தொடர்: 02
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
கடந்த தொடரில் இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் எழுதியுள்ளார்கள் என்றும், “அத்துஹ்பதுல் முர்ஸலா” நூலாசிரியர் தங்களின் நூலில் விளக்கமாக அதே தத்துவத்தை எழுதியுள்ளார்கள் என்றும், துஹ்பதுல் முர்ஸலா எனும் நூல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்னையும், எனது ஸூபிஸ ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் “முர்தத்” என்று மதம் மாற்றி வைக்க ஆதாரமாக அவர்கள் எடுத்த நூல் என்றும் விபரமாக எழுதியிருந்தேன்.
அதே நூல் “துஹ்பதுல் முர்ஸலா”வில் குறித்த ஞானத்தை உறுதி செய்யும் வகையில் கூறப்பட்டுள்ள இன்னுமோர் ஆதாரத்தையும் இங்கு எழுதுகிறேன்.
وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّكُمْ دَلَّيْتُمْ بِحَبْلٍ إِلَى الأَرْضِ السُّفْلَى لَهَبَطَ عَلَى اللَّهِ. ثُمَّ قَرَأَ {هُوَ الأَوَّلُ وَالآخِرُ وَالظَّاهِرُ وَالبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ}. (رواه الترمذي فى سننه عن أبي هريرة)
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் ஒரு கயிற்றை எடுத்து அதன் ஒரு தொங்கலை கையால் பற்றிக் கொண்டு அதன் மறு தொங்கலை பூமியை நோக்கி தொங்க விட்டீர்களாயின் அது அல்லாஹ்வில் விழும் என்று அருளிவிட்டு, முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே, அவன் யாவையும் அறிந்தவனாக உள்ளான் என்றும் ஓதினார்கள்) ஸுனன் அத்துர்முதீ, அறிவிப்பு: அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு.
ஒரு கயிறை எடுத்து அதை பூமியை நோக்கித் தொங்கவிட்டால் அது பூமியில்தான் விழும் என்பது சிறு பிள்ளை கூட அறிந்த விடயமாயிருக்கும் நிலையில் أَعْقَلُ أَهْلِ الدُّنْيَا இவ் உலகின் அதி சிறந்த புத்திமானாகிய எம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “பூமி” என்று சொல்வதற்குப் பதிலாக “அல்லாஹ்” என்று சொல்லியிருப்பது அகில உலக அறிஞர்களையே இன்று ஆட்டி அசைத்துள்ளது. அது மட்டுமல்ல அவர்களைத் தலை சொறியவும் வைத்துள்ளது.
இதனால் அவ் அருள் மொழி “ழயீப்” பலம் குறைந்ததென்று சிலரும், இது பல வலிந்துரையை உள் வாங்கியதென்று இன்னும் சிலரும் கூறுகிறார்கள். எவர் எவ்வாறு கூறினாலும் இவ் அருள் மொழியை ஹதீதுக் கலை மேதைகளில் ஒருவரான இமாம் துர்முதீ அவர்கள் அறிவித்துள்ளதால் இதைப் பலம் குறைந்ததென்று கூற முடியாமலும், இதற்கு வலிந்துரையின்றி ஏற்றுக் கொள்ள முடியாமலும் பலர் தடுமாறுகிறார்கள். எனினும் இதற்கு هَبَطَ عَلَى قُدْرَةِ اللهِ அக்கயிறு அல்லாஹ்வில் விழவில்லை. அவனின் சக்தியில்தான் விழுந்ததென்று கூறுகிறார்கள். இக்கருத்து முற்றிலும் பிழையானதாகும். விபரம் பின்னால் வரும் தொடர்களில் இடம் பெறும்.
“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே! என்ற தத்துவத்தை அறிவித்த ஸூபீ மகான்கள் இதற்கு நேரடிப் பொருள் கூறுவதற்கு தயங்கமாட்டார்கள். அக்கயிறு அல்லாஹ்வில்தான் விழுமென்று அஞ்சா நெஞ்சுடன் கூறுவார்கள்.
“வஹ்ததுல் வுஜூத்” எல்லாமவனே என்ற தத்துவத்தின்படி பூமியும் அவனாக இருப்பதால் எந்த ஒரு வலிந்துரையுமின்றியும், அச்சமின்றியும் நேரடிப் பொருள் கொண்டு “தவ்ஹீத் ஹகீகீ” – “வஹ்ததுல் வுஜூத்” எனும் தத்துவத்தை நிலை நாட்ட வேண்டும்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இதை எழுதும் என்னையும், இதை வாசிக்கும் உங்களையும் போன்ற சாதாரண மனிதரல்லர். அவர்கள் எல்லாமறிந்த ஏகனின் أَعْلَمُ الْعَالَمِيْنَ ஆவார்கள். வஹ்ஹாபிகள் சொல்வது போல் அவர்கள் நம் போன்ற மனிதரல்ல. எப்போது அல்லாஹ் அவர்களில் “அலீம்” யாவும் அறிந்தவன் எனும் அவனின் திரு நாமம் கொண்டு “தஜல்லீ” வெளியானானோ அதே நொடியிலிருந்து அவர்களும் அல்லாஹ் போல் யாவும் அறிந்தவர்களாகிவிட்டார்கள். இதனால்தான் عَلِمْتُ عِلْمَ الْأَوَّلِيْنَ وَالْآخِرِيْنَ முன்னோர், பின்னோர் அனைவரின் அறிவையும் நான் அறிந்து கொண்டேன் என்று கூறினார்கள்.
எனது இந்த வரிகளைப் பார்க்கும் “பத்வா” வியாபாரிகள் இன்றிரவே வட்ட மேசையில் ஒன்று கூடி மீண்டுமொரு “பத்வா” வழங்க முண்டியடித்துக் கொள்வார்கள். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்! பெட்டைக் கோழி கூவி விடியப் போவதில்லை. விடிவதாயின் சேவல்தான் கூவ வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக பல்லாயிரம் “பத்வா”க்கள் வழங்க வேண்டும். என் உயர்வுக்கு இது உந்துகோலாக அமையும்.
“ஸெய்யிதுத் தாயிபா” ஸூபீ மகான்களின் தலைவர் இமாம் ஜுனைத் பக்தாதீ அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
لَا يَكُوْنُ الصِّدِّيْقُ صِدِّيْقًا حَتَّى يَشْهَدَ عَلَيْهِ سَبْعُوْنَ صِدِّيْقًا بِأَنَّهُ زِنْدِيْقٌ
“சித்தீக்” என்பவர் சித்தீக் ஆகமாட்டார். அவருக்குப் பாதகமாக எழுபது “சித்தீக்”கள் அவரை “சிந்தீக்” என்று சொல்லும் வரை என்று கூறினார்கள்.
இதன் விபரம் என்னவெனில் “சித்தீக்” என்ற சொல்லுக்கு அதிகம் உண்மை பேசுபவர் என்று பொருள் வரும். மேற்கண்ட வசனத்தில் வந்துள்ள “சித்தீக்” என்ற சொல்லுக்கு இந்தப் பொருள் இல்லை.
இங்கு “சித்தீக்” என்ற சொல் “சித்தீகிய்யத்” எனும் ஆன்மிக உயர் பதவியையே குறிக்கும். அதாவது “விலாயத்” என்றும், “குத்பிய்யத்” என்றும் சொல்வது போல் “சித்தீகிய்யத்” என்றும் சொல்லப்படும். இவ்விடத்தில் கூறப்பட்ட “சித்தீக்” என்பவருக்கு ஸூபீ மகான்களிடம் வரைவிலக்கணம் உண்டு.
اَلصِّدِّيْقُ – هُوَ الَّذِيْ لَمْ يَدَعْ شَيْئًا مِمَّا أَظْهَرَهُ بِاللِّسَانِ إِلَّا حَقَّقَهُ بِقَلْبِهِ وَعَمِلَهُ،
(التعريفات، باب الصاد، ص 89، للشيخ السيد الشريف علي بن محمد الجرجاني رحمه الله)
“சித்தீக்” என்பவர் யாரெனில் தனது நாவால் பேசிய எதுவாயினும் அதை தனது உள்ளத்தால் திட்ட்ப்படுத்திக் கொண்டு அதன்படி செயல்படுபவராவார்.
இதன் சுருக்கம் என்னவெனில், இவர் இறையியற் தத்துவம் ஒன்றைக் கூறியிருப்பாராயின் அது பற்றி ஆய்வு செய்து அதை திட்டப்படுத்திக் கொண்டு அதன்படி செயற்படுபவராவார். அதாவது ஒரு தத்துவ ஞானியாவார். இவர்தான் ஸூபீ மகான்களால் “சித்தீக்” என்று அழைக்கப்படுவார்.
இவர் உண்மையிலேயே “சித்தீக்” ஆவதாயின் இவர் போன்ற 70 பேர் இவரை “சிந்தீக்” முனாபிக் என்று சொல்ல வேண்டும்.
என்னைப் பொறுத்த வரை நான் “சித்தீக்” இல்லாது போனாலும் இறையியற் தத்துவம் பேசுகின்றவன் என்ற வகையில் உண்மையான எழுபது “சித்தீக்”கள் என்னை “சிந்தீக்” என்று சொல்லும்வரை நான் “சித்தீக்” ஆக முடியாது.
இதுவரை எழுபது பேர்களல்ல எழுபதாயிரம் பேர்கள் என்னை “சிந்தீக்” என்றோ, “முர்தத்” என்றோ சொன்னாற் கூட அவர்களில் ஒருவர் கூட “சித்தீக்” இல்லை. எல்லோரும் சாதாரண பிரஜைகளேயாவர். நான் குறித்த பதவியை அடைவதாயின் தரமானவர்கள் எழுபது பேர் என்னை “சிந்தீக்” என்று சொல்ல வேண்டும். இதுவரை “முர்தத்” என்று என்னைச் சொன்னவர்கள் யாவரும் பேட்டுக் கோழிகள்தானேயன்றி சேவல்கள் யாருமில்லை. சேவல் கூவினால்தான் விடியும். நிலம் தெளியும். அதுவரை இருள்தான். இன்னும் நான் இழிப் பெயர்களால் இழிவு படுத்தப்பட வேண்டும். பழமுள்ள மரம்தான் கல்லெறிக்கு இலக்காகும். விஷயமுள்ளவன்தான் சொல்லெறிக்கு இலக்காவான். அல்லாஹு அக்பர்!
உலகில் தோன்றி நபீமார், வலீமார், குத்புமார்களில் கல்லெறியும், சொல்லெறியும் படாதவர்கள் ஒரு சிலர் மட்டுமே!
இறைஞானி நஸீமீ தலை கீழாய் தொங்கவிடப்பட்ட நிலையில் தோல் உரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவ்வேளை அவர் 500 ஞானப் பாடல்கள் பாடி முடித்தார்.
உலகப் பிரசித்தி பெற்ற இறைஞானி “மன்சூர் அல்ஹல்லாஜ்” சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். ஆயினுமவர் மீண்டும் “பக்தாத்” வீதிகளில் தங்களின் முரீதுகளைச் சந்தித்து உறவாடினார். உரையாடினார். கொலை செய்யக் கொண்டு வரப்பட்ட போது கத்தி, வாள், ஆணிகளைக் கண்டு சிரித்து மகிழ்நதார்.
இவ்வாறு “வஹ்ததுல் வுஜூத்” பேசியவர்களிற் பலர் விஷயம் விளங்காதவர்களாலும், பொறாமைக் காரர்களாலும், அநீதியாளர்களாலும் கொலை செய்யப்பட்டதற்கும், நாடு கடத்தப்பட்டதற்கும், பொருளாதாரத் தடை செய்யப்பட்டதற்கும் வரலாறுகள் உள்ளன. ஸூபீ மகான்களிலும், இறைஞானிகளிலும் பல்லாயிரம் பேர் துன்புறுத்தப்பட்டதற்கும் வரலாறுகள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் காரண கர்த்தாக்கள் அரைவேக்காட்டு உலமாஉகளேயாவர்.
இக்காலத்தில் இவ் ஈழத் திருநாட்டில் விஷயம் விளங்காதவர்களாலும், பொறாமைக் காரர்களாலும் எனக்கும். எனது ஸூபிஸ சமுகத்தவர்களுக்கும் ஏற்படுத்தப்படகின்ற மனித உரிமை மீறல்கள் எல்லையைக் கடந்து தலை விரித்தாடத் தொடங்கியுள்ளது. அல்லாஹ் நீதியாளன். أحكم الحاكمين செங்கல் வியாபாரிக்கு இரத்தினக் கல் வியாபாரி மீது பொறாமை வராது.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் ஏகத்துவப் பிரச்சாரம் மூலம் “எல்லாம் அவனே” எனும் தத்துவத்தைப் பிரகடனம் செய்து, ஒன்றன் பின் ஒன்றாக பல “முஃஜிஸாத்” எனும் அற்புதங்களையும் காட்டி அவர்களை நம்பச் செய்து வழி நடாத்திக் கொண்டிருந்தாலும் பல நபீ மொழிகள் மூலமும் ஸூபிஸ தத்துவத்தை உணர்த்திக் கொண்டே இருந்தார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَسُبُّوا الدَّهْرَ، فَإِنَّ اللهَ هُوَ الدَّهْرُ»
காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில் காலமாயிருப்பவனும் அல்லாஹ்தான் என்றார்கள் ஏந்தல் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்.
“எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை கட்டம் கட்டமாக பல கோணங்களிலும், பல வடிவங்களிலும் உணர்த்தி வந்தார்கள். அவற்றில் ஒன்றுதான் காலத்தை ஏச வேண்டாம். ஏனெனில் அவனே காலத்தின் கோலம் கொண்டான் என்ற தத்துவமாகும்.
இத் தத்துவத்தை உள்வாங்கி தமிழ் நாடு காயல் நகரில் கண்ணுறங்கும் காமில் வலீ தைக்கா ஸாஹிப் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்.
காலத்தை ஏச வேண்டாம்
என்றதால் காலம் நீயே
கோலங்கள் கொண்டதெல்லாம்
“குதா” அன்றி வேறுமுண்டோ?
ஆலத்தில் நீயேயல்லால்
அறவே வேறில்லை எந்தன்
சீலத்தை நல்லதாக்கிச்
சிறப்பருள் யா காலிகே!
“தஸவ்வுப்” – “ஸூபிஸம்” என்பது இறைஞான மகான்களின் மூலம் பூத்த மலராயினும் அதற்கு வித்திட்டவன் அல்லாஹ்வும், அண்ணலெம் பெருமானுமேயாவர். திருக்குர்ஆன் வசனங்களில் சுமார் 15 வசனங்களுக்கு மேற்பட்டவையும், நபீ மொழிகளிற் பலவும் இதே தத்துவத்தையே படம் பிடித்துக் காட்டுகின்றன.
குண்டு துளைக்காத கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டிய விலை மதிக்க முடியாத ஒரு பொக்கிஷத்தை அதன் மகிமை தெரிந்தோ, தெரியாமலோ சிலர் அதைக் காற் பந்தாக்கி அங்குமிங்கும் அடிப்பதும், உதைப்பதும் எனது இருதயத்தில் ஈட்டி ஏற்றப்படுவது போல் உள்ளது.
அன்புக்குரிய உலமாஉகளே! உங்களிற் பலர் என்னை ஒரு வீணன் என்றும், நான் பேசும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் பிழையானதென்றும், அது “குப்ர்”, “ஷிர்க்” என்றுமே கருதுகிறீர்கள். சிலர் மன முரண்டினால் அவ்வாறு கருதினாலும் அநேகமானவர்கள் அறியாமை காரணமாகவே கருதுகிறீர்கள்.
இன்று இவ் இறைஞானத்தை எதிர்க்கின்ற 25 வயதுக்குட்பட்ட ஓர் இளைஞன் சுமார் 40 வயதை அவன் அடைந்தால், அவனுக்கு இவ் அறிவில் “நஸீப்” நற்பாக்கியமும் இருக்குமானால் அவன் அல்லாஹ்வின் அருளுக்குப் பாத்திரமாவதற்கும் வாய்ப்பு உண்டு. காலம் வரும் வரை பொறுத்திருங்கள்.
ஆழமறியாமற் காலை விட்டு அவதிப்படாதீர்கள்!
படைப்புகளுடனான சகல தொடர்பும் அல்லாஹ்வுடனான தொடர்பென உணருங்கள்!