Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“எல்லாம் அவனே” என்பதே ஸூபிஸம்!அதை மறுப்பவன் நாஸ்திகனை விடக் கேடு கெட்டவன்!

“எல்லாம் அவனே” என்பதே ஸூபிஸம்!
அதை மறுப்பவன் நாஸ்திகனை விடக் கேடு கெட்டவன்!

தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ

அன்பின் ஸூபிஸ உறவுகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வாறகாதுஹூ!

உலகில் தோன்றிய உண்மையான எந்தவொரு ஸூபீயும் “எல்லாம் அவனே” என்ற ஏகத்துவதத்தை போதிக்காமல் விட்டதற்கோ, மறுத்ததற்கோ வரலாறில்லை. இவ்வாறு ஸூபீகள் இதைப் போதிக்கவுமில்லை, ஏற்றுக் கொள்ளவுமில்லை என்று ஸூபீ மகான்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துபவர்கள் இஸ்லாம் என்ற போர்வையிலுள்ள நயவஞ்சகர்களே! இவர்கள் விடயத்திலேயே பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ يُوشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى مِنَ الْإِسْلَامِ إِلَّا اسْمُهُ، وَلَا يَبْقَى مِنَ الْقُرْآنِ إِلَّا رَسْمُهُ، مَسَاجِدُهُمْ عَامِرَةٌ وَهِيَ خَرَابٌ مِنَ الْهُدَى، عُلَمَاؤُهُمْ شَرُّ مَنْ تَحْتَ أَدِيمِ السَّمَاءِ مِنْ عِنْدِهُمْ تَخْرُجُ الْفِتْنَةُ وَفِيهِمْ تَعُودُ ‘

மனிதர்களுக்கு ஒரு காலம் வர நெருங்கிவிட்டது. அக்காலத்தில் இஸ்லாம் மார்க்கத்தில் அதன் பெயரட் மட்டுமே மிஞ்சியிருக்கும். அல்குர்ஆன் – திரு மறையில் அதன் எழுத்துக்கள் மட்டுமே மிஞ்சியிருக்கும். அவர்களின் பள்ளிவாயல்கள் நிரம்பி வழியும். ஆனால் அவைகளோ நேர்வழியை விட்டும் “கறாப்” நாசமாகியிருக்கும். அவர்களின் உலமாஉகள் – மார்க்க அறிஞர்கள் வானத்தின் கீழ் உள்ளவர்களில் மிகக் கெட்டவர்கள். அவர்களிடமிருந்தே “பித்னா” குழப்பம் வெளியாகி அது அவர்களிலேயே மீளும் என்று பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறியதாக ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இவ்வாறு ஸூபிய்யாக்கள் விடயத்தில் மன முரண்டாக பேசக்கூடியவர்கள் உலமாஉகள் என்ற போர்வையில் இருந்தாலும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறியது போன்று வானத்தின் கீழுள்ளவர்களில் மிகக் கெட்டவர்களேயாவர்.

உலகில் ஸூபீகள் என்று பிரசித்தி பெற்ற, உலமா சபை தமது வஞ்சகத்தை தீர்க்க ஆதாரமாக எடுத்துக் கொண்ட மகான்களே தெட்டத் தெளிவாக “எல்லாம் அவனே” என்று கூறியிருக்க அவ்வாறு ஸூபீகள் கூறவில்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் பொய் கூறுபவர்கள் எவ்வாறு வழிகாட்டிகளாக இருக்க முடியும்? இவ்வாறு ஒரு கேவலம் கட்ட பிழைப்பு நடத்துவதை விட கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது சிறந்தது.

மார்க்க ரீதியாக தாம் முன்வைக்கும் கூற்றுக்கு ஓர் ஆதாரமேனும் கூற வக்கில்லாத இவர்கள் தங்களின் சுகபோகத்தில் வாழ்கின்ற ஒரு சில லேபல் சூபீகளை வைத்துக் கொண்டு எந்தவொரு தரீகாவும், எந்தவொரு ஸூபீயும் இதைப் போதிக்கவுமில்லை, ஏற்கவுமில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல.

கடந்த 1979ம் ஆண்டு ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் “பத்வா” வழங்கும் போது உலமா சபையில் ஸூபீகள் இருந்திருக்கலாம் அல்லது இலங்கை நாட்டில் இருந்திருக்கலாம். இப்போதும் உண்மையான ஸூபீகள் இருக்கவே செய்கின்றார்கள். உலமா சபையில் அல்ல. இலங்கைத் திரு நாட்டில் உள்ளார்கள். அவர்கள் எவருமே “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்பது ஸூபிஸம் அல்ல என்றோ அது வழிகேடு என்றோ கூறவில்லை. குறித்த “பத்வா”வில் எந்த ஓர் இடத்திலும் “எல்லாம் அவனே” என்பது தவறு என்றோ, “வஹ்ததுல் வுஜூத்” தவறு என்றோ கூறப்படவுமில்லை. மாறாக வழிகெட்ட “ஹுலூல் – இத்திஹாத்” தவறு என்றே கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில் ஆட்சிபீடமேறிய உலமா சபையின் போலி முப்தீகளே “ஹமவோஸ்த்” எல்லாம் அவனே என்பது பிழை என்று கூறுகின்றார்கள். இவர்களுக்கும் ஸூபிஸத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையவே கிடையாது. இன்று நாட்டின் பெரும்பான்மை சமுகத்திடம் நாங்களும் ஸூபீகள் என்று காட்டிக் கொள்வதற்காகவே ஸூபிஸம் என்ற வார்த்தையைக் கூட உபயோகிக்கின்றார்கள். இது கூட அவர்களின் நயவஞ்சகத் தனத்தையே காட்டுகின்றது. கடந்த 2019ம் ஆண்டுக்கு முன்னர் ஸூபிஸத்தை ஏற்று எங்காவது உலமா சபை ஒரு எழுத்தேனும் எழுதியிருக்கின்றதா?

உலகில் தோன்றிய ஸூபீகளான அனைத்து நபீமார்களும், வலீமார்களும், பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “உம்மத்” சமுகத்தில் தோன்றிய அனைத்து ஸூபீகளும் “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தையே போதித்துள்ளார்கள். இஸ்லாம் என்ற கோட்டையினுள் நுழையும் ஒவ்வொருவரும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று மொழியும் போதே “ஹமவோஸ்த்” என்பதை ஏற்றுக் கொண்டே உள்ளே வருகின்றார் என்பது அறிஞனுக்கு மறைவானதல்ல. மந்தைகளுக்கு இது மறைவானதே! இது பற்றி எழுதுவதாயின் பல பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றே எழுத வேண்டி ஏற்படும். இது பற்றி மிக தெளிவாகவும், ஆழமாகவும் கடந்த காலங்களில் எமது ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (தால உம்றுஹூ) அன்னவர்கள் பேசியும், எழுதியும் உள்ளார்கள். தேவையானோர் பார்த்தும், கேட்டும் அறிந்து கொள்ளலாம்.

இன்று நடைமுறையில் உள்ள உலமா சபையின் குருட்டு வாத்திற்கான அவசர சிகிச்சையாக பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சமுகத்தில் தோன்றிய உலமா சபை ஆதாரமாக எடுத்துக் கொண்ட சில ஸூபிய்யாக்கள் கூறிய வசனங்களை மட்டும் இங்கு எழுதுகிறேன்.


وَلَيْسَ فِى الْوُجُوْدِ سِوَى اللهِ تَعَالَى وَأَفْعَالِهِ
இருப்பவற்றில் அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும் தவிர வேறொன்றுமே இல்லை.
(இஹ்யா உலூமித்தீன் முதலாம் பாடம், فضيلة الأوراد وترتيبها وأحكامها)

 

وَأَنَّ ذَلِكَ هُوَ اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، وَأَنَّ سَائِرَ الْأَنْوَارِمُسْتَعَارَةٌ، وَإِنَّمَا الْحَقِيْقِيُّ نُوْرُهُ فَقَطْ، وَأَنَّ الْكُلَّ نُوْرُهُ، بَلْ هُوَ الْكُلُّ، بَلْ لَا هُوِيَّةَ لِغَيْرِهِ إِلَّا بِالْمَجَازِ،
“நிச்சயமாக அவன் – அல்லாஹ் ஒருவன். அவனுக்கு இணை கிடையாது. ஏனைய ஒளிகள் எல்லாம் இரவலானவை மட்டுமே. எல்லாம் அவனின் ஒளிதான். இல்லை எல்லாம் அவனே! அவனுக்கு மட்டுமே எதார்த்தமான வுஜூத் உண்டு. மற்றவைகளுக்கு “மஜாஸ்” அடிப்படையில்தான் உள்ளமை உண்டு”
(மிஷ்காதுல் அன்வார், பக்கம் 280, இமாம் ஙஸ்ஸாலீ)

இங்கே இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் மிகத் தெளிவாக “எல்லாம் அவனே” என்றே குறிப்பிட்டுள்ளார்கள். (“ஹுவல் குல்லு”). ஸூபிய்யாக்கள் எல்லாம் அவனே என்று கூறவுமில்லை, இமாம் ஙஸ்ஸாலீ கூறவுமில்லை என்றால் எல்லாம் அவனே என்பதற்கு இந்த வசனத்தை விட வேறு எவ்வகையில் கூறலாம் என்பதை உலமா சபை விளக்கி வைக்க வேண்டும். மொட்டையாக இவர்கள் விடும் அறிக்கையை ஏற்றுச் செயல்பட பொது மக்கள் இன்று மந்தைகளாக இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தமது “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்த நூல்களில் “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலும் ஒன்றாகும். இந்த நூல் தரும் தகவலைக் கவனிப்போம்.

قال الشّيخ محمد بن فضل الله رحمه الله فى كتابه ‘ التّحفة المرسلة ‘ فى الصفحة الثامنة والستّين: اعلموا أنّ جميع الموجودات من حيث الوجود عينُ الحقِّ سبحانه، ولكنّها من حيث التعيّن غيرُ الحقّ سبحانه وتعالى، والغيريّة إعتباريّة، وأمّا من حيث الحقيقة فالكلُّ هو الحقّ سبحانه وتعالى، ومثاله الحبابُ والموجُ والثّلجُ، فإنّ كلّهنَّ من حيث الحقيقة عينُ الماء، ومن حيث التعيُّنِ غيرُ الماء، والسَّرابُ (معطوف على مثاله الحباب) فإنّه من حيث الحقيقة عينُ الهواء، ومن حيث التعيُّنِ غير الهواء، ولأنّ السّراب فى الحقيقة هواء ظهر بصورة الماء،

இமாம் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் நுஸல் 68ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அறிந்து கொள்ளுங்கள்! சகல படைப்புக்களும் “வுஜூத்” உள்ளமை என்ற அடிப்படையில் “ஹக்” அல்லாஹ் தானானவையே! ஆனால் அவை “தஅய்யுன்” குறிப்பு என்ற வகையில் அவனுக்கு வேறானவையே! வேறு என்பது கவனிப்பைக் கொண்டேயாகும். அறிந்து கொள்ளுங்கள் எதார்த்தத்தில் அனைத்துமே அவன்தான். அதற்கு உதாரணங்கள் பின்வருமாறு. குமிழி, அலை, ஐஸ் கட்டி ஆகியவையாகும். ஏனெனில் அவை அனைத்தும் எதார்த்தத்தில் நீரேதான். குறிப்பு என்ற வகையில் தண்ணீருக்கு வேறானதாகும். அதாவது அது எடுத்துக் கொண்ட கோலத்தைக் கவனித்து குறித்த பெயர்கள் சொல்லப்படுகின்றன. அந்தப் பெயருக்குரிய சட்டங்கள் அவற்றில் பிரயோகிக்கப்படுகின்றன. இன்னும் கானல் நீரையும் போன்று. அது எதார்த்தத்தில் ஆகாயம் தானானது. குறிப்பு என்ற வகையில் ஆகாயத்திற்கு வேறானது. ஏனெனில் கானல் நீரின் உருவில் தோற்றமளித்தது ஆகாயமேதான்.

எனவே, எந்தவொரு ஆதாரமுமின்றி மொட்டையாக அறிக்கை விடாமல் ஆதார பூர்வமாக, அறிவுடைமையாக அறிக்கை விட்டால் மக்களும் ஏற்பர், நம்புவர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments