தொடர்: 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஸூபீ மகான்களில் ஒருவர்தான் உலகப் பிரசித்தி பெற்ற ஸூபீ “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” அபூ ஹாமித் முஹம்மத் அல் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்.
இந்த மகானை உலகில் வாழ்கின்ற மார்க்க மேதைகளிலும், பொது சனங்களிலும் வஹ்ஹாபிகள் தவிர வேறெவரும் எதிர்த்ததாகவோ, மறுத்ததாகவோ எந்த ஒரு தகவலுமில்லை.
மகான் அவர்கள் தங்களின் அறிவுக் களஞ்சியமான “இஹ்யா உலூமித்தீன்” எனும் நுலில் பல பக்கங்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை அப்பட்டமாகவும், தெள்ளத் தெளிவாகவும் கூறியிருக்கின்றார்கள். அவர்களின் கருத்தை தமிழில் மட்டும் கூறினால் எதிர்ப்பவர்கள் நம்பமாட்டார்கள் என்பதற்காக அவர்களின் நூலில் இடம் பெற்றுள்ள அறபு வசனங்களையும் எந்த மாற்றமுமின்றி எழுதுகிறேன்.
01.
وَلَيْسَ فِى الْوُجُوْدِ سِوَى اللهِ تَعَالَى وَأَفْعَالِهِ
இருப்பவற்றில் அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும் தவிர வேறொன்றுமே இல்லை.
(இஹ்யா உலூமித்தீன் முதலாம் பாடம், فضيلة الأوراد وترتيبها وأحكامها)
02.
إِذْ لَيْسَ فِى الْوُجُوْدِ تَحْقِيْقًا إِلَّا اللهُ وَأَفْعَالُهُ
இருப்பவற்றில் திட்டமாக அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும் தவிர வேறொன்றுமே இல்லை.
(இஹ்யா உலூமித்தீன், كتاب آداب السماع والوجدஎன்ற பாடம்)
03.
إِذْ لَيْسَ فِى الْوُجُوْدِ شَيْءٌ سِوَى اللهِ تَعَالَى وَأَفْعَالِهِ
இருப்பவற்றில் அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
(இஹ்யா உலூமித்தீன், كتاب شرح عجائب القلبஎன்ற பாடம்)
04.
أَنْ لَا يَرَى فِى الْوُجُوْدِ إِلَّا وَاحِدًا
இருப்பவற்றில் ஒன்றைத் தவிர வேறொன்றையும் காணாமல் இருப்பதாகும்.
(இஹ்யா உலூமித்தீன் كتاب التوحيد والتوكّل என்ற பாடம்)
05.
فَإِنَّ مَنْ عَرَفَ نَفْسَهُ وَعَرَفَ رَبَّهُ عَرَفَ قَطْعًا أَنَّهُ لَا وُجُوْدَ لَهُ مِنْ ذَاتِهِ وَإِنَّمَا وُجُوْدُ ذَاتِهِ وَدَوَامُ وُجُوْدِهِ وَكَمَالُ وُجُوْدِهِ مِنَ اللهِ وَإِلَى اللهِ وَبِاللهِ، وَإِلَّا فَالْعَبْدُ مِنْ حَيْثُ ذَاتِهِ لَا وُجُوْدَ لَهُ مِنْ ذَاتِهِ بَلْ هُوَ مَحْوٌ مَحْضٌ وَعَدَمٌ صِرْفٌ
“நிச்சயமாக தன்னையும் அறிந்து, தனது இரட்சகனான அல்லாஹ்வையும் அறிந்து கொண்டவன் எந்த ஒரு சந்தேகமுமின்றி தனது “தாத்”தில் நின்றும் தனக்கு உள்ளமை இல்லை என்றும், தனது “தாத்”தின் உள்ளமையும், அந்த உள்ளமை நிலைத்திருப்பதும், இன்னும் அவனின் உள்ளமை பூரணமாவதும் அல்லாஹ்வில் நின்றும், அல்லாஹ் அளவிலே, அல்லாஹ்வைக் கொண்டாகும். இன்றேல் அடியானின் “தாத்”தின் புறத்தில் அவனுக்கு “வுஜூத்” இல்லை. எனினும் அவன் சுத்தமாக, திட்டமாக இல்லவே இல்லை” (இஹ்யா உலூமித்தீன், كتاب المحبّة والشوق والأنس والرضا என்ற பாடம்)
06.
وَلَيْسَ فِي الْوُجُوْدِ إِلَّا ذَاتُهُ وَأَفْعَالُهُ
இருப்பவற்றில் அல்லாஹ்வின் “தாத்”தையும், அவனின் செயல்களையும் தவிர வேறு எதுவுமே கிடையாது. (இஹ்யாஉ உலூமித்தீன், كتاب المحبّة والشوق والأنس والرضا என்ற பாடம்)
7.
وَأَنَّ ذَلِكَ هُوَ اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، وَأَنَّ سَائِرَ الْأَنْوَارِمُسْتَعَارَةٌ، وَإِنَّمَا الْحَقِيْقِيُّ نُوْرُهُ فَقَطْ، وَأَنَّ الْكُلَّ نُوْرُهُ، بَلْ هُوَ الْكُلُّ، بَلْ لَا هُوِيَّةَ لِغَيْرِهِ إِلَّا بِالْمَجَازِ،
“நிச்சயமாக அவன் – அல்லாஹ் ஒருவன். அவனுக்கு இணை கிடையாது. ஏனைய ஒளிகள் எல்லாம் இரவலானவை மட்டுமே. எல்லாம் அவனின் ஒளிதான். இல்லை எல்லாம் அவனே! அவனுக்கு மட்டுமே எதார்த்தமான வுஜூத் உண்டு. மற்றவைகளுக்கு “மஜாஸ்” அடிப்படையில்தான் உள்ளமை உண்டு”
(மிஷ்காதுல் அன்வார், பக்கம் 280, இமாம் ஙஸ்ஸாலீ)
இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் தங்களின் மேற்கண்ட ஏழு குறிப்புக்களிலும் இருப்பவற்றில் அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும் தவிர வேறொன்றுமே இல்லை என்பதை தெளிவாகவும், விளக்கமாகவும் சொல்லியுள்ளார்கள்.
ஏழாவது குறிப்பில் மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் وَأَنَّ الْكُلَّ نُوْرُهُ எல்லாம் அவனின் ஒளிதான் என்று கூறியது போதாதென்று بَلْ هُوَ الْكُلُّ இல்லை எல்லாம் அவனே என்றும் தெளிவினுந் தெளிவாய் சொல்லியுள்ளார்கள். எல்லாம் அவனே என்ற கருத்தை இதைவிடத் தெளிவான வசனத்தில் எவ்வாறு சொல்வது?
“வஹ்ததுல் வுஜூத்” தத்துவமான எல்லாம் அவனே என்ற கருத்தை மறுக்கும் உலமாஉகள் அக்கொள்கை – அவ்வாறு சொல்வது “ரித்தத்” மத மாற்றத்தை ஏற்படுத்துமென்றும், “ஷிர்க்” என்றும் சொல்வது திருக்குர்ஆனையும், பெருமானாரின் அருள் மொழிகளையும் தலை கீழாய்ப் புரட்டும் பேச்சேயாகும். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடித்தல் என்பது போல் அல்லாஹ்வையும், நபீகளாரையும் இவர்கள் “முர்தத்”, “முஷ்ரிக்” என்று “பத்வா” கொடுத்துவிடுவார்களோ என்று எனக்கு எண்ணத் தோணுகிறது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
عَنْ جَابِرٍ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ غَزْوَةِ الطَّائِفِ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مَلِيًّا مِنَ النَّهَارِ، فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: يَا رَسُولَ اللهِ لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهُ انْتَجَاهُ»
(المعجم الكبير للطبراني، سنن الترمذي، السنة لابن أبي عاصم، مناقب علي لابن المغازلي)
ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “தாயிப்” யுத்த நாளின் போது நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அன்று பகல் முழு நாளும் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஸெய்யிதுனா அபூபக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் றஸூலே! இன்று முழுப் பகலும் அலீ அவர்களுடன்தானே பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று சொன்ன போது பெருமானார் அவர்கள், அவர்களுடன் நான் பேசவில்லை. ஆயினும் அல்லாஹ்தான் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தான் என்று கூறினார்கள்.
(ஆதாரம்: அல்முஃஜமுல் கபீர் லித்தபறானீ, ஸுனனுத் துர்முதீ, அஸ்ஸுன்னது லிப்னி அபீ ஆஸிம், மனாகிபு அலீ லிப்னில் முஙாஸிலீ)
மேற்கண்ட இந்த நபீ மொழி மூலம் பெருமானார் அவர்கள் தங்களை சூசகமாக அல்லாஹ் என்று சொன்னார்கள் என்பது தெளிவாகிறது.
இவ்வாறு பெருமானார் அவர்கள் தெளிவாகக் கூறியிருக்க படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்று குரங்குப்பிடி பிடித்து நிற்பது அறியாமையேயன்றி வேறொன்றுமில்லை. அல்லது தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதால் எல்லா முயல்களுக்கும் மூன்று கால்கள்தான் என்ற முரட்டுப் பிடிவாதமேயாகும்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தமது “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்த நூல்களில் “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலும் ஒன்றாகும். இந்த நூல் தரும் தகவலைக் கவனிப்போம்.
قال الشّيخ محمد بن فضل الله رحمه الله فى كتابه ‘ التّحفة المرسلة ‘ فى الصفحة الثامنة والستّين: اعلموا أنّ جميع الموجودات من حيث الوجود عينُ الحقِّ سبحانه، ولكنّها من حيث التعيّن غيرُ الحقّ سبحانه وتعالى، والغيريّة إعتباريّة، وأمّا من حيث الحقيقة فالكلُّ هو الحقّ سبحانه وتعالى، ومثاله الحبابُ والموجُ والثّلجُ، فإنّ كلّهنَّ من حيث الحقيقة عينُ الماء، ومن حيث التعيُّنِ غيرُ الماء، والسَّرابُ (معطوف على مثاله الحباب) فإنّه من حيث الحقيقة عينُ الهواء، ومن حيث التعيُّنِ غير الهواء، ولأنّ السّراب فى الحقيقة هواء ظهر بصورة الماء،
“அத்துஹ்பதுல் முர்ஸலா” நூலாசிரியர் தனது நூல் 68ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(படைப்புக்கள் அனைத்தும் “வுஜூத்” எனும் உள்ளமையின் அடிப்படையில் அல்லாஹ் தானானவையாகும். ஆயினும் அவை குறிப்பு என்ற வகையில் அல்லாஹ்வுக்கு வேறானவையாகும். வேறு என்பது கூட இன்னொன்றைக் கவனித்துச் சொல்லப்பட்டதேயாகும். ஆனால் எதார்த்தம் என்ற அடிப்படையில் فَالْكُلُّ هُوَ الْحَقُّ سُبْحَانَهُ எல்லாமே அல்லாஹ்தான்.
இதற்கு குமிழி, அலை, ஐஸ் கட்டி என்பவை உதாரணங்களாகும். ஏனெனில் இம்மூன்றும் எதார்த்தத்தில் தண்ணீரேதான். குறிப்பில் மட்டுமே அது தண்ணீருக்கு வேறானவையாகும்.
கானல் நீர் என்பதும் மேற்கண்ட குமிழி, அலை, ஐஸ்கட்டி போன்றதேயாகும். ஏனெனில் கானல் நீர் என்பது எதார்த்தத்தில் ஆகாயம் தானானதேயாகும். அதற்கு வேறானதல்ல. ஆயினும் கானல் நீர் குறிப்பு என்ற வகையில் மட்டுமே ஆகாயத்திற்கு வேறானதாகும்.
“அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூல் உலமாஉகள் “பத்வா” வழங்குவதற்கு ஆதாரமாக எடுத்த நூலாகும். இதில் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் உதாரணங்களோடு சரியானதென்று நிறுவப்பட்டிருப்பது உலமாஉகளுக்கு மறைவானதல்ல. “பத்வா” வழங்கியவர்களுக்கும் மறைவானதல்ல.
எனவே, “பத்வா” வழங்கிய முல்லாக்கள் ஆதாரமாக எடுத்த, அவர்கள் ஏற்றுக் கொண்ட நூலில் இருந்தே “எல்லாம் அவனே” என்ற தத்துவம் சரியானதென்று நிறுவியுள்ளேன். இதேபோல் அவர்கள் ஏற்றுக் கொண்ட இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “இஹ்யா உலூமித்தீன்” எனும் நூலிலிருந்தும் ஆதாரங்கள் கூறி “எல்லாம் அவனே” என்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் சரியென்றும் நிறுவியுள்ளேன்.
இதேபோல் ஸூபிஸ ஞானம் பேசிய பல்லாயிரம் மகான்களின் நூல்களிலிருந்தும் ஆதாரங்கள் கூறி நிறுவ முடியும். இன்ஷா அல்லாஹ்!
“வஹ்ததுல் வுஜூத்” ஞானம், எல்லாம் அவனே என்ற தத்துவம் பிழை என்றும், “ஷிர்க்” என்றும், “குப்ர்” என்றும் சொல்லும் உலமாஉகளே! மார்க்க அறிஞர்களே! நீங்கள் உங்களின் அறியாமையால் தவறாக “பத்வா” வழங்கிவிட்டீர்கள். நீங்கள் அதை வாபஸ் பெறுவது அவமானமென்று நினைக்கிறீர்கள். இதனால் மன முரண்டாக பிடிவாதம் செய்கிறீர்கள்.
நீங்கள் ஒன்று மட்டும் செய்யுங்கள். இலங்கை நாட்டிலுள்ள உலமா சபைகளின் தலைவர்களையும், “பத்வா” வழங்கிய முல்லா மகான்களையும், அதி சங்கைக்குரிய ரிஸ்வீ முப்தீ அவர்களையும் அழைத்துக் கொண்டு طلب العلم கல்வி கற்கும் நோக்கத்தோடு மட்டும் என்னிடம் வந்து உங்களின் தாகம் தீரும் வரை என்னோடிருங்கள். நான் உங்களுக்கு இந்த ஞானம்தான் இஸ்லாம் மார்க்கத்தின் உயிர் என்பதை விளக்கித் தருகிறேன். இன்ஷா அல்லாஹ்! இதில் எனக்கு பெருமை கிடையாது.
என்னிடம் கற்றுக் கொள்ள உங்களின் கௌரவம் தடையாக இருந்தால் நீங்கள் ஏற்றுக் கொண்ட, இந்த ஞானம் எழுதப்பட்ட நூல்களிற் சில நூல்களைத் தருகிறேன். பொது மக்களில் பெருங் கூட்டமொன்றையும் கூட்டித் தருகிறேன். நான் தரும் நூல்களை நீங்களே வரி வரியாக சரியாக வாசித்து நீங்களே அவற்றில் கூறப்பட்ட விடயத்தை எனக்கும், பொது மக்களுக்கும் விளக்கி வையுங்கள். பிரச்சினை தீரும். நல்லிணக்கம் ஏற்படும். நாடு செழிக்கும். விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். வாழை மரத்தின் இலையை சாப்பிடாமல் அதன் பூவிலுள்ள தேன் குடிப்பீர்கள்.
தொடரும்…