை வழிநடாத்தி வருகின்ற பல தரீக்காக்கள் எமது நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முன்னணித் தரீக்காக்கள் உட்பட அனைத்துத் தரீக்காக்களின் ஷைகுமார்களும், கலீஃபாக்களும் இச்சிந்தனை இஸ்லாத்துக்கு முற்றிலும் முரண்பட்டது என்பதைக் கூறியும்; இச்சிந்தனையை வன்மையாகக் கண்டித்தும் வருவது குறிப்பிடத்தக்கதாகும். – அர்கம் நுராமித், பொதுச் செயலாளர் ACJU –

அன்பின் தரீகாவாதிகளே! ஸூபீகளே!

கடந்த முதலாம் தொடரில் நமது இலங்கைத் தாய்த்திரு நாட்டில் பிரசித்தி பெற்ற அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை இந்நாட்டில் பகிரங்கமாக எழுதியிருக்கின்றார்கள் என்பதை அவர்களின் “அஸ்றாறுல் ஆலம்” என்ற நூலிலிருந்து தந்தோம். இவர்களை இந்நாட்டில் அக்காலத்தில் வாழ்ந்த உலமா சபையோ, அல்லது எந்தவொரு ஷெய்கோ, கலீபாவோ “முர்தத்” என்றோ, “காபிர்” என்றோ கூறியதற்கு வரலாறில்லை. அவர்கள் மறைந்தபிறகேனும் அவர்கள் வழிகேட்டில் இருந்தார்கள் என்றோ யாரும் சொன்னதில்லை. ஏன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கூட சொன்னதில்லை. இன்றும் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்று தம்மைத் தாமே மார்தட்டும் உலமா சபை அவர்களின் இக்கருத்துக்கு எந்தவித மறுப்பும் தெரிவித்ததில்லை. தெரிவிக்கவும் முடியாது.

அதேபோல் இலங்கைத் திரு நாட்டில் காத்தான்குடியில் பிறந்து அட்டாளைச்சேனையில் சமாதி கொண்டுள்ள மகான் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கூட “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தைப் போதித்துள்ளார்கள். கவிஞரான அவர்கள் தங்களின் “மஹ்பூபு மனோன்மணிக் கீதத்தில்” பல இடங்களில் “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். அவற்றிற் சில இடங்களை மட்டும் இங்கு கோடிட்டுக் காட்டுகிறேன்.

ஆலத்தில் நிறைந்திடும் அஹதெனும் பொருளதை
அனுதினம் அகந்தனில் நினைந்திடுவீர்
கோலத்தில் அது நின்று குறிப்பாயிலங்கிடும்
“ஹூ” என்பதையன்றி வேறில்லையே
——————-
மண்ணது விண்ணாய் மறைகள் அனைத்துமாகி
அண்ணல் அஹ்மதுமானாய் ஆதியே நீயும்
அமாவெனும் மர்தபாவில் அறியாதிருப்பதுடன்
ஆலத்தில் கோலமுமானாய் அஹதே நீயும்
நானென்றும் வேறென்றும் நாடியிருப்பவர்க்கு
தூராதி தூரமுமானாய் தூயோனே நீயும்.
——————
அஹதிய்யதெனும் கடலே ஆதியுமாச்சு
அதிலெழுந்த அலைகளது ஆலமுமாச்சு
ஆலமுமாச்சு அதுவே கோலமுமாச்சு
——————-
இல்லல்லாஹுவென்று சொல்லி,
இணையதைத் தள்ளு
ஏகபரா பரம் பொருளை
எங்குமே கொள்ளு
எங்குமே கொள்ளு
அதில் தங்கியே நில்லு.
——————-
ஐனமா துவல்லூ என்று ஆதி சொன்னதே
அது அனைத்துமே அவனே என்ற
அற்புதமதே அற்புதமதே
நீயுமுணர்ந்திடுமிதே.
——————-

ஆதி இறையோனே ஜோதி பெரியோனே
காட்சியளித்திட கல்பிலுதிப் போனே

நானே இழந்தால் நீயது ஏதோ
நீயே இழந்தால் நானது ஏதோ

——————–

கன்சுல் மக்பியில் தன்சீஹுமானோனே
கண்ட பொருளதில் நின்று நிறைந்தோனே

ஷம்சுல் ஹுவிய்யத்தாக இருந்தோனே
தாரணிதனிலே தான் பர்தாவுமானோனே

நான் என்றிருந்தேனே நாளும் கழிந்தேனே
தானாயிருந்த தன்மை அறியேனே

லாஅன இல்லாஹு வென்றிராமலே
வேறது என்ற விலங்கிலிருந்தேனே
——————-
பாங்குடன் நகைகள் பலவிதமானதால்
தங்கமேயன்றி வேறாமோ
தன்ஸீஹும், தஷ்பீஹும் தானேயறிந்தால்
தங்கமும் நகையும் போலாமே!
——————-
பஞ்சென்றும் நூலென்றும் பல உடைகளென்றும்
நீ பார்த்திருக்கிறாய் அஞ்சாமல் ஆழ்ந்ததில் பஞ்சையன்றி அமைந்திருக்கா
உன்னிலே உதித்தெழுந்த ஸிபத்தினைப் பாரு உறங்கினால் ஒழிந்த இடம்
உண்மையில் தேடு விழித்த போது எங்கிருந்து மீளுது கூறு விபரமறிந்தால்
மவுத்தை அறியலாம் நேரு
——————-

மகான் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் அடக்கவிடம் இன்றும் அட்டாளைச்சேனை நகரில் தரிசிக்கப்பட்டும், பரிபாலிக்கப்பட்மே வருகிறது. “எல்லாம் அவனே” என்பது “குப்ர்” என்றும், “ஷிர்க்” என்றும் அறிக்கைவிடும் மகான்கள் இவர்களின் அடக்கவிடத்திற்கும் முடிந்தால் ஒரு முடிவு கட்டலாமே!

இலங்கையில் எந்தவொரு ஷெய்கும், கலீபாவும் “எல்லாம் அவனே” என்று போதிக்கவில்லை என்று பட்டப்பகலில் பச்சையாகப் பொய்யுரைக்கும் செயலாளரே வாய் திறப்பீரா? நீர் வாய் திறக்காவிட்டாலும் உமக்கெதிராக அறிவுள்ள மக்கள் வாய் திறப்பார்கள் என்பதற்காகவே இந்தப் பதிவு.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments